பரிணாமத்தின் இயல்பு பக்குவமா?

இப்படிக் கேள்விக்குள் கேள்வியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது வாழ்க்கை.
-தீபா ஸ்ரீதரன் தாய்வான்

எனக்கு இந்தச் செல்ஃப் லவ், செல்ஃப் ரெஸ்பெக்ட் போன்ற சொற்றொடர்களில் நம்பிக்கை இல்லை. அன்பு, மரியாதை, கருணை இவையெல்லாம் ஒருவர்க்கொருவர் பரிமாறிக் கொள்ள வேண்டிய உணர்வுகள். இவற்றை நமக்கு நாமே வைத்துக் கொள்வதிலோ, இல்லை நம்மையே நாம் நேசிப்பதற்கோ நம்மையே நாம் மதித்துக் கொள்வதற்கோ எனக்குத் தெரிந்தவரையில் எந்தத் தேவையும் இல்லை. அதற்கு அர்த்தம் இருப்பதாகவும் எனக்குத் தோன்றவில்லை. மரியாதை என்பது அன்பின் நீட்சி. நாம் ஒருவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நாம் தரும் அங்கீகாரம். அது ஒரு அன்பின் வெளிப்பாடுதான் என்று நினைக்கிறேன். ஓர் உயிர் வளரும்போது, அது தன் மேல் நம்பிக்கையும், தன்னை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உள் உந்தலையும், தன் மீது இச்சையும், கொண்டிருந்தால்தான் அதன் வாழ்க்கை நீடிக்க முடியும். அது இயற்கையாகவே ஓர் உயிருக்குள் அமைந்த தன்மை. அதனால் தனியாகச் சுயமரியாதை சுய அன்பு என்று மெனக்கெடுவதில் எந்த அர்த்தமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஓர் இனமாக ஓர் உயிர் பல்கிப் பெருகுவதற்கு இந்த உணர்வுகளைச் சக உயிர்களுடன் பகிர்ந்து கொள்வது முக்கியம். அது அவசியம். இதைச் செய்ய முடிந்ததைத்தான் மனித இனத்தின் ஆளுமை என்று நான் நம்புகிறேன்.

எனவே ஓர் உயிர் தனக்குத்தானே கொடுத்துக் கொள்ள வேண்டியதென நான் நம்புபவை நல்ல உணவு, ஆரோக்கியமான உடலுக்கான வாழ்க்கை முறை. புலன்களைத் தீட்டிக்கொண்டு அதன் செயல்பாடுகளை விரிவடையச் செய்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொள்வது, இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதலை அறிந்து கொள்ளும் அறிவுக்கான தளத்தில் தன்னை விட்டெறிந்து கொள்வது. இவை அனைத்திலும் நான் எப்போதுமே அதிகக் கவனம் செலுத்துகிறேன்.
நாம் உண்ணும் உணவு பற்றிய அறிவியலைத் தெரிந்து வைத்துக் கொள்வதில் எனக்கு அதீத நாட்டம் உண்டு. என்னால் முடிந்தவரை அதை நான் செய்து கொண்டிருக்கிறேன். உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை போன்றவற்றையும் தவறாமல் கடைப்பிடிக்கிறேன். இதோ 44 வருடங்கள் முடிந்துவிட்டது. ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒன்றைப் புதிதாகக் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். புலன்களுக்கும், அறிவுக்கும் என்னால் முடிந்தவரை புதிய சூழ்நிலைகளையும் அனுபவங்களையும் ஏற்படுத்திக் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறேன். இவற்றில் எனக்குப் பெரும் நிறைவான ஒரு மகிழ்ச்சி உண்டு.

அடுத்து சக உயிர்களை அரவணைத்துக் கொள்ளும் முயற்சி.ஒவ்வொரு வருடமும் சளைக்காமல் மனித மனங்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டேதான் இருக்கிறேன். ஒவ்வொரு மனமும் ஒரு வனமாக விரிந்து தனக்குள் ஓராயிரம் பேரொலிகளை ஒளித்துக் வைத்துக்கொண்டிருப்பதை என்னால் இன்று உணர முடிகிறது. அவற்றின் தன்மை எனக்கு எப்போதும் வியப்பை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

பொதுவாக மனிதர்களை அணுகுவதிலும், அவர்களுடன் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்வதிலும் எனக்கு எந்தத் தயக்கமும், பயமும் இருந்ததில்லை. ஆனால் சமீப காலத்தில் நடந்த சில நிகழ்வுகளால் எனக்குள் ஒரு பெரும் தயக்கம் வந்திருப்பதை இப்போது நான் உணர்கிறேன். சிலர் எதற்காக நம் வாழ்க்கைக்குள் வந்து எதற்காக ஒரு பிரளயத்தை ஏற்படுத்தி விட்டுச் செல்ல வேண்டும் என்ற கேள்வி என்னைத் துளைக்கிறது. சமீப காலமாக மனிதர்களிடம் கொஞ்சம் விலகியே இருக்க நினைக்கிறேன். இது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. இந்த மனநிலையை ஏற்றுக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. ஆனாலும் காயப்பட்டு விடுவோம் என்ற பயம். முரண்பாட்டுப் போராட்டம்.

எனக்கு மிகவும் சவாலான விஷயங்களில் பொய் சொல்வதும் ஒன்று. பொதுவாக நான் இந்தச் சமூகத்தில் எனக்கான அடையாளத்தைப் பற்றியோ இல்லை பிற மனிதர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியோ அதிகம் சிந்திப்பதில்லை. அதனால் பொய் சொல்வது எனக்கு மிகவும் கடினமான ஒரு காரியம். நான் பொய்யே சொன்னதில்லை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். சிறிய பொய்கள் சொல்லி இருக்கிறேன். ஆனால் அதை இயல்பாக எடுத்துக் கொள்ளும் ஒரு மனப்போக்கு எனக்குக் கிடையாது. ஒருநாள் வேலைக்குச் செல்லாமல் இருக்க ஏதோ ஒரு பொய்யான விஷயத்தைச் சொல்லி விடுமுறை எடுத்தால் கூட அன்று முழுவதும் தூங்க மாட்டேன். அது ஒரு பெரிய குற்ற உணர்ச்சியாக இருக்கும். இன்று வேலைக்கு வரப் பிடிக்கவில்லை அதனால் வரவில்லை என்று சொல்வதில் எனக்கு என்ன தயக்கம், என்ன பயம் என்று தோன்றும். இது ஒரு சிறிய எடுத்துக்காட்டுதான். சில நேரம் சிலவற்றைத் தவிர்ப்பதற்காகச் சிறிய பொய்களைச் சொல்லும்போதும் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது. வேறு ஏதோ ஒரு கட்டத்தில் அவர்களிடம் அந்த உண்மையைச் சொல்லி விட வேண்டும் என்று மனம் துடிக்கும். நேர்மையாக இருப்பது வாழ்க்கையை மிகச் சுலபமாக வைக்கும் என்பதில் எனக்குப் பெரும் நம்பிக்கை. பெரும்பாலும் என் மனதில் தோன்றுவதைப் பிறரிடம் சொல்லி விடுவேன். சில நேரங்களில் இதே தன்மையை நான் நெருங்கிப் பழகும் சிலரிடமும் எதிர்பார்ப்பேன். இங்குதான் பிரச்சனையே உருவாகும்.

சில கேள்விகள் என்னைத் துளைத்துக் கொண்டே இருக்கும். அதற்கான நேர்மையான பதிலை ஏன் அவர்கள் சொல்வதில்லை என்ற கோபம் இருந்து கொண்டே இருக்கும். ஒரு காலகட்டத்தில் இதை நான் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். என்னைப் போலவே மற்றவர்களும் சிந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் இங்குப் பார்க்கும் பெரும்பான்மையான மனிதர்களுக்கு அவர்கள் வாழும் சமுதாயத்தில் அல்லது உறவு, மற்றும் நட்பு வட்டங்களில் தங்களுக்கான அடையாளம் அல்லது மதிப்பீடு பற்றிய பெரிய கவலை இருக்கிறது. இது தவறு என்று நான் சொல்ல மாட்டேன். அது மனித இயல்பு தான். எனக்கும் ஓரளவு அது இருக்கிறது. ஒரு சமூக விலங்காக எனக்கான மதிப்பீட்டை நான் பற்றிக் கொள்ள வேண்டும் என்ற கடமை உணர்வு எனக்கும் இருக்கிறது. நான் எவ்வாறு பார்க்கப்படுகிறேன் என்ற சிந்தனையே எனக்குச் சுத்தமாக இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் பெரும்பாலும் நான் அதைப் பற்றி யோசிப்பதில்லை என்றுதான் நினைக்கிறேன்.

ஆனால் மற்றவர்களுக்கு அந்த மதிப்பீடு மிகவும் முக்கியமானதாக இருக்கும் போது சில உண்மைகளை, தான் இப்படித்தான் என்ற நிதர்சனத்தை வெளிப்படையாக அவர்களால் சொல்ல முடிவதில்லை. சொல்ல வேண்டிய அவசியமும் கட்டாயமும் கூட அவர்களுக்கு இல்லை. ஆனால் இதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தாலும் சிலநேரங்களில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதனால் பல கட்டங்களில் பல சூழ்நிலைகளில் நான் கூட்டத்திலிருந்து விலகிக்கொள்கிறேன். தனிமையாக உணர்கிறேன். உளரீதியாக எனக்கு இது ஒரு பெரும் சுமை தான். அதே நேரத்தில் ஒரு போலித்தனமான வாழ்க்கையும் என்னால் கண்டிப்பாக வாழ முடிவதில்லை. நம் அனைவருக்குமே இந்தப் பிரச்சனை வெவ்வேறு அளவு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அறிவுக்கும் மனதிற்கும் இடையிலான ஒரு போராட்டம். சில நேரங்களில் சில மனிதர்கள் பொய் சொல்கிறார்கள், போலித்தனமாக இருக்கிறார்கள் என்று அறிவிற்குத் தெளிவாகத் தெரியும், ஆனால் அதைக் காட்டிக் கொடுத்தோ அல்லது அவர்களின் சுயத்தைச் சமுதாயத்தில் வெளிப்படையாக உடைத்தோ அல்லது அவர்களிடமே அதைச் சொல்லிக் குறை கூறி எனது பண்பை அல்லது எனது நேர்மையை நிரூபித்துக் கொள்ளும் செயல்பாட்டை என்னால் செய்ய முடிவதில்லை.

(இங்கே சட்டத்திற்கு எதிரான விஷயங்களையோ, அல்லது ஒரு சமுதாயத்திற்கு ஆபத்தான விஷயங்களைச் செய்பவர்களைப் பற்றியோ நான் குறிப்பிடவில்லை. தனிப்பட்ட உறவு முறைகளிலும் அல்லது நட்பு வட்டாரத்திலும் இருக்கும் மன உணர்வுகளைப் பற்றி மட்டுமே இங்கு நான் பேசிக் கொண்டிருக்கிறேன்) ஆனால் எந்தவித ஜட்ஜ்மெண்ட்டும் இல்லாமல் அவர்களை ஏற்றுக் கொள்வதும் அல்லது அன்பு பாராட்டுவதும் என்னால் முடிவதில்லை.

அறிவின் குதர்க்கமான தன்மை வெளிப்பட்டுக் கொண்டே தான் இருக்கும். அதே நேரத்தில் அதை அமிழ்த்தி வைத்து நிதர்சனத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் மனம் ஈடுபட்டுக் கொண்டே இருக்கும். மனம் வெல்லும் பொழுதெல்லாம் நாம் ஏன் முட்டாளாக என்னைக் காண்பித்துக் கொள்ளத் தயங்குவதில்லை என்ற கேள்வி மனதிற்குள் எழும். சுயம் சுட்டெரிக்கும். என் அறிவு வெல்லும் பொழுது மனிதத் தன்மையைப் பற்றிய கேள்வி எழும். தத்துவார்த்த கேள்விகளுக்குள் மூழ்கிக் தவிப்பேன். இப்படிக் கேள்விக்குள் கேள்வியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது வாழ்க்கை. சில நேரங்களில் எதற்காக இந்த மனப்பக்குவத்தை நான் எதிர்பார்க்கிறேன் அல்லது கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று எனக்கே தெரிவதில்லை. ஆனால் இப்படித்தான் என் மனம் இயங்குகிறது. ஒன்று அறிவின் போக்கின்படி ஒன்றை வெறுத்து வெளியே வந்து விட வேண்டும், இல்லை எந்தவித கேள்விகளும் இல்லாமல் எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ஒன்றை அரவணைத்துக் கொள்ள வேண்டும் இந்த இரண்டும் இல்லாமல் கேள்விக்கால் சிக்கித் தவிப்பது பெரும்பாடாகத்தான் இருக்கிறது.

பரிணாமத்தின் இயல்பு பக்குவமா என்ற கேள்வி. சிந்தனை, சொல், செயல் ஒன்றாகச் சங்கமிக்கும் ஒரு புள்ளி. அதைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட தார்மீக மதிப்புகள் இவை அனைத்தும உயிர் வாழ்தல் என்ற அறிவின் பரந்த வெளியில். இந்த வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானது. எவ்வளவு நுணுக்கமானது. இதை உணர்வுப்பூர்வமாகப் புரிந்து கொள்ளும் பக்குவம்தான் இந்தப் பரிணாமமோ. இப்பக்குவம் வரும் காலத்தில் வரும் என்றே நினைக்கிறேன். எனக்கா அல்லது என் மூலம் அல்லது நம் மூலம் அடுத்தடுத்த உயிர்களுக்கா தெரியவில்லை. அதுவரை வாழத்தான் வேண்டும் கேள்விகளோடு.

12 total views, 12 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *