தலைகீழாக வைக்கப்பட்டிருந்த ஊர்ப் பெயர்ப் பலகைகள்
- கவிதா லட்சுமி (நோர்வே)
இந்த ஆண்டின் நடைப்பயணம் சென்ற ஆண்டைப் போலில்லாமல், மிகவும் ஒரு சவாலான யாத்திரையாக அமைந்தது. இரண்டு வாரமாக 350 கி.மி தூரத்தை நடந்திருக்கின்றேன்.
பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதியில் இருந்து சன்டியாகோ தி கொம்பஸ்தெல்லா நோக்கி பயணிப்பதே இலக்கு.. நாளும் ஒரு மலையைக் கடந்தாக வேண்டும். ஒவ்வொரு மலைத் தாழ்வாரங்களிலும் ஒரு குட்டிக் கிராமம் எமக்காகக் காத்திருந்தது. சில வேளைகளில் இரண்டோ மூன்றோ மலைகளைத் தாண்டி, மூன்று கிராமங்களைத் தாண்டியும் பயணம் நீண்டது.
எனக்கு நடை பிடிக்கும். அதைவிட கடலும் காடும் ஊர்களும் வயல்களும் என்று இந்த இயற்கையோடும், மண்ணோடும் இயைந்த வண்ணம் நடக்கப் பிடிக்கும். ஆனால் இந்த மலை ஏற்றங்களோ எனக்குக் கொஞ்சமும் ஒத்து வராதவை. அப்பப்போ நோர்வேயின் பிரசித்தி பெற்ற மலைகளில் (அதுவும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கித்தான்) ஏறி இருக்கிறேனே தவிர, இப்படியாக ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று என்று மலைகளை கடக்கும் வித்தையை நான் பயின்று இருக்கவில்லை. ஆனாலும் ஒரு முறை ஏறிவிட்டால் பிறகு இறக்கம்தானே என்ற எண்ணம் கொடுத்த நம்பிக்கையோடு தினமும் எனது நடைப்பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு விடயத்தை எடுத்து விட்டால் அதை முடிக்க வேண்டும் என்ற எனது குணமும் இதற்கு உதவி புரிந்தது.
கடந்து வந்த ஒவ்வொரு ஊரும் அத்தனை அழகு. இயற்கையோடு இணைந்து கற்களை அடுக்கிச் சுவர் எழுப்பிய வீடுகள். வண்ணப் பூச்சுகள் இல்லை. சுவர்களின் நெடுக கொடிகளும் வேர்களும் படர்ந்து கிடக்கும். அதற்கேயான குட்டித்தோட்டங்கள்,பழ மரங்கள், பூஞ்செடிகள். வான்கோவின் வர்ணங்களிற் கண்ட அத்தனை பூக்களும் அதே வளைவுகளோடு கண்களுக்குப் புலப்பட்டன.
ஆனாலும் இந்த ஊர்களில் மக்களைச் சந்திப்பது மிக அரிது. ஒவ்வொரு ஊரும் தொடங்கும் போதே ஒரு பெரும் சவக்காலையுடன் ஆரம்பிக்கும். தேவாலயத்தின் மணியோசை அடிக்கும். தெருவெங்கும் மயான அமைதி. தூரத்தில் ஒரு உணவகமோ ஒரு விடுதியோ சில ஆட்களுடன் உயிர் பெற்று இருக்கும்.
இந்த பயணத்தில் தெருக்களில் கிராமங்களில் மலை அடிவாரங்களில் இளைஞர்களை நான் கண்டது மிக அரிது. இக்கிராமத்து வாழ்க்கையை நகரத்து மனிதர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்ட வண்ணம் நானும் நடந்து கொண்டிருந்தேன். இந்த மனிதர்களிடம் எந்தப் படபடப்பும் இல்லை, எந்த அவசரமும் இல்லை, பதட்டம் நிறைந்த முகங்கள் இல்லை. அவர்களுடைய வாழ்க்கையை போலவே முகங்களும் இயல்பாய் நிதானமாய் இருந்தன.
அந்தரங்க அமைப்புக்கள்
ஒரு ஊருக்குள் சென்ற போது திடீரென்று ஒரு விடயம் வினோதமாகப் பட்டது. ஒரு ஊரின் எல்லையில், ஊர்ப் பெயர்ப்பலகை தலைகீழாக எழுதி வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெயர்ப் பலகையைச் சுற்றிப் பூக்கள், செடிகளின் அலங்கரிப்பு வேறு. இலங்கையில் தமிழைத் தாறுமாறான எழுத்துப் பிழை, பொருட்பிழைகளோடு எழுதும் பொறுப்பற்ற நிர்வாகங்களைப் போல இங்கும் இருக்கிறார்கள் போல என்று எண்ணிக் கடந்துவிட்டேன்.
