நிச்சயமற்ற தேர்தல் கள நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளர் வருகை!
இலங்கையிலிருந்து ஆர்.பாரதி
தமிழ்ப் பொதுவேட்பாளராக களம் இறங்கியிருக்கும் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவான பரப்புரைகள் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நன்கு திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படவிருக்கின்றது. “வெல்வதற்காக அல்ல! தமிழ் மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்கு” ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ள அரியநேத்திரனுக்கு கணிசமான வாக்குகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக பரப்புரை உத்திகள் பலவற்றை தமிழ்த் தேசிய பொதுச் சபை வகுத்திருக்கின்றது.
அதன் ஒரு பகுதியாக ஓகஸ்ட் 18 ஆம் திகதி தனது முதலாவது பிரசாரக் கூட்டத்தை நடத்திய அரியநேத்திரன், செப்ரெம்பர் 19 ஆம் திகதி வரையில் தனது சூறாவளிப் பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கின்றார். இறுதிக் கூட்டம் மட்டக்களப்பில் நடைபெறவிருக்கின்றது. இதனைவிட சமூக ஊடகப் பரப்புரைகள், பொக்கற் கூட்டங்கள், சந்திப்புக்கள் என பல குழுக்கள் களமிறக்கப்படவுள்ளன.
தமிழ்ப் பொது வேட்பாளர் வெற்றிபெறப்போவதில்லை என்றாலும், ஜனாதிபதித் தேர்தல் களத்தில் அவர் ஏற்படுத்தப்போகும் தாக்கம் எந்தளவுக்கு இருக்கும் என்பதுதான் இப்போது பிரதான சிங்கள வேட்பாளருக்குள்ள கேள்ளி! இராஜதந்திர வட்டாரங்களும் இந்த நகர்வை உன்னிப்பாக அவதானிக்கின்றன.
வழமையாக இரு முனைப் போட்டியாக இருக்கும் ஜனாதிபதித் தேர்தல் இம்முறை மும்முனைப் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாமல் ராஜபக்ஷ களத்தில் இறங்கியமையும், ராஜபக்ஷ சகோதரர்கள் அனைவரும் நாமலுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியிருப்பதும், தேர்தல் களத்தை நான்கு முனைப் போட்டியாக மாற்றியுள்ளது.
அதேவேளையில், கடந்த கால ஜனாதிபதித் தேர்தல்களைவிட அதிகமான வேட்பாளர்கள் இம்முறை களமிறங்கியிருக்கின்றார்கள். 39 வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கின்றார்கள். இதில் பெரும்பாலானவர்கள் சுயேச்சைகள். இந்த சுயேச்சைகளில் பலர் பினாமிகள். ஆவர்களும் வெல்வதற்காக களமிறங்கியவர்கள் அல்ல.
கருத்துக் கணிப்புக்களின் படி, இரண்டு பிரதான வேட்பாளர்களான ரணிலுக்கும், சஜித்துக்கும் இடையில்தான் கடுமையான போட்டி உள்ளது. அடுத்தவர்களாக அநுரகுமார திசாநாயக்கவும், நாமல் ராஜபக்ஷவும் உள்ளார்கள். அதேவேளையில், எந்தவொரு வேட்பாளரும் 50 வீதமான வாக்குகளைப் பெறமுடியாத நிலை காணப்படுகின்றது. 40 வீதமான வாக்குகளை அண்மித்ததாகத்தான் பிரதான வேட்பாளர்கள் பெறுவார்கள் என்பதுதான் பிந்திய மதிப்பீடு.
ஜனாதிபதித் தேர்தலில் ஒருவர் வெற்றி பெறுவதற்கு 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அவ்வாறில்லை என்றால், மூன்றாவதாக வருபவரின் இரண்டாவது விருப்பு வாக்கு கணிப்பிடப்படும். இதற்கு முன்னர் இவ்வாறான ஒரு நிலை ஏற்படவில்லை. இம்முறை இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணப்படும் ஒரு நிலை ஏற்படலாம்.
களம் நான்கு முனைப் போட்டியாக மாறியிருப்பதால், தமிழ் மக்களுடைய வாக்குகளின் பெறுமதி அதிகரித்திருக்கின்றது. அதாவது, தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் வாக்குகள் அமையப்போகின்றது. ஏதோ ஒரு வகையில் தமிழ் வாக்குகள் தமக்குக் கிடைப்பதற்கு வழிவகுத்தால் தமது வெற்றியை ஓரளவுக்காவது உறுதிப்படுத்தலாம் என்று ரணிலும், சஜித்தும் திட்டமிட்டுச் செயற்படுகின்றார்கள். ஆனால், தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம்தான் அவர்களுக்கு இப்போது வந்திருக்கும் பிரதான சவால்!
பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் போட்டியிடுவார் என்று தமிழ்ப் பொதுச் சபையால் வெளியிடப்பட்ட அறிவிப்பு, ரணிலுக்கும் சஜித்துக்கும் நிச்சயமாக அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. உடனடியாகவே பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழ்ப் பொதுச் சபையின் 14 பிரதிநிதிகளுக்கும் இருவருமே போட்டி போட்டு அழைப்பு விடுத்தார்கள். பொது வேட்பாளர் களமிறங்குவது தமிழ் மக்களுடைய வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு தாம் வகுத்திருந்த உபாயங்களை சீர்குலைத்துவிடும் என்பதுதான் அவர்களுடைய அச்சம். அந்த அச்சம் நியாயமானதுதான்.
