வில்லனாக இருந்த கணப்பொழுது
- மாதவி.(யேர்மனி)
மூன்று மாடிகொண்ட வீடு. பொதுவாக வெளியில் 2 குப்பை வாளி. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நகரசபை பணியாளர்கள் வந்து எடுத்துசெல்வார்கள். பல தடவைகள் காகிதங்கள் போடவேண்டிய வாளியில் பிளாஸ்டிக் போத்தல்கள், பெட்டிகளும், பிளாஸ்டிக் போட வேண்டிய வாளியில் காகிதமும் போடுவார்கள். அது மட்டுமல்ல வாளியின் மூடியை திறந்து அதற்குமேல் விறகு அடுக்குவதுபோல் அடுக்குவார்கள். காற்றடித்தால் தெருவில் அவை பறந்து விளையாடும்.
வீட்டுக்குள் நின்று கேட்டால் முன்பு பாடசாலை களுக்கான உதைபந்தட்டத்தில் வெற்றி பெற்றால் வானில் தகர பேணிகளை கயிற்றில் கட்டி வானில் வால் போல விட்டு தகர டப்பா சத்தம் கேட்க தெருவீதியில் ஒடுவோமே! அதே சத்தம் இப்ப இங்கேயும் கேட்கும்.
வீட்டின் உள்புற, வெளிப்புறம் சுத்தமாக்கலுக்கு என்று மாதம் 75 பவுண் Management. க்கு கட்டுவோம். அதனால் பல தடவை குப்பைவாளியின் மேல் குப்பைபோடும் குப்பைகளை படம் எடுத்து அவர்களுக்கு நானும் அனுப்புவேன்.
அவர் அவர்களாக பார்த்து திருந்தாவிட்டால் இதனை ஒழிக்க முடியாது என்று. இறுதியில் புரிந்து கொண்டேன்.
குப்பைவாளியின் மேல் வழிய வழிய குப்பை போட்டால், தவறாக போட்டால் நானே தனித்து ஒழுங்கு செய்வேன். இப்படி ஒருவருடமாக நான் சுத்தம் செய்து வர, இப்போது என்னைக்கண்ட பலர் தாமாக ஒழுங்காக போடுகிறார்கள் .
அப்பாடா என்று இருக்க இன்று Management இல் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் வீட்டில் முன் உள்ள பொது இடத்தில் சையிக்கிள் விடுகிறார்கள். அப்படி விடவேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சும்மா நான் குறை கண்டாலே பொங்க எழுவேன், கடிதமும் கையில் இருந்தால் கேட்கவா வேண்டும். காற்சட்டையை மேலே இழுத்து விட்டுக்கொண்டு விஜய் சேதுபதி விக்ரமில் நடந்ததுபோல் சையிக்கிள் யார் விட்டது என பார்க்கப்போனேன்.
உறங்கிக்கிடந்த வில்லத்தனம் இந்த வயதிலும் உசுப்பேத்தி நடக்க வைத்தது.
கதவை திறந்து வெளியில் வீட்டுக்குள் வரும் பொது வாசல் வரை போனேன். பார்த்தேன் கோவம் காத்து திறந்துவிட்ட சையிக்கிள் போல் ஆனது.
எனக்குள் இருந்த வில்லன் மறைய, என்னிடம் இருந்த மனிதம் வெளியே வந்து சையிக்கிளை தொட்டு இரசித்து. சில நேரங்களில் சட்டத்தை கண்டும் மகிழ்வோடு கடப்பதும் உண்டல்லவா. அந்த ஐந்து வயது சிறுவன் வீட்டுக்குள் அடைபட்டு இருக்காது வெளியில் வெய்யில் நேரம் மட்டும் ஓடும் அந்த சிறு சையிக்கிள்தான் மூலையில் கிடந்தது.
அதனை அவனால் அல்லது தனித்து வாழும் தாய்யாலோ ஒவ்வொரு தடவையும் மூன்றாமாடிக்கு எடுத்து செல்ல முடியாது அல்லவா. கணனியில் அமர்ந்து மின்னஞ்சல் அனுப்புகிறேன். அந்தச் சிறுவனுக்கு சையிக்கிள் விட ஒரு இடம் ஒதுக்கிதரவும். யப்பானில் ஒரு மாணவிக்காக ஒரு ரெயின் ஓடியது என்றால் இங்கு இதுவும் சாத்தியம் அல்லவா.
18 total views, 9 views today