நாளைய மாற்றம் திரைப்படம் இயக்குனர் சிபோவின் முயற்சி வீண்போகவில்லை.
-வான்மதி (யேர்மனி)
வெளியீடு : 01.09.2024 – டீழஉhரஅஇ புநசஅயலெ
நாம் பிறந்தது முதல் காதில் கேட்டு வளர்ந்தது இலங்கை வானொலியில் ஒலித்த இந்திய சினிமாப் பாடல்களும், திரைக்கதை வசனங்களுமே. நாம் தேடிச் சென்று சினிமாக் கொட்டகையில் விரும்பிப் பார்த்து இரசிப்பது இந்திய சினிமாப் படங்கள். இந்த இரசனையுடன் வளர்ந்த எமக்கு, ஜெர்மனியில் ஒரு இயக்குனர் சிபோ சிவகுமாரன் படம் எடுக்கின்றார் என்றால், அதைப் பார்க்கும் ஆவல் இருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
இந்த முழுநீளப் படத்தின் இயக்குனர், கதாசிரியர் சிபோ சிவக்குமாரன் அவர்கள் Degital Film Making & Animation கல்வியை ஜெர்மனியில் கற்றவர். இதற்கு முன்னமே ஜெர்மனி வாழ் மக்களை நடிகர்களாக்கி ஒரு தொடர் நாடகத்தைத் தயாரித்து வெளியிட்டவர். அவரின் திறமையைக் கண்ணுற்றவர்களின் ஊக்கம் நிறைந்த பேச்சினால், நாளைய மாற்றம் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இப்படம் இலங்கை, பரீஸ், ஜெர்மனி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசையை பிரபாலினி பிரபாகரன், பிரசாந்த் கிருஷ்ணப்பிள்ளை, சு.வின் பிரசாந்த் ஆகியோர் வழங்கியிருந்தனர். mastering, dubbing பாரத் சிவநேசன் செய்திருந்தார். இது பெரிய திரையிலே படம் திரையிடப்படுவதற்குச் சாதகமாக அமைந்தது. பாடல்களைத் தயாநிதி தம்பிஐயா, பொத்துவில் அஸ்மின், சஞ்சய் சிவா அவர்கள் எழுதியிருந்தார்கள். பாடகர் ஸ்ரீனிவாஸன் அவர்களும் ஒரு பாடல் பாடியிருந்தார். சிறந்த கூட்டு முயற்சியில் இந்தத் திரைப்படம் வெளிவந்திருக்கின்றது.
நன்றியுணர்வு மேலோங்கிய சிபோ சிவக்குமாரன் அவர்கள் தன்னுடைய தயாரிப்பு, இயக்கத்தில் வெளியான தொடர்நாடகத்தில் நடித்த நடிகர்களுக்கு இத்திரைப்படத்திலும் சிறு காட்சிகளில் நடிப்பதற்கு ஏற்ற வகையில் கதையை அமைத்திருந்தார். ஒரு நடிகர் பட்டாளத்தை நடிக்க வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவது என்பது இலகுவான காரியம் இல்லை. இந்த முயற்சியில் சிபோ சிவக்குமாரன் அவர்கள் வெற்றியடைந்துள்ளார் என்றே சொல்லலாம். யாருடைய நடிப்பையும் குறை கூற முடியாமல் இருந்தது. இலங்கையில் நடித்த நடிகர்கள் சிறப்பான முறையில் நடித்திருந்தார்கள். அங்கு நடைபெற்ற படைப்பிடிப்புக்கு அவர்களின் ஆதரவு கிடைத் திருக்கலாம் என்பதை ஊகிக்கக் கூடியதாக இருந்தது.
நடிகர்கள் அனைவருக்கும் டப்பிங் கொடுக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் இதை அறியக்கூடியதாக இருந்தது. திரையில் வெளியிடப்படும் போது HD Quality ஐ எதிர்பார்க்க முடியாது. கதை நகர்வு சிறப்பாக இருந்தாலும் தன்னுடைய அனுபவங்கள் அனைத்தையும் இத்திரைப்படத்தில் கொண்டு வந்துவிட வேண்டும் என்னும் நோக்கம் வெளிப்பட்டது. இலங்கையில் ஒரு ஆணைக் காதலித்த பெண், வெளிநாட்டு ஆசையுள்ளவரும், சாதிப் பாகுபாடு பார்ப்பவருமான தாயின் விருப்பத்தில் ஜெர்மனியில் வாழுகின்ற மனைவியை இழந்த ஒருவனைத் திருமணம் செய்து வாழுகின்ற போது ஏற்படுகின்ற பிரச்சினைகளைப் படமாக்கியிருக்கின்றார். வக்கீலுடன் பித்தலாட்டம் செய்கின்ற பகுதியே கதையில் தொய்வைக் கொண்டு வந்தது. இலங்கையில் இருக்கின்ற மக்கள் வெளிநாட்டில் வாழுகின்றவர்களைப் பற்றிக் கொண்டிருக்கும் மனநிலையை அழகாகக் கொண்டு வந்திருக்கின்றார்.
சாதிப்பிரச்சினையை தன்னுடைய தொடர் நாடகத்தில் கொண்டு வந்தது போலவே இத்திரைப்படத்திலும் கொண்டு வந்திருக்கின்றார்.பெண்களை ஆண்கள் எவ்வாறான நிலையிலே வைத்திருக்கின்றார்கள் என்பதைக் கதாநாயகனின் நடைமுறை என்று பொய்யாகக் காட்டுகின்ற உத்தியைக் கையாண்டு வெளிக் கொண்டு வந்திருக்கின்றார். பெண்ணிய சிந்தனை வெளிக் கொண்டு வருவதாகக் காட்டி பெண்களின் தில்லுமுல்லையே இப்படத்தில் காட்டியுள்ளார் என்று அறியக்கூடியதாக இருக்கின்றது.
இலங்கையில் நடந்து முடிந்த இனப் படுகொலையைக் காட்டுவதற்காகவே கதையை வலிந்து புகுத்தியிருப்பது புரிந்தது. இது தற்போது இந்திய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் செய்கின்ற உத்தியே. திரைப்படங்களுடன் பயணம்செய்கின்ற எமக்கு இது தெரிந்ததே. யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் கதை நகர்வது பழக்கப்படாததாக இருந்தாலும், சிபோவின் முயற்சியை எப்போது உலகம் ஏற்றுக் கொள்ளும் என்பது கேள்வியே. சொல்ல வேண்டிய பல விடயங்கள் இத்திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. பணப்பசையுள்ள தயாரிப்பாளர் கிடைத்தால், தொடர்ந்தும் சிபோ இதுபோன்ற நல்ல படங்களை எமக்குத் தருவார் என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு இப்படத்தில் போலவே நடிகர்களின் ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும். தன்னுடைய வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் சிபோவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். சிபோவின் முயற்சி வீண்போகவில்லை
358 total views, 2 views today