தப்பெல்லாம் தப்பே இல்லை என்பது சரியா?
-கௌசி யேர்மனி
வார்த்தைகளுக்குள் அடங்கிப் போவதுதான் வாழ்க்கை அல்ல. தினம் தினம் சிந்தித்து செயலாற்றி நல் எண்ணங்களை விதைக்க நினைத்துச் செயற்பட்டு மடிவதுவே வாழ்க்கை. தப்பெல்லாம் தப்பே இல்லை என்பது சரியா? தப்புத் தப்புத்தான் என்று பிடிவாத மனத்தோடு வாழ்க்கையை வழிநடத்திச் செல்வதுதான் வாழ்க்கையா? சம்பவங்களும் சரித்திரங்களும் மனத்திலே குழப்பைத்தை ஏற்படுத்தினாலும் மனம் என்னவோ ஆராயத்தான் செய்கிறது. நான் என்ன பெண்ணிய சிந்தனையைப் பேசுகின்ற எழுத்தாளரா? இல்லை உண்மையை வெளிக்கொண்டுவர பெண்ணென்ன ஆணென்ன எல்லாம் ஓரினம் தான் என்று பாரபட்சமற்ற கருத்துக்களை முன் வைக்கும் ஒரு படைப்பாளியா? என்று சிந்தித்தால் பெண்ணிய சிந்தனை என்று சொல்லித் தப்புக்களை ஏற்றுக் கொள்ளும் ஒருத்தியாக இருக்க விரும்பாத ஒரு படைப்பாளி என்பதுதான் உண்மை.
இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம், ஆராய்ச்சி, ஆன்மீகம், சமூக வலைத்தளங்கள் இவையெல்லாம் எனக்குப் பிடிக்கும். இவற்றுடனேயே என் பொழுதுகள் கழிகின்றன. அனைத்திலும் ஈடுபடுகின்ற போது முறையாக ஒன்றைச் செய்ய முடியாது என்பது வாதமாக இருந்தாலும், வாழுகின்ற காலத்திலே வசப்படுகின்ற அனைத்தையும் அறிந்து விட வேண்டும் என்பதுவே என்னுடைய வாதமாக இருக்கின்றது. “கண்டது கற்கப் பண்டிதனாவான்”; என்பது எனக்காக எழுதிய வரிகள் போலத்தான் இருக்கின்றது. ஒரு முக்கியத்துவத்தை அறிந்தே அறிஞர்களும், விஞ்ஞானிகளும் ஒன்றைக் கண்டுபிடிக்கின்றார்கள். அவ்வாறு கண்டுபிடிப்பவற்றிலே சாதக பாதகங்கள் இருக்கவே செய்யும். அவற்றை முறையாக அறிந்தே அவற்றைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் பயனாளிகளுக்கு இருக்க வேண்டும்.
மனிதர்களுக்கு எந்தவித பயனுமில்லாத விடயங்களைச் சமூகவலைத் தளங்களில் பலர் பயன்படுத்துகின்றார்கள் என்னும் குற்றச்சாட்டுக்கள் எம்மத்தியில் இருக்கின்றது. ஆனால், அதற்குத் தீர்ப்பை நாம் கொடுக்க முடியாது. ஏனென்றால், எமக்குப் பயனில்லாதது. மற்றையவர்களுக்குப் பயனுடையதாக இருக்கும். மற்றவர்களுக்குப் பயனில்லாதது எமக்கும் பயனுள்ளதாக இருக்கலாம். இதைவிட சமூகவலைத்தளங்களில் ஆண்கள் பெண்கள் மீது செய்கின்ற பாலியல் வன்முறைகள் பற்றிப் பேசப்படுகின்றது. குற்றவாளியை மனநோயாளி என்று பச்சை குத்தி மன்னித்து விடுகின்றார்கள். இல்லை தூக்குத் தண்டனை, கொலை என்று தீர்ப்புக் கொடுக்கின்றார்கள். இரண்டும் இதற்குத் தீர்ப்பல்ல. கொலை செய்யப்பட்டவன் தன்னுடைய குற்றத்தை அறிந்து கொள்ளச் சந்தர்ப்பம் இல்லாமல் போகின்றது. மனநோயாளி என்னும் போது குற்றங்களுக்கு சந்தர்ப்பங்களாகப் போகின்றன. எல்லாம் மனத்திலேதான் இருக்கின்றது என்பது உண்மை. அதனால், மனத்துக்கு மருந்து, கலாசாரத்தில் கட்டுப்பாடுகள் ஆராயப்பட வேண்டியவையாக இருக்கின்றன.
