முற்றத்தில் முதல் சுவடு ! நாமே மாற்றத்தின் துவக்கப் புள்ளியாகவேண்டும்.
- சேவியர் (தமிழ்நாடு.)
ரோசா பெர்க் எனும் பெயரை வரலாறு மறக்காது. அவள் ஒரு கருப்பினப் பெண். அமெரிக்காவின் அலபாமாபிலுள்ள மாண்ட்காமெரி நகரில் 1955ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தியதி பேருந்தில் ஏறுகிறார். அப்போது கருப்பர்கள் ஒதுக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் கிடந்த காலம். பேருந்துகளில் முன் வரிசைகள் எல்லாம் வெள்ளையின மக்களுக்கானது. பின்னால் கொஞ்சம் இருக்கைகள் கருப்பின மக்களுக்கானது.
வெள்ளை இன மக்களின் இருக்கைகள் காலியாய் இருந்தால் கூட கருப்பின மக்கள் அமரக் கூடாது. ஒருவேளை வெள்ளை இன மக்களின் இருக்கைகள் நிரம்பி விட்டால், கருப்பின மக்கள் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். ரோசா பெர்க் சென்ற பேருந்தில் கூட்டம் சேர்ந்தது. வெள்ளையர்களின் இருக்கைகள் நிரம்பின. இப்போது கருப்பர்கள் எழுந்து வழி விட வேண்டும். ஓட்டுநர் கருப்பர்கள் எழுந்து வெள்ளையர்களுக்கு இருக்கை கொடுக்கச் சொல்கிறார். எல்லோரும் எழுந்து இடம் கொடுக்கிறார்கள்.
பலருக்கும் எழும்ப விருப்பமில்லை, ஆனாலும் வேறு வழியில்லை எழும்புகிறார்கள். ஆனால் ரோசா பெர்க் மட்டும் எழும்பவே இல்லை. ஓட்டுநர் எவ்வளவோ சொல்லியும் அவள் எழும்பவில்லை. நாள் முழுவதும் கடின வேலை பார்த்து வந்த அவள் சோர்வில் இருந்தாள். கருப்பு வெள்ளை ஆதிக்க மனநிலைக்கு எதிராய் இருந்தாள். தங்களை யாராவது விடுவிப்பார்களா? தங்களுக்காக யாராவது குரல் கொடுப்பார்களா? என நினைத்தபடி எழுந்து நின்ற மக்களுக்கு மத்தியில் உறுதியுடன் அமர்ந்திருந்தாள் அவள்.
எதுவும் நடக்கலாம். அவள் இழுத்து வெளியே எறியப்படலாம். அல்லது வெள்ளையர்களின் முஷ்டிகளின் மூர்க்கத்தனமான மோதலை நிகழ்த்தலாம். ஏன், கொலை கூட செய்யப்படலாம். ஆனால்; அவள் அசரவில்லை. அடிமைத்தனத்தின் ஆணிவேரின் அருகே சிறு பாதரசத் துளியாய் அவள் அமர்ந்திருந்தாள். வரலாறு அவளை அந்த இருக்கையில் பசை போட்டு ஒட்டி வைத்திருந்தது.
‘போலீசை கூப்பிடுவேன்’ என மிரட்டினார் ஓட்டுநர். ‘கூப்பிடுங்கள் என்றாள் அவள்’. காவலர்கள் வந்தார்கள், சட்டத்தை மீறியதாய் அவள் கைது செய்யப்பட்டாள். ஜெயிலில் எறியப்பட்டாள். நீதிமன்றம் அவளுக்குக் கடுமையான அபராதம் விதித்தது. அவள் அதை எதிர்த்து வாதிட்டாள். கருப்பினம் ஏன் அடிமையாய் இருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினாள். அவளது செய்கை அமெரிக்கா முழுவதும் ஒரு மாபெரும் போர் பற்றி எரிய உரசி எறியப்பட்ட தீக்குச்சியாய் மாறியது.
கருப்பின மக்கள் ஒட்டு மொத்தமாக பேருந்துகளை நிராகரித்தார்கள். ஓராண்டுக்கும் மேலாய் அந்த போராட்டம் நீடித்தது. சுமார் 75வீதம் பேருந்து வருமானம் கருப்பர்களிடமிருந்தே வந்து கொண்டிருந்தது. இப்போது அது போய்விட்டது. அரசு கடைசியில் அசைந்து கொடுத்தது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட் பேருந்துகளில் பாகுபாடு காட்டுவது அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளித்தது. கருப்பின மக்களின் மாபெரும் வெற்றியாய் வரலாறு அதைப் பதிவு செய்தது.
