புலம்பெயர் தேசத்தில் இளையவர்கள் முன்னின்று நடாத்திய ஆடற்;கலாலயத்தின் 35 ஆவது ஆண்டுப் பெருவிழா

ஆடற்;கலாலயத்தின் 35 வது ஆண்டு விழா 14.09.2024 சனிக்கிழமை அன்று ஜெர்மனி டியூஸ்பேக் நகரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 30 நடன நிகழ்வுகள் நடைபெற்றமை இந்நிகழ்வின் தனித்துவமான அம்சமாகும். ஆடற் கலைமணி திருமதி றெஜீனி சத்தியகுமார் அவர்கள்பதித்த விதை இப்போ கிளைகள் பரப்பி பெரு நிறுவனமாக வளர்ந்து வருகின்றமை கண்கூடு. புலம்பெயர் தேசத்தில் வளர்ந்த இளையவர்கள் முன்னின்று நடாத்திய ஒரு பெரு விழா. பற்பல துறைசார்ந்தவர்கள் அவையை அலங்கரித்திருந்தனர். பெற்றோர்கள் புடைசூழ திரு திருமதி சத்தியகுமார் தம்பதிகள், பிரதமவிருந்தினர் செல்வி சிம்ரன் சிவகுமார் (இந்தியா), சிறப்பு விருந்தினர் திருமதி சாந்தினி துரையரங்கன் (யேர்மனி) சகிதம் அரங்கிற்கு அழைத்துவரப்பட்டனர். மங்கள விளக்கு ஏற்றி, இறை வழிபாட்டுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.

நிமலன், தீபனா குரலில் லய கவிதை நிகழ்ச்சி ஸ்வரம், ஜதி கலந்து இராகமாளிகை தாளமாளிகையாக அமைந் திருந்தமை வித்தியாசமான ஒரு நிகழ்வாக இருந்தது. ஸ்வரக்குச்சா என்ற நிகழ்வில் ஆசிரிய மாணவர்களும் ஆசிரியர் றெஜினி சத்யகுமார் அவர்களும் இணைந்து அழகாக ஆடிய நிகழ்ச்சியை மிருதங்க கலைஞன் நட்டுவாங்கம் செய்தமையும் தனித்துவ அம்சமாகும். ஒரு இளம் மிருதங்கக் கலைஞன் நட்டுவாங்க கலைஞராக மேடையை அலங்கரித்தமை யேர்மனியில் நான் அறிந்த முதல் மேடை நிகழ்ச்சியாகும். கடல் பற்றி அமைந்த நிகழ்ச்சி, வர்ணம் போன்றன இந்நிகழ்வின் தனித்தன்மை எடுத்துக்காட்டின.

பக்கவாத்திய கலைஞர்களின் பங்களிப்பு இந்நிகழ்வின் இன்னுமொரு சிறப்பம்சமாகும். இளம் கலைஞர்களான லகிபன், அனுஷாந் தாளவாத்தியங்களையும், பிரசாந்த் வயலினையும், நிரூஜன், தாரணி குரல் இசையையும், வர்ணன் புல்லாங்குழல் இசையையும் லாவகமாக, சிறப்பாக வழங்கியிருந்தார்கள். சில நடனநிகழ்சிகளை சுரத்தட்டு இசையும் இணைந்து மெருகேற்றியிருந்தது. பக்கவாத்தியங்கள், நட்டுவாங்கத்தின் ஒருங்கிணைந்த தன்மை ஆற்றுகை செய்த கலைஞர்களுக்கு உந்துசக்தியை கொடுத்து மெருகேற்றின என்றால் அது மிகையாகாது. அது அவை யோரையும் பரவசப்படுத்தியது எனலாம். ஆடற்கலாலயத்தில் றெஜினி ஆசிரியரிடம் பயின்று இப்பொழுது ஆசிரியர்களாக கடமையாற்றுகின்ற தீபனா,அபிரா,ரோஷிகா,ராதிகா,தர்ஷிகா,சுவேதா, ராஸ்மிகா ஆகியோர் இணைந்து நிகழ்வுகளை தயாரித்து, நட்டுவாங்கம் செய்தமை பாராட்டுதற்குரிய விடயமாகும். இது இக்கலாலயத்தின் வளர்ச்சியின் அடுத்த கட்ட படிநிலை எனக் கூறலாம்.

பிரதவிருந்தினர் சிம்ரன் சிவகுமார் அவர்கள் தன் உரையில் நிகழ்ச்சிகள் சிறப்பாக உள்ளன. நட்டுவாங்கம், பக்க வாத்திய காரர்களின் பங்களிப்பு அருமையாக உள்ளது என்று பாராட்டினார். புலம்பெயர் தேசத்தில் பரத நாட்டியம் அழகா வளர்கின்றது என்றும் தன்னை இங்கு அழைத்தமைக்கு நன்றியும் கூறினார். தொடர்ந்து அவர் ஒரு பதத்தினை அழகான பாவத்துடன் ஆற்றுகை நிகழ்த்திக் காட்டினார்.சிறப்புவிருந்தினர் சாந்தினி துரையரங்கன் நடந்த நிகழ்ச்சிகைளை தொகுத்து கூறியதுடன் அவற்றில் உள்ள சிறப்புத்தன்மைகளையும் எடுத்துக் கூறினார். விழா கிட்டத்தட்ட 12 மணித்தியாலங்களாக சிறப்பாக நடைபெற்றது. ஒரு நடன நிறுவனத்தின் ஆண்டுவிழா தொடர்ச்சியாக நீண்டநேரம் இடம்பெற்றமை என்பது தனித்துவமே. நிமலன் சத்தியகுமார் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே விழா நிறைவு பெற்றது. படங்கள் : Malathi Digitals : தொகுப்பு: சாந்தினி துரையரங்கன். B.FA

218 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *