குருதி வழியும் திரைகள்
- சேவியர் – தமிழ்நாடு
திரைப்படங்கள் ஒரு காலத்தில் நல்ல செய்திகளைச் சொல்வதற்கான காட்சி ஊடகமாக இருந்தன. பழைய கால திரைப்படங்களைத் திரும்பிப் பார்த்தால் அவை ஏதோ ஒரு உயரிய சிந்தனையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டன. பின்னர், சிறந்த மனிதர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. அவை காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களைக் கண்டு இன்றைக்கு திரைக்கு குருதிப் பாசனம் செய்யும் சாதனமாக உருமாறியிருக்கின்றது !
குடும்ப உறவுகளைப் பற்றிய கதைகள், நட்பைப் பேசும் கதைகள், சமூகப் பிரச்சினையைப் பேசும் கதைகள் போன்றவையெல்லாம் இன்றைக்குப் பார்வையாளர்களால் ரசிக்கப்படுவதில்லை. அல்லது, அதை ரசிக்க முடியாத ஒரு ரசனைக் குழிக்கும் பார்வையாளர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். இன்றைய திரைப்படங்களின் தொடக்கம் முதல் கடைசி வரை அரிவாள்களே பேசுகின்றன. அவை குரூரத்தை அப்படியே காட்டவும் தயங்குவதில்லை என்பது தான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.
முன்பெல்லாம் வன்முறையைக் காட்டினால் கூட அதைத் திரைமறைக் காயாகக் காட்டினார்கள். ஒரு தொலை தூரக் காட்சியாக, அல்லது முகபாவனைகளின் மூலமாக இப்படித் தான் வெளிப்படுத்தினார்கள். ஆளவந்தான் திரைப்படத்தின் வன்முறை பார்வையாளரைப் பற்றிவிடக் கூடாது என்பதற்காக அதை கிராபிக்ஸ் காட்சிகளாக வடிவமைத்திருந்தார்கள்.
இன்றைக்கு அதெல்லாம் புறங்கையால் புறந்தள்ளப்பட்டுவிட்டன. வன்முறையைக் காட்டுவதே இயல்பு என்பதை சில பல இயக்குநர்கள் நிர்ணயித்துவிட்டார்கள். அதுவும் அப்பாவைக் கொல்வது, நண்பனை வெட்டுவது, குடும்பத்தையே அழிப்பது என்றெல்லாம் உறவுகளின் மீதான புனிதத்தையும், கண்ணியத்தையும் யதார்த்தம் எனும் பெயரில் குழிதோண்டிப் புதைத்து விட்டார்கள். கேட்டால், ‘கலையைக் கலையாய்ப் பார்க்கவேண்டும்’ என்பார்கள். அவர்கள் கலையை வியாபாரமாகத் தான் பார்க்கிறார்கள். வன்முறைப் படங்கள் வரிசையாத் தோல்வியடைந்தால் அவர்கள் ‘கலை கலைக்காகவே’ எனும் கோஷத்தோடு நிற்கப் போவதில்லை. சில்லறை புரளும் இடங்களுக்கு இடம்பெயர்வார்கள் என்பதே உண்மை.
இன்றைய உலகம் நம்மை இயலாமையின் கையில் கையளித்திருக்கிறது. நம்மால் எதையும் செய்ய முடிவதில்லை. சிக்னலில் நம்மீது வந்து வேண்டுமென்றே மோதுகின்ற ஒருவனைக் கூட நம்மால் எதிர்க்க முடிவதில்லை. காரணம் சமூகம் இன்றைக்கு எளியவர்களின் பக்கம் இல்லை. எளியவர்களின் குரல் எங்கும் எதிரொலிப்பதில்லை. எளியவர்களின் முகம் அரசுக்குத் தேவையற்றதாகிவிட்டது. எளியவர்கள் நியாயம் கேட்டால், அவர்கள் எளியவர்களின் உயிரையே பறித்து விடுகிறார்கள்.
