இராஜபக்சக்களின் பின்வாங்கலும்: ரில்வின் சில்வாவின் நேர்காணலும்
ஐ.நாவின் அபிவிருத்திக்குழுவின் வருகையோடு தேர்தல் திருவிழா சூடு பிடித்துள்ளது.
இந்த ஜனநாயகச் சடங்கில் வசைபாடலும், குழிபறித்தலும், அணி சேர்தலும், கோட்பாட்டு மோதலும் முதன்மை பெறுவதைக் காண்கிறோம்.
தமிழ்த் தேசியத்தை காப்பாற்ற வேண்டுமென்கிற முழக்கம் சகல மேடைகளிலும் எதிரொலிக்கிறது. ஒட்டாத குழுக்கள் அனைத்தும் தேச விடுதலை பற்றி பேசாமல். தேர்தலில் எத்தனை ஆசனங்களை கைப்பற்றுவது என்கின்ற இலட்சியத்தோடு இயங்குகின்றன.
தற்போதைய சூழலில் தேர்தல் வெற்றிக் கணக்குகள், விருப்புவாக்கு தெரிவுகள் குறித்தே பரவலாக ஆராயப்படுகிறது.
தமிழர் தாயக கணிப்புகள் பல, வன்னி மாவட்டத்தில் செல்வமும் ,காதர் மஸ்தானும் வெற்றி பெறுவார்கள் என கட்டியம் கூறுகின்றன. ஏனைய மாவட்டங்களில் எவரையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாதென்கிறார்கள்.
மலையகத்தில் அனுஷா சந்திரசேகரன் , வடிவேல் சுரேஷ் , ஜீவன் தொண்டைமான் மற்றும் திகாம்பரம் ஆகியோர் முன்னிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது.
வடக்கு -கிழக்கு தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரை திருக்கோணமலையிலும் அம்பாறையிலும் ‘மோதல் தவிர்ப்பு’ உடன்பாடு காணப்பட்டு தமிழரசுக் கட்சி போட்டியிடுகிறது.
சங்கின் உறுப்பினர்களும் திருக்கோணமலை வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திராவும் திசைகாட்டிச் சின்னத்தில் இறங்குவதால் போட்டி பலமான இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரண்டு உணர்திறன் மிக்க இடங்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற முன்னிற்கும் தமிழ்த் தேசியவாதிகள், ஏனைய மாவட்டங்களில் ஏன் ஒன்றிணையவில்லை என்கிற ஆதங்கம் மக்களிடம் உண்டு.
இனி தமிழர் தாயக அரசியலுக்கும் தென்னிலங்கை அரசியலுக்குமான மோதல்கள் ,முரண்பாடுகள் குறித்து பார்ப்போம்.
இளையோர் பார்வையானது அநுராவின் ‘ தேசிய மக்கள் சக்தியின் மீது குவிவதை தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் எச்சரிக்கை உணர்வோடு அவதானிக்கின்றன.
இதன் எதிர்வினை அரசியலாக, ‘வடக்கு கிழக்கு ஊழல் அரசியல்வாதிகளை அநுராவால் அம்பலப்படுத்த முடியுமா?’ என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ‘ ‘மதுபானசாலை அனுமதிப்பத்திர பட்டியலை (பார் லைஸென்ஸ்) அநுர வெளியிடுவாரா ? ‘ என்று சுமந்திரனும் கூறத் தொடங்கியுள்ளனர்.
உண்மையிலேயே சகல மட்ட ஊழல்களையும் அநுர அரசு அம்பலப்படுத்த வேண்டுமென்பதே மக்களின் பெருவிருப்பாகும்.
2015 இல் உருவாக்கப்பட்ட ‘நல்லாட்சி’ அரசின் மத்திய வங்கி கடன் முறி ஊழல் பற்றிய விசாரணைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெறுமதி சேர் வரி (வாட் வரி)3.5 பில்லியன் ரூபாவை செலுத்தாத மூவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதைப் போல, அநுர அரசிற்கு சவால் விடுத்த உதய கம்மன்பிலவிடமே , அதற்கான ஆதாரங்களை வெளியிடச் சொல்லி விஜித ஹெரத் எச்சரித்துள்ளார். திங்களன்று வருமென்கிறார் கம்மன்பில. பார்ப்போம் .
இராஜபக்சக்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்தாலும், அக்குழுவின் இணை அனுசரணையாளர்களான கம்மன்பிலவும், விமல் வீரவன்சவும் தமது அரசியல் கருத்துக்களை உதிர்த்தவண்ணமுள்ளனர்.
இருப்பினும் இராஜபக்சக்களின் ‘ஈரடி பின்னால்’ நகர்வில் ஒரு அரசியல் தந்திரம் மறைந்திருப்பதாக ஊடக நண்பர் ஒருவர் தனது ஆய்வு நிகழ்வொன்றில் குறிப்பிட்டிருந்தார் .
சனாதிபதி தேர்தலில் அநுர தரப்பினரால் கட்டமைக்கப்பட்ட ‘ இராஜபக்ச எதிர்ப்பு’ பிம்பத்தை நாடாளுமன்றத் தேர்தலில் வலுவிழக்கச் செய்ய, இராஜபக்சக்கள் போட்டியிடவில்லை என்பதே நண்பரின் வாதம்.
குறைக்கப்படும் வாக்குகள் சஜித் பக்கம் கணிசமான அளவில் திரும்பும் என நண்பர் எதிர்பார்க்கின்றார். இது அநுராவின் வாக்குகளை உடைக்கும் மஹிந்தரின் தந்திரமாக இருக்கலாம்.
ஆனாலும் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வருவதன் ஊடாக, கடந்த ஆட்சியாளர்களை அரசியல் ஊடக வெளியில் முக்கிய பேசுபொருளாக வைத்திருக்கிறது தேசிய மக்கள் சக்தி.
ஆகவே இராஜபக்சக்கள் தற்காலிகமாக ஒதுங்கினாலும் அநுராவின் கிடுக்கிப்பிடி, தேர்தலின் பின்னரும் தொடரும் வாய்ப்புகள் அதிகம் போல் தெரிகிறது .
அடுத்ததாக ஜே. வி .பி இன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்கள் வழங்கிய நேர்காணலொன்று, தமிழ் ஊடகப் பரப்பில் பலத்த விவாதமொன்றினை ஏற்படுத்தியுள்ளது .
அதுபற்றி பேசாமல் கடந்து செல்ல முடியாது.
‘ அடித்தட்டு தமிழ் மக்களின் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினையே’ என்று கூறும் சில்வா , ‘ அம்மக்களுக்கு 13 அல்லது அதிகார பகிர்வு என்ற பிரச்சினை இல்லை ‘ என்கிறார்.
ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சி வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களையும் பாதிக்குமென்பது உண்மை.
தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினையை அவர் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார் என்பதை அந் நேர்காணலே எடுத்தியம்புகிறது.
ஆனாலும் இடதுசாரி கருத்தியலை வரித்துக்கொண்ட தோழர் டில்வின் சில்வா அவர்கள், ஒரு தேசிய இனத்தின் அரசியல் உரிமையினை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார் ?.
அரசியல் உரிமை மட்டுமல்ல…. பொருளாதாரத்தை பங்கிடும் இறைமையுடன் கூடிய உரிமையும் மக்களின் பிரச்சினைதான்.
இவர்களுக்கும் நம்மவர்களுக்கும், இந்த இரண்டையும் இணைத்து முன்னெடுக்கும் அரசியல் புரிய வேண்டும்.
இனப்படுகொலையை எதிர்கொண்ட தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமையைப் புறந்தள்ளி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
வல்லரசுக் கழுகுகள் வட்டமிடுகின்றன.
அவதானம் தேவை.
மக்களோடு பேசுங்கள். அவர்களே தமக்கான அரசியல் தீர்வு எதுவென்று சொல்வார்கள்.
142 total views, 6 views today