அப்புவின் குமிழ்சிரிப்பு.

-மாதவி. (யேர்மனி)

ஊரில் வீட்டு வாசலில் உள்ள படலையில் நின்று அப்புமார் ஊரைப்பார்ப்பார்கள்.
அவர்கள் தம் இளமைக்காலத்தில் செய்த பல கைங்கரியங்கள் அவர்கள் மனத்தில் ஓடும். முதுமை என்பது இளையவர்களுக்கு வழிவிட்டு நிற்கும் ஒரு காலம். தெருவில் போவோர் வருபவர் எல்லாம், என்ன அப்பு காற்று வாங்குகிறீங்களா.

எனக்கு ஆயிரம் வேலை இருக்கு, இல்லை என்றால் ஒருக்கால் என்றாலும் வந்து உங்களுடன் கதைப்பேன் என்று சொல்லிச் செல்வார். இன்னொருவர் உங்கள் காலம் போல் அல்ல இன்று. எல்லாமே கடினம்தான். ஏதோ என்னால் முடிஞ்சதைச் செய்தேன், நாடக உலகில் முன்னுக்கு வந்திட்டேன், என்பார்.

ஒருசிலர்; மட்டும் அப்புவைக்கண்டு சைக்கிளை நிறுத்துவர். அதில் சிலர் அப்பு நான் சரியாக களைத்துவிட்டேன் காலை 8 மணிக்கு தோட்டத்துக்கு போனேன் மின்சாரம் இல்லை. டீசல் வேண்டி மிசினாலை இறைத்துவிட்டு இப்பதான் வருகிறேன்.என்பர்.

துலா மிதிச்சுப்போட்டு அப்பு அப்ப பள்ளிக்கூடம் போய் பின் அதிபரானவர்தான் இப்ப அப்புவாச்சு.இன்னும் ஒருவர் மகனுக்கு ரிவிசனுக்கு நேரம் போச்சு. சூமில் வகுப்பு இருக்கு, நான் போனால்தான், படிப்பான். அப்பா என்றால் பிள்ளைகள் படிப்பில் அக்கறை வேண்டும். அந்தக்காலம் போல் இல்லை இந்தக்காலம் அப்பு.

அப்புவிட்டை எல்லாவற்றுக்கும் விடையிருக்கு.ஆனால் எவ்வளவு சொல்லியும் அப்பு ஒருவார்த்தை பேசவில்லை.
படலையை விட்டு வந்து, வீட்டு சாய்மனையில் இருந்து கண்களை மூடிம்திறந்தார்.

அவர் இதழ் ஒரத்தில் குமிழ் சிரிப்பு ஒன்று உதிர்ந்தது. உன்னிப்பாக பார்த்தால் மட்டுமே அந்தச்சிரிப்பு தெரியும். மேலும் மேலும் உன்னிப்பாக பார்த்தால் அதன் அர்த்தம் புரியும்.

அப்பு இப்போ கண்விழித்து சுவரை பார்க்கிறார். கலை,இலக்கியம்,கல்வி,விவசாயம் என அவர் தொட்டு பிரகாசிக்காத துறை எதுவும் இல்லை.அத்தனை சான்றுகளும் சுவரில் தொடங்குகிறது. அப்பு இத்தனையும் சாதித்துவிட்டு அமைதியாகயாக பிறர் சொல்வதை எல்லாம் கேட்டு இரசித்தபடி உதிர்ந்த புன்சிருப்பே அந்தக் குமிழ்சிரிப்பு.

அவர் அவர் தம் காலத்தில் செய்யவேண்டியது எதுவோ அதனை செய்துவிட்டு போகவேண்டியதுதான். அவர் காலத்தின் பின் சுவரில் மாட்டி இருக்கும் சான்றிதழ்கள் எல்லாம், வெற்றுக்காகிதமாகும். இதுதான் வாழ்க்கை என்று இறுதிக்கணங்கள் கற்றுத்தரும்.

யாரும் ஒரு அப்பு உங்கள் கதைகளைக்கேட்டு ஒரு புன்னகையை பதிலாகத்தந்தால் அவர்களின் வாழ்வை குறைவாக எடைபோட்டு விடாதீர்கள். எல்லாத்தையும் பண்ணிவிட்டு ஒன்றுமே தெரியாதவன் போல் இருக்கும் சிவனிடம் ‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்’, அந்தச் சிரிப்பும் அப்புவின் சிரிப்புமாதிரித்தானோ!

111 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *