இது கதை அல்ல விதை
மாதவி (யேர்மனி)
மணிமேகலை, மாதவி இருவரும் இரட்டைக்குழந்தைகள். அட டா! ஆறே ஆறு நிமிட வித்தியசத்தில் மாதவி தங்கையாகவும், மணிமேகலை அக்காவாகவும் வந்து பிறந்துவிட்டார்கள்.
ஆனால் எல்லாவற்றிலும் மணிமேகலையின் தாய் கவிதா மாதவி மீது காட்டும் வித்தியாசத்தை மணிமேகலையால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த சில மாதங்களாக மணிமேகலைக்கும், மாதவிக்கும் இருந்த பிரச்சினை அன்று இரவு உச்சம் தொட்டது.மணிமேகலை இரவு உணவை தவிர்த்து உறக்கத்திற்கு 7 மணிக்கே சென்றுவிட, தன் அம்மாவிடம் தனக்கு உள்ள பிரச்சினைகளை மாங்கு மாங்கு என்று ஒப்படைத்தவண்ணம் இருந்தாள் மாதவி.
அம்மா நீங்கள் அக்காவுக்குத்தான் கடுமையானவேலைகள் கொடுக்கிறீங்களாம். எனக்கு ஏதும் அப்படிக் கடுமையாகக் கொடுப்பது இல்லையாம், நான் உங்கள் செல்லமாம். என்று எல்லாம் அம்மாவிடம் பொரிந்து தள்ளியபடி இருந்தாள் மாதவி. ஆனால் வீட்டு வேலைகள் என்றால் அது கணவனாக இருந்தாலும்,பிள்ளைகளாக, இருந்தாலும் அவர் அவர் கடமைகளைச் சரியாகச் செய்யவேண்டும் என்பதில் கவிதா உறுதியானவள்.
கவிதாவின் சகோதரர்கள் கவிதாவுக்கு வைத்தபெயர் பொலிஸ். பொலிஸ் இப்போ படுக்கை அறைக்கதவு வரை சென்று ‘மணிமேகலை எழும்பி வாறீங்களா’ என்று கேட்கவில்லை.’ எழும்பி இப்ப வாறீங்கள் எனக் கட்டளையிட்டா.’ இடியப்பம் ஆறப்போகுது வந்து உடன் சாப்பிடவும். அம்மா பொலீசாக, உருக்கொள்ளும்போது உள்ள குரலுக்கு, அப்பா முதல் எல்லோருக்கும் பயம்தான்.
மணிமேகலை மள மள என்று இடியப்பத்தை சம்பலோடு தொட்டுச் சாப்பிட்டாள். இப்ப அம்மா’ மெதுவாகச் சாப்பிடுங்கோ சொதியிலும் விடுங்கோ விக்கிப்போடும் ‘என்றா. பொலீசாக அம்மாவாக ஆயிரம் சவுக்கடி கொடுத்தாலும், அம்மாவாக ஒரு வார்த்தை பேசினாலே போதும் அக்கணமே உருகிப்போவார்கள்.
மாதவி ஒன்றும் நடக்காதது போல் இடியப்பத்தைச் சாப்பிட்டு முடித்தாள்.
இப்போது கவிதா மணிமேகலையுடனும், மாதவியுடனும் உங்களுடன் ஒரு 5 நிமிடம் கதைக்கவேண்டும் இருங்கோ என்றாள். குரலில் இப்ப இருந்த தொனி அம்மாதான். பொலீசாக இல்லை. ஆனால் எப்ப கதைக்குபோது பொலீசாக மாறலாம் அதற்கு உத்தரவாதம் இல்லை.
வீட்டு வேலைகளில் உங்களுக்கு அக்கா என்பதால் கடினமான வேலைகள் தருவதாகவும், தங்கை மாதவிக்கு அவள் சின்னவள் என்று சுலபமான வேலைகள் தருவதாகவும் யோசித்து உங்கள் மனதை அலட்டிக்கொள்கிறீங்கள். வீடு துப்பரவு செய்தல், கட்டில் விரிப்பு, கோப்பை கழுவி வைத்தல், குப்பைகளை வெளியில் உள்ள வாளியில் போடுவது, இதுவெல்லாம் எனது வேலைச் சுமையைக் குறைக்க என்று நீங்கள் செய்வதாக எண்ணவேண்டாம். சுமை என்பது எதுவோ பெண்களுக்கு அதிகம்தான். ஆனால் எந்தப்பெண்ணும் அதனை பெரிதாக கண்டு கொள்வதில்லை என்பதால் கணவன்மார்கள் கூட அதனை அறிவதில்லை. தொலைக்காட்சி தொடரில் வரும் பட்டிமன்றம், பெண் விடுதலை எல்லாம் முன்னதாகவே எழுதப்பட்ட தீர்ப்புக்குப் பின், ஒப்புக்கு வாதிடும் ஒரு நிகழ்ச்சியாக பல தடவைகளில் அமைந்துவிடுகிறது.
உங்களுக்கு மட்டுமல்ல வாரத்தில் ஒரு நாள் அப்பாதானே சமைக்கிறார். அப்பாதானே உடுப்புகள் மினுக்கின்றார். இவை எல்லாம் எல்லோரும் எல்லாம் செய்யவேண்டும். எதிலும் பாகுபாடு என்று இருக்கப்படாது.இது என் தனிப்பட்ட கருத்து. இதனை உங்களுக்கு நான் திணிப்பதாக எண்ணவேண்டாம். என்னை பொலீஸ்! பொலிஸ்!! என்று அப்பாமுதல் நண்பர்கள் வரை சொல்வது, நினைப்பது யாவும் எனக்குத் தெரியும். அந்த பொலிசுக்குள்ளும் அம்மா உண்டு.
நாளை காலை எழுந்து இந்த மேசையில் பாருங்கள். ஒரு துண்டில் A B என இருபகுதி இருக்கும். காலையில் யார் முதல் எழும்பி இந்த துண்டைப் பார்க்கிறார்களோ அவர்கள் இந்த A B இல் எந்த வேலை வேண்டுமானாலும் தெரிவு செய்து செய்யலாம். இனி எதுவானாலும் அது உங்கள் தேர்வு.
காலை விடிந்தது முதல் வேலையாக மணிமேகலை எழுந்து B. பகுதியில் இருந்த வேலையை முடித்தாள். பின் எழுந்த மாதவி யு. பகுதி வேலையை முடித்தாள்.
தங்கை மாதவி Bபகுதி வேலையை வாசித்து பார்த்தாள், உண்மையில் B பகுதியே யு ப்பகுதியை விடக் கடினமாக இருந்தது.
அவளால் அக்கா மணிமேகலையை இப்போ அக்காவாக பார்க்க முடியவில்லை. தீர்மானம் எடுக்கும் உரிமையை அவள் எடுத்ததுமே அவள் அம்மாவாகிவிட்டாள்.
கவிதா காலை எழுந்து பார்த்தபோது வீட்டு வேலைகள் யாவும் பிள்ளைகள் வடிவாக செய்து முடித்து இருந்தார்கள். பிள்ளைகள் கல்லூரிக்கு புறப்படுகின்றார்கள். கவிதாவும் புறப்படுகின்றாள். நாளை காலை அவர்களுக்கான வேலைக்குரிய துண்டை அவள் எழுதப்போவதில்லை. அதற்கான அவசியமும் தாய்க்கு இல்லை.
மறுநாள் மீண்டும் விடிந்தது, மேசையில் A யும் இல்லை Bயும் இல்லை. ஒரே வரியில் கண்ணதாசனின் பாடல் வரி ஒன்று எழுதப்பட்டு இருந்தது. ‘நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று’ என்று இருந்தது.
இன்று கவிதாவும் இல்லை காகிதமும் இல்லை. ஆனால் பிள்ளைகள் வாழ்வு அர்த்தம் உள்ள கவிதையானது. இது கதை அல்ல விதை.
(AI படங்கள்; பூங்கோதை)
120 total views, 6 views today