நீங்கள் உண்மையில் ஒரு வாழும், சுவாசிக்கும் நகரமாகவே இருக்கிறீர்கள்
- Dr.நிரோஷன் தில்லைநாதன் யேர்மனி
உங்கள் உடலின் காவலாளிகள்;!
நம் உடலின் அடிப்படையைப் பற்றி நாம் ஏற்கனவே நிறையவையும் கேட்டு இருக்கிறோம் – உடலில் பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிரிகள் மொத்தம் 40 டிரில்லியன் (40.000.000.000.000) அளவில் இருப்பதாகவும், அவை நம் உடலில் பல நல்ல வேலைகளைச் செய்கின்றன என்பதும் நாம் அறிந்த விஷயம். ஆனால், இப்போது புதிய விஞ்ஞானத் தகவல்கள் நம்மை இன்னும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. நம் உடலின் ஒரு முக்கிய பகுதி வைரஸ்களால் நிரம்பி நிறைந்திருப்பதாகப் புதிய ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. வைரஸ்கள் என்றாலே, நாம் நினைப்பது நோய்களை உருவாக்கும் குற்றவாளிகள் என்று. ஆனால், உண்மையில், நம் உடலில் உள்ள பில்லியன் கணக்கான வைரஸ்கள் நம் எதிரிகள் அல்ல.அவை நம் உடலின் பாதுகாவலர்களாகச் செயல்பட்டு, சில சமயங்களில், நோயைக் கொல்லக் கூட உதவும்!
உங்களுக்கு ஒன்று தெரியுமா? நீங்கள் உண்மையில் ஒரு வாழும், சுவாசிக்கும் நகரமாகவே இருக்கிறீர்கள். உங்கள் உடலில் 40 டிரில்லியன் செல்கள் உள்ளன. இந்த நகரம், மனித நுண்ணுயிரிக் கூட்டமைப்பு எனப்படும் மைக்ரோபியோமுக்கு, மேலும் 40 டிரில்லியன் நுண்ணுயிரிகளைத் தங்க வைக்கிறது. இந்த நுண்ணுயிரிகள் உங்கள் உடலில் பல சாமானிய பணிகளைச் செய்கின்றன.
உதாரணமாக, அவை உங்கள் உணவைச் சிதைக்கின்றன, ஊட்டச்சத்துக்களை உற்பத்தி செய்கின்றன, வாயிலுள்ள அமிலத்தைச் சமநிலை படுத்துகின்றன, மேலும் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் சீராக்குகின்றன. இதை விட, அவை தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் உங்கள் உடலினுள் வராமல் தடுக்கும் பணியைச் செய்கின்றன. இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் இந்தப் பாக்டீரியாவின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது தான். அவை பெருகினால் அல்லது தங்கள் எல்லைகளை மீறினால், அதனால் ஏற்படும் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த, ஒரு கொடிய எதிரி காத்திருக்கிறது: வைரஸ்கள். இவை குறைந்தது பத்து டிரில்லியன் அளவில் உங்கள் உடலில் பரவியிருக்கின்றன. அதுவும் அதிகமானவை உங்கள் குடலில் இருக்கும். அங்குப் பாக்டீரியாவை ஒழிக்கவும் அவற்றின் எண்ணிக்கையைச் சமநிலையாக்கவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த வைரஸ்களில் பெரும்பாலானவை (97வீதம்) பாக்டீரியோபேஜ்கள் அல்லது பேஜ்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பாக்டீரியாக்களை வேட்டையாடி கொல்லும் விசித்திரமான வைரஸ்களாகும். குறிப்பாக, இவை உங்கள் உடலின் செயல்களைத் தாக்குவதில்லை. மாறாக, தினமும் கோடிக்கணக்கான பாக்டீரியாக்களை அழிக்கின்றன. இந்த வைரஸ்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து மனித வைரோம் (Virome) எனப்படும் உங்கள் உடலின் ஒரு வைரஸ் அமைப்பை உருவாக்குகின்றன. இது உங்கள் உடலின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவை எவ்வாறு உங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன என்பதையும், அவ்வப்போது எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படும்போது என்ன நடக்கிறது என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
உங்கள் குடலில், “லாம்ப்டா பேஜ்” எனும் ஒரு வைரஸ் அமைதியாகப் பாக்டீரியாக்களின் கூட்டத்தில் நிற்கிறது, அது ஓர் இரையைத் தேடிக் கொண்டிருக்கிறது. இவ் வைரஸின் உடலில் ஆறுபாகங்களும், உடல் நீளமும், கோண வடிவங்கள் கொண்ட தலை அமைப்பும் genet Ic தகவல்களை அடக்கி வைத்திருக்கும் பகுதியாக அமைந்துள்ளன. இதன் வேட்டைக்கு ஏற்றவையாகப் பாக்டீரியா வகைகள் இருப்பினும், இது குறிப்பாக Escherichia coli எனும் பாக்டீரியாக்களைத் தான் அதிகம் பிடிக்கின்றது. சில Escherichia coli பாக்டீரியாக்கள் நல்லவை. அவை நம் உடலில் வைட்டமின் உற்பத்தியில் பங்கு பெறுகின்றன. ஆனால், சில சமயங்களில் இவை மிகவும் தீயவையாக மாறி, நம் உடலில் செரிமானங்களை உருவாக்கும் ஆபத்தை ஏற்படுத்த முடியும். இதுபோன்ற பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது நம் உடலில் உள்ள வைரஸ்களின் மிக முக்கியமான வேலையாகும்.
ஒரு பாக்டீரியாவைப் பிடித்து அதன் உடலில் ஒரு சிறிய ஊசி போன்ற அமைப்பினூடாகக் குத்தி, அங்கே தனது னுNயு ஐ நுழைத்து, அந்தப் பாக்டீரியாவை ஒழிப்பதற்கான வேலையை உருவாக்கி விடுகின்றது. வேறு சில நேரங்களில், இந்த வைரஸ்கள் பாக்டீரியாக்களைக் கொல்லாது, மாறாக அவற்றின் உடலில் நுழைந்து உறங்கிக் கொள்கின்றன. பின்பு எதிர்பாராத நேரத்தில் அவற்றின் நோக்கத்தைச் சாதித்து, கொலை செய்ய ஆரம்பிக்கின்றன.
இந்த வைரஸ்களும் நம்மைப் போன்றே வாழ்வை விரும்புகின்றன. ஆகவே, சில வைரஸ்கள் பாக்டீரியாவை மாற்றிவிடுகின்றன, அதாவது பாக்டீரியாவுக்குச் சில புதிய பணிகளைச் செய்வதைக் கட்டாயப்படுத்துகின்றன. இவை குடலின் லேசான பூச்சுகளைக் காப்பாற்றுகின்றன அல்லது உணவில் உள்ள கார்போஹைட்ரேடுகளைச் சிதைக்கின்றன. இதனால் நமது உடலில் வீக்கம் ஏற்படாமல் தடுப்பது போன்ற ஆரோக்கியமான செயல்பாடுகளை இவை செய்கின்றன. பொதுவாக வைரஸ்கள் என்றால் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று நம்பியிருந்த நமக்கு, வரைஸ்களால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிய ஆச்சரியமாக இல்லையா? சுருக்கமாகச் சொல்லப்போனால் நமக்கு வைரஸ்கள் தேவை, அவற்றுக்கு நம்மால் வாழ்க்கை!
150 total views, 6 views today