இலங்கைப் பெண்கள் தேசிய உதைபந்தாட்ட அணியில் மகாஜனன்கள் மூவர்
இலங்கைப் பெண்கள் தேசிய உதைபந்தாட்ட
அணியில் மகாஜனன்கள் மூவர்
தெற்காசிய மகளிர் உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணத் தொடரில் பங்குபற்றும் இலங்கைப் பெண்கள் தேசிய அணியில் மகாஜனக் கல்லூரியின் முன்னாள் உதைபந்தாட்ட வீராங்கனைகள் மூவர் இடம்பிடித்து வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தியுள்ளனர்.
பாஸ்கரன் சானு, சிவநேசன் தர்மிகா, சுரேந்திரன் கௌரி ஆகிய மகாஜனன்களே தேசிய அணியில் இடம்பிடித்துள்ளனர். இத்தொடர் நேபாளத்தில் கடந்த மாதம் (ஒக்டோபர்) 17 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இவர்கள் மூவரும் பாடசாலை உதைபந்தாட்ட அணிகளுக்கு தலைமைதாங்கியதோடு, பாடசாலைப் பருவத்தில் வயதுப் பிரிவுகளுக்கான தேசிய அணிகளிலும் இடம்பிடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சால் நடாத்தப்படுகின்ற பாடசாலைமட்ட உதைகந்தாட்டத்தில் மகாஜனக் கல்லூரி 20 வயதுப பெண்கள் அணி 2019 இல் முதன்முறையாக சாம்பியன்பட்டம் வென்ற போது, தர்மிகா அணித்தலைவியாகவும் கௌரி அணி உபதலைவியாகவும் சானு முன்னாள் அணித்தலைவியாகவும் சிறந்த பங்களிப்பை நல்கினர்.
இவர்கள் மூவருக்கும் எமது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.
தேசியமட்ட பெண்கள் உதைபந்தாட்டத்தில்
மகாஜனா இரு அணிகளும் சாம்பியன்கள்
தொடர்ச்சியாக 2022, 2023, 2024 என 3 வருடங்கள்
சாம்பியனாகி வரலாற்றுப்பதிவை ஏற்படுத்தியுள்ளது.
தேசியமட்ட பாடசாலைகளுக்கிடையிலான பெண்கள் உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் மகாஜனக் கல்லூரியின் 17, 20 வயது அணிகள் இரண்டும் சாம்பியன்களாகி கல்லூரிக்கு பெருமைசேர்த்துள்ளன.
குயின்சி தலைமையிலான 20 வயது மகாஜனா பெண்கள் அணி இறுதியாட்டத்தில் பொலனறுவை பென்டிவெல கல்லூரியை எதிர்கொண்டு 4:0 என்ற கோல்கள் கணக்கில் பெரு வெற்றிபெற்றது. முதல்பாதி ஆட்டத்தில் லயன்சிகா, அணித்தலைவி குயின்சி ஆகியோரது கோல்களுடன் 2:0 என மகாஜனா முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியாட்டத்திலும் லயன்சிகா, குயின்சி ஆகியோர் அதிரடியாக ஒவ்வொரு கோல்களை பெற்றுக்கொடுக்க மகாஜனா 4:0 என சாம்பியனாகியது.
உமாசங்கவி தலைமையிலான 17 வயது மகாஜனா பெண்கள் அணி இறுதியாட்டத்தில் குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியை எதிர்கொண்டு 4:0 என்ற கோல்கள் கணக்கில் பெரு வெற்றிபெற்றது. முதல்பாதி ஆட்டத்தில் அணித்தலைவி உமாசங்கவி, கல்சிகா ஆகியோரது கோல்களுடன் 2:0 என மகாஜனா முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியாட்டத்திலும் உமாசங்கவி, கியூஸ்ரிகா ஆகியோர் அதிரடியாக ஒவ்வொரு கோல்களை பெற்றுக்கொடுக்க மகாஜனா 4:0 என சாம்பியனாகியது.
17 வயதுப் பெண்கள் அணி தொடர்ச்சியாக 2022, 2023, 2024 என 3 வருடங்கள் சாம்பியனாகி வரலாற்றுப்பதிவை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு 17 வயதுப் பெண்கள் அணிக்கு 2022 ஆம் ஆண்டுதான் போட்டி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு தொடக்கம் வலயமட்டம், மாகாணமட்டம், தேசியமட்டம் என சாம்பியனாகி சாதனைபடைத்துள்ளது. 20 வயது அணி 2019, 2022, 2024 என 3 வருடங்கள் சாம்பியனாகியதோடு 2023 இல் இறுதியாட்டத்தில் மோதி இரண்டாமிடம் பெற்றது.(2020, 2021 களில் கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக போட்டிகள் நடைபெறவில்லை)
வெற்றி வீராங்கனைகளை வாழ்த்திப்பாராட்டுவதோடு, வழிப்படுத்திய அதிபர், நெறிப்படுத்திய விளையாட்டுத்துறை முதல்வர், அணிப்பொறுப்பாசிரியர்கள், வெற்றிக்கு வித்திட்ட பயிற்றுநர் ஆகியோரை நன்றியுடன் பாராட்டுகின்றோம்.
20 வயது அணித்தலைவி குயின்சி
17 வயது அணித்தலைவி உமாசங்கவி
176 total views, 3 views today