நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெரும் காளி பதம் !
சக்தியால் உலகம் வாழ்கிறது
நாம் வாழ்வை விரும்புகிறோம்
ஆதலால், நாம் சக்தியை வேண்டுகிறோம்.
சக்தி : நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி. விக்கிரமாதித்தனும் காளிதாசனும் வணங்கிய தெய்வம். ” உலகத்தார் இந்தப் பராசக்தியை நல்ல மழையருள் புரியும் சரத்காலத்தின் முதல் ஒன்பது இரவும் வணங்கிப் பூஜைகள் செய்யவேண்டும்.” என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம் . மேலான வழி . இவ்வாறு நவராத்திரியின் மகிமை பற்றி பாரதியார் அவரது கட்டுரையில் குறிப்பிட்டுருப்பார்.
அன்புவடிவாகி நிற்பள், துன்பெலாம் அவள் இழைப்பள்,
ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை – இதை
ஆய்ந்து, உணர்ந்தவர்க்கு உண்டு உய்கை – அவள்
ஆதியாய், அநாதியாய், அகண்ட அறிவாவள், உன்றன்,
அறிவும் அவள் மேனியிலோர் சைகை – அவள்
ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை.
இன்ப வடிவாகி நிற்பள், துன்பெலாம் அவள் இழைப்பள்,
இஃதெலாம் அவள் புரியும் மாயை – அவள்
ஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை
மேலுமாகி, கீழுமாகி, வேறுள திசையுமாகி,
விண்ணும் மண்ணும் ஆன சக்திவெள்ளம் – இந்த
விந்தையெல்லாம், ஆங்கது செய் கள்ளம் – பழ
வேதமாய், அதன் முன்னுள்ள நாதமாய், விளங்குமிந்த,
வீர சக்தி வெள்ளம் வீழும் பள்ளம் – ஆக
வேண்டும், நித்தம் என்றன் ஏழை உள்ளம்.
நூற்றாண்டுகளுக்கு முன் ஆற்றிய கவியெல்லாம், இன்றும் மங்காது ஜொலிப்பதற்கு, மெய்ப்பொருள் காட்டி நிற்கும் அவற்றின் தன்மையே முதன்மை வகிக்கிறது. பரம ஞானம் என்றால் என்ன ? என்ற சமுத்திரக் கேள்விக்கு, சுலபமாய் பதில் தர பாரதி என்னும் சித்தனால் தான் முடியும்.
ஆதியாம் சிவனும், அவன் சோதியான சக்தியும் தான்
அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் – ஒன்றே
ஆகினால், உலகனைத்தும் சாகும் – அவை
அன்றியோர் பொருளுமில்லை, அன்றி ஒன்றுமில்லை, இதை,
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் – இந்த
அறிவுதான் பரம ஞானம் ஆகும்.
ஆஹா ! இவ்வரிகளை உணர்ந்தோத உவகை நீர் விழிகளில் பொங்கி உளவீரம் வந்து சேர்கிறது. தவம், கல்வி, தெய்வத்தை சரண்புகுதல் என்பவற்றை எப்போதும் செய்ய முடியாதவர் நவராத்ரி ஒன்பது தினங்களாவது செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. நவராத்ரி பூஜையின் பொருள் மிகவும் தெளிந்தது என்று கூறும் பாரதியாரால், நவராத்ரி தேவியர் மூவர் மீதும் பாடப்பட்ட மந்திரத் திரவிய கவிகளை நவராத்ரி 9 நாட்களும் மனனம் செய்து சேவித்தாலே, மாபயன் கிட்டும். ஐயமில்லை.
சகலமும் சக்தி என்று ஆகும் போது சஞ்சலம் ஏதுக்கு? அவள் தாய்.வேண்டியன அனைத்தும் தருவாள்.அவள் ஸம்ஹாரி.அறியாமை மிகுந்து எழும் அநீதிகளை அடியோடு அறுக்கவல்லவள். அவள் பேரழகி. நமக்கு உளஎழில் ஈவாள். அவள் எல்லையற்றவள். நம் அகந்தனில் நீள் விசும்பு காட்டி நிற்பாள்.
சொல்லிலிலடங்கா சுந்தரியை, சொல்லிச் சொல்லிச் சுபீட்சம் காண, இதோ! இக்கட்டுரையில் உங்களுக்கு ஒரு புதிர் தர விழைகிறேன். ஒன்பது ராத்திரிகளும் மூன்றாகப் பிரித்து துர்கா,லட்சுமி, சரஸ்வதி என்ற முறையில் நவராத்திரியை அனுட்டிப்பது நாம் அறிந்ததே. அதனை அடிப்படையாகக் கொண்டு, முப்பெரும் தேவிகள் பற்றி பாரதி எழுதிய கவிதைகளில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த ஒன்பது அடிகளை இங்கு தருகிறேன். அவை ஒவ்வொன்றும் எந்தக் கவிதையில் இடம்பெறும் அடிகள் என்பதனைக் கண்டறிய வேண்டும். இதுவே உங்களுக்கான முதல் புதிர்.
அவ்வண்ணம் உங்களுக்குப் பிடித்த 9 வரிகளை வெற்றிமணியோடு பகிர்ந்து கொள்ளுங்கள். மேதினியில் பயனுண்டாகும். அடுத்த தலைமுறையினர்க்குச் சென்றடையும்.
1.வில்லை யசைப்பவளை — இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை — நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா.
- துன்பமே இயற்கையெனும்
சொல்லைமறந் திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்;
யாவுமவள் தருவாள். - சொல்லி னுக்கெளிதாகவும் நின்றிடாள்
சொல்லை வேறிடஞ் செல்ல வழிவிடாள் - அமரர் போல வாழ்வேன், — என்மேல்
அன்பு கொள்வை யாயின் - பாரதி சிரத்தினிலும் — ஒளி
பரவிட வீற்றிருந் தருள் புரிவாள் - எல்லை யற்ற சுவையே! — எனைநீ
என்றும் வாழ வைப்பாய். - நாதமொ டெப்பொழுதும் — என்றன்
நாவினி லேபொழிந் திடவேண்டும் - எள்ளத் தனைப் பொழுதும் பயனின்றி
இரா தென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய் - நாடி யருகணைந்தால், — பல
ஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள்;
வையம் முழுதும் படைத்தளிக்கின்ற சக்தியின் அளப்பெரும் கருணையில் திளைப்போம். புகப் புகப் புக இன்பம் தரும் அவள் பொன்மலர்ப்பதங்களில் சரண் புகுவோம். ஆங்கே விரியும் சுதந்திர வெளியினில் நித்திய இன்பத்தைத் துய்த்துத் துய்த்து அமைதி கொள்வோம்.
305 total views, 2 views today