இந்த உலகம் வேண்டாம். புதியதோர் உலகம் செய்வோம்.
-கௌசி.யேர்மனி
இந்த உலகம் அழிந்து விட வேண்டும் என்ற சிந்தனை என்னுடைய மூளை முழுவதிலும் நிறைந்து விட்டது. வேண்டாம். இந்த உலகம் வேண்டாம். எல்லாம் அழியட்டும். புதிய ஓர் உலகம் உதிக்கட்டும். அங்கு பிஞ்சு உள்ளங்களும், கள்ளங்கபடமற்ற மனிதர்களும் வாழட்டும். நான் யார்? என்னுடைய உறவுகள் யாவர்? நான் ஏன் வாழுகின்றேன்? என்னுடைய எதிர்காலம் என்ன? இவ்வாறான எந்தக் கேள்விகளுக்கும் விடை தெரியாமல் ஒரு உலகம் இந்த பூமியின் பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றது. யார் இவர்கள்? காரணம் என்ன? எம்மால் என்ன செய்ய முடியும்? இவை பற்றி என் மனக்குமுறலை இக்கட்டுரையில் கொண்டு வருகின்றேன்.
காலம் கற்றுத் தந்த பாடத்துடனேயே நாம் வாழுகின்றோம். அப்பாடம் சரியான முறையில் அமையாது விட்டால், எம்முடைய பாதை வழி தடுமாறிப் போவதற்குச் சந்தர்ப்பங்கள் அதிகமாக அமைகின்றன. அதற்கான காரணங்களைக் கண்டு கொண்டு, காரண கர்த்தாக்களைத் திருத்துவதற்கு வழி செய்ய வேண்டிய கடமை ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருக்கின்றது.
முதன்முதலாக என் கண்கள் இவ்வாறான மனிதர்களை நோக்கிய இடம் கிரேக்கம். இங்குதான் முதன் முதலாக நேரடியாக இந்த அபூர்வ மனிதர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர்களைக் கண்டபோது மனத்துக்குள் பயமா! பரிதாபமா! அழுகையா! எது என்று சொல்ல முடியாத வேதனை எனக்குள்ளே புகுந்தது. இவர்கள் ஜெர்மன் மொழியில் குறிப்பிடப்படும் ணுழஅடிi போல இருந்தார்கள். கிரேக்கத்திலே அந்தப் பாதையூடாகப் பயணம் செல்வதைத் தவிர்த்தேன். ஆனால், அன்றிலிருந்து சிந்தித்தேன். கிரேக்கத்தில் அந்தப் பாதை இவர்களுக்காக ஒதுக்கப்பட்டு விட்டது. இல்லை அவர்களுக்கு இந்தப் பாதையைப் பரிசளித்து விட்டார்கள். கவனிப்பாரற்றுக் கிடந்தது அந்தப் பாதை மட்டுமல்ல அந்தப் பாதையில் வாழுகின்ற மனிதர்களுமே. இறக்காத, ஆன்மா இல்லாத, விருப்பமில்லாது சுற்றித் திரிகின்ற மனிதர்கள் என்று இவர்களைச் சொல்லலாம்.
ஜெர்மனி பிரெங்போர்ட் இரயில் நிலையம், ஹம்பேர்க் போன்ற பல இடங்கள், அமெரிக்காவின் முநளெiபெவழn யஎந போன்ற பகுதிகள், ஆசிய நாடுகள் போன்ற உலகம் முழுவதிலும் தன்னுடைய ஆட்சிக்குள் மக்களை இந்த அகோர அரக்கன் என்று சொல்லப்படுகின்ற போதைப்பொருள் அடக்கி வைத்திருக்கின்றது
போதைக்கு அடிமையான ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு கதையைச் சுமந்து திரிகின்றார்கள். 18 வயதுக்கு உட்பட்ட இளைய சமுதாயத்தினரும் இவர்களில் அடங்குகின்றார்கள். தம்முடைய கடைசி ஊசிக்காகக் காத்திருக்கின்றார்கள். பெற்றோரின் குடும்பப் பிரச்சினைகளாலும் வீட்டிற்குள் நடக்கின்ற அகோர யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட ஒரு பெண் வீட்டைவிட்டு ஓடிவிடுகின்றாள். இளைஞர்கள் நல அலுவலகத்தைத் தஞ்சம் அடைகின்றாள். அவர்களும் அவளை ஒரு குடும்பத்திடம் ஒப்படைக்கின்றார்கள். பராமரிப்புத் தந்தையால் பாலியல் இம்சைக்கு உட்படுகின்றாள். அங்கு வாழ முடியாது மீண்டும் இளைஞர்கள் நல அலுவலகத்திடம் அடைகின்றாள். வேறு ஒரு குடும்பத்தில் ஒப்படைக்கப்படுகின்றாள். அங்கே வீட்டுத் தலைவனால் சித்திரவதை அனுபவிக்கின்றாள். முடிவாக வீதிக்கு வருகிறாள். அவளுக்கு அந்தப் பாலிய வயதில் மனத்துக்கு அமைதியைக் கொடுக்கின்றது போதை. ஆரம்பத்தில் புகைத்தாள். பின் தூளாக வாங்கிய ஹெரோயினை ஒரு கரண்டியில் போட்டு லைட்டரின் உதவியுடன் உருக்குகிறாள். திரவமாகிய ஹெரோயினை ஊசியினுள் செலுத்துகிறாள். சொர்க்கத்தைக் காணுகிறாள். மயங்கிப் போகிறாள். இது நாளுக்கு நாள் அவளை அதற்கு அடிமையாக்குகிறது. இதற்கு யார் காரணம்? அவளா காரணம்? சமூகமா காரணம்? அந்த இடத்திலிருந்து அவளை மீட்க முடியாது. அவளுக்காக நாம் என்ன செய்ய முடியும்?
இவ்வாறுதான் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு கதை சுமந்து கொண்டு திரிகின்றார்கள். ஒருவர் இருவராகி, இருவர் மூவராகி இன்று உலகத்தில் தொற்றுநோய் போல் இப்பிரச்சினை தொடர்ந்து கொண்டு போகின்றது. நாம் பொறுப்பெடுப்பதா? நாடு பொறுப்பெடுப்பதா? விற்பனையாளன் திருந்துவதா? கைநிறைய பொருளாதாரத்தை அரசாங்கம் தந்தால், நாம் ஏன் இவ்வாறான தொழிலுக்குப் போகப் போகின்றோம் என்று பணத்தாசையில் அரசாங்கத்தைக் குற்றம் சுமத்துகின்றார்கள் சுயநலவாதிகள். ஹெரோயினை முதன் முதலாகத் தயாரித்த ஜெர்மனி பயேன்(டீயலநச) மருந்து உற்பத்தி நிறுவனம் “நாம் மருந்தாகவே பயன்படுத்துவதற்காகத் தயாரித்தோம்”; என்று சொல்லித் தப்பிக் கொள்கின்றார்கள். போதைக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவரே மருந்துக் கடைகளில் வாங்குவதற்கு மருந்துச் சீட்டு எழுதிக் கொடுக்கின்றார்கள். “நாம் கொடுக்கவில்லையென்றால், அவர்கள் வீதியில் கிடக்கும் ஊசியை எடுத்துப் பயன்படுத்துவார்கள். அது அவர்களின் உடல்நலத்தை மீதமாகப் பாதிக்கும். எயிட்ஸ் போன்ற நோய்கள் வருவதற்குரிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றது” என்கின்றார்கள். இவ்வாறான நோயால் துன்புறுவதைவிட இறப்பது மேல் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.
மனிதனுக்குப் போதையேற்றல் என்பது இன்று நேற்றல்ல பண்டைக்காலம் தொட்டே இருந்து வந்துள்ளதை அறியமுடிகின்றது. அபின், கஞ்சா, கள்ளு, சாராயம், பீடி, சிகரட், சுருட்டு இவற்றுக்கு மனிதன் அடிமையாகி இருந்தது அறியப்பட்டதே.
மீன் தடிந்து விடக்கு அறுத்து
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்
மணல் குவைஇ மலர் சிதறிப்
பலர் புகு மனைப் பலிப் புதவின்
நறவு தொடைக் கொடியோடு
என்னும் பட்டினப்பாலை காவிரிபூம் பட்டினத்தில், கடற்கரையில் கள்ளுக்கடைகள் பிற கடைகளைப் போன்றே அடையாளக் கொடிகளோடு இருந்தமையை எடுத்து உரைக்கின்றது. இவ்வாறான அத்துமீறிய போதையால் சீரழியும் உலகுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வள்ளுவர் எழுத்தாணி எடுத்தார்.
ஆனால், அவருடைய ஒரு குறளிலே கள் உண்பவனைக் காரணம் காட்டித் திருத்த முயலுதல் தண்ணீருக்குள் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவதைப் போலாகும் என்கிறார்.
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று
அப்படியானால், கள் உண்பவனைத் திருத்த முயற்சி எடுத்தல் கூடாதா? என்ற கேள்வி எழுகின்றது. எத்தனையோ உளவியல் நிபுணர்கள் தம்முடைய பட்டப்படிப்பை முடித்துள்ளார்கள். தம்முடைய மருத்துவமனைக்கு வருகின்ற பணப்பசையுள்ளவர்களை விட்டு, வீதியைத் தங்குமிட வாசஸ்தலமாகக் கொண்டு, இறுதி ஊசிக்காகத் தவம் கிடப்பவர்களை நாடிச் செல்லக் கூடாதா? பாவப்பட்ட ஜென்மங்களாக அநாதரவாகக் கிடப்பவர்களின் பக்கம் செல்லக் கூடாதா?
கிட்டப் போனால், ஒட்டிக் கொள்ளும் என்பதுபோல இவ்வாறானவர்களை வெறுப்பவர்களே அதிகம். அருகே சென்று ஆறுதலாகப் பேசுவதற்கு எம்மவர்கள் தயங்குவார்கள். மனத்தளவில் பாதிக்கப்பட்டு, உடலளவில் தளர்ந்து போய், நடப்பதற்கே வலுவிழந்து இருப்பவர்களைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. அருகே வருபவர்களை துன்புறுத்துவார்களைப் போதையால் பாதிக்கப்பட்டவர்கள் துன்புறுத்துவார்கள் என்று சொல்ல முடியாது. இந்த நிலை அவர்களுக்கு எல்லாம் கடந்த ஒரு ஆனந்த நிலை என்றே கூறமுடியும். இதற்கு வழி காண வேண்டிய அவசியம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.
424 total views, 2 views today