மாற்றம் என்பது என்னிலிருந்தும் தொடங்கலாம் எனும் ரோசா பெர்க்கின் நம்பிக்கை ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை அமெரிக்காவில் நிகழ்த்தியது. மாற்றத்தை யாராவது நிகழ்த்தட்டும், அந்த வெற்றியில் நான் குளிர் காய்வேன் என்று தான் எல்லோரும் காத்திருந்தார்கள். என்னிலிருந்து தொடங்கட்டும் மாற்றம் என யாரும் நினைக்கவில்லை. அதை ஒரு பெண் நினைத்தபோது சமூகம் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்தது.
எல்லா பயணங்களுக்குமான முதல் சுவடு முற்றத்தில் தான் வைக்கப்படுகிறது. நமது முதல் முயற்சியே பயணங்களின் வெற்றியை நிர்ணயிக்கிறது.
நமது சமூகமும், திரைப்படங்களும் எல்லாமே ஒருவருடைய பிரச்சினையை இன்னொருவர் வந்து தீர்ப்பதையே கற்பிக்கிறது. நமது புராணங்களும், இதிகாசங்களும், புனித நூல்களும் எல்லாமே யாரோ வந்து பிரச்சினையைத் தீர்ப்பதைத் தான் முன்னிறுத்துகின்றன. நாமே பிரச்சினையைத் தீர்ப்பதைப் பெரும்பாலும் ஊக்குவிப்பதில்லை.
சமூகத்தில் என்ன பிரச்சினை வந்தாலும் அதற்குக் காரணம் பிறர் தான் என்றும், அவர்கள் தான் அதைத் தீர்க்க வேண்டும் என்றும் வாதிடுவதே மக்களின் வாடிக்கையாகி விட்டது. எங்கள் வீட்டுக்கு எதிர்புறம் ஒரு குப்பைத் தொட்டி உண்டு. அதில் குப்பையைப் போட வரும் மக்கள் பாதி பேர் சாலையிலிருந்தே “பாஸ்கெட் பால் “ விளையாடுவதைப் போல குப்பைக் கவரை எறிவார்கள். அது குப்பைத் தொட்டியைச் சுற்றி விழுந்து பல்லிளிக்கும். இன்னும் சிலர் பைக்கில் போய்க்கொண்டிருக்கும் போதே கவரை எறிவார்கள். அது பக்கத்து வீட்டில் விழுகிறதா என்பதைக் கூட பார்ப்பதில்லை.
ஒரு குப்பையைப் போடுவதில் கூட நமது கடமையை உணராத நாம் தான், ஊரெல்லாம் சாக்கடையா இருக்கு, மழை பெஞ்சா தண்ணி வருது, சாக்கடை எல்லாம் அடைச்சு கிடக்கு, எல்லா இடத்துலயும் குப்பை, கொசு நிறைஞ்சிடுச்சு என்றெல்லாம் பேசி அரசையும், அதிகாரிகளையும் குறை சொல்கிறோம். மாற்றம் நம்மிடமிருந்து தொடங்க வேண்டும் என்பதை நாம் உணர்வதே இல்லை.
கண்ணாடி நமது முகத்திலிருக்கின்ற குறைகளைக் காட்டும், கழுவாது. நம்மிடமிருக்கின்ற குறைகளை நாம் உணராதவரை அதை சரி செய்யவும் முடியாது. டீம் ஒழுங்கா வேலை செய்யவில்லை என ஒரு மேலதிகாரி கருதினால், அதற்கு முன் ‘தான் அதற்கு எந்தெந்த விதங்களில் காரணியாய் இருந்தேன்’ என சிந்திக்க வேண்டும். தேவையான நேரம், பொருட்கள், கருவிகள், வாய்ப்புகள், சூழல்கள் எல்லாவற்றையும் உருவாக்கிக் கொடுத்தேனா என யோசிக்க வேண்டும்.
நாம் சரியாக அனைத்தையும் கொடுக்காவிடில், கண்டிப்பாக ரிசல்ட் வேறு மாதிரி தான் வரும். நான் பனங்காயை நடுவேன், ஆனால் அது தென்னை மரமாக வளரவேண்டும் என நினைப்பது முட்டாள் தனம்.
பிறரைக் குறை சொல்வதை விட்டுவிட்டு, பிறருக்கு வழிகாட்டிகளாய் நாம் இருக்க வேண்டும். கடலில் போகும் கப்பலைப் பார்த்து கலங்கரை விளக்கம் கத்திக் கூப்பிடுவதில்லை, வழிகாட்டும் ஒளியை மட்டும் அனுப்பும். ஒளி நம்மிடமிருந்து வெளிப்படும்போது கப்பல் அதன் இலக்கை அடைந்து விடுகிறது ! ஒளியை நாம் அணைத்து விட்டால் கப்பல் ஆபத்தில் சிக்கி விடும்.