பொது வேட்பாளரைத் தெரிவு செய்து களமிறக்கிய தமிழ்ப் பொதுச் சபையில் ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகளும், 80 வரையிலான சிவில் சமூக அமைப்புக்களும் உள்ளன. இதனைவிட, பிரதான தமிழ்க் கட்சியான தமிழரசுக் கட்சி, இதுவரையில் தீர்மானம் எதனையும் எடுக்காத போதிலும் அதிலுள்ள பெரும்பாலானவர்கள் பொது வேட்பாளர் என்ற கருத்தை ஆதரிக்கின்றார்கள்.
இந்த நிலையில் பொது வேட்பாளரை களமிறக்கியவர்களுடன் பேசி அவர்களை வழிக்குக் கொண்டுவர முடியுமா, என்பதைப் பார்ப்பதுதான் ரணிலினதும், சஜித்தினதும் திட்டமாக இருந்தது. அநுரவைப் பொறுத்தவரையில் அவர் தமிழர்களுக்கு வாக்குக் கொடுப்பது, தனக்கு இருக்கும் சிங்கள வாக்குளை பாதிக்கும் என்று அஞ்சுகின்றார். அதனால், தமிழர்களுடன் பேரத்துக்கு வருவதில் அதிகளவுக்கு அக்கறையற்ற ஒருவராகத்தான் அவர் இருக்கின்றார்.
தமிழ்ப் பொதுச் சபையில் உள்ள அசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டும்தான் ஜனாதிபதியையும், எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்தார்கள். சிவில் சமூகப் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் தரப்படாமையாலும், போதிய கால அவகாசம் இருக்காமையாலும் இந்தப் பேச்சுக்களில் தாம் பங்கேற்கவில்லை என்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தார்கள். நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இவ்வாறான சந்திப்பு ஒன்றுக்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
ரெலோ, புளொட், ஜனநாயகப் போராளிகள் கட்சி என்பனதான் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றன. பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கு தாம் எடுத்த தீர்மானத்துக்கான காரணம் என்ன என்பதை இதன்போது இருவருக்குமே அவர்கள் விளக்கினார்கள். இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டிதான் தமது கோரிக்கை என்பதையும் அவர்கள் வலியுறுத்தினார்கள். ஜனாதிபதி வேட்பாளர்களால் வழங்கப்படும் வாக்குறுதிகள் எதுவுமே கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட விரக்தியையும் அவர்கள் விளக்கினார்கள்.
சமஷ்டியைத் தருவது என்பது பிரச்சினையல்ல என்று தெரிவித்த ரணில், பலமான ஒரு நாடாளுமன்றம் அமைந்தால் அதனைத் தர தான் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கின்றார். ஆனால், பிரதான கட்சிகள் அனைத்துமே உடைந்து சின்னாபின்னமாகிப் போயிருப்பதால், எதிர்காலத்தில் பலமான நாடாளுமன்றம் ஒன்று உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இரண்டரை வருடகாலமாக நிறைவேற்று அதிகாரங்களுடன் ஜனாதிபதியாக இருப்பவர் மீண்டும், ஜனாதிபதியாக வந்து, பலமான நாடாளுமன்றமும் தமக்கு அமைந்தால் சமஷ்டியைத் தருவேன் என்று சொல்வதை எப்படி நம்புவது?
அதேபோலத்தான் சஜித் பிரேமதாசவும். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தான் அதிகாரத்துக்கு வந்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருக்கின்றார். அதேவேளையில், தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது அவர்களுடைய உரிமை என்று சொன்ன சஜித், ஆனால், இவ்வாறு இன ரீதியாக அரசியல் செய்வது இன, மத முரண்பாடுகளை மேலோங்கச் செய்யும் என்றும் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
நாடு முழுவதும் ஆயிரம் விகாரைகளைக் கட்டுவதற்கான திட்டத்தை வகுத்துச் செயற்பட்டவரும் சஜித்தான். இதேபோல, 13 ஆவது திருத்தம் குறித்து ரணில் பேசிய போது, கொந்தளித்த பிக்குகளை கட்டுப்படுத்தாமல் பார்த்துக்கொண்டிருந்தவரும் அவர்தான். சிங்கள வாக்குகளுக்காக முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலரையும் தனது கட்சியில் இணைத்துக்கொண்ட சஜித், பொறுப்புக் கூறல் போன்ற விடயங்களில் எவ்வாறு செயற்படுவார் என்பது எதிர்பார்க்கக்கூடியதுதான்.
தமிழரசுக் கட்சியின் “சிலரை” பயன்படுத்தி தமது பேரங்களை முன்னெடுத்து தமிழ் வாக்குகளை உறுதிப்படுத்தலாம் என்று ரணிலும், சஜித்தும் போட்ட கணக்கு தமிழ்ப் பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டதால் சிதறடிக்கப்படப் போகின்றதா என்பதுதான் இப்போது அவர்களுக்குள்ள பிரச்சினை. வெற்று வாக்குறுதிகளால் இந்த நிலையைச் சமாளிக்க அவர்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
அதேவேளையில் வழமையாக தரப்படுகின்ற வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த வரலாறு இனியும் தொடரக்கூடாது என்ற நிலையில்தான் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்ற கருத்தும் மேலோங்கியது! அது இன்று சாத்தியமாகியும் இருக்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் தேர்தல் களத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழர் அரசியலில் இது மற்றொரு திருப்பு முனையாக அமையுமா என்ற கேள்விக்கும் இன்னும் மூன்று வாரங்களில் – அதாவது செப்ரெம்பர் 21 இல் பதில் கிடைத்துவிடும்.
349 total views, 2 views today