எங்கள் திண்ணைப் பேச்சு எங்க போச்சு
வீடுகளில் வாரம் ஒரு முறை குறைந்த பட்சம்,
அரை நாள் டிஜிடல் விடுமுறை விடலாம்.
- சேவியர் (தமிழ்நாடு)
பரபரப்பான காலை வேளையில் திடீரென மேலதிகாரி அழைத்தார். ” ஒரு கிளையண்ட் கொஞ்சம் முரண்டு பிடிக்கிறாருப்பா, நீ போய் நேர்ல பாத்து பேசிட்டு வா”. என்றார்.!
‘என்ன சார், அவங்க இருக்கிறது ஸ்ரீநகர்ல, அவர் கிட்டே டெய்லி பேசிட்டு தான் இருக்கோம்.. மெயில் பண்ணிட்டு இருக்கோம்… இதுல நேர்ல போய் எதுக்கு பேசிகிட்டு.. டைம் வேஸ்ட்.. மணி வேஸ்ட் ‘ என இழுத்தேன். ‘நேர்ல பாத்து பேசினா எல்லாம் சரியாயிடும் .. சொன்னதை செய் … என்றார்’. மேலதிகாரி சொன்னால் மறுத்துப் பேச முடியுமா ? சென்னையிலிருந்து பிளைட் புடித்து ஸ்ரீநகர் போனால், சிடுமூஞ்சி கிளையண்ட் மகிழ்ச்சியாக வரவேற்றார். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம், பிரச்சினைகள் எல்லாம் சுமூகமாக முடிந்தன. கைகுலுக்கி விடைபெற்றோம் !
எனக்குப் புரியவில்லை. எத்தனையோ முறை மின்னஞ்சலிலும், டீம்ஸ் காலிலும், போனிலும் பேசியும் முடியாத விஷயம் நேரடியாகச் சந்தித்து மெலிதாய்ப் புன்னகை பரிமாறி, கைகுலுக்கிக் கொண்டபோது முடிந்தது வியப்பாக இருந்தது. நேரில் சந்தித்துப் பேசுவதற்கு இருக்கின்ற மரியாதையும், மதிப்பும் டிஜிடல் வெளியில் கொடிகட்டிப் பறந்தாலும் கிடைப்பதில்லை என்பது புரிந்தது. மனம் அப்படியே ரிவர்ஸ் கியரில் பழைய காலத்துக்குப் படியேறியது.
வாழ்வின் மகத்தான தருணங்களை விரல்விட்டு எண்ணி விடலாம், அதில் அதி அற்புதமான பொழுதுகள் எல்லாமே பிறரோடு இணைந்து நாம் செலவிட்ட தருணங்களாகவே இருக்கும்.
மேலாண்மையில் நிறைய நூல்களை எழுதியவரும், உரைகளில் உலகளாவியப் புகழ் பெற்றவருமான சைமன் ஸ்னக் சொல்லும் சிந்தனை ஆழமானது. “நாம் தொழில்நுட்பத்தை அதிக அளவுக்கு பயன்படுத்தப் பயன்படுத்த, மனிதரோடு உறவாடும் நேரம் குறைந்து கொண்டே வரும்.சமூக வலைத்தள அங்கீகாரங்களில் கிடைக்கும் போதை ஒரு மாயை! இது உண்மையில் மனித உறவுகளைக் களவாடுகிறது. அதிக தொழில்நுட்பப் பயன்பாடு தனிமையையும், திருப்தியின்மையையும் தந்து விடக் கூடும்” என்கிறார் அவர்.
மனிதன் பிறரோடு இணைந்து வாழப் படைக்கப்பட்டவன். அவன் தனித்து இயங்குகின்ற உயிரினம் அல்ல. அதிலும் குறிப்பாக தமிழன், பிறரோடு கலந்து வாழ்வதையும், பிறருக்காகக் கரைந்து வாழ்வதையும் வாழ்வியல் நெறியாகவே வைத்திருந்தவன்.தமிழரின் இலக்கியங்கள் முழுவதும் மனித உணர்வுகளாலும், உயரிய சிந்தனைகளாலும் நிரம்பியவையே.பிறரன்பைப் பேணியதன் அடையாளம் தான் தமிழர் வீட்டின் திண்ணைகள். திண்ணைகளில் நீராகாரமும்,ஓய்வெடுக்கத் தேவையான பொருட்களையும் வைத்து விட்டு, வந்து தங்குகின்ற வழிப்போக்கரை தன்னை விட உயர்ந்தவராய்க் கவனிக்கும் தமிழனின் பண்பை உலகில் எங்கேனும் காண முடியுமா? அந்த அன்றைய வாழ்க்கை முறை இன்றைக்கு மிகப்பெரிய வியப்பே! திண்ணைகள் திருடப்பட, நான்கடுக்கு கிரில் கேட்டுக்கு உள்ளே அல்லவா இன்றைய தமிழனின் வீடு சுருங்கிவிட்டது.
எனது பால்ய வயதில் கிராமங்களில் நடந்து திரியும் போது, பெரும்பாலான வீடுகளில் திண்ணைகள் இருக்கும். அந்தத் திண்ணைகளில் யாரேனும் உட்கார்ந்திருப்பார்கள். திண்ணை திண்ணையாக அரட்டையடித்தே விடுமுறை நாட்கள் சுவாரஸ்யமாகக் கழிந்து விடும். அந்தத் திண்ணைகளில் சண்டையிட்டுக் கொண்டவர்கள் வாழ்க்கையில் ஒற்றுமையாகவே இருந்திருக்கிறார்கள்.
குட்டிச் சுவரில் அமர்ந்து நண்பர்கள் அடிக்கும் அரட்டை, இப்போது நினைத்தாலும் சுவாரஸ்யத்தின் உச்சம். எல்லோரிடமும் ஏதோ ஒரு கதை இருக்கும். கதைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது இன்னும் அதிகமாக அவர்களோடு ஒரு பிணைப்பு ஏற்படும். நண்பர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தினரோடும் ஒரு அன்பும், நட்பும் நிரம்பவே இருக்கும். எந்த வீட்டில் சந்திக்கிறோம், எந்த வீட்டில் சாப்பிடுகிறோ, எந்த வீட்டில் உறங்குகிறோம் என்பதே அறியாத அன்றைய சமத்துவ உறவு இன்றைக்கு வியப்பின் உச்சம்.
அவையெல்லாம் இப்போது அருங்காட்சியகத்துக்குச் சென்று விட்டன. பழங்கதைகள் எல்லாம் புனை கதைகள் போல தோற்றமளிக்கின்றன. உலகம் டிஜிடல் மயமாகிவிட்டது. வாட்சப் வாசலில் தான் சேவல் கூவுகிறது. ஃபேஸ்புக் பக்கங்களில் தான் கதைகள் முளைத்தெழுகின்றன. எக்ஸ் பக்கத்தில் தான் அரட்டைகள் அரங்கேறுகின்றன. வேர்களை வெட்டிவிட்டுக் கிளைகள் பூக்களை வரைந்து கொள்கின்றன. ஏன்,வீடுகளிலேயே அறைகள் ஒவ்வொன்றும் தனித் தனியே இயங்குகின்றன. சாப்பாடு ரெடியாகிவிட்டதென சமையலறையிலிருந்து செய்தி அனுப்புகிறார் அன்னை. மாடியில் தன் அறையில் கொரியன் சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் மகள், சாப்பாட்டுக்காக கீழே இறங்கி வருகிறாள். தட்டில் பரிமாறப்படுவதைக் குறித்த எந்த உணர்வும் இல்லாமல் சாப்பாட்டு நேரம் முடிகிறது! மீண்டும் டிஜிடல் கதவுகளை அடைத்துக் கொள்கிறாள் மகள். இப்படியே நகர்கின்றன இன்றைய நவயுக நாட்கள்.
எப்போதுமே தொடர்பில் இருக்கிறோம், ஆனால் ஒருபோதும் தொடர்பில் இல்லை என்பது தான் நிஜம். முன்பெல்லாம் கிராமத்தில் ஒரு புது நபர் வந்துவிட்டாலே ஊரே உற்றுப் பார்க்கும். அவரால் கிராமத்துக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை உறுதிப் படுத்திய பின்னரே ஊர் சகஜ நிலைக்கு வரும். ஊரில் ஒருவருக்குப் பிரச்சினை என்றால் ஊரே பாய்ந்து வரும். இன்றைக்கு?! விபத்தில் அடிபட்டுக் கிடப்பவரைக் காப்பாற்றக் கூட ஆட்கள் ஓடி வருவதில்லை, அதற்குப் பதிலாக அவர்கள் டிஜிடல் குடை விரித்து காட்சியைப் பதிவு செய்கின்றனர்.
மக்களுடைய வாழ்க்கையானது சிரிப்பு, தொடுதல், விளையாடுகள் போன்றவற்றிலிருந்து விடுபட்டு லைக், ஷேர், வியூ எனும் நிலைக்கு மாறிவிட்டது. தங்களுடைய பதிவுக்கு அதிக ரீச் கிடைக்க வேண்டும் என ஆசைப்படுகின்ற அளவுக்கு, தங்களுடைய நட்பு வலுவாக இருக்கவேண்டுமென ஆசைப்படுவதில்லை. தங்களுடைய பதிவு வைரல் ஆகவேண்டுமென யோசிக்குமளவுக்கு, தங்கள் உறவு உண்மையாக வேண்டுமென யோசிப்பதில்லை. டிஜிடலில் உணர்வுகள் பரிமாறப்படுவதில்லை, தகவல்கள் மட்டுமே பரிமாறப்படுகின்றன. எல்லோரிடமும் இன்று பத்துப் பதினைந்து குழுக்கள் இருக்கின்றன. நமது டிஜிடல் குழுக்களில் ஆயிரம் நண்பர்கள் இருக்கலாம், அவர்கள் தினமும் காலை வணக்கம் மெசேஜ் அனுப்பலாம். ஆனால் நம்முடைய தேவையில் யார் வந்து கதவைத் தட்டுகிறார் என்பதே முக்கியம்.
முன்பெல்லாம் கோடை விடுமுறை வந்தாலே தொலை தூரத்தில் இருக்கிற தூரத்துச் சொந்தங்களை நோக்கி கட்டுச் சோறும் கட்டிக் கொண்டு கிளம்பி விடுவோம். அப்போது தாத்தா பாட்டி மாமா மாமி என்பது மட்டுமல்ல, நம்ம வீட்டுக் கொல்லையில் நிற்கும் ஆடு மாடு கோழி கூட நமக்கான சொந்தங்கள் தான். இன்றைக்கு அவையெல்லாம் எங்கே? தனது சொந்த பெற்றோரைக் கூட சென்று பார்க்க தயங்கும் உறவுகளல்லவா நம்மிடம் பெருகிக் கொண்டிருக்கின்றன.
விருந்தோம்பலின் உச்சத்தில் இருந்த தமிழினம்! விதை நெல்லைக் கூட தோண்டி எடுத்து வந்து வழிப்போக்கருக்குச் சமைத்துக் கொடுத்த தமிழினம் ! இன்று பகிரும் மனநிலையை விட்டு விலகிக் கொண்டே இருக்கிறது. காரணம் உறவுகளிடையே நேரடியாகப் பார்த்துப் பேசும் வழக்கம் குறைந்து வருவது தான்.
திண்ணைப் பேச்சுகளின் காலத்தில் மன அழுத்தம் என்பது அறவே இல்லை எனலாம். ஒருவருடைய துயரத்தைத் தாங்கவும், அதைத் தங்களுடைய துயரம் போல பாவிக்கவும் உறவுகள் ஏராளம் இருந்தன. இன்றைக்கு அப்படியில்லை.மன அழுத்தம் எப்போதுமில்லாத அளவுக்கு உச்சத்தில் இருக்கிறது. டிஜிடலில் எழுகின்ற உரையாடல்களில் எது உண்மை எது போலி என்பதே புரியாத நிலை இருக்கிறது. ஸ்மைலி – களால் கட்டமைக்கப்படும் உணர்வுகளில் உண்மை இல்லை. நல்ல நண்பர்களைக் கொண்டிருங்கள், அடிக்கடி நேரடியாகச் சந்தித்துப் பேசுங்கள் என்று தான் உளவியலார்கள் சொல்கின்றனர்! இன்றைய உளவியலார்களின் கண்டுபிடிப்பை, அன்றே தமிழன் திண்ணைக் கலாச்சாரத்தில் சொல்லிவிட்டானல்லவா!
நீண்டகால நட்பு என்பது நேரில் சந்திக்கின்ற மக்களிடம் மட்டுமே இருக்க முடியும். மற்றவையெல்லாம் ஈசல்களைப் போல மின்னி மறைகின்றன. இன்று இந்தப் புற்றில், நாளை இன்னொரு புற்றில் என்று தான் டிஜிடல் உறவுகள் வாழ்கின்றன. என்னோட ஸ்கூல் மேட்,என்னோட காலேஜ் மேட் என நாம் புளகாங்கிதம் அடையும் நீண்டகால நட்புகள் இனி வரும் காலங்களில் இருக்குமா என்பதே சந்தேகம் தான்.
சமூகம் வலிமையாகவும், உறவுகள் ஆழமாகவும் வளரவேண்டுமெனில் வெறும் டிஜிடல் மொழியல்ல, உடல்மொழியும், வாய்மொழியும் அவசியம். அத்தகைய சூழலுக்கு மீண்டும் ஒரு முறை நம் சமூகத்தை அழைத்துச் செல்லும் முயற்சியை நாம் செய்ய வேண்டும். அடிக்கடி சந்தித்துப் பேசுகின்ற சமூக நிகழ்வுகளை உருவாக்க வேண்டும்.அது சில குடும்பங்கள் ஒன்றிணைந்து நடத்துகின்ற சந்திப்புகள் ஆகலாம், சிறு சிறு விழாக்கள் ஆகலாம்,சிறு சிறு சுற்றுலாக்கள் ஆகலாம். எது வசதியோ அதை செயல்படுத்தலாம், ஆனால் அடிக்கடி செயல்படுத்த வேண்டும்.
இணையவழி நிகழ்ச்சிகளை விட நேரடியாக சந்தித்துச் செய்கின்ற விஷயங்களை ஊக்கப்படுத்த வேண்டும். சில விளையாட்டு நிகழ்ச்சிகள். நூலகங்களில் சென்று வருவது போன்றவற்றை நடத்த வேண்டும். மாறி மாறி நண்பர்களின் வீடுகளில் சந்தித்து உரையாடவேண்டும். முழு நிலா இரவு சந்திப்புகள், இலக்கியக் கூட்டங்கள் போன்றவற்றை நடத்த வேண்டும்.
டிஜிடல் இல்லா சந்திப்புகளை அறிமுகம் செய்ய வேண்டும். வீடுகளில் வாரம் ஒரு முறை நோ-காட்ஜெட்ஸ் என திட்டமிடலாம். குறைந்த பட்சம், அரை நாள் டிஜிடல் விடுமுறை விடலாம். உறவினர்களைச் சென்று சந்திப்பது, முதியோர் இல்லங்கள் சென்று சந்திப்பது என வாரம் ஒரு முறை ஏதேனும் ஒன்றை செயல்படுத்தவேண்டும்
இப்படி சின்னச் சின்ன மாற்றங்களை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தினால் மீண்டும் ஒரு அன்பின் சமூகம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை. அன்பினாலும், உறவுகளினாலுமே உலகம் கட்டமைக்கப்படுகிறது. அந்த உண்மையை உணரும்போது வாழ்க்கை அழகாகும். கருவிகள் எல்லாம் பின் இருக்கைக்குச் சென்றமரும்.
கதிரைகள்
-கவிஞர் வ.வடிவழகையன் (காரைநகர்)
கதிரைக்குக் காலுண்டு !
கண்ணால் காண்பதுதான்…
கதிரைக்குக் கையுண்டு !
சிலகதிரை கொண்டதுதான்…
கதிரைக்கு முகமுண்டோ? முகமுண்டு முகமுண்டு.
கதிரைக்குக் குணமுண்டோ? குணமுண்டு குணமுண்டு.
புதிராகத் தெரிந்தாலும்
புரிந்தால் வியப்பீர்கள்.!
தயாரிக்கும் இடங்களிலே கதிரைக்கு முகமில்லை.!
தயாரிக்கும் இடங்களிலே கதிரைக்குக் குணமில்லை.!
கொள்வனவு செய்கையிலும் கோரமுகம் சூரமுகம்
எள்ளளவும் அதற்கில்லை…
கள்ளத் தனமில்லை; கருவறுக்கும் எண்ணமில்லை
வெள்ளைத் தனத்தோடு வெள்ளேந்தி யாயிருக்கும்.
காசு கொடுத்ததனை கவனமாக வாங்கிவந்து
வாசியான ஓரிடத்தில் வசதியாக வைத்துவிட்டால்….
ஏனோ தெரியவில்லை எத்தனையோ முகங்காட்டும்
தானாக ஆடும்; தனித்தனியாய் போய்ப்பறையும்;
ஏனோ தானோவென்று எங்கேயோ பார்த்திருக்கும்;
மானா வாரியாக மழைபோலஇடர்வரினும்
போனாப் போகுதென்று பொறுப்பற்று துயில்கொள்ளும்
‘நானென்று’ ஒருகதிரை நட்டபடி நின்றுகொ(ல்)ள்ளும்
காசுக்காய் ஏங்கி கவலையுறும் ஒருகதிரை!
பாசத்துக் காய்ஏங்கி பரிதவிக்கும் ஒருகதிரை!
வேசங்கள் போட்டு வெளுத்துவாங்கும் ஒருகதிரை!
மாசற்ற நீதிக்காய் மண்டியிடும் ஒருகதிரை!
ஈரத் தனத்தோடு கசிந்துருகும் ஒருகதிரை!
சோரம் போவதற்கும் துணிந்துவிடும் ஒருகதிரை!
பாரம் தாங்காமல் பொந்துவிழும் ஒருகதிரை!
யாருக்கும் கைப்பிள்ளையாய் எடுபடும் ஒருகதிரை!
இப்படித்தான்…
கதிரைக்கு முகமுண்டாம் கதிரைக்கு குணமுண்டாம்.
ஊழல் உச்சத்தில் உட்கார்ந்து இருக்குமெனில்
தண்டிக்கும் ஒருகதிiர் தண்டிக்க கூடாதென
தெண்டிக்கும் ஒருகதிiர் தெண்டிக்கும் அதனுறவைத்
துண்டிக்கும் ஒருகதிரை இவைகளினைப் பார்த்திருந்து
கண்டிக்கும் ஒருகதிiர் ஏலுமென்றால் செய்யென்று
சுண்டிக்கும் ஒருகதிரை…
ஆதலினால்… ஆதலினால்…
கணனிகளைக் காப்பாற்ற அன்ரிவைரஸ் இருப்பதுபோல்
முகத்திருந்தும் குணத்திருந்தும் கதிரைகளைக் காப்பாற்ற
அன்ரிமுகம் அன்ரிகுணம் ஆகியன உள்ளடக்கி
அழகான கதிரைகளை ஏற்பாடு செய்திடணும்.
171 total views, 9 views today