மாற்றத்தின் முன்னோடிகள் நாங்களாக அல்லவா இருந்திருக்க வேண்டும்?

மாற்றத்தின் முன்னோடிகள்
-ஜூட் பிரகாஷ் மெல்பேர்ண்

அலை அடிக்கும் போது, வழியில் நிற்கும் நாணல், கஞ்சல், குப்பை எல்லாவற்றையும் அலை அடித்துக் கொண்டு போகும். ஆனால், ஆழ வேரூன்றிய ஆலமரம் மட்டும் அசையாமல், அலையின் போக்கை சிரித்து ரசித்துக் கொண்டு நிற்கும். அரசியல் அலையும் அப்படித் தான்.

இலங்கையின் தமிழர் தாயகப் பிரதேசங்களில் மட்டுமல்ல, தமிழர்கள் செறிந்து வாழும் புலம்பெயர் தேசங்களிலும் ஜேவிபியின் “மாற்றம்” அலை அடிக்கிறது. இருமுறை ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டுத் தோற்ற ஜேவிபி இயக்கத்தின் அனுரகுமார திஸநாயக்க, ஜனாதிபதி தேர்தலில் வென்றதும், அவர் அடுத்தடுத்து நிகழ்த்தும் அதிரடி நடவடிக்கைகளையும், ஊழலற்ற தூய ஆட்சி பற்றி ஜேவிபி எடுக்கும் வகுப்புகளையும் சமூக வலைத்தளங்கள் எங்கும் எம்மவர்கள் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், 35 ஆண்டுகளிற்கு முன்னர் எங்கள் மத்தியில் இருந்த ஒரு ஆயுதப் போராட்ட இயக்கம், இன்று ஜேவிபி செய்து கொண்டிருக்கும் அத்தனையையும், தமிழ் மக்களிற்கு செய்ய முனைந்து, அதில் முதல் வெற்றியையும் பெற்றது என்பதையும் நாங்கள் மறந்து விட்டோமா? மாற்றத்தின் முன்னோடிகள் நாங்களாக அல்லவா இருந்திருக்க வேண்டும்?

ஜேவிபி எவ்வாறு சிங்கள தேசிய சோஷலிச சித்தாந்தத்தில் ஊறிப் போன இயக்கமோ, அதே போன்று, தமிழ் தேசிய சோஷலிச சித்தாந்தம் நிலை நின்ற ஈரோஸ் எனும் தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கம், 1989 பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 11 ஆசனங்களையும், தேசிய பட்டியலில் ஒரு ஆசனத்தையும் வென்று, மூன்றாவது பெருங்கட்சியாக இலங்கை பாராளுமன்றத்தில் நுழைந்தது.

1977 பொதுத் தேர்தலில் “அடைந்தால் தமிழீழம் இன்றேல் சுடுகாடு” என்று கோஷமிட்டுக் கொண்டு, வடக்கு கிழக்கில் இருந்து பெருவாரியாகத் தெரிவான தமிழர் விடுதலைக் கூட்டணியினரில் நம்பிக்கையிழந்த தமிழ் மக்கள், இந்திய படையினரனதும் அதனோடு இணைந்து கொடூரங்கள் புரிந்து கொண்டிருந்த ஈபி, டெலோ, ஈன்டிஎல்எஃப் இயக்கத்தினரது அடக்குமுறைக்கு மத்தியிலும், நடாத்திக் காட்டிய மாற்றம் தான், 1989 தேர்தலில் ஈரோஸ் இயக்கம் நிகழ்த்திய அரசியல் மாற்றம்; அடைந்த வெற்றி.

1989 தேர்தலில், வடக்கு கிழக்கில், இந்திய அரசின் வற்புறுத்தலின் பேரில், தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியானது, ஈபி, டெலோ, ஈன்டிஎல்எஃப் இயக்கங்களோடு தேர்தல் கூட்டணி அமைத்து, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த மூன்று இயக்கங்களும் அன்று ஆயுதம் தரித்த ஒட்டுக் குழுக்களாக இந்திய படையினருடன் சேர்ந்து மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த காலமது. த்ரீ ஸ்டார்ஸ், மண்டையன் குழு போன்ற பதங்கள் மக்களை நடுநடுங்க வைத்த காலங்கள் அவை.

கூட்டணியின் 1977 தேர்தல் நாயகர்களான யோகேஸ்வரன், சிவசிதம்பரம், ஆனந்த சங்கரி ஆகியோர் யாழ்ப்பாணத்திலும், அமிர்தலிங்கம் மட்டக்களப்பிலும் போட்டியிட்டார்கள்.”இரத்த கறை படிந்த கைகளுடன் இணைந்து பிரசாரம் செய்ய மாட்டோம்” என்று அறிக்கை விட்டுவிட்டு யாழ்ப்பாணம் வந்திறங்கிய கூட்டணிகாரருக்கு அஷோக் ஹோட்டலை விட்டு வெளில வரப் பயம். ஒரு பக்கம் இயக்கம், மறு பக்கம் மண்டையன் குழு யாரு எப்ப எங்க வைத்து போடுவாங்கள் என்று கிலியும் பயமும் அவர்களை அசோகா ஹோட்டலிற்குள் முடக்கியது. தங்களுக்கு பிரசாரம் தேவையில்லை, சனம் எங்களுக்கு தான் எப்படியும் புள்ளடி போடும் என்ற இறுமாப்பிலும், போன தேர்தலில் வென்ற ஆணவத்திலும் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சாரங்களில் கூட்டணி இறங்கியது.

யாழ்ப்பாணத்தை கலக்கத்தில் வைத்திருந்த ஈபிகாரன்கள் தான் தேர்தல் பிரச்சாரத்தில் கலக்கினாங்கள். யாழ்ப்பாணத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன், யோகசங்கரி ஆகியோரோடு யாழ் இந்துவில் பணியாற்றிய நவரத்தினம் யாழில் தேர்தலில் போட்டியிட, மூலை முடுக்கெல்லாம் ஈபியின் போஸ்டர், லவுட் ஸபீக்கர் அலறல், பிரச்சார கூட்டங்கள், பத்திரிகை விளம்பரம், இலவச சாராயம் என்று ஒரு முழு அளவிலான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. தில்லு முல்லு பண்ணி 99.7மூ வாக்குகளுடன் கைப்பற்றிய ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை வேறு ஈபியின் கையில் இருந்ததால், ஈபிக்காரன்கள், செய்து கொண்டிருந்த கொடூரங்களைப் போல, தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு காட்டு காட்டினாங்கள்.

இயக்கம் தேர்தலைப் பகீஷ்கரிக்குமாறும், தேர்தலில் பங்குபற்றுவோர் துரோகிகள் என்றும் அறிக்கை விட்டது. நியமன பத்திரங்கள் கையளிப்பதற்கான கடைசி நாளில், அவ்வளவு நாளும் அமைதி காத்த ஈரோஸ் இயக்கம், வன்னிக் காட்டுக்குள் இருந்து பச்சை சிக்னல் கிடைத்ததும், சுயேட்சை குழுவாக வடக்கு கிழக்கில் தேர்தலில் களமிறங்கியது. இயக்கத்தின் மறைமுக ஆதரவுடன், இந்திய சார்பு கட்சிகள் பாராளுமன்றம் செல்வதை தடுக்கும் நோக்கத்துடனும், இந்தக் கடைசி நிமிட நகர்வு மேற்கொள்ளப்பட்டது. வெளிச்சவீடு சின்னத்தில் போட்டியிட்ட ஈரோஸ் இயக்கம், ஈபிக்காரன்களின் அச்சுறுத்தல்களிற்கு பயந்தோ என்னவோ, தேர்தல் பிரச்சாரத்தில் அடக்கியே வாசித்தது. அவங்கள் காட்டும் திசையில் தான் சனம் வாக்களிக்கும் என்பதையும் ஈரோஸ் இயக்கம் நன்கே அறிந்திருந்தது.
தேர்தல் முடிவுகள் வெளியான போது, வடக்கு கிழக்கு எங்கும் மாற்றத்தின் சின்னமான வெளிச்ச வீடு பிரகாசித்தது. யாழ்ப்பாணத்தில் ஈரோஸிற்கு 8 ஆசனங்களும், நுPசுடுகு இற்கு 3 ஆசனங்களும் கிடைத்தன. ஈரோஸின் ஸ்தாபகர்களில் ஒருவரான இரத்தினசபாபதியிற்கு அதிக விருப்பு வாக்குகள் கிடைத்தது. அவரோடு, பின்னாளில் தமிழீழ நீதித்துறை பொறுப்பாளராயிருந்த, பரா, மாமனிதர் சிவமகாராசா ஆகியோரும் தெரிவாகினர். நுPசுடுகு சார்பில் போட்டியிட்ட மூவரும் தெரிவாகினர். சுரேஷ் பிரேமச்சந்திரனை விட நவரத்தினத்திற்கு கிடைத்த வாக்குகள் அதிகம். தமிழர் விடுதலை கூட்டணி பிரமுகர்கள் அனைவரும் தோல்வியை தழுவினார்கள்.

