ஏழு தேசிய விருதுகள் கண்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்
– கானா பிரபா (அவுஸ்திரேலியா.)
ஆகஸ்ட் 15, 1992 ஆம் ஆண்டு ரோஜா திரைப்படம் வெளியாகிறது.தமிழ்த்திரையிசையின் புதிய போக்கை நிறுவிய ஏ.ஆர்.ரஹ்மான் என்ற அடுத்த யுக இசை நாயகனின் தோற்றம் அங்கே எழுகிறது. 32 ஆண்டுகள் கோலோச்சும் அவரது இசைப்பயணத்தில், ஆகஸ்ட் 16 ஆம் திகதி அவருக்கு இன்னொரு அங்கீகாரமாக சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைக்கிறது.
வெகுஜன ரீதியான வெற்றி பெற்ற கலைஞனுக்கு,அரச மட்டத்தில் வழங்கப்படும் விருதுகளில் ஓரவஞ்சனை காட்டப்படுவதுண்டு.ஆனால் ரோஜா படப் பாடல்கள் ஒட்டுமொத்த இந்தியா தாண்டி உலகம் முழுதும் வெவ்வேறு மொழிக்காரர்களாலும் கொண்டாடப்பட்டது. அதே சமயத்தில் தன்னுடைய முதல் படத்திலேயே இந்தியத் தேசிய விருதையும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அளித்து மகிழ்ந்தது.
மூத்த சகாப்தமான இளையராஜாவின் இசையில் “தேவர் மகன்” திரைப்படமும், இளவல் ஏ.ஆர்.ரஹ்மானின் “ரோஜா” வும் விருதித் தேர்வின் இறுதிச் சுற்றில் அமைய,“ரோஜா” வைத் தேர்ந்தெடுத்து, இளையவரைத் தட்டிக் கொடுக்க வேண்டும் என்று அங்கீகரித்தவர் நம்மவர் பாலு மகேந்திரா என்பதில் நாம் பெருமைப்பட்டும் கொள்ளலாம்.
இந்தியத் தேசிய விருதுகளில் சிறந்த பாடகிக்கான விருது அறிவிக்கப்பட்ட ஆண்டு 1968.அந்த ஆண்டில் ஏவிஎம் நிறுவனத்தின் “உயர்ந்த மனிதன்” திரைப்படத்துக்காக, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் “பால் போலவே” பாடலுக்காக இசையரசி பி.சுசீலா அந்த வரலாற்றைத் தொடக்கி வைக்கிறார்.
1997 ஆம் ஆண்டில் ஏவிஎம் நிறுவனத்தின் பொன் விழா ஆண்டில் ஒளிர் விடுகிறது “மின்சாரக் கனவு”. இதோ அடுத்த தலைமுறைப் பாடகி சித்ராவுக்கு “மானாமதுரை” பாடல் தேசிய விருதைக் கொடுத்ததோடு, பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கும் “தங்கத் தாமரை மகளே” பாடலுக்காகவும் இன்னொன்றைக் கணக்கில் வைக்கிறது. பாடலுக்கான நடன அமைப்புக்காக பிரபுதேவாவும் கூடவே இன்னொன்றை அள்ளுகிறார். இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானைப் பொறுத்தவரை அவருக்குக் கிடைக்கும் இரண்டாவது தேசிய விருது. ரோஜா படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு இளமைக் கொண்டாட்ட விருந்துக்கு ஓர் விருது.
இந்தியாவின் தென்னகத்துப் படைப்பாளிகள் வடநாட்டில் கோலோச்சுவது என்பது மிக அரிது, அப்படியே அற்புதங்கள் நிகழ்ந்தாலும் அவர்கள் நின்று நிலைப்பது என்பது மின்னி மறையும் நட்சத்திரங்கள் போல. ஆனால் ரோஜாவில் தொடங்கிய ஓட்டத்தில், நேரடி ஹிந்தித் திரைப்படங்களிலும் ரஹ்மானின் தேவை உணரப்படுகிறது. அவை வெறுமனே புத்திசை தரும் சப்தங்களின் நாயகனாக மட்டுமன்றி, வரலாற்றுப் பின்புலம் தரும் படைப்புகளிலும் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆளுமைத்திறனை உள்வாங்குகிறார்கள். அப்படியாக அமைந்த ஒரு படைப்பு, ஆஸ்காரின் கதவுகளைத் தட்டிச் செல்லும் அங்கீகாரம் கொண்டதாகவும் விளங்குகிறது. அதுதான் “லகான்” (Lagaan: Once Upon a Time in India) என்ற பெருமை மிகு படைப்பு. இந்தியத் திரைச் சரிதத்தில் இந்தப் படத்தை விலக்கி ஒரு வரலாறு எழுத முடியாது. ஏ.ஆர்.ரஹ்மானை உலக அரங்கிலும் உள் வாங்க இது போன்ற படைப்புகளே அடையாளமாக விளங்கின. இதோ இன்னொரு தேசிய விருதும் அவரின் கிரீடத்தில் கோஹினூர் வைரக்கலாக.