மறுநாள், மீண்டும் அந்த ஊரைக் கடந்து சென்ற போதும், அந்த ஊரின் பெயர் தலைகீழாக மாற்றப்பட்டு அந்த ஊர் முடிந்துவிட்டது என்பதற்கான குறியீடாக பெயர் மீது ஒரு கோடும் இடப்பட்டுடிருந்தது. அப்போதுதான் இதில் ஏதோ ஒரு விடயம் இருக்குமோ என்று எனக்குத் தோன்றியது. மறுநாளும் மற்றுமொரு ஊரின் பெயரும் இப்படியாகவே தலைகீழாக மாற்றப்பட்டிருந்தது. இது என்னடா ஒரே வினோதமாக இருக்கின்றதே என்ற எண்ணத்தில் யாரையாவது இதைப்பற்றிக் கேட்டு விட வேண்டும் என்று மனம் விரும்பியது.
அப்போது அந்த கிராமத்தில் வாழும் ஒரு மனிதருடன் பேச்சுக் கொடுத்தேன். இக்கிராமங்களில் வாழும் மனிதர்கள் யாரும் ஆங்கிலத்தைக் கேட்கவோ பேசவோ முனையவில்லை. அவர்கள் அவர்களது மொழியே போதும் என்று இருக்கும் மனிதர்களாக உள்ளனர். நம் சமூகத்தைப் போல ஆங்கிலத்தை ஒரு பெரும் அறிவாக கருதும் சமூகமல்ல இது.
நான் பேச்சு கொடுத்த அந்த மனிதரும் தட்டுத் தடுமாறி ஆங்கிலம் பேசினார்.ஆனாலும் நாங்கள் பேசிக் கொண்டோம்.
இந்த ஊரின் பெயர்களை ஏன் தலைகீழாக எழுதி இருக்கிறார்கள் என்று பெரும் ஆர்வத்தோடு கேட்டேன். அதற்கு அந்த மனிதர் தந்த பதிலில் ஊர் மக்களின் மேல் பெரும் மதிப்பு உண்டாயிற்று.
அந்த ஊரில் உள்ள மக்கள் இப்போது பெருகிவரும் இயந்திரமயமாக்கலை விரும்பவில்லை என்றும், மனிதர்களின் உழைப்பைப் பறித்துக் கொள்ளும் இயந்திரங்களைக் கொண்டு வரும் அரசை எதிர்க்கிறோம் என்பதை காட்டுவதற்காகவே இந்த பெயர்ப் பலகைகள் தலைகீழாக மாட்டி வைக்கப்பட்டிருக்கின்றது. அது மட்டுமல்ல எங்கள் வேலைகளை, நிலங்களை, விவசாயங்களை, நாங்கள் தலைகீழாய் நின்றேனும் செய்து முடிப்போம் என்பதை அரசுக்கு எடுத்துக்காட்டும் ஒரு குறியீட்டு எதிர்ப்பு வடிவம்தான் தலைகீழாகப் பெயரை வைத்திருப்பதும்.
இந்த விடயங்கள் எல்லாம் பிரஞ்சுப் புரட்சியின் தொடர்ச்சியை நாங்கள் இன்னும் நடத்துகிறோம் என்பதன் சான்றுகளே. பிரஞ்சுப் புரட்சி அடித்தட்டு மக்களாலேயே எடுத்தாளப்பட்டது. அப்படியாகவே அந்த உரத்தோடு தான் உழைக்கும் மக்கள் இன்றும் அங்கே வாழ்கின்றார்கள். நாங்கள் எங்கள் புரட்சியை முடித்து வைக்கவில்லை. அவை வடிவங்கள் மாறி தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. எப்போதும் கீழ்த்தட்டில் இருக்கும் மக்களே இவைகளை எடுத்துச் செல்வர். இதனையிட்டு நான் பெருமை கொள்கிறேன் என்றார். எனது மனம் நெகிழ்ந்தது. ஆச்சரியப்பட்டேன். அவருக்கு வாழ்த்துச் சொன்னேன்.
அந்த மனிதரிடம் இருந்து விடைபெற்று அடுத்த கிராமத்திற்கு சென்றோம். அடுத்துச் சென்ற கிராமம் அழகே உருவாய் மலையொன்றில் சொருகப்பட்டிருந்தது.
கருப்புவெள்ளை நிழற்படங்கள் எப்பவும் அழகு ..
அதைவிட அழகு சொந்தக்காலில் நிற்கமுயற்சிக்கும் முதுமை
161 total views, 2 views today