புரட்டிப்போட்ட புரட்டாதிச்சனி
-மாதவி (யேர்மனி)
தண்டவாளத்தில் தலைவைத்து ரெயின் காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்டு விட்டதோ என்று நிமிடக் கணக்கில் கணித்து சொல்வேன்.
அந்தக் காலத்தை கி.பி.,கி.மு போல் இப்படி அதனை இரண்டாக வகுக்கலாம்.
இது கலைஞர் கருணாநிதி தண்டவளத்தில் தலைவைத்ததற்கு பின்னர், மூன்றாம் பிறை படத்தில், சிறிதேவி தண்டவாளத்தில் தலைவைத்த கமலோடு, தலைவைத்து விளையாடுவதற்கு முன்னர்.
பயணம் போன நாட்களை விட, ரெயிலில் இடம் பிடிக்கவும், சோடப்போத்தல் மூடி நசிக்கவும் தான் அதிகமாக தெல்லிப்பழை ரெயில்வே ஸ்ரேசன் போயிருப்பேன். அதென்ன சோடப்போத்தல் மூடியும், தண்டவாளமும் என நீங்கள் நினைத்தால், நீங்கள் 70களுக்கு பின் பிறந்தவர்களாக இருப்பீர்கள்.
அது ஒர் திறில் நிறைந்த இன்ப விளையாட்டு (வீட்டில் தெரியாத வரைக்கும்.)சோடப்போத்தல் மூடி ஒன்றை எடுத்து, ரெயின் வருவதிற்கு ஒரு 10 நிமிடங்களுக்கு முன் தண்டவாளத்தில் குப்புறவைக்வேண்டும். பின் ரெயின் வரைக்க சற்று தள்ளிநின்று கண்ணும் கருத்தம்மா சோடபோத்தல் மூடியை பார்த்தவண்ணமே இருக்க வேண்டும்.
ரெயின் வந்ததும், ஆயிரம்கால் பூச்சிபோல அத்தனை சில்லும் மூடியை நசித்துகொண்டு போக, மூடி சப்பையாகி வட்டமாக வந்திடும். தண்டவாளத்தை விட்டு சிலநேரம் பக்கத்திலும் பறந்திடும். ஓடிப்போய் கல்லால் தட்டி மெதுவாக எடுக்கவேண்டும். அவ்வளவு சூடு சுடும். பார்த்தால் மூடி முழுநிலவு போல தங்க மாய் ஜொலிக்கும்.
பத்துச் சதமும் வைக்கலாம், ஆனால் வைக்கமாட்டோம். அப்போ பத்து சத்தத்திற்கு ஒரு உறுளைக்கிழங்கு போண்டாவாங்கலாம். என்ன வாங்கலாம் என்பதைப் பொறுத்துத்தான் காசின் பெறுமதி இருக்கும்.
ஆனால் தெருவில் போகும் கூடார மாட்டுவண்டியின் கூடாரத்தைப் பார்த்தால், அது ஒரு சதம், அதனைச் சப்பையாக்கி ஓட்டைபோட்டு. ஓட்டைக்குள் ஆணிபோட்டு கூடாரத்தின் பக்கங்களை அழகாகப் பூட்டி இருப்பார்கள். அந்தக்காலத்தில் யூரிப்பேஸ் இருந்திருந்தால் அரச உடமையை செல்லாக்காசாக்கியதற்கு போட்டுக் கொடுத்திருப்பார்கள். அனால் அந்தக்காலத்தில் என்ர காசு என்னவேணும் என்றாலும் பண்ணுவேன் என்ற போக்கு தான் இருந்திருக்கவேண்டும். ஏன் இப்பவும் அப்படி எண்ணுபவர்கள் இருக்கிறார்கள் தானே.
சரி அந்த நிலவுபோல் பளபளக்கும் சோடமூடி அது எதற்கு தெரியுமா?
அந்த மூடியில் நடுவே இரண்டு ஓட்டை போட்டு, அதற்குள் மெல்லிய நூல் கோத்து, பின் எமது இரண்டு கையிலும் இரு விரல்களில் நூலை மாட்டி விட்டு விட்டு இழுத்து இழுத்து விட்டால் அந்தமாதிரி சப்பை மூடி பளபளப்பாய்ச் சுத்தும். கைகளுக்குள் நிலவு சுத்தும் அழகே தனி. சுத்தும் வேகம் அறிய அம்மிக்கல்லில் முட்டவிட்டால் தீப்பொறி பறக்கும். கொஞ்சம் இன்னும் முயன்றிருந்தால், ஒரு பொறியியலாளராக வந்திருப்பேன். நல்லா காலம் மிஸ்சாகிவிட்டது. இல்லை என்றால் காங்கேசன்துறை ரெயின் யுத்தகாலத்தில் 30 வருடம் ஓடவில்லை. எல்லாம் மிஸ்சாகி இருக்கும்.
