விமர்சனங்களின் வலிமை எதுவரை?
- பொலிகையூர் ரேகா. இங்கிலாந்து
பரந்து விரிந்த உலகின் எல்லாவிடத்திலும் வாழ்கின்ற அனைத்து மனிதர்களும் ஏதோவொரு விதத்தில் தமக்கான விமர்சனங்களை எதிர்கொள்கின்றார்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உணர்வுகளும் கருத்துகளும் இருக்கின்றன.ஒவ்வொருவரும் தம் கருத்துகளை நேரடியாகக் கூறும்போது அது சில நேரங்களில் ஏற்புடையதாகவேர் பல நேரங்களில் ஏற்க முடியாதனவாகவோ போய்விடுகின்றது.
விமர்சனங்களின் காரணமாகப் பிறரின் செயல்களும்,வார்த்தைகளும் சில நேரங்களில் இன்னொருவரைக் காயப்படுத்துவதாக அமைந்து; அவர்களின் உள நிம்மதியையும் பறித்து விடுகின்றது.
விமர்சனங்களின் வலிமை என்பது நாம் அவற்றை எடுத்துக் கொள்வதைப் பொறுத்தே அமைகின்றது. புகழ்ச்சியின் உச்சமான விமர்சனம் என்றாலும் எதிர் மறையான விமர்சனம் என்றாலும் நாம் அவற்றை எவ்வாறு பார்க்கின்றோம்; அவை எவ்வாறு எம்மை மாற்றத்திற்குள்ளாக்குகின்றது என்பதைப் பொறுத்தே அதன் நோக்கம் முழுமையடைகின்றது.
நம்மைக் காயப்படுத்துவதற்கென்றே கூறப்படும் விமர்சனங்களுக்கு முன்னுரிமை கொடுக்காதவரை அவை மதிப்பற்றவை. அந்த விமர்சனங்கள் நம்மை எதுவுமே செய்துவிடாது.
யாரோவொருவர் கூறும் விமர்சனங்கள் நம் நிம்மதியைப் பாதிக்க நாம் அனுமதிப்போமானால் நமக்கான வாழ்வை நாம் வாழ முடியாமல் போய்விடும்.அடுத்தவர்களின் கருத்திற்கேற்பவே நம் வாழ்வை நாம் வடிவமைக்க நேர்ந்துவிடும்.
பிறரின் விமர்சனங்களை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் அதன் நோக்கம் முழுமை பெறுவதும்; நமது எதிர்கொள்ளும் திறன் வெற்றி பெறுவதும் தங்கியுள்ளது.
நீங்கள் யாரென்பதை நீங்கள் அறிந்திருக்கும்போது யாரோவொருவரின் விமர்சனம் உங்களை எதுவும் செய்துவிடப்போவதில்லை என்பதில் உறுதியாக இருங்கள். யாரோ சிலரின் கருத்துகளால் உங்களது அடையாளத்தை மாற்ற முடியுமானால் அந்த அடையாளத்தை உருவாக்கப் பயன்பட்ட உங்கள் உழைப்பையும் காலத்தையும் கணக்கில் கொண்டு அவர்கள் கருத்துகளைக் கடந்து செல்லப் பழகுங்கள். நீங்களாக உடைந்து போகாதவரை உங்களை யாராலுமே உடைக்கவே முடியாது. உங்களை உடைப்பதற்கான பிறர் முயற்சிகளில்; வெற்றி பெறுவது நீங்களாகவே இருக்க வேண்டுமெனப் பயணியுங்கள்.
கடலில் மிதக்கும் கப்பலானது தண்ணீரை வெளியே வைத்து அதன் மேல் மிதப்பது போன்றே உங்கள் அணுகுமுறையும் இருத்தல் வேண்டும். இல்லையேல் கப்பலின் உள்ளே செல்லும் நீர் எப்படி அந்தக் கப்பலை மூழ்கடித்துவிடுகிறதோ அதுபோன்றே நீங்கள் அனுமதிக்கும் விமர்சனங்களும் உங்களை மூழ்கடித்துவிடும்.
உங்களை மனதளவில் உடைத்துவிட முயலும்போதெல்லாம் அவர்கள் தொடமுடியாத தூரத்தில் உங்கள் எண்ணங்களையும் செயல்களையும் வைத்திருக்கத் தொடங்குங்கள்.எந்த விமர்சனங்களும் உங்களை எதிர்மறை வழியில் மாற்றுவதில்லை என்பதில் உறுதியாக இருங்கள்.
யாரோவொருவரின் விமர்சனங்களால் உங்கள் வாழ்வில் என்ன நேர்ந்துவிடக்கூடும் என்பதைச் சிந்தியுங்கள்.அந்த விமர்சனங்களை நம்பும் மற்றவர்களால் உங்களுக்கு என்ன ஆகிவிடப்போகின்றது என்பதை விடவும் அந்த விமர்சனங்களைக் கண்டு உடைந்துபோகும் உங்களால் உங்கள் வளர்ச்சிக்கும், நிம்மதிக்கும் என்ன ஆகிவிடும் என்பது குறித்துச் சிந்தியுங்கள்.
நீங்கள் உருவாக்கிய அடையாளத்தை எதுவுமே உடைத்துவிடாது என்று நீங்களே நம்பும் தருணத்தில்தான் அந்த விமர்சனங்களின் நோக்கம் உடைந்து உங்கள் காலடியில் வீழ்ந்துபோகும்.
158 total views, 6 views today