பூமராங் கேள்விப்பட்டிருப்போம். வீசி எறிந்தால் சுற்றிவிட்டு நம்மிடமே திரும்பும் அது. குறை சொல்லும் பழக்கமும் அப்படித் தான். நாம் பிறரைக் குறை சொன்னால், மாறி மாறி கடைசியில் யாரோ ஒருவர் நம்மைக் குறை சொல்வதுடன் தான் அது முடியும்.
எல்லா இடங்களிலும் இருட்டு இருக்கிறது என சலித்துக் கொள்வதை விட ஒரு சின்ன துளி வெளிச்சத்தையேனும் நாம் ஏற்றி வைப்பதே சிறந்தது. ஒற்றைத் துளியினால் என்ன நேர்ந்து விடப் போகிறது என நாம் நினைக்கலாம். ஓராயிரம் ஒற்றைத் துளிகளே பேரொளி ! இருட்டு எப்போதுமே இருட்டை விரட்டாது, ஆனால் வெளிச்சம் அதை கன கட்சிதமாய்ச் செய்யும். இருட்டை விரட்ட நாம் செய்ய வேண்டியது இருட்டோடு மல்யுத்தமல்ல, வெளிச்சத்தோடான வரவேற்பு !
இதெல்லாம் நடக்கிற காரியமா ? எப்போ இதெல்லாம் மாறும் ? நான் ஒருத்தன் மட்டும் நினைச்சா என்ன ஆயிட போவுது எனும் மனநிலையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும். இதெல்லாம் ஃபாஸ்ட் புட் போல சட்டென நடக்கும் விஷயங்கள் அல்ல. ஒரு விதை விதைக்கப்பட்டால், அது அதற்குரிய காலத்தை எடுத்தபின்பே முளை விடும், வேர் விடும். அது கனி கொடுக்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். எனவே விதைப்பது மட்டுமே முக்கியமானது. நமது பணி அது, அதைச் செய்கிறோமா ?
ஒவ்வொரு செயலையும் நாம் பொறுப்பெடுத்துச் செய்யும் போது தான் சமூகம் வளம் பெறும். ‘இது என்னோட வேலை’ என ஒவ்வொருவரும் ஒவ்வொரு சின்னச் சின்ன செயலையும் செய்ய வேண்டும். நான் இதைச் செய்வதால் அடுத்தவனுக்கு ஏதாவது அசௌகரியம் வருமா என்பதை சிந்திக்க வேண்டும். ஏன் இதைச் செய்யல எனும் கேள்வியை விட ? இதுக்கு நான் என்ன செய்யலாம் எனும் சிந்தனையே தேவையானது.
போரில் வெற்றி பெற வேண்டுமெனில் வலிமையாய் இருக்க வேண்டும், ஆயுதம் ஏந்த வேண்டும், வன்முறையில் இறங்க வேண்டும் என்றெல்லாம் சிந்தித்துக் கிடந்த சமூகத்தை ‘அஹிம்சை’ எனும் ஆயுதத்தால் வீழ்த்தினார் மஹாத்மா. அத்தனை எதிர்ப்புகளையும், பழிச் சொற்களையும் தாண்டி அஹிம்சையை தனது செயலாய் மாற்றினார். அதன்பின் தான் அஹிம்சைப் போர் உலகெங்கும் பரவியது.
தனது பதின் வயதுகளிலேயே ஒரு மாபெரும் மாற்றத்துக்கான ஒளியாய் எழுந்தவர் தானே பாகிஸ்தானின் மலாலா. அவரது துணிச்சல் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இப்படி உலகம் முழுவதும் உதாரணங்கள் நிரம்பி வழிகின்றன.
மாற்றத்துக்கான முதல் சுவடை நாமே எடுத்து வைக்கும்போது தான் வெற்றிகள் வசமாகும். பிறரைக் குறை சொல்வது தீர்வை நோக்கி நம்மை நகர்த்தாது. மனிதர்களை நோக்கியே நமது பார்வையைச் செலுத்தும். நமது நோக்கம் தீர்வுகளே, திட்டுகளல்ல.
நாமே மாற்றத்தின் துவக்கப் புள்ளியாகும் போது நம்முடைய தன்னம்பிக்கை வலுப்பெறும். நமது திறமைகள் கூர்மையாகும். நமது வெற்றிகள் எளிதாகும். ஆசிரியர் விடை சொல்லட்டும் என முயற்சி செய்யாமல் இருக்கும் மாணவர்கள் பெரிய வெற்றிகளை அடைவதில்லை.
நாம் மாற்றத்துக்கான முதல் சுவடை எடுத்து வைக்கும் போது, நம்மைச் சுற்றியிருக்கும் மக்களும் அதனால் உந்தப்பட்டு செயல்பட முன்வருவார்கள்.
மாற்றத்தை விரும்புவோம் நம்மிடமே திரும்புவோம்
173 total views, 3 views today