ஆனால் எளியவர்களின் இதயத்தில் அந்தக் கோபம் அழிவதில்லை. நம்மீது திணிக்கப்படும் அநீதியை அழிக்கவேண்டும் எனும் வேட்கை தணிவதில்லை. அது உள்ளுக்குள் ஒரு உறங்கும் எரிமலையாய் காத்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட மனநிலையில் ஒரு படத்தைப் பார்க்கும்போது, அதில் தெரிகின்ற அதீத வன்முறை அவனை திருப்திப்படுத்துகிறது. தனக்கு எதிராக நிற்கும் சமூகத்தை அவன் வெட்டிச் சாய்ப்பதாய் தனக்குள் கருதிக் கொள்கிறான். தன்னால் செய்ய இயலாத ஒன்றை ஒருவன் செய்யும் போது கைதட்டுகிறான். ஹீரோவாகத் தன்னை மூன்று மணிநேரம் கருதிக் கொள்கிறான்.
இவை வெறும் திரைப்படங்கள் என்று சொல்லி வெறுமனே கடந்து செல்ல முடியாது, திரைப்படங்கள் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்குகின்றன. சுதந்திரப் போராட்டக் காலத்தில் அவை மக்களிடையே விடுதலை உணர்வைத் தட்டியெழுப்பும் மாபெரும் பணியைச் செய்தன. அதே போல, வன்முறைத் திரைப்படங்களப் பார்த்து பலர் கொலைகளைச் செய்ததும், துப்பாக்கிச்சூடுகள் நடத்தியதும் வரலாற்றில் வலியுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே கலை வெறுமனே கலைக்கானதல்ல, என்பதை உணர்தல் அவசியம்.
இத்தகைய வன்முறைகள் செய்கின்ற முதல் கெடுதல், இதன் வீரியத்தை இயல்பாக்கிவிடுவது தான். தொடர்ந்து வன்முறைக் காட்சிகளையே பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு, வன்முறைகள் அதிக பாதிப்பை உருவாக்காமல் கடந்து சென்றுவிடும். ஒரு செயலை மீண்டும் மீண்டும் பார்க்கும் போது அது இயல்பாகிவிடுகிறது. ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லும்போது அது பழக்கமாகிவிடுகிறது. ஒரு தவறை மீண்டும் மீண்டும் செய்யும் போது அது வாடிக்கையாகி விடுகிறது. அப்படித்தான் வன்முறைக் காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது அது வெகு இயல்பாய் மாறிவிடுகிறது. அதன்பின் எந்த ஒரு அதிர்ச்சியையும், அதிர்வையும் உருவாக்காமல் ஒரு வன்முறை கடந்து போகலாம்.
வன்முறைத் திரைப்படங்கள் தங்களுடைய தீர்வை எப்போதுமே வன்முறையினால் தான் கண்டடைகின்றன. இப்படிப்பட்ட திரைப்படங்களைப் பார்க்கும் மக்கள்,’பிரச்சினையின் தீர்வு வன்முறையே’ எனும் முடிவுக்கு வந்து விடுவார்கள். தங்கள் வாழ்க்கையிலே அத்தகைய பிரச்சினைகள் எழும்போது அதற்கான தீர்வு வன்முறைதான் எனும் சிந்தனை அவர்களிடம் எழும். ஒரு சவாலைச் சந்திக்க ஆயிரம் வழிகள் இருக்கலாம், ஆனால் வன்முறையே ஒரே வழி என கலையின் மூலம் மூளைச்சலவை செய்வது எத்துணை அபாயகரமானது இல்லையா ?
முன்பெல்லாம் திரைப்படங்கள் பார்ப்பது ஒரு திருவிழா போல. டெண்ட் கொட்டாயில் போய் படம் பார்ப்பது ஒரு சுற்றுலா செல்வது போல. வெளி அரங்குகளில், திருவிழா மேடைகளில் எப்போதேனும் திரைப்படங்கள் திரையிடப்படும்போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். அதைத் தாண்டி திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. இன்றைக்கு அப்படியல்ல. வீட்டுக்கொரு மரம் வைப்போம், ஆளுக்கு இரண்டு மொபைல் வைப்போம் என்று தானே உலகம் இயங்குகிறது.
அவர்களுடைய கண்ணசைவில் திரைப்படங்கள் கிடைக்கின்றன. ஓ.டி.டி தளங்கள் வந்தபின் அவை இன்னும் இயல்பாகவும், எளிதாகவும், உயர் தரத்திலும், ஏன் தணிக்கையைத் தாண்டிக் கூட கிடைக்கின்றன. இவை இன்றைய சிறுவர் மற்றும் இளையர் மனதில் மிகக் கடுமையான விளைவுகளை உருவாக்குகின்றன.
சமூகத்தின் மீது ஒரு அச்சத்தையும் இத்தகைய திரைப்படங்கள் உருவாக்கிவிடுகின்றன. உதாரணமாக காவல் துறையினரை வில்லனாகச் சித்தரிக்கும் படங்களையே தொடர்ந்து பார்ப்பவர்கள் காக்கி சட்டையைப் பார்த்தாலே பயந்து நடுங்கும் சூழல் உருவாகும். கடத்தல், கொலை எனும் செய்திகளையே பார்ப்பவர்கள் துணிச்சலாய் கடைவீதிக்குக் கூட செல்லத் தயங்கும் நிலமை உருவாகும். இவையெல்லாம் நமது இயல்பான வாழ்க்கைக்கு வேட்டு வைத்து விடும் இல்லையா ?
நம்மீது திணிக்கப்படும் திரைப்படங்களை நாம் தவிர்க்க முடியாது. அவை ஏதோ ஒரு வகையில் நமது இளைய சமூகத்தினரைச் சென்றடைந்து விடுகின்றன. இருந்தாலும் அத்தகைய திரைப்படங்களை முடிந்தமட்டும் நிராகரிப்பது நல்ல பயனைத் தரும். பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகாத வன்முறைத் திரைப்படங்கள், தயாரிப்பாளர்களின் குருதியைச் சுவைக்கத் தொடங்கும். இது ஒரு கார்ப்பரேட் யுகம், இங்கே இலாபம் இல்லாதவை புதைகுழிக்கு அனுப்பப்படும்.
தணிக்கைக் குழுக்கள் இன்னும் கொஞ்சம் தனது நிலையை இறுக்கமாக்கி, இத்தகைய திரைப்படங்கள் வெளிவருவதைத் தடுக்க வேண்டும். திரையரங்குகளில் சிறுவர்கள் நுழைவதை வேண்டுமானால் தடுக்கலாம், ஆனால் ஒடிடி தளங்களில் வரும்போது அவை தடுக்கப்படுவதில்லையே ? மொபைல் போன்றவற்றில் அதன் காட்சிகள் பரவுவதை யாரும் கண்காணிக்க முடிவதில்லையே !
ஊடகங்களும், விமர்சனங்களும் இத்தகைய திரைப்படங்கள் மீது தர்க்க ரீதியிலான கேள்விகளை முன் வைக்க வேண்டும். வெறும் இலாப நோக்கத்துக்கான திரைப்படங்களை சமூகக் காவலர்களான ஊடகங்கள் வலிமையாய் எதிர்க்க வேண்டும். மனிதத்தையும், அன்பையும் பரவச் செய்யும் திரைப்படங்களையே அவை ஆதரிக்க வேண்டும்.
யதார்த்தத்தைக் காட்டுகிறேன் பேர்வழி என ஹீரோவை வில்லனாகச் சித்தரிப்பது, திறமையாய்க் கொலை செய்பவனை தப்ப விடுவது, எந்த விதமான தண்டனையும் இல்லாமல் தப்பு செய்பவர்கள் ஹாயாய் திரிவது போன்ற எதிர்மறை கள்ளிச் செடிகளை இதயத் தோட்டத்தில் நடுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.
நல்ல திரைப்படங்கள் தோல்வியடைய நாம் அனுமதிக்கும்போது, நம்மை அறியாமலேயே தவறான திரைப்படங்கள் வெளிவர அனுமதிக்கிறோம். திரை வாழ்க்கை திரையோடு நிற்பதில்லை,தரையோடும் பயணிக்கும் எனவே ஆழமாய்ச் சிந்திப்போம். அடுத்த தலைமுறையைப்
261 total views, 6 views today