பொன்.புத்திசிகாமணியின் “நான் பார்த்த நந்திக் கடல்” ஒரு பார்வை.

குரு.சதாசிவம்.
1970-80களில் ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகை வாசகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட அல்லது வாசிக்கப்பட்ட ஒரு பெயர் பொன்.புத்திசிகாமணி.தனக்கு வாய்த்த ஊடக வெளிச்சத்தைக் கையிலெடுத்துக்கொண்டு வன்னிக்கு மறுக்கப்பட்ட வாழ்வியல் அடிப்படைத் தேவைகளை,,அன்றாடப் பிரச்சனைகளை,அங்கு வாழ்ந்த மக்களின் தேவைப் பற்றாக்குறைகளை உரிய இடங்களின் கவனத்திற்குக் கொண்டுசென்றதில் அவரின் பணி காத்திரமானது.
செய்திகளாக மட்டுமன்றி,கட்டுரைகளாக,சிறுகதை வடிவங்களாக ஒரு சமூக மறு மலர்ச்சியை நோக்கிய அவரின் பயணம் இன்னும் தொடர்கிறது.இதற்கான மற்றொரு சாட்சிதான் இப்போது வெளியீட்டுக்குத் தயாராகவிருக்கும் “நான் பார்த்த நந்திக்கடல்”என்ற ஒரு ஆவணப் பதிவு.இதற்கு முன்பு,சொர்ணம்மா,சின்னாச்சி மாமி என்று இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை நூலுருவாக்கி வெளியிட்டுள்ள அவரின் மூன்றாவது வெளியீடாக வருகிறது “நான் பார்த்த நந்திக்கடல்”
2023ல் சின்னாச்சி மாமியை வெளியிட்ட பொன்.புத்திசிகாமணி, 2024ல் நான் பார்த்த நந்திக் கடல் நூலை வெளியிடுகிறார் என்பதை ஒரு அசாதாரண நிகழ்வாகவே என்னால் பார்க்க முடிகிறது.நந்திக் கடலினைப் பிரதிபலிக்கும் அழகிய படத்தினை அட்டைப்படமாகக் கொண்டு “ஜீவந்தி”வெளியீடாக இந்நூல் வெளிவந்திருக்கிறது.குருவிச்சி ஆறு,பேராறு ஆகிய வன்னியின் இரு முக்கிய ஆறுகளின் நீரேந்து பகுதியாகப் பரந்து விரிந்து கிடக்கும் நந்திக்கடலின் முடிவு வட்டுவாகல்வரை நீள்கிறது. முல்லைத்தீவின் ஒரு எல்லைக் கிராமமாக அமைந்துள்ள இந்த வட்டுவாகலைப் பிறப்பிடமாகக் கொண்ட பொன்.புத்திசிகாமணி, தான் பார்த்த நந்திக் கடலை அவரது யதார்த்தமான எழுத்து நடையில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.அவரின் சின்னாச்சி மாமி சிறுகதைத் தொகுதியில் வரும் அனேகமான சிறுகதைகளில் உண்மைச்சம்பவங்களையும்,தேவையைப் பொறுத்து உண்மையான கதைமாந்தர்களையும் உலாவவிட்டே வாசகர்களை வசப்படுத்தியிருப்பார்.
ஆனால் ‘நான் பார்த்த நந்திக்கடல்’ என்ற இந்த வரலாற்றுப் பதிவை வேறுபட்டதொரு களத்திலும்,தளத்திலும் அவர் நகர்த்திச் செல்கிறார்.இந்த நூல் நந்திக்கடலை மாத்திரமல்ல, அதை அண்டியுள்ள கிராமங்களையும்,அங்கு
வாழ்ந்த மக்கள்,அவர்களின் வாழ்வியல்,முல்லைத்தீவின் முக்கியமான கடைத் தொகுதிகள்,பிரமுகர்கள் பற்றியெல்லாம் குறிப்பிட்டுச் செல்வது இப் பிரதேசத்தோடு தொடர்புடைய வாசகர்களை நிச்சயம் கவரும்..
ஆனால் 70,80 களில் முல்லைத்தீவின் அடையாளங்களில் ஒன்றாயிருந்த “லதா ஸ்ரூடியோ”அதன் உரிமையாளர் சண்முகம் அண்ணர் பற்றியும் குறிப்பிட்டிருப்பின்,அது நூலாசிரியரின் நோக்கத்திற்கு இன்னும் வலுச்சேர்பதாயிருந்திருக்கும்.