ஏ.ஆர்.ரஹ்மானுக்குக் கிடைத்த ஒவ்வொரு விருதும் ஒவ்வொரு விதமான படைப்புலகக் களன்களாகவே அமைந்தது அவருக்குத் தீனி கொடுத்தது.“வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலரவே”கேட்டாலே உணர்வுப் பெருக்கெழும். அப்பேர்ப்பட்ட பாடல்கள் பொதிந்த “கன்னத்தில் முத்தமிட்டால்”, மனித உறவுகளின் சிக்கல்களைக் கொண்டு புனையப்பட்டது.இப்படியானதொரு கதைக்களனிலும் தனக்கான அங்கீகாரத்தைப் பதிப்பிக்க முடியும் என்று, ஜனரஞ்சக அபிமானத்தோடு அடுத்த தேசிய விருதை வாங்கிக் கொண்டார்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்குக் கிடைத்த ஏழு தேசிய விருதுகளில், நான்கு அவரை அறிமுகப்படுத்திய மணிரத்னம் படைப்புகளாகவே அமைந்தது இன்னொரு சிறப்பு. அப்படியாக அவருக்குக் கிடைத்த ஐந்தாவது தேசிய விருது “காற்று வெளியிடை” கொடுத்தது. இந்தியத் தேசிய விருதுகளில் பின்னணி இசைக்கெனத் தனியானதொரு அங்கீகாரத்தை 1994 ஆம் ஆண்டில் நிறுவியவர்கள் மீண்டும் அதைத் தொடர வைத்தது 2009 ஆம் ஆண்டில் மலையாளத் திரைப்படமான “பழசி ராஜா” வழியாக.அந்தப் படத்துக்கான இசை விருது இசைஞானி இளை யராஜாவுக்கு வழங்கப்பட்டது.
இங்கே பின்னணி இசை உலகிலும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கான இரு வேறு களங்கள் வாய்க்கின்றன. நடிகை ஸ்ரீதேவியின் 300 வது படமாகவும், அவர் முழு நீளக் கதாபாத்திரத்திலும் நடித்து வழங்கிய ஆழஅ திரைப்படமே இந்த நாயகியின் இறுதிப் படமாக அமைகின்றது. ஸ்ரீPதேவி அளவுக்கு தென்னகத்தில் இருந்து வட நாட்டுக்குச் சென்று கோலோச்சியவர் யாருமிலர். அந்த வரலாற்றின் நீட்சி தான் ஏ.ஆர்.ரஹ்மான். ஸ்ரீதேவியின் இறுதிப் படமே அவருக்கான தேசிய விருதைக் கொடுத்ததோடு, ஒரு திகில் படம் என்ற ரீதியில் ரஹ்மானுக்கு இன்னொரு புதுப் பரிமாணத்தில் இசை அனுபவமும், பின்னணி இசையில் தேசிய விருதும் கிடைக்கிறது. தமிழ் இலக்கிய உலகின் மகோன்னதமான படைப்பாளி கல்கி அவர்களின் “பொன்னியின் செல்வன்” தமிழர் கருவறைகளில் தங்கிய காவியம்.ஆனானப்பட்ட எம்.ஜி.ஆர் கூட இந்தப் படைப்பைத் திரைப்படமாக எடுக்க முனைந்து முடங்கிப் போனது. ஆனால் காலத்தின் கட்டாயத்தில் அது மணிரத்னம் வழியாகத் தான் கனிய வேண்டும் என்ற இலக்கு வைத்திருந்திருக்க வேண்டும் போல.
இந்திய சினிமாச் சரித்திரத்தில் வசூல் சாதனையில் புதிய அத்தியாயத்தைப் படைத்தது “பொன்னியின் செல்வன் பாகம் 1”.
இந்திய அளவில் கல்கியின் இலக்கியப் படைப்பை ஒரு திரைமொழியில் அழகியலாகக் காட்டும் வல்லமையின் வெற்றி தான் அந்த வசூலின் பிரதிபலிப்பு. இன்று தனது ஏழாவது தேசிய விருதாக, சிறந்த பின்னணி இசைக்கான விருதை “பொன்னியின் செல்வன் பாகம் 1” இற்காகப் பெற்றிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் படைப்புக்காக அவர் உள்வாங்கிக் கொண்ட பாரம்பரிய இசைக் கருவிகள், புதிய பாடலாசிரியர்கள் என்று தன் தனித்தன்மையைப் பறைசாற்றியதை பொன்னியின் செல்வன் இசைத்தொகுப்பு வழியாகக் கேட்டு இன்புறும் போது அனுபவ ரீதியாக உணரலாம். “பொன்னியின் செல்வன்” அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டிருக்க ஏ.ஆர்.ரஹ்மானும் ஒரு முக்கிய காரணியாக இயங்கியிருக்கிறார். அவருக்கான விருதுக் கௌரவம் என்பது ஏ.ஆர்.ரஹ்மான் என்ற புத்திசை வீரனின் அடுத்த பாய்ச்சலுக்கான இன்னொரு உத்வேகம்.
326 total views, 4 views today