உலகிலேயே முதன்முதலில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கிய தேசம் – நியூசிலாந்து சிற்சபேசன் –
New Zealand Parliament celebrates majority women MP சமத்துவமான சமதர்ம சிந்தனை என்பது நியூசிலாந்து சமூகப் பரப்பிலே இன்று நேற்று ஆரம்பமானதல்ல. அதுகூட, சிந்தனையாளர்களின் வட்டத்திற்கு வெளியே, சாதாரணமானவர்களிடையேயும் பரவலாகக் காணப்பட்டதாகும்.
நியூசிலாந்தின் பூர்வகுடி மவோரி மக்களாகும். ஐரோப்பியர் குடியேறிகளாகும். ஐரோப்பிய காலனித்துவத்தை பூர்வகுடிகள் எதிர்த்தனர். காலவோட்டத்தில் இரண்டு தரப்பினரிடையே இணக்கப்பாடு ஏற்பட்டது. அதன்பின்னரும்கூட, நில ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றன. அதனால் நேரடி மோதல்கள்கூட நடைபெற்றன. இவ்வாறானதொரு உக்கிரமான காலகட்டத்தை கடந்துவருவதற்கு, சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே காணப்பட்ட சமதர்ம சிந்தனையே அத்திவாரமாகும். தானும் வாழவேண்டும். அடுத்தவரையும் வாழவிடவேண்டும் என்னும் சிந்தாந்தமே நியூசிலாந்து சமூகத்தின் மையவிசை என்று சொல்லலாம். அதனாலேயே, இனம் – மதம் – மொழி – பாலினம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளிலேயும் சமத்துவத்தை வளர்க்கும் மனப்பாங்கு ஆல்போல் தழைத்து, அறுகுபோல் வேரூன்றியதாகக் கருதலாம்.
அதிலே, பெண்ணுரிமைக்குரல் நீண்டவரலாற்றைக் கொண்டதாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே பெண்ணியக் குரல்கள் நியூசிலாந்தில் உரத்து ஒலிக்க ஆரம்பித்தன. ஊதியத்தில் ஆண்-பெண் பாகுபாடு களையப்படவேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறை நிறுத்தப்படவேண்டும். திருமணச்சட்டம், விவாகரத்து, ஒய்வூதியம் போன்றவற்றில் பாகுபாடு நீக்கப்படவேண்டும் என்பதான கோஷங்கள் அதிகரித்தன.
அன்றைய காலகட்டத்திலேயே, நியூசிலாந்து தேசமாக எழுச்சிகொள்ள ஆரம்பித்திருந்தது. பூர்வகுடிகளான மவோரிகளும், கடல்கடந்து வந்திருந்த ஐரோப்பியர்களும் கனவுகளிலே பங்காளிகளானார்கள். கனவு மெய்ப்படுவதற்கு அவாவினார்கள். ஒன்றுபட்டாலே, உண்டுவாழ்வு என்பதை தெரிந்துகொண்டனர். சமூக வாழ்விலே சமத்துவமே ஆரம்பப் புள்ளி என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தனர். பழமைவாதிகளின் குரல் ஈனஸ்வரமாகியது.
அதனாலேயே, இற்றைக்கு 130 ஆண்டுகளுக்கு முன்னர், 1893ம் ஆண்டு செப்டெம்பர் 19நாள் பெண்ணுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டம் நியூசிலாந்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்மூலமாக, உலகிலேயே முதன்முதலில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கிய தேசம் என்னும் பெருமை நியூசிலாந்துக்கு கிடைத்தது. உலகத்திற்கோர் புதுமையாகியது.
அதுவே, சமத்துவத்தை அவாவுகின்ற நியூசிலாந்து சமூகத்தின் நாற்றுமேடையாகியது. பெண் உரிமை என்பது வெற்றுக் கோஷங்களுடன் முடிந்துவிடவில்லை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை வெறும் வார்த்தை ஜாலமாக நியூசிலாந்து கடந்துவிடவில்லை. அதனாலேயே, ஆண் – பெண் சமத்துவம் என்பதுடன் மட்டுமே தேடல் நின்றுவிடவில்லை. இனம் சார்ந்த சமத்துவம், மொழி சார்ந்த சமத்துவம், மதம் சார்ந்த சமத்துவம் என பல்வேறு நிலைகளிலும் சமத்துவம் குறித்த தேடல் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. இவற்றிலே நியூசிலாந்து கண்டடைந்துள்ள முன்னேற்றங்கள் எளிதாக அடையப்பட்டவை அல்ல.
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம். வைய வாழ்வு தன்னில் எந்த வகையினும் நமக்குள்ளே தாதர் என்ற நிலை நிலைமை மாறி, ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே” என்னும் எட்டயபுரத்துக் கவிஞனின் ஆத்மார்த்தமான கருத்தே நியூசிலாந்து சமூகச்சிந்தனையிலும் இழையோடியிருப்பதைக் கவனிக்கமுடிகின்றது.
ஆணும் பெண்ணும் நிகர் எனக் கொள்வதாலேயே அறிவில் ஓங்கி தேசம் தளைக்கமுடியும் என நியூசிலாந்து சமூகம் நம்புகின்றது. பாலினச் சமத்துவம், பெண் வலுவூட்டல், பெண் ஒரு மனுஷி என்னும் கோட்பாடுகளே, சமூகத்தின் வளர்ச்சிக்கான படிக்கட்டுக்கள் என்பதை நியூசிலாந்து அரிச்சுவடியாகக் கொண்டிருக்கின்றது.அதனையே தேசியத் திட்டமிடலிலும் வரித்துக்கொண்டிருக்கின்றது. பெண் உரிமை தொடர்பிலான,ஐநா தீர்மானங்களின் உள்ளார்ந்த கருத்துகளை,நியூசிலாந்து உள்வாங்கிக் கொண்டிருக்கின்றது.
திண்ணை வேதாந்தம் பேசுவது நியூசிலாந்தின் மரபல்ல. ஊதியத்தில் ஆண் – பெண் பாகுபாடின்மை தொடர்பான சட்ட மூலத்தை நியூசிலாந்து நாடாளுமன்றம் 2018ல் ஏகமனதாக நிறைவேற்றியது.
தாய்மையுற்ற பெண்ணுக்கு கருகலைப்பு ஏற்படுகின்றபட்சத்தில்,ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடைக்கக்கூடிய சட்ட ஏற்பாட்டை நியூசிலாந்து நாடாளுமன்றம் 2021ல் நிறைவேற்றியது. அரசியல் கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் ஆண் – பெண் சமத்துவம் பேணப்படுகின்றது. தலைமைப் பொறுப்பில் பெண் இருக்கும்போது, துணைத்தலைமை ஆணாக இருப்பதுவும், தலைமைப் பொறுப்பில் ஆண் இருக்கும்போது, துணைத்தலைமை பெண்ணாக இருப்பதுவுமான மரபு கொண்டாடப்படுகின்றது.
மேலும் ஒரு படிநிலைகூட எட்டப்படுள்ளது. ஆணும் பெண்ணும் இணைந்த இணைத்தலைமை முறையை சிலகட்சிகள் வகுத்திருக்கின்றன. நியூசிலாந்து நாடாளுமன்றத்திலே ஆண் – பெண் அங்கத்துவர்களின் எண்ணிக்கை அண்ணளவில் சமானமாக அமைந்துவிடுகின்றது. நியூசிலாந்தின் அரச துறைகளின் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்களின் எண்ணிக்கையில் ஆண் – பெண் பங்கு பெருவெட்டில் சமானமாக அமைந்துவிடுகின்றது.
மூன்று தடவை பெண் பிரதமர்கள் தெரிவு செய்யப்படுள்ளனர். சமத்துவத்தில் மற்றுமொரு பரிமாணமும் கிடைத்திருக்கின்றது. ஆண் பிரதமராகப் பதவிவகிக்கும்போது, பெண் துணைப்பிரதமராகின்றார். பெண் பிரதமராகப் பதவிவகிக்கும்போது, ஆண் துணைப்பிரதமராகின்றார். அதுவே மரபாகவும் பேணப்படுகின்றது. இவ்வாறான, ஆண் பெண் சமத்துவம் சட்ட ஏற்பாடு அல்லது இடஒதுக்கீட்டின் அடிப்படையிலே நடைபெறுவதல்ல. மாறாக, ஆண் பெண் என்னும் தனிநபர்களின் திறமையின் அடிப்படையிலே ஏற்படுகின்ற சமத்துவமாக அமைகின்றது.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதனை சமூகம் நம்புவதன் அடிப்படையிலேயே, நியூசிலாந்தில் சமத்துவம் கொண்டாடப்படுகின்றது.பெண்ணுரிமை என்னும் கோட்பாட்டுடன் மட்டுமே நியூசிலாந்து திருப்தி கொள்ள வில்லை.சமத்துவமான சமூகத்தைக் கட்டியெழுப்புகின்ற இலட்சியத்தைப் பற்றிக் கொண்டிருக்கின்றது. அதன்மூலமாக, மானிடர் யாபேருமே ச
69 total views, 6 views today