காரணம்,அந்தக் காலத்துக் கறுப்பு,வெள்ளைப் புகைப்படங்களுக்குப் பின்னாலே நிச்சயம் ஒரு கதை இருக்கும்.என்னுடைய அடையாள அட்டைப் படத்திற்குப் பின்னாலும் ஒரு பசுமையான நினைவு இன்னும் இருக்கிறது.அப்போது வித்தியானந்தக் கல்லூரி விடுதிச்சாலையில் இருந்ததால் வெளியே போகும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு.அடையாள அட்டைக்கு படம் எடுக்கும் சந்தர்பத்தைப் பயன்படுத்தி அதிபர் திரு.வி. பொன்னம்பலத்தின் அனுமதிபெற்று நானும் சில நண்பர்களும் முல்லைத்தீவிற்குப் போயிருந்தோம். பி.ப. 6.00 மணிக்கு பட்டினசபை ‘லைற் இஞ்சின்’ இயக்கிய பின்புதான் படம் எடுக்க முடியும்.அந்த இடைவெளியில் கடற்கரைக்குப்போய் சுற்றிவிட்டு வந்து படம் எடுத்தபின் ஜெஸ்சி சினிமாவில் படம் பார்த்துவிட்டு இரவு பத்து மணிக்கு பட பஸ்சில் ஏறி விடுதிக்குப் போய், குணசிங்கம் சேருக்கு முன்னால் கைகட்டி நின்றதெல்லாம் நினைவில் பதிந்த அழகான காலங்கள்
நீண்ட பயணங்களின்போது சில புத்தகங்களைக் கூட எடுத்துச் செல்வது எனது வழக்கம். கடந்த செப்டம்பரிலும் டோஹாவிலிருந்து பிலடெல்பியாவுக்கான 13 மணித்தியால விமானப் பயணத்திலும் பொன்.புத்திசிகாமணியின் “நான் பார்த்த நந்திக்கடல்”புத்தகத்தையும் கையோடு எடுத்து வந்திருந்தேன்.புத்தகம் வாசித்த லயிப்பில் பயண முடிவை அடைந்தபோது பயண தூரமும்,நேரமும் பாதியாகக் குறைந்துவிட்டதுபோல மனது உற்சாக மாயிருந்தது..அவரின் யதார்த்தமான எழுத்தநடை அவர் பக்கத்திலிருந்து கதை சொல்லிக்கொண்டு வருவதுபோன்ற உணர்வையே தந்தது.உரியவர்கள் இல்லாமல் இன்னும் அவர்களின் பெயரையே தாங்கிக்கொண்டு ஆங்காங்கே விரவிக்கிடக்கும் தென்னந் தோட்டங்கள், பல ஏக்கர் கணக்கான வயல்,மற்றும் வெற்றுக் காணிகள் போன்றவற்றை அவர் நிரல்படுத்தியிருக்கும் முறை,வாழும்,மற்றும் வரும் தலைமுறைகளுக்கான ஆவணப் பதிவாகக்கூட அமையலாம்.இதற்கு முன்பும் சிலர் நந்திக்கடல்பற்றி தங்கள் ஆய்வுக்கு,அல்லது தேடலுக்குப் பொருத்தமானவற்றைப் பதிவுசெய்து மக்கள்முன் வைத்திருக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ஆய்வாளர் அருணா-செல்லத்துரையின் “நன்னீர் நந்திக்கடல்”என்ற நூல் அவரின் ஆய்வுக் கண்ணோட்டத்திலேயே உருவாக்கம் பெற்றிருந்தது.நந்திக்கடலின் அமைவு,கடல்,கரையோரப் பாதுகாப்புத் தொடர்பான அதன் முக்கியத்துவம்பற்றி அவர் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் கவனிக்கப்பட வேண்டியவையே.ஒரு காலத்தில் பாதுகாப்பைக் காரணம்காட்டி அரசாங்கத்தினால் முல்லைத்தீவுநகரப் பகுதி கபளீகரம் செய்யப்படும் ஆபத்து இருப்பதாக அவர் எச்சரித்திருப்பதை அலட்சியப்படுத்தமுடியாது.
ஆனால் இங்கு புத்திசிகாமணியின் நந்திக்கடல்பற்றிய பார்வைவேறானது.தனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து 1985 வரை, குறிப்பாகச் சொன்னால் அவரின் 35 வயதுப் பராயம் வரை அதன் மடியிலே தவழ்ந்து,ஓரங்களிலே நடைபயின்ற, கரைகளில் நீச்சல் பழகி,இப்படி உணர்வுகளோடு கலந்த ஒரு இடத்தை அதன் சூழல்களைத் தன்னுடைய பார்வையில்,தன்னுடைய பாணியில் அவர் எழுதியவிதம் அழகு.
”உடுப்பைக் களைந்து கரையிலே போட்டுவிட்டு, யரோ கழட்டி எறிந்திருந்த கோவணத்தை எடுத்துக் கட்டிக்கொண்டு கடலிலே இறங்கிவிடுவோம்”என்ன துணிச்சல்?இப்படிப் பல இடங்களிலே மற்றவன் என்ன நினைப்பான் என்ற எண்ணத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு அன்றைய யதார்த்தமான வாழ்வியலை அப்படியே பதியம்போட்டு வைத்திருக்கிறார்.இந்த நூலை “ஒரு காலத்தின் கண்ணாடி”என்று நான் பதிவுசெய்கிறேன். இப்படியான படைப்புகளை அவர் தொடர்ந்து எழுதுவது காலத்தின் தேவை.