கவலைகளால் எவை மாறும்?
- பொலிகையூர் ரேகா (இங்கிலாந்து)
இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் இன்பமும் துன்பமும் பொதுவானதாகும். இன்பத்தைக் கொண்டாடக்கூடிய உயிர்களால் ஒரு போதும் துன்பத்தைச் சுலபமாக எடுத்துக்கொள்ள முடியாதென்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. வாழ்வின் பல்வேறு கட்டங்களிலும் கவலைமிக்க சூழ்நிலைகளை நாம் கடந்தாக வேண்டியுள்ளது.எதிர்பாரா ஏமாற்றங்கள்,சவால்கள், துரோகங்கள், இழப்புகள் என அனைத்தும் சேர்ந்து நம்மை விரக்திக்குள்ளாக்கி கவலைகளை அதிகரிக்க வைக்கின்றது.இத்தகைய சூழ்நிலைகளில் நாம் நினைவில் கொள்ளவேண்டியதெல்லாம் கவலைகளால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை என்பதுதான்.
கவலையானது நமது ஆற்றலைக் குறைக்கவல்லது.கற்பனைத் திறனைத் தவறாகப் பயன்படுத்துதலே கவலையின் உச்சகட்ட நிலையாகும். கவலைப்படுவதால் எமது உடலும் ஆரோக்கியமும் மாறுமே தவிர சிக்கல்கள் தீர்வதேயில்லை.தீரா சிக்கல்கள் நேரும்போதெல்லாம் உள்ளம் தானாகவே கவலைகொண்டு துன்பத்தைத் தேடும். சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிகள் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும் ஆனால் கவலைகளில் காலம் கழிவதால் நம்மால் சரியான தீர்வைச் சிந்திக்க முடியாமல் போய்விடும்.
வாழ்க்கை குறித்த நம் எதிர்பார்ப்புகள் நிறைவேறாது போகும்போது கவலைகளும் சூழ்ந்துகொள்கின்றன.நம்முடைய ஆசைகளை ஆராய்ந்து அவற்றைச் சரியாக மாற்றி உன்னதமான இலக்குகளை வைத்துக்கொள்வதால் கவலைப்படு வற்கான சில காரணங்களை நாம் குறைத்துக்கொள்ளலாம். கவலையானது நம் ஆற்றலை விழுங்கிக்கொண்டு நம்மைச் செயல்திறனற்றவர்களாக மாற்றிவிடும் சக்தி கொண்டது. தீர்வுகாணத் தெரியாமல் வருந்திக்கொண்டு நாளை தொடரவிருக்கும் துன்பத்தை மாற்ற விடாமல் இன்றிருக்கும் நிம்மதியைக் கெடுப்பதே கவலையெனும் உயிர்கொல்லியின் செயலாகும். அந்த உயிர்கொல்லியைச் சாகவிடாமல் இயக்கிக்கொண்டிருப்பது மனமெனும் குரங்காகும்.அந்த மனதை நாம் கட்டுப்படுத்தும் வல்லமை மிக்கவர்களாக இருந்தால் கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை என்னும் பேருண்மையை உணர்ந்து கவலைக்குக் காரணமானவற்றிற்குத் தீர்வு காண முடியும்.
நம்மால் மாற்ற முடியாத பற்றியங்களுக்காய் கவலைப்படுவதை விட அதை பக்குவத்தோடு ஏற்றுக்கொண்டு சாமர்த்தியமாகச் செயல்படுவதாலேயே அதற்கான தீர்வுகளை நாம் கண்டறிய முடியும்.
உங்கள் மனதைக் கட்டுப்படுத்தக்கூடிய சக்தி உங்களிடமே உள்ளது. வெளிக் காரணங்கள் உங்களைப் பாதிக்க அனுமதிக்காத வரையில் அதன் கட்டுப்பாடு உங்களிடமே உள்ளது.எவையெல்லாம் உங்களைப் பாதிக்க அனுமதிக்கிறீர்களோ அவையே உங்களைக் கட்டுப்படுத்தும். உங்கள் சிந்தனைகளில் நிறைந்து நிற்கும். உங்களை எது சேர வேண்டுமென்பதை நீங்களே தேர்ந்தெடுக்கும்போது தேவையற்ற அனைத்துக்கும் கவலைப்பட வேண்டியதில்லை. கவலைகளிருந்து மனிதர்கள் வரை நீங்கள் அனுமதித்தால் மட்டுமே உங்களை ஆட்கொள்ளும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
ஒரு கப்பலின் வெளியே உள்ள நீரால் அதை ஒருபோதும் மூழ்கடித்துவிட முடியாது. அதே நீர் கப்பலின் உள்ளே சென்றால் அதன் அளவைப் பொறுத்து அந்தக் கப்பலின் செயல்திறனைப் பாதித்து அதனை மூழ்கடித்துவிடும். அதே போன்றுதான் மனிதர்களுக்கும் தம்மைச் சூழ இருக்கும் சிக்கல்களை வெளியே வைத்திருக்கும் வரையில் பெரிதாகப் பாதிப்பு இருக்காது. எப்போது உங்களை வருத்தும் எண்ணங்களைச் சிந்தனையில் அனுமதிக்கிறீர்களோ அப்போது உங்கள் செயல்திறனைப் பாதித்து உங்களைக் கவலைகளால் மூழ்கடித்துவிடும்.
வாழ்வில் நடைபெறும் அனைத்தையும் மாற்றும் வலிமை நமக்கில்லை. இயற்கையின் காரணமாக நடக்கும் சிலவற்றை நாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.கவலைப்படுவதற்குப் பதிலாக அவற்றை எவ்வாறு எதிர்கொள்வதெனச் சிந்தித்தால் நம் உள்ளத்தின் அமைதியைக் காத்துக்கொண்டு நிம்மதியாக வாழ முடியும். கவலைகளால் எவையுமே மாறப்போவதில்லை.
248 total views, 2 views today