எங்கிருந்தோ வந்தான் !

-திவ்யா சுஜேன் இலங்கை.

இப்படித் தான் எமக்கும் எங்கிருந்தோ ஒருவர் வருவர். தேவையானவற்றையெல்லாம் சலிக்காது செய்வர். எம்மீது பெரும் நம்பிக்கையும் , அன்பும் வைத்திருப்பர். எந்நேரமானாலும் உதவிடத் தயங்கர் . எம் செயல்கள் எதுவானாலும் மிக்க பொறுமையயுடன் ஏற்றுக் கொள்வர் .

சக்கரமாய் சுழன்று கொண்டிருக்கும் வேக வாழ்வில் , எப்போதாவது ஓய்ந்து கிடக்கும் போது, பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் நிற்கும் அந்த எங்கிருந்தோ வந்த ஒருவரிடம் நாம் பெற்ற இன்பங்களை, நெஞ்சம் கொஞ்சம் மீட்டி பார்க்கும். கண்ணை இமை இரண்டும் காப்பது போல் நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய் இன்னும் பலவாய் நின்று , சிவனடியாரை சிவன் தடுத்தாட்கொண்டருளியது போல சீர்மிகு வாழ்விற்கு வழி தந்து, ஏற்றம் புரிய வந்தவரை எண்ணுகையில் கண்கள் ஈரமாகும்.

ஆஹா! இவரால் பெற்று வரும் நன்மை எல்லாம் பேசி முடியாது, ஒன்றும் குறைவின்றி வண்ணமுறக் காக்கின்றாரே , என்ன நான் கைம்மாறு செய்வேன் ? எதைக் கொடுத்தால் மகிழ்வர் ? எப்பொருள் அவர் தந்த துணைக்கு ஈடாகும்? எது எம் நினைவினை உறுதி செய்து பல்லாண்டு பற்றி நிற்கும் ? இதுவா ? அதுவா ? எனத் திகைத்திருக்கையில் , காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லை என்பார். எங்கிருந்தோ வந்தார். இங்கிவரை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!

கட்டுறுதி உள்ள உடல் கண்ணிலே நல்ல குணம்
ஒட்டுறவே நன்றாய் உரைத்திடும் சொல் ஈங்கிவற்றால்
தக்கவனென்றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்
மிக்க உரை பல சொல்லி விருது பல சாற்றுகிறாய்
கூலி என்ன கேட்கின்றாய்? கூறு என்றேன் ஐயனே!
தாலி கட்டும் பெண்டாட்டி சந்ததிகள் ஏதுமில்லை
நானோர் தனியாள் நரை திரை தோன்றாவிடினும்
ஆன வயதிற்களவில்லை தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லை என்றான்.

பாரதியுடன் மிக அணுக்கமான குவளைக் கண்ணனை மனதில் வைத்து கண்ணன் என் சேவகன் பாடலைப் பாடியதாகச் சொல்வர். குவளைக் கண்ணனுக்கும் பராதிக்குமான உறவு மிகவும் நுட்பமானது. பாரதியின் புதுச்சேரி வாழ்க்கைக்கு நிழலானவர். ஆனால் பாரதியின் நிழலே தன் சுவர்க்கபுரி என வாழ்ந்தவர். பாரதி கவிதைகளை மனனம் செய்வதும், பாரதி புகழ் பரப்புவதுமே அவர் தொழிலெனக் கொண்டவர்.

அனைத்துக்கும் மேலாய், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானையின் காலடிக்குள் சிக்கிக் கொண்ட பாரதியை தன் உயிரையே பொருட்படுத்தாது மீட்டெடுத்த மெய்யன்பர். எந்தையும் தாயும் நூலில் பாரதியின் மூத்த மகள் தங்கம்மா பாரதி, குவளைக் கண்ணனுக்கும்,பாரதிக்கும் இடையே நடந்த சில சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ளதில் இருந்து, பாரதியைத் தெய்வமாகத் தரிசித்தவர் குவளைக் கண்ணன் என்பதும், குவளைக் கண்ணன் மீது பேரன்பும், அக்கறையும் கொண்டவர் பாரதி என்றும் தெரியவருகிறது.

பிறர் நலத்தில் கவனம் கொள்ளும் அதி உன்னத பண்பினைக் காட்டி நிற்கும் இவர்கள் நட்பு எக்காலத்துக்கும் உகந்த பாடம். நம் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு காரியங்களுக்கும் காரணம் உண்டு. சிலர் அறிவார். சிலர் அறியார்.அறிந்தோர் அமரசுகம் எய்துவர். இன்பத்தை எண்ணுபவர்க்கே என்றும் இன்பம் மிகத் தருவதில் இன்பமுடையது இப்படைப்பு.

கண்ணன் எனதகத்தே கால் வைத்த நாள் முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்
செல்வம் இளமாண்பு சீர்ச சிறப்பு நற்கீர்த்தி
கல்வி அறிவு கவிதை சிவயோகம்
தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்!
கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொண்டேன்!
கண்ணனை யாம் கொள்ளக் காரணமும் உள்ளனவே!

இப்படைப்பு எல்லையற்ற கருணை உடையது. இப்பிரபஞ்சத்தில் தோன்றிய அனைத்து உயிர்களுக்கும் நன்மை உண்டாகவே விரும்புகிறது. இங்கு தனித்தோர், தாழ்ந்தோர் என்று எவரும் இல்லை. எல்லோர்க்கும் ஒருவர் இவ்வண்ணமாகத் தான் எங்கிருந்தோ வருவர். அனைத்தும் தருவர். கண்முன் நிற்கும் கடவுள் அவர் அன்றிப் பிறிதெவரோ ? இதை உணராதார் உய்வரோ ?

429 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *