அபிராமி நாட்டியாஞ்லி – ரேனுகா சுரேஸ் அவர்களின் மாணவி, சுருதிகாவின் அரங்கேற்றம் (France)
நான்மறை போற்றும் பரதநாட்டிய மரபுக்கு மத்தியில் ‘நூலைப்படி’ என்ற அற்புதமான பாரதிதாசன் பாடலை நாட்டியம் செய்த சுருதிகாவின் அரங்கேற்ற நிகழ்வில் கலந்து கொண்டமை மகிழ்வளிக்கிறது.
-கவிதா லட்சுமி (நோர்வே)
ஆசிரியர் ரேனுகா சுரேஸ் அவர்களின் நெறியாள்கையில் நடந்தேறிய அரங்கேற்றத்தில் மெய்ப்பாடுகளையும் அடவுகளையும் மிக லாவகமாகக் கையாண்டிருந்தார் சுருதிகா. பல சமயங்களில் தேர்ந்த, திடமான மெய்ப்பாடுகளை வெளிப்படுத்திய அரங்கநாயகி சுருதிகாவிற்கு எனது வாழ்த்துகள்.
புத்தாக்கம் செய்யப்பட்ட உருப்படிகள் பல இவ் அரங்கேற்றத்தில் இருந்தமை அரங்கிற்கு அணிசேர்த்தது. அத்தோடு அபிராமி நாட்டியாலயாவின் மாணவர்களை உபநட்டுவாங்கத்தில் இணைத்துக்கொண்டதும், அவர்தம் தாளஞானமும் சிறப்பு.அரங்கத்தின் புத்தாக்கங்களில் ஒன்றாக, ராஜ்குமார் பாரதி அவர்களின் இசையமைப்பிலும், ரேனுகா சுரேஸ் மற்றும் திவ்யா.சுஜேன் என்ற இரு நாட்டிய ஆளுமைகளுடைய நடன அமைப்பிலும், யாதவ் யாதவன் அவர்களுடைய தெளிவான குரல்வளத்திலும், முழவும் யாழும் குழலும் என இசைக் கலைஞர்களின் இயைவோடு நாட்டியவடிவம் கொடுக்கப்பட்ட “நூலைப்படி” பாடலைப் பற்றி பேச விரும்புகிறேன்.
அபிநயாஞ்சலி நாட்டியப்பள்ளியின் எதிர்வரும் கலைப்பபடைப்புகளுக்கு இந்நாட்டியம் ஒரு முத்தாய்ப்பாய் என்பது என் கணிப்பு. நாட்டிய அரங்குகளில் மகாகவி பாரதியாருடைய பாடல்கள் பாவிக்கப்பட்ட அளவு புரட்சிக்கவி பாரதிதாசனுடைய பாடல்கள் எடுத்தாளப்பட்டதில்லை. இந்த அரங்கில் பாரதிதாசன் கவிதையோடு பாரதியின் தமிழ்முழக்கம் வரிகளும் கவித்துவமாக இணைக்கப்பட்டிருந்தமை நாட்டியத்திற்கு மேலும் அழகு சேர்த்தது.
அரங்கேற்றத்தின் அணிசேர் கலைஞர்கள் இளைய தலைமுறை. எங்கள் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் நம்பிக்கை.
வாழ்த்துகள்.
நூலைப்படி -- சங்கத்தமிழ்
நூலைப்படி -- முறைப்படி
நூலைப்படி
காலையிற்படி கடும்பகல்படி
மாலை, இரவு பொருள்படும் படி
நூலைப்படி
பாரதிதாசன் தனது பாடலில் நூலைப்படி என்று வெறுமாகக் சொல்லவில்லை, குறிப்பாக சங்கத்தமிழ் நூலைக் குறிப்பிட்டுச் சொல்வது குறிப்பிடத்தக்கது. அதையும் முறைப்படி, பொருள் விளங்கும் படி படிக்கச் சொல்கிறார். தொல்காப்பியம் தொடங்கி, சங்கக்கவிதைகள், சங்கமருவியகாலத்துக் காப்பியங்கள் வரையான நூல்களைக் கைகாட்டுகிறார். தொல்காப்பியத்திற்கும், சங்கக்கவிதைகளுக்கும் அத்தனை முக்கியத்துவம் ஏன்? எல்லாமொழிகளும் சிறந்தனவே. உலகின் அனைத்து மொழிகளுக்கும் இலக்கண நூல் இருப்பது வழமையே. ஆனாலும் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தினைச் சிறப்புமிக்கதாக கூறுவதற்குக் காரணமுண்டு.
இலக்கண நூல்களிலே எழுத்தும், சொல்லுமே அடிப்படை. தொல்காப்பியம் ஒன்றுதான் எழுத்தும் சொல்லும் கடந்து, பொருளுக்கும் இலக்கணம் சொல்கிறது. எழுத்தினதும் சொல்லினதும் கட்டமைப்பினை ஆய்வது போல பொருளினதும் கட்டமைப்பை ஆய்ந்திருக்கும் அணுகுமுறையானது தொல்காப்பியத்தைப் பிற இலக்கணநூல்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இது தொல்காப்பித்திற்கான தனித்தன்மையுமாகும். பொருளுக்கு இலக்கணம் செய்ததென்பது மனிதனுடைய மனதின் அடிப்படை மூலகூறுகளின் விதிகளை ஒழுங்குபடுத்திக் காட்டுவதாகும்.
மனித மனவெளிப்பாடுகளோ பல விதமானவை. ஒரு மனதைப் போல மற்றொரு மனம் இருப்பதில்லை. மனம் பல்வேறு வகைபட்டு விரிந்து கொண்டே செல்பவை. இப்படியாகப் பெரும் பரப்பைக்கொண்டு இயங்கும் மனித மனங்களிற்கு இலக்கணம் வகுப்பதென்பது சவால்கள் நிறைந்தது. அதைச் தொல்காப்பியம் செய்திருக்கிறது.மனிதமன இயங்கியலின் அடிப்படைப் பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம்.
மேலும் நூலைப்படி கவிதையில்…
பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகம் ஏமாறும்படி
வைத்துள்ளநூற்களை ஒப்புவதெப்படி – நூலைப்படி!
வாசிப்பில் மூல நூற்களைப் படிப்பது இன்றியமையாதது. இன்றைய காலத்தில் கொட்டிக்கிடக்கும் நூல்கள் அனைத்தையும் வாசிப்பதென்பது சாத்தியமற்றது. ஒரு நூலின் சிறப்பை அறிந்துகொள்ள நமக்கு அளவுகோல் ஒன்று அவசியப்படுகின்றது. மூலநூல்களை வாசிப்பதன் மூலம் நான் மற்றைய நூல்களை ஓப்புநோக்கி சிறந்த நூல்களைக் கண்டடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டியத்தில் பாரதிதாசன்
இந்தியா காலனியத்திடமிருந்து விடுதலை நோக்கிச் சென்ற காலத்தில் மகாகவி சுதந்திரப்பாடல்களை, அண்டத்தின் ஆற்றல்களை, ஆன்மீகப் பாடல்களை, எழுதியவர். பாரதிதாசனோ விடுதலையின் பின்னரான சமூகச் சீர்திருத்தம், பகுத்தறிவு, நற்சிந்தனை போன்ற விடயங்களைக் கையாண்டவர்.
பரதநாட்டியக் கலைக்கும் சீர்திருத்தம் பகுத்தறிவுவாதம் என்பவைக்கும் இடையில் ஒருவித ஒட்டாதநிலை இருந்து வருவதை கலைஞர்கள் அறிவர். அதன் காரணமாகவே நாட்டிய உலகில் பாரதிதாசன் கண்டுகொள்ளப்படாமல் போயிருக்கக்கூடும். இவ் இடைவெளியை நிறப்ப பலமுயற்சிகள் நடந்தாலும், சென்ற நுற்றாண்டுகளில் தஞ்சை நால்வர், ருக்மணி போன்றவர்கள் சீர்திருத்தமாக எடுத்துக்கொண்ட பேசு பொருள் மட்டுமே இன்றும் பரதக்கலையாகும் என்ற கருத்து, பெரும்பான்மை பரதக்கலைஞர்கள் மனதில் ஆழவேறூன்றிய ஒன்றாகவே காணப்படுகிறது.
பரதக்கலை பல நூற்றாண்டுகளாக பல மாற்றங்களை, ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. சமூகத்தின் தேவைக்கேற்ப தன்னை மாற்றியமைத்து வளர்ந்துள்ளது. அது ஒரு காலத்தில் தேங்கிவிடாது மேலும் வளர்த்துச் செல்வதும், நாட்டியக் கலைஞர்களை படைப்பாளிகளாக ஆக்குவதும் நாட்டியக்கலைக்கு நாம் செய்யும் பெரும் தொண்டே. நாட்டியசாஸ்திரம் போன்ற வடமொழி நூற்களைத் தாண்டியும் நூற்கள் இருக்கின்றன. கலை பற்றிய கருத்துக்களையும், அறம் சார்ந்த தமிழ்ச்சிந்தனை மரபுகளையும் ஆழமாக எடுத்தியம்பகின்றன.
அகப்பொருள் படி அதன்படி
புறப்பொருள் படி நல்லபடி
புகப் புகப் படிப்படியாய்ப்
புலமை வரும் என்சொற்படி நூலைப்படி
தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகும்என்ற ஆன்றோர் சொற்படி
நூலைப்படி!
170 total views, 6 views today