பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தேறும் பல சந்தர்ப்பங்களிலும் நம் சமூகம் ‘அவள் ஆடை சரியில்லை’, ‘சென்ற இடம் சரியில்லை’ எனப் பெண்கள் மீதே குற்றங்களைச் சுமத்தியிருக்கிறது!
- பிரியா இராமநாதன் – இலங்கை
இந்த உலகமும் நம்முடைய சமூகமும் எவ்வளவோ முன்னேறிவிட்டதாக நாமெல்லாம் வியந்து மார்தட்டிக்கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில்தான், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என்கிற புள்ளிவிபரங்கள் நம் ஒவ்வொருவர் தலையிலும் சம்மட்டியால் ஓங்கி அடித்துக்கொண்டிருக்கின்றது என்றால் மிகையில்லை. ஆம் , மனைவியாக இருந்தாலும் அவளது அனுமதியின்றி உறவு கொள்ள முயல்வது குற்றம் என்கிற அளவு “ஆயசவையட சுயிந “ பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் நாகரிகமடைந்த சமூகத்தில், தினந்தோறும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்முறைகள், அதனோடு தொடர்புடைய கொடூர கொலைகள் பெரும் கவலையையும்,பதற்றத்தையும் உண்டாக்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. “பாலியல் வன்கொடுமைகள்” எல்லாக் காலங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் இன்று அதிகளவில் அவை குறித்த செய்திகள் தெரியவருகின்றன என்பதும், ஊடகங்களின் வளர்ச்சிப் போக்கினால் பாலியல் வன் கொடுமைகள் செய்திகளாக்கப் படுவதாலும், மக்கள் முன்பைவிட தற்போது, இது பற்றித் தயங்காமல் வெளியில் சொல்வதாலும், இவ்வாறான விடயங்கள் பற்றி நாம் அதிகம் அறிந்துகொள்ள நேர்கிறது என்றாலும் கூட,சமீப காலமாக இந்த வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன என்பது நிச்சயம் மறுப்பதற்கில்லை. மாறிவரும் பெண்களின் வாழ்வியலில் அவர்களுடைய வெளி, வீட்டிற்கு அதாவது குடும்பத்திற்கு வெளியே பெரியளவில் விரிவடையத்தொடங்கியிருக்கின்றது. பெண்களுக்கான அந்த வெளியில், அறிமுகமில்லாத மனிதர்களைச் சந்திக்க வேண்டிய சூழல் அவளுக்கு உருவாகிறது. இப்படி வெளியே வரும் பெண்களை காலங்காலமாக “ பெண் தனக்கு உடமையானவள் “ என்பதுபோன்ற மனோபாவம் கொண்ட சில சைக்கோத்தனமான ஆண்களால் அவள் பாலியல் ரீதியாக சீண்டப்படுகிறாள். குடும்பம் என்கிற அமைப்பிற்குள், உறவினர்களால் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாவதும் காலங்காலமாக நடந்து கொண்டிருப்பதுதான். ஆனாலும் பெரும்பாலும் அதைப்பற்றிய செய்திகள் வெளியே வருவதில்லை என்பதும் கவலைக்குரிய விடயம்தான் .
பாடசாலை உற்பட பல்வேறு கல்வி நிலையங்கள், பணியிடங்கள், பயணங்கள், வீடுகள், வழிபாட்டுத்தலங்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்துகொண்டேதான் வருகின்றன. இதில் சிலபல குற்றச் சம்பவங்களே ஊடகங்களில் வெளிவந்த நிலையில், இன்னும் எத்தனையோ சம்பவங்கள் மறைக்கப்பட்டோ அல்லது வெளியுலகிற்கு கொண்டுவரப்படாமலோ இருப்பதுதான் யதார்த்த நிலை. ஒவ்வொரு குற்றச்செயல்களும் நடந்தேறும் போது அது மக்கள் மத்தியில் மிகப்பெரிய உணர்ச்சிரீதியான கொந்தளிப்புக்களை ஏற்படுத்தி மிகப்பெரிய போராட்டங்களுக்கும் எழுச்சிகளும் வழிவகுத்தாலும், மிகக்குறுகிய காலகட்டத்திலேயே குறிப்பிட்ட கோர சம்பவங்களை மறந்து, பத்தோடு பதினொன்றாக அதை நாமெல்லாம் கடந்துபோய்க்கொண்டிருக்கின்றோம் என்பதுதான் வேதனைக்குறிய விடயம்.
பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தேறும் பல சந்தர்ப்பங்களிலும் நம் சமூகம் , ‘அவள் ஆடை சரியில்லை’, ‘சென்ற இடம் சரியில்லை’ என்று பாதிக்கப்படும் பெண்கள் மீதே குற்றங்களைச் சுமத்தியிருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.இங்கே உடலளவிலும் மனதிலும் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் அவமானங்களையும் சேர்த்துச் சுமக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலை மாறவேண்டும். பாலியல் வன்முறை செய்தவனை குற்றவாளியாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணை கருணையுடன் அனுசரணையாக அணுகும் மனப் பான்மையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டுமே, பாதிக்கப்பட்ட பெண் தனக்கு இழைக்கப்பட்ட வன்முறைக்கு நீதி கேட்டுப் பெறமுடியும் என்பதுடன் அவள் அவளது பெரும் துயரிலிருந்து மீண்டு, உடலாலும் உளத்தாலும் மீண்டும் வலுப்பெற முடியும்.
குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளான நிலையில் பெற்றோர்களிடம் சொல்லாத நிலையில் அவர்களுக்கான பாதிப்பு இன்னும் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக பெற்றோர்களிடம் நல்ல உறவில் இருந்தாலும் சில குழந்தைகள் ஏதோவொரு அச்சத்தின் காரணமாக அதை பகிர்வதில்லை. இது மிகப்பெரிய தவறு என்பதால் அவசியம் நாம் நம் குழந்தைகளிடம் இது பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகும். சிறுவயது முதலே பெண்களுக்கு தங்கள் மீதான வன்முறையை எதிர்ப்பதற்கு அவசியமான அறிவை வழங்க வேண்டும். இதுபோன்ற எதிர்பாரா ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி, ஆபத்துக் காலங்களில் தற்காத்துக் கொள்வது எப்படி, ஏதேனும் நிகழ்ந்து விட்டால் தைரியமாக எதிர்கொள்வது எப்படி என அவர்களைத் தயார்படுத்துவது அவசியம் .
பாலியல்ரீதியான குற்றங்கள் நிகழ்ந்தால் அதை அவமானமாக கருதும் மனநிலை நம் சமூகத்தில் இன்னுமே இருக்கின்றது. இவ்வாறான மனோநிலை அநீதிக்குள்ளாக்கப்பட்ட குழந்தைகளையும் பெண்களையும் தாழ்வு மனப்பான்மை அல்லது குற்றவுணர்வு கொண்டவர்களாக மாற்றிவிடுகின்றது. குற்றத்தை புகார் செய்வதை அவமானமாக பார்க்கக்கூடாது. அதை குழந்தை பருவத்திலிருந்தே நாம் கற்றுக் கொடுத்துவிடவேண்டும். குற்றத்தை புகார் செய்வதுதான் குற்றத்தை தடுப்பதற்கான வழி என்பதை நாம் அனைவருமே முதலில் மனதில் நிறுத்திக்கொள்ளவேண்டும்.
இதில் இன்னுமோர் கசப்பான விடயம் என்னவென்றால், இவ்வாறான பாலியல் வன்கொடுமைகள் பெண் குழந்தை களுக்கு மட்டுமே நடப்பதில்லை என்பதுதான்! தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் திடுக்கிடும் தகவல்களைப் பார்த்தால், ஆண் குழந்தைகளுக்கும் உடல் எல்லையையும், பாதுகாப்பையும் கற்றுத் தர வேண்டிய தேவை நம்மிடத்தே இருப்பதை உணர்த்துகின்றது. இந்த சமூகச் சீரழிவை, சட்டத்தின் துணைகொண்டு மட்டும் மாற்றியமைக்க முடியாது. காரணம், அந்தச் சட்டத்தை ஏந்தியிருப்பவர்கள்தான் இந்தச் சீரழிவை விதைத்தவர்கள். இந்தச் சூழலிலிருந்து தனியாக யாரும் பாதுகாப்பு தேடவும் முடியாது.குறிப்பிட்ட சமூகச் சூழல்தான் தனிநபர் பண்பாட்டை சீரழித்தது என்றாலும், தனிநபர்களாக அதனை மாற்றிக் கொள்ள இயலாது. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்கிற நம்பிக்கை பெற்றோர்களுக்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் வருகின்றபோது நிச்சயம் குற்றங்களை பதிவு செய்ய அனைவருமே முன்வருவார்கள் என்பதும் கண்கூடு.
578 total views, 2 views today