படிக்கபோனா என்ன சந்தைக்குப் போனா என்ன பொக்கற்றுக்குள் அது இருக்கும். வீட்டில் எல்லோருக்கும் தெரியும் கண்ணன் தானே செய்து விளையாடுவதில் மன்னன் என்று.
இப்பதான் கதைக்கு வாறேன். அப்பா வுக்கு சரியான பசி. காகா என்று கத்தியும் ஒரு காக்கையும் வரவில்லை. அன்று புரட்டாதி சனிக்கிழமை, தங்கச்சியும் சேர்ந்து கத்தினாள். அப்பா வாழையில் போட்ட சோறு கறியை முற்றத்தில் வைத்துவிட்டு. நீங்கள் இரண்டுபேரும் கத்துங்கோ என்று சொல்லிப்போட்டு பசியில்லை செம்புங்குள் இருந்த தண்ணீரை அண்ணாந்து குடிக்கிறார்.
தங்கச்சி கத்துறாள். அப்பா! அப்பா! இங்கை அண்ணா வந்த ஒரு காகத்தையும் சாப்பிவிடாமல் துரத்திபோட்டார்.
எனக்கும் பசிக்குது அப்பா என்று கத்திறாள். இஞ்சவிடு காகம் வரும் வரைக்கும் நான் எழும்ப மாட்டேன். என்று சொல்லி அப்பா திண்ணையில வந்து இருந்திட்டார்.
காகம் வந்து இருந்து கொத்தி சாப்பிட்டது.
அப்பா வேட்டியை தளர்த்தி தன் இடுப்பை பார்த்தார்.அப்பாவுக்கு வந்ததே கோபம். அப்படி ஒருநாளும் அப்பாவை இப்படி நான் காணவில்லை. இப்ப காகம் இருக்குது நான் பறந்திட்டேன்.
காகத்தின் கழுத்தில் ஒரு சோடா மூடி. ஒரு நூலில் கோத்து கழுத்தில் கட்டிக்கிடக்கு. கோத்த கயிற்றின் மிச்சம் அப்பாவின் இடுப்பில கட்டி இருக்கு.
புரட்டாசி சனி விரதம் இருந்தால். சனிபகவான் காப்பான் என்று சொல்லுகினம். ஆனால் அந்த நேரம் பார்த்து சனிபகவான் அனுப்பிய அப்பாவின் அண்ணை, வீட்டை வந்தார். என் கண்ணன் ஓடுறான். அண்ணை! ‘நாலு பெடியளோடு சேர்ந்து அவங்கள் செய்த வேலையைப்பார்’ என்று காகத்தை காட்டினார்.
கள்ளக் காககம் காட்டிக்கொடுக் வென்றே வந்தது போகுமா
எல்லா அப்பாமாரும் இவன் மற்றவர்களுடன் சேர்ந்து கெட்டுப்போனன் என்று தான் சொல்லுவினம். ஆனால் எங்கட அப்பா அதுவும் புரட்டாசி சனி விரதம் அன்று அப்படி பொய்சொல்லவில்லை. ‘ எனக்கு அடுத்த பிறப்பு ஒன்று இருந்து நான் காகமாய் பிறந்தால் உன்ரை கையில பிடிபடப்படாது.’ என்றார்.
இன்று புரட்டாதிச்சனி, . ஒரு வருடம் எப்பாடி ஓடியது என்று தெரியாது, இப்ப அப்பா உயிரோடு இல்லை. அப்பா இறந்தபின் அந்தக் காகத்தை ஒரு நாள் தேடிக் கண்டேன். எப்படி முயன்றும் பிடிபடவில்லை.அப்பா நினைவாகவே இருந்தது. இன்று என்ன அதிசயம்.
அதேகாகம் என்னருகில் வந்து வாழையிலையில் வைத்த சோற்றை உண்கிறது. அப்பாவாக அந்தக்காகம் இருக்கமுடியாது. அப்பா இறப்பதற்கு முன்பே இருந்த காகம் அல்லவா அது. காகம் இப்ப கொத்திக் கொத்தியுண்ணுகிறது. நான் மெல்ல காகத்தைப் பிடித்துவிட்டேன். பிடித்தகையோடு அறைக்குக்குள் ஓடுகிறேன். அங்கு அப்பாவின் கத்தரிக்கோல் ஒன்று கூரை ஒலைக்குள் செருகிக் கிடக்கிறது. காகத்தின் கழுத்தில் அன்று கட்டும்போது இருந்ததைவிட இப்ப மெதுவாக கயிற்றை வெட்டுகிறேன். உண்மையில் காகத்துக்கு வலிக்கு என்பதற்கும் அப்பால் அப்பாவுக்கு வலிக்கும் என்றொரு பொய்மனம்தான், ஆனால் ,அதுவே மெய்மனமாகிப்போச்சு
437 total views, 4 views today