எமக்கு மட்டும் இப்படி நடக்கின்றதே! விழுவதெல்லாம் எழுவதற்கே
–பொலிகையூர் ரேகா இங்கிலாந்து.
பரந்து விரிந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்குமே தோல்வியும்,விரக்தியும், வலிகளும் பொதுவானவை.அவை அனைத்துமே ஏதோவோர் வெற்றியின் முதல்படியாகும்.முயற்சித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்துமேயன்றி விழுந்துகிடப்பவர்களுக்கு இது பொருந்தாது.
எந்த ஒரு முயற்சியுமே வெற்றியில் முடிவதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே அந்த நற்பேறு இருக்கும். பெரும்பாலானோருக்குத் தோல்வியின் முகவரி கண்டே வெற்றிகள் வந்து சேர்கின்றது.
சிறு குழந்தை கூட நடை பயில்கையில் பல முறை விழுந்தே எழுகிறது.ஆனால் ஒவ்வொரு முறையும் எழுந்து நிற்கும் விடா முயற்சியே அதற்கு நடக்கக் கற்றுக்கொடுக்கிறது. அதுபோன்றே வாழ்க்கையும். விழும்போதெல்லாம் எழுவதற்குப் பழகிக்கொள்வோமானால் அது நாம் தேடும் வெற்றியைப் பரிசளிக்கும். தோல்வியென்பது எம் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.ஒரு செயலில் ஏற்படும் தோல்வியானது பட்டறிவாக மாறுகின்றது.அந்தப் பட்டறிவைக் கொண்டு எங்கே தவறிழைத்தோமெனக் கண்டுணர்ந்து அவற்றைத் திருத்திக்கொண்டு வெற்றியை நோக்கிப் பயணிக்க முடியும்.இதுவே சவால்களை எதிர்கொள்ளவும்,நம் திறமைகளை வளர்க்கவும் காரணமாகிறது.
வீழ்ந்த பின்னும் எழுந்து நிற்கும் உளப் பக்குவம்தான் வெற்றியாளர்களை உருவாக்குகிறது.தொடர் முயற்சியும்,உள உறுதியும், நம்பிக்கையுமே வெற்றியின் படிக்கட்டுகள்.
மாபெரும் அறிவியலாளர் தாமஸ் அல்வா எடிசன், பல ஆயிரம் முறைகள் தோல்வியடைந்த பின்னர் தான் மின் விளக்கை கண்டுபிடித்தார். அவர் சொல்லிய ஒன்று “நான் தோல்வியடைந்தது இல்லை, மாறாக அந்த முயற்சி செயல்படாத பல்வேறு வழிகளை கண்டறிந்தேன்” என்பதே.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஒரு சிறந்த உதாரணம். அவர் தனது வாழ்நாளில் அரசியலிலும், தனிப்பட்ட வாழ்விலும் பல தடைகளை சந்தித்தார். பல முறை தோல்வியுற்றார், ஆனால் தன்னம்பிக்கை மற்றும் உறுதியின் மூலம் அவர் மறுமுறை எழுந்து, உலகின் சிறந்த தலைவர்களில் ஒருவராக வளர்ந்தார். அவரது வாழ்க்கை வரலாறு அனைவருக்கும் ஒரு உதாரணமாக விளங்குகிறது.
யாரோ ஒரு தாமஸ் அல்வா எடிசன்,ஆபிரகாம் லிங்கனோ தேவையில்லை. உங்களைப் பெற்றவர்கள், உங்களோடு உடன் பயணிப்பவர்கள், நீங்கள் அறிந்தவர்கள என எல்லோருமே பல தடைகளைத் தாண்டி எழுந்தவர்கள்தான்.இதை எழுதுகின்ற நானே என்னைப் பொறுத்தவரையில் எனக்கு ஒரு எடுத்துக்காட்டுதான். இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டுதான். எமக்கு மட்டும் இப்படி நடக்கின்றதே என நீங்கள் வருந்திய அனைத்துக் காரணங்களையும் இப்போது நினைத்துப் பாருங்கள்.அத்தனையில் இருந்தும் நீங்கள் மீண்டு வந்த தருணங்களை எண்ணிப் பாருங்கள். நீங்கள் எத்தனை தடவைகள் எழுந்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு விளங்கும்.
நாம் விழுந்துவிட்டோம் என நினைத்தவுடன், அதற்கும் மேலாக மீண்டும் எழுவதற்கான உற்சாகத்தை பெறுவது மிகவும் கடினமான செயலாக இருக்கலாம். ஆனால், எழுந்து நிற்கும் மனப்பக்குவம் நமக்கு மனவலிமையையும், முன்னேறுவதற்கான தைரியத்தையும் தருகிறது. தோல்வியை வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்வது முக்கியம். அதை குறையாக நினைத்து மன உறுதியை இழந்து விடாமல், அதை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு அனுபவமாகக் கருத வேண்டும். வாழ்க்கையில் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் புனிதமாக எண்ணி, அதற்காக அயராது உழைத்தால், அது ஒருநாள் நமக்கு வெற்றியை அளிக்கும். தோல்வி என்பது முடிவல்ல அது வெற்றியின் தொடக்கம் என்பதை உணர்ந்தவர்களால் வாழ்க்கையில் எத்தகைய சோதனைகளையும் எதிர்கொள்ள முடியும். ஆம்! விழுவதெல்லாம் எழுவதற்கேயொழிய் அழுதுகொண்டே அழிவதற்கல்ல.
183 total views, 3 views today