வாழ்க்கையிலே தான், தன்னுடைய குடும்பம் என்று சந்தோசமாக அமெரிக்காவிலே வாழ்ந்து கொண்டிருந்த ஒருவர் திடீரெனத் துப்பாக்கியை எடுத்துத் தன்னுடைய மனைவி, பிள்ளைகளைச் சுட்டுக் கொன்றாராம். அவரைப் பரிசோதித்துப் பார்த்த போது அவருடைய மூளைக்குப் பக்கத்தில் ஒரு பெரிய ரியூமர் என்று சொல்லப்படுகின்ற ஒரு கட்டி இருந்திருக்கிறது. இதனால், அவருடைய மூளை அவருயை செயற்பாட்டில் பல மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. இதேபோல் மூளையில் வளருகின்ற ரியூமர் கட்டிகளால் மிருகமாய் மாறுகின்ற பல உதாரண புருஷர்களை அறிவியல் உலகம் அடையாளம் காட்டுகின்றது. இதைப் போலவே மனத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்ற பல பெண்கள் செய்கின்ற தப்புக்கள் சமூகவலைத் தளங்களில் நியாயப்படுத்தப் படுகின்றன.
மனம் எப்போது எப்படி செயற்படும் என்று சொல்லமுடியாது. அதனாலேயே “மனம் ஒரு குரங்கு” என்று சொல்கின்றார்கள். ஒன்றாக வாழந்து, மகிழ்ச்சியை அனுபவித்து, பிள்ளைகளைப் பெற்று வாழ்ந்த பெண், கணவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை என்று முகநூல் நண்பர்களைப் பிடித்துப் போகின்றது என்கின்றாள். கணவன் நேரக் கட்டுப்பாடு இல்லாமலே தன்னுடைய இச்சைக்கு அழைக்கின்றான் என்ற காரணத்தைக் காட்டி முகநூல் நண்பர்களுடன் ஆதரவு தேடுகின்றேன் என்கின்றாள். இந்தப் பெண்களின் மனத்துக்கு வயதுக் கட்டுப்பாடுகள் இல்லை. இளவயதானாலும், வயதானவன் என்றாலும் அவளுக்குத் தப்பேயில்லை. ஆண்களில் பெண்கள் தங்கி வாழ்ந்த காலத்தில் ஆண்களே பரவலாகச் சின்னவீடு வைத்திருந்து தப்புச் செய்த காலம் இருந்தது. கணவன் மௌத்கல்ய முனிவரைத் தாசிப் பெண்ணிடம் கூடையில் சுமந்து சென்ற நளாயினி, தன்னைத் தவிக்கவிட்டு மாதவியுடன் வாழ்ந்த கோவலனுக்காக மதுரையை எரித்த கண்ணகி போன்ற பல உதாரணப் பெண்கள் வாழ்ந்த காலம் இப்போது இல்லை. இன்று பெண் சுதந்திரம் என்று ஆனபின் பெண்களும் மனம் போன போக்கில் போகின்ற காலத்தை சமூக வலைத்தளங்கள் தருகின்றன.
இதேபோல தப்பான வீடியோக்களை சமூக வலைத் தளங்களில் பதிவிடுகின்ற பெண்களும் தமக்குரிய சாதகங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஆதாரங்களைத் தேடுகின்ற முறைகளை அறியக்கூடியதாக இருக்கின்றது. இங்கு நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடிய நிலையில் நாம் இல்லை. அவர்கள் பார்வையில் தப்பெல்லாம் தப்பே இல்லை.
கண்ணகியை விட மாதவி கற்புக்கரசி என்று பட்டிமன்றத்தில் மாதவிக்கு நற்சான்றுப் பத்திரம் கொடுக்கும் வாதிகள் மாதவியின் தவற்றைச் சுட்டிக்காட்டுவதே இல்லை. திருமணமான கணவனுடன் தகாத உறவு கொள்ள மாதவி எவ்வாறு மனத்தைத் தயார் படுத்தனாள்.
“பிறப்பில் குன்றாப் பெருந்தோள் மடந்தை”
என்று இளங்கோவடிகளால் போற்றிப் பாடப்பட்ட மாதவி
“தலைக்கோல் எய்தித் தலை அரங்கு ஏறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு
ஒரு முறையாகப் பெற்றனள்”
என்று போற்றப்பட்ட மாதவி மாற்றாள் கணவன்; கோவலன் நெருங்கிய போது நீதி உரைத்து அவனை அண்ட விடாமல் செய்திருக்க முடியும். ஆனால், அங்கும் அவளுடைய மனம் அவளுக்குத் துரோகம் செய்தது. அக்காலத்தில் கணிகையர் பல குடும்பங்கள் சீரழியக் காரணமாக இருந்திருக்கின்றார்கள். அதேபோல தற்போது சமூகவலைத் தளங்கள் காரணமாக இருக்கின்றன.
இராவணன் தங்கை சூர்ப்பனகை என்னும் இராமாயணக் கதாபாத்திரம் இராமனில் மயங்கினாள்.
வெய்யோனின் ஒளிவெள்கும் வாறவனின் தோற்றம்
வாங்கார்விழி வடிவத்தை வாங்கியவ ராங்கே
பொய்யவெனு மிடையாளாங் கில்லாத போழ்தில்
மையலெனப் பெண்ணொருத்தி பாதநடை பயின்றாள்.
செந்தழலாய் மோகத்தீ செறிந்தவள் பார்வை
சுந்தரிபோல் புதுப்பொலிவில் சோபையொடு மாறி
வைந்தழிக்கும் கோடைவெயில் உட்டினத்தில் தோய்ந்தே
வருந்துகின்ற பெண்ணரவம் வெம்மையது கொல்ல
என்று மைவண்ணன் காவியத்தில் சூர்ப்பனகை பற்றி காப்பியக்கோ வடிக்கின்றார். இங்கு இராமன் சீதை கணவன் என்பதை அறிந்தும் இராமனை நாடிய சூர்ப்பனகைக் கதாபாத்திரம் மாசுள்ள பெண்களின் மனத்துக்கு ஒரு படிவமே.
இவ்வாறு புராணங்களும் காவியங்களும் கற்பிக்கும் முறை தவறிய பெண்களின் வாழ்க்கைக்கு காரணம் தப்பெல்லாம் தப்பே இல்லை. அது உள்ளத்தின் வெளிப்பாடு. அது எப்போது எப்படி மாறும் என்று சொல்ல முடியாது என்று வெளிப்படுத்துகிறது.
ஆனால், ஐம்பொறிகளை அடக்கும் போது ஐம்புலன்களும் அடங்கும். எமக்கு முன்னே விரிந்து கிடக்கும் அறிவியல், தொழில்நுட்ப உலகம் எம்முடைய பாதையை மாற்றப் பிறந்தது அல்ல. பாதையைச் சரியான வழிக்குக் கொண்டு செல்ல உதவி புரிய உருவாக்கப்பட்டது என்பதை உணர வேண்டும். ஒரு குடும்பம் சிதைந்தால், எதிர்கால மனிதர்கள் சிதைந்து போவார்கள். இதனால், உலகம் சிதையும்
147 total views, 6 views today