மட்டக்களப்பிலும் அதே கதை, அமிர் தோல்வி, டெலோ கருணாகரனுக்கு அதிகப்படியான வாக்குகள். அவரோடு பிரின்ஸ் காசிநாதரும் சாம் தம்பிமுத்துவும் தெரிவானார்கள். அமிர்தலிங்கம் தேசிய பட்டியலூடாக பாராளுமன்றம் புகுந்தார். ஈரோஸிற்கு திருகோணமலையில் 2, வன்னியில் 1, தேசிய பட்டியலில் 1 என்று ஆக மொத்தம் 12 ஆசனங்கள் கிடைத்தன.
தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பையும் தட்டிக் கழித்து விட்டு, ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் வே. பாலகுமார், யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் மாறி மாறி நிலைகொண்டு தனது இயக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களை வழிநடத்தும் தலைமைத்துவ வகிபாகத்தை செவ்வனே நடத்திக் கொண்டிருந்தார். ஈரோஸ் இயக்கத்திற்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனம் ஈரோஸ் இயக்கத்தின் ஏறாவூர் பொறுப்பாளரான பசீர் சேகுதாவூதிற்கு வழங்கப்பட்டது.

தேர்தலின் பின்னர், மே 4, 1989 ஆம் ஆண்டு பிரேமதாசா அரசிற்கும் இயக்கத்திற்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் கொழும்பு ஹில்ட்டன் ஹோட்டலில் ஆரம்பமாகி, ஜூன் 10, 1990ல் முடிவிற்கு வந்தது. யுத்தம் ஆரம்பமாகி 15 ஆவது நாள், 12 ஈரோஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு இயக்கத்தால் பணிக்கப்பட்டனர். சில வாரங்களிற்கு பின்னர் ஈரோஸ் இயக்கம் பிளவுற்று, வே. பாலகுமார் தலைமையிலான ஈரோஸ் அணி இயக்கத்துடன் இணைந்து கொண்டது.

பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்று ஈரோஸ் இயக்கத்தின் இரத்தினசபாபதி, “எம்மைப் பொறுத்தவரையில் இந்த நாடாளுமன்றத்தை தமிழ் பேசும் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறையுள்ள சபையாக நாம் கருதவில்லை. சாதாரண பெரும்பான்மை மூலம் தீர்மானம் இயற்றும் வழிமுறையுடைய இச்சபையில் தமிழ்த்தேசிய இனமானது தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய தீர்மானம் எதையும் நிறைவேற்றும் ஆற்றல் உடையதாக இங்கு இருக்க முடியாது.” என்று ஆற்றிய கன்னி உரை எந்தக் காலகட்டத்திற்கும் பொருத்தமானதே.
1989 இல் பாராளுமன்றத்திற்கு தெரிவான ஈரோஸ் இயக்கத்தினரை அன்று இராஜினாமா செய்ய வைக்காமல் இருந்திருந்தால், அவர்கள் தமிழ் தேசியத்தின் குரலாக அரிய பணியாற்றியிருப்பார்கள். அதைவிட முக்கியமாக, 1994 இல் பத்து பதினைந்து வாக்குகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து பத்து ஈபிடிபியினரை பாராளுமன்றம் வரவும் விட்டிருக்க மாட்டார்கள். அதையும் விட முக்கியமாக, 2000 இல் பாவமன்னிப்பு அளிக்கப்பட்ட கூட்டணி. ஈபி, டெலோவை உள்வாங்கி உருவாக்கப்பட்ட வுNயு இற்கும் தேவை எழுந்திராது.

2009 இற்கு பின்னர் தமிழ் தேசிய கட்சிகளில் இருந்து தெரிவான பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள், தமிழ் தேசியம் பேசும் அனைவரின் மேலும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதும், இன்று சிங்கள தேசிய சோஷலிஸ ஜேவிபியின் அலை அடிப்பதற்கு பிரதான காரணம். ஆனால், இன்றும், தமிழர் தாயகப் பகுதிகளில், உண்மையான தமிழ் தேசிய பற்று நீறு பூத்த நெருப்பாக பல இளையோரில் உறைந்திருப்பது, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை தருகிறது.

நிறைவாக, இலங்கை தேசத்தில் ஜேவிபி கொண்டுவர முனையும் மாற்றம் வரவேற்கத்தக்கது. அந்த மாற்றத்தில் நாங்களும் பங்காளிகளாக வேண்டியதும் காலத்தின் கட்டாயம். எங்களது பங்களிப்பு, நாங்கள் ஒரு இனக் குழுமமாக தேசிய அரசில் இணைவதாக அமைய வேண்டுமேயன்றி, எங்கள் பகுதிகளின் பாராளுமன்றக் கதிரைகளை ஜேவிபி இற்கு தாரை வார்ப்பதாக அமைந்து, எங்களது அடையாளத்தையும் தனித்துவத்தையும் இழப்பதாக அமைந்து விடக்கூடாது.
தமிழர் பகுதிகளில் தொண்ணூறுகளில் வீசிய சந்திரிக்கா தென்றல் போல, அநுர அலையும் அடித்து ஓயட்டும். இதுவும் கடந்து போகட்டும்.. போகும்.

185 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *