இலங்கையில் பழங்குடிகள்
— சர்மிலா வினோதினி. இலங்கை.
இலங்கையின் பழங்குடிகள் என்று கருதப்படுகிற இனக்குழுவினர் தமிழில் வேடுவர்கள் என்றும் சிங்களத்தில் வத்தா (ஏயனனய) என்றும் அழைக்கப்படுகின்றனர். நாட்டின் வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். சிங்கள மற்றும் தமிழ் மக்களோடு கலந்து வாழ்ந்து வருவதனால் சிங்கள மொழியை பேசுகிறவர்கள் சிங்கள மொழி பேசுகிற வேடர்கள் என்றும் தமிழ் மொழியை பேசுகிற மட்டக்களப்பின் பாட்டாலிபுரம், இலக்கந்தை, சந்தோசபுரம், வெருகல், இலங்கைத்துறை மாங்கேணி, காயங்கேணி, பனிசங்கேணி, மதுரங்குளம், கிரிமிச்சை, உறியக்காடு, கதிரவெளி, கட்டுமுறிவு, அமந்தனாவெளி, வாகரை, புன்னைக்கிளங்கு, குஞ்சான்குளம், மட்டக்களப்பு வேடர் குடியிருப்பு, தளவாய், சித்தாங்கேணி, களுவன்கேணி, நாசிவன் தீவு, இறால் ஓடை, பொண்டுகள் சேனை, கொங்கனை, பால்சேனை, திராய்மடு, வாகனேரி, முறுத்தானை, போன்ற பகுதிகளில் வசித்து வருகிறவர்களை தமிழ் வேடர்கள் என்றும் அழைக்கிற வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.
இலங்கையில் வேடர்களின் உருவாக்கம் தொடர்பில் பல கதைகள் சொல்லப்படுகின்றன, மகாவம்சத்தின் அடிப்படையில் விஜயனுடைய வருகையின் போது அவனை மணந்த குவேனிக்கு பிறந்த இரண்டு குழந்தைகளின் வழி வந்தவர்கள் வேடர்கள் என்கிற நம்பிக்கை மகாவம்சத்தை நம்புகிறவர்களிடம் காணப்படுகிறது. ஆனால் விஜயனுக்கு முந்தைய இயக்கர், நாகர் என்கிற ஆதிக்குடிகளில் இயக்கர்களின் வழி வந்தவர்களே வேடர்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தென்னிந்திய பழங்குடி மக்களை ஒத்த மரபுகள் இவர்களிடத்திலும் காணப் படுவதான வரலாற்று சான்றுகளும் உள்ளது என்கிறனர் வரலாற்று ஆசிரியர்கள்.
இலங்கையில் வாழ்ந்து வருகிற வேடர்கள் தொடர்பில் பல ஆய்வாளர்கள் காலத்திற்கு காலம் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர், இவர்களில் கிபி 23-77ம் ஆண்டு காலப்பகுதியில் வாழ்ந்த பிளீனி, 5ம் நூற்றாண்டில் இலங்கைக்கு வருகைதந்த சீனரான பாஹியன் தேரர், கிபி 400 களில் இலங்கைக்கு வந்த கிரேக்கரான பெலேடியஸ் மற்றும் இபன்பதுனா,போர்த்துக்கேயரான டீ மெரிக்நொலி,கப்ரன் யோ ஆ றிபேரோ, ஒல்லாந்த ஆளுனர் றைக்லொப்ஸ் வென்,பிரித்தானியரான றோபேட் நொக்ஸ் உட்படவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். எனினும் மேற்குறிப்பிட்டவர்கள் வழங்கிய இலங்கையில் வேடர்கள் தொடர்பான தரவுகள் போதுமானதாக இல்லை, ஆனால் சுதந்திரத்திற்கு பின்பு காலத்திற்கு காலம் வேடர்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டவர்களில் சிரான் தெரணியகல, பேராசிரியர் சேனக்க பண்டாரநாயக்க, யசாஞ்சலி கருணாதிலக போன்றோர் குறிப்பிடத்தக்க தரவுகளையும் தகவல்களையும் அளித்துள்ளனர்.
இலங்கையில் வேடர்கள் தொடர்பில் கண்டறியப்பட்ட கல்வெட்டு ஆதாரங்களில் “வேரகலை சிலா சாசனம்”, “கொச்வாகந்த சிலாசாசனம்”, “சிதுல்பவ்வ சிலா சாசனம்” மற்றும் “நாடுக்காடு சாசனம்” ஆகியவை முதன்மை யானவையாக கொள்ளப்படுகின்றன, இவற்றில் கிபி 13- 14ம் நூற்றாண்டிற்குரியதான நாடுகாடு சாசனத்தில் மட்டக்களப்பில் நான்கு வட்டாரங்களுக்கு அதிபதியான “புலா” என்னும் வேடர் தலைவன் தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
1921ம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி அக்காலப்பகுதியில் வாழ்ந்த வேடர்களின் எண்ணிக்கை 4510ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் பிற்பட்ட காலங்களில் நாட்டில் வாழ்ந்து வருகிற ஏனைய இனங்களோடு ஏற்பட்ட கலப்பு மற்றும் வாழ்வியல் முறை மாற்றங்கள் வேடர் சமூகத்தின் இருப்பினை மெல்ல மெல்ல மாற்றியமைக்கத் தொடங்கினாலும் இன்னும் தமது அடையாளங்களை பேணிபடி வாழ்ந்து வருகிற இந்த நாட்டின் ஆதிக் குடிகளாக கருதப்படுகிற வேடர் சமூகத்தினரின் கலை கலாச்சார வாழ்வியல் பண்புகள் தனித்துவமானவை.
இயற்கையோடு வாழுகிற வேடுவ சமூகத்தின் சூழல் இருப்பிற்கு ஏற்ப அவர்களது உடலின் பௌதீக இயல்புகள் தீர்மானிக்கப்படுவதாக அறிய முடிகிறது, குறிப்பாக குள்ளமான உடல், நீண்ட தலை, அகலமான தாடை, தட்டையான மூக்கு, நன்கு வளர்ந்த தாடியும் மீசையும், சுருளான தலைமுடி, ஆழமானதும் கூர்மையானதுமான கண்கள், மங்கலான மண் நிறம் கலந்த தேகம் என்று இவர்களுடைய அங்க அடையாளங்கள் அடையாளப் படுத்தப்படுகின்றன.
இலங்கையில் வேடர்களின் பரவல்
இலங்கையில் வசித்துவருகிற வேடுவர்களுக்கிடையில் பல்வேறுவகையான கோத்திரப் பிரிவுகள் காணப்படுகின்றன, ஆரம்பித்தில் 16 கோத்திரங்கள் காணப்பட்டதாகவும் பின்னர் அவை குறைவடைந்து தற்போது 06 கோத்திரங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தரவுகள் குறிப்பிடுகின்றன. ஊரு கோத்திரம், தலா கோத்திரம், நபுடன் கோத்திரம், உனாபான கோத்திரம், மொரான கோத்திரம், அம்பலவ கோத்திரம் என்பனவே அவையாகும்.
இவற்றில் உனிச்சி, பிம்தன்னை, தம்பானை, தமன்கடுவை, யக்குரை உல்பொதை போன்ற இடங்களில் ஊரு கோத்திரத்தினை சார்ந்தவர்களும், யக்குரே, அம்பாறை, பக்கிஎல்ல, களுகொலாப, தம்பானை, ஒலகொதகிய, ஹோனெபெத்த போன்ற பகுதிகளில் தலா கோத்திரத்தினை சார்ந்தவர்களும், தம்பானை, வட்டவனை, கந்தேகம்வெல, சொரபொரை, பிந்தனை, கல்லோருபாய போன்ற இடங்களில் நபுடன் கோத்திரத்தை சார்ந்தவர்களும், ஹோணபத்த, அம்பாறை, பக்கிஎல்ல, தானிகல ஆகிய இடங்களில் உனாபான கோத்திரத்தை சேர்ந்தவர்களும்,
நிக்கெல, ஹோணபத்த, சீதல வன்னிய, கொடதலாவை, உணுவதுர புபுல, பிங்கொடை, மகாஓயா, ஆகிய இடங்களில் மொரான கோத்திரத்தை சார்ந்தவர்களும், வாகரை, மட்டக்களப்பு போன்ற இடங்களில் அம்பலவ கோத்திரத்தை சார்ந்த வேடர்களும் வசித்து வருகிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது ஒரு புறம் இருக்க வாழ்க்கை முறையின் அடிப்படையிலும் வேடர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். மரம், இலை குழைகளை அணிந்தபடி வேட்டையாடி வாழ்ந்த மக்கள் கல்வேடர்கள் என்றும், கரையோரப் பிரதேசங்களில் வாழ்கிற கடற்தொழிலை வாழ்க்கை முறையாக கொண்டுள்ள மக்களை கரையோர வேடர்கள் என்றும், சேனைப் பயிற்செய்கையினை வாழ்க்கை முறையாக கொண்டு சிறிய கல்லால் ஆன வீடுகளை அமைத்து வாழ்ந்து வருகிற வேடுவ சமூகத்தை கராம வேடர்கள் என்றும் அழைக்கின்ற வழக்கம் இருந்து வருகிறது.
வாழ்வியல் முறைகள்
ஆரம்ப காலத்தில் வேடர்கள் ஒற்றையாக அல்லது இரண்டு மூன்று குடும்பங்கள் இணைந்த சிறு குழுக்களாக குகைகள் உட்பட்ட தமது வாழ்விடங்களில் வாழ்ந்து வந்தனர், குறித்த வாழ்விடம் அங்கு வாழ்ந்து வந்த குடும்பங்களின் பொது உரிமையாக இருந்தது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் அந்த வாழ்விடத்தின் சிறு பகுதியை ஒதுக்கியிருந்தனர். சுற்றாடலின் சமநிலை மற்றும் வளத்திற்கு கேடு விளைவிக்காத வகையில் உணவு தேடி வாழ்ந்துவந்தனர். வாழ்வதற்காக மட்டுமே உணவு தேவைப்பட்டது. இதனால் உணவு வரையறைக்கு உட்பட்டதாக இருந்தது, வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், மீன் பிடித்தல் போன்ற முறைகளின் மூலம் அவர்களுக்கான உணவு கிடைத்து வந்தது.
வேட்டையே பண்டையகால வேடர்களின் வாழ்க்கை வழியாக இருந்தது, இதனால் அவர்களுடைய கண்கள், கைகால்கள் மற்றும் அங்க அசைவுகள் வேட்டைக்கு ஏற்ப தேர்ச்சி பெற்றவையாக இருந்து வந்தன. அங்கு வசித்து வந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேட்டையாடுவதற்கென சுமார் 25 தொடக்கம் 50 ஏக்கர் வரையான வனாந்தரப் பகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன, இவை மரங்களினால் அல்லது கற்களினால் அடையாளப்படுத்தப் பட்டு இருந்தன. அங்கு எல்லை மீறல்கள் இடம்பெற்றிருக்கவில்லை, வில்லு, அம்புகள், கைக்கோடரி, மர ஈட்டி போன்ற இலகு ஆயுதங்களை பயன்படுத்தி மரை, மான், பன்றி, உடும்பு, குரங்கு, ஆமை, முயல், சருகுமான், முள்ளம்பன்றி, அழுங்கு போன்ற விலங்குகளையும், மயில், கிளி, காட்டுக்கோழி, பூவை போன்ற பறவை இனங்களையும் வேட்டையாடி உணவுத் தேவையை நிறைவு செய்தனர். இதேபோல கரையோரங்களில் வாழ்ந்த ஆதிவாசிகள் கடல், களப்புக்கள், ஓடைகள், வாவிகள் போன்றவற்றில் மீன்பிடித்தனர். இவற்றில் சிறிய நீர் நிலைகளில் நீர் வெளியேறும் வழிகளினூடாக நீரை வெளியேற்றல், நச்சு இலைகள், கொடிகளை நீரில் இடுதல் போன்ற முறைகளில் மீன்களை பிடித்தனர். இது “கரககெமன” என்று அழைக்கப்பட்டது.
ஆடை அணிகலன்கள்
இலங்கை வேடர்களின் ஆடை அணிகலன்களில் இடுப்பிற்கு கீழ் ஆண்கள் அணிந்துவந்த “ரிட்டி” என்கிற மரப்பட்டைகளால் ஆன ஆடை முக்கிம் பெறுகிறது. பிற்காலத்தில் ஆண்கள் கோவணம் என்கிற துணியால் ஆன மறைப்பினையும் பெண்கள் இடுப்பிற்கு கீழ் துணிகளையும் அணிந்தனர். கால ஓட்டத்தில் இவர்கள் சார்ந்து வாழுகிற இனக்குழுமங்களின் ஆடை வழக்கத்தையும் உள்வாங்கி சாரம், கவுண், சேலை போன்றவற்றை அணிவதற்குப் பழகிக் கொண்டுள்ளனர். ஆபரணங்களாக யானைத்தந்தம், புலிப்பல், மான்கொம்பு, மற்றும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்து வந்தனர். அண்மைக்காலத்தில் விதைகளை கொண்டு கோர்க்கப்படுகிற மாலைகள் மற்றும் இமிரேசன் ஆபரணங்களையும் அணிவதற்கு பழகியுள்ளனர். தொடரும்…
15 total views, 3 views today