மக்கள் ஆதரவைத் தக்கவைப்பதற்கு

தமிழ்க் கட்சிகளின் உபாயம் என்ன?


கொழும்பிலிருந்து பா.பார்த்தீபன்


இலங்கையின் அரசியல் போக்கையே மாற்றியமைக்கும் வகையிலான நிகழ்வுகளுடன் நவம்பர் மாதம் முடிவுக்கு வருகின்றது. மக்களின் தீர்ப்பினால், அரசாங்கம் மாறியிருக்கும் அதேவேளையில், தமிழ்த் தரப்புக்கும் இத்தோ்தல் பெரும் அதிர்வுகளைக் கொடுத்திருக்கின்றது.

இந்த அதிர்வுகளுடன், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் சில உண்மைகளை வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கின்றார்கள். தமிழ்த் தரப்புக்கள் தமது பயணத்தை ஒரு புதிய பாதையில் தொடர வேண்டிய தேவையை தேர்தல் முடிவுகள் தெளிவாக உணா்த்தியிருக்கின்றது.

வட மாகாணம் அநுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வசமாகியிருக்கின்றது. இலங்கையின் வரலாற்றில் தமிழ்க் கட்சிகளின் கைகளிலிருந்து வடபகுதி பறிபோயிருப்பது இதுதான் முதல் தடவை. தமது பின்னடைவுகளுக்கு என்ன காரணம் என்பதை அவா்கள் சுயபரிசோதனை செய்து புதிய உபாயங்களுடன், புதிய பாதையில் பயணிக்காவிட்டால், மேலும் வடமாகாண சபையையும் பறிகொடுக்க வேண்டியிருக்கும்.

தேர்தல் முடிவுகளிலிருந்து பல பாடங்களை தமிழ்த் தரப்பினர் படிக்க வேண்டியுள்ள அதேவேளையில், எதிர்காலத்துக்கான திட்டமிடலும் அதிலிருந்தே ஆரம்பமாக வேண்டும். இல்லையெனில் இன்னும் கடினமான பாடங்களை படிக்கவேண்டியிருக்கும்.

வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு, அவர்கள் டக்ளஸ் தேவானந்தா மற்றும், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் வாக்கு வங்கிகளை தேசிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியதே காரணம் என்பதை புள்ளிவிபரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

2020, மற்றும் தற்போதைய (2024) தேர்தலின் முடிவுகளை ஆராயும் போது இதனை அவதானிக்க முடியும். 2020 பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் டக்களஸின் ஈ.பி.டி.பி. பெற்ற மொத்த வாக்குகள் 45,797. ஆனால், இப்போது, 17,730 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கின்றது. அதாவது சுமார் 28 ஆயிரம் வாக்குகளை ஈ.பி.டி.பி. நான்கு வருடங்களில் இழந்துவிட்டது.

அதேபோல 2020 பொதுத் தோ்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி யாழ். தேர்தல் மாவட்டத்தில் பெற்ற வாக்குகள் 49,373. யாழ். மாவட்டத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அப்போது சுதந்திரக் கட்சி வந்திருந்தது. சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் யாழ்ப்பாணத்தில் அதற்கு ஒருபோதுமே இடமிருந்ததில்லை. அங்கஜனின் தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட பரப்புரைகளால், அவருக்காகக் கிடைத்த வாக்குகள்தான் அவை.

இப்போது, சுதந்திரக் கட்சி நீதிமன்றத்தில் நிற்கிறது. அந்தக் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. மற்றொரு கட்சியான ஜனநாயக தேசிய முன்னணியில் இணைந்து அங்கஜன் இராமநாதன் போட்டியிட்டார். இதன்போது அவருக்குக் கிடைத்த வாக்குகள் 12,427. அதாவது சுமார் 38 ஆயிரம் வாக்குகளை அவர் இப்போது இழந்திருக்கின்றார்.

டக்ளஸ் தேவானந்தாவுக்கும், அங்கஜன் இராமநாதனுக்கும் கிடைத்த வாக்குகள் நிரந்தரமானவை அல்ல என்பது இந்தத் தேர்தலின் போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அவர் கள் அப்போதைய அரசாங்கத்துடன் நெருக்கமானவர்களாக, அடுத்து வரக்கூடிய அரசில் அமைச்சர் பதவிகளை எடுக்கக்கூடியவர்களாக இருந்ததால் அப்போது அந்தளவு வாக்குகுள் அவர்களுக்கு கிடைத்தது.

அந்த வாக்குகள் இப்போது முழுமையாக தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்பியிருக்கின்றது. இதனை புள்ளிவிபரங்கள் உணர்த்துகின்றன. தேசிய மக்கள் சக்தி இப்போது யாழ். மாவட்டத்தில் பெற்ற வாக்குகள் 80,830.

டக்ளஸ், அங்கஜன் ஆகிய இருவரும் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது இம்முறை சுமார் 70 ஆயிரம் வாக்குகளை இழந்திருக்கின்றார்கள். அவை தேசிய மக்கள் சக்தியின் வசம் சென்றிருக்கின்றது. தேசிய மக்கள் சக்திக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்துள்ள இந்த 80 ஆயிரம் வாக்குகள் நிரந்தரமானவை அல்ல என்பதையும் இச்செய்தி உணா்த்துகின்றது.

டக்ளஸ், அங்கஜன் ஆகியோர் ஆளும் கட்சியுடன் இருக்கமாட்டார்கள் என்றால், அவர்களுக்கு அவர்கள் மூலமாக எந்த நன்மையும் தமக்குக் கிடைக்கப்போவதில்லை என்ற நிலையில்தான், அவர்களுடைய ஆதரவாளர்கள் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்பினார்கள்.

மீனவர் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளை டக்ளஸால் அமைச்சர் பதவியைப் பயன்படுத்திக்கூட தீர்க்க முடியவில்லை. இதனால், டக்ளஸ் மீது மீனவ சமூகம் சீற்றமடைந்திருந்தது. மீனவ சமூகத்தின் வாக்குகள் முழுமையாக தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்பியது.

மறுபுறத்தில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் பின்னடைவுக்கு அவற்றிடையே காணப்பட்ட முரண்பாடுகளும், பிளவுகளும்தான் காரணம். ஒருவர் மீது மற்றவர் சேற்றை வாரி இறைப்பதால், தமிழ்க் கட்சிகள் மீதான நம்பிக்கையையும் மக்கள் இழந்துவிட்டனர். அதனைவிட, நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களைப் பேசிக்கொண்டிருப்பதையும் மக்கள் விரும்பவில்லை.

தாயகப் பகுதியில் குறிப்பாக வடபகுதியில் தமிழ்க் கட்சிகள் சந்தித்த பின்னடைவுகள் இவைதான் காரணம். அதேவேளையில், இந்தப் பாடங்களைக் கற்றுக்கொண்ட பின்னர் தமது தவறுகளைத் திருத்திக்கொண்டு புதிய பாதையில் பயணிக்க அவர்கள் முற்படுவதை ஆரோக்கியமானதாகவே பார்க்க வேண்டும்.

“தற்போது உடைந்துபோயுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீளுருவாக்கம் செய்து அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளையும் ஒன்றிணைத்து செல்வதற்கு நான் இப்போதும் தயார்” என்றும், “நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் அதனையே எமக்கு எடுத்துக் கூறுகின்றன” என்றும் தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் சிவஞானம் சிறீதரன்.

மறுபுறம், “தமிழரசுக் கட்சியாக இருக்கலாம், எனைய தமிழ் கட்சிகளாக இருக்கலாம். பாராளுமன்றத்திற்கு வெளியே இருக்கலாம், சிவில் சமூகமாக இருக்கலாம், நாங்கள் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அந்த விடயங்களை முன்கொண்டு செல்வதற்கு தயாராக இருக்கின்றோம்” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்திருக்கின்றார்.

”தமிழ்த் தேசிய வாக்குகள் என்று பார்க்கும் போது கடந்த முறையிலும் பார்க்க இந்த முறை சற்று குறைவாகவே மக்கள் வாக்களித்துள்ளார்கள்” என்பதை ஏற்றுக்கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “இதற்கு தமிழ் தேசியம் என்று பேசிய தரப்பு பல தரப்பாகவும், சுயேட்சையாகவும் போட்டியிட்மையும் காரணம்” என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் இணைந்து மான் சின்னத்தில் யாழ். மாவட்டத்தில் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்ட வீ.மணிவண்ணனும் இதேபோன்ற கருத்தைத்தான் முன்வைத்திருக்கின்றார்.

“தமிழ் மக்களுடைய தீர்ப்பை நாங்கள் அதனை மதிக்கிறோம். அதிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றது என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்று மணிவண்ணன் தெரிவித்தாh்.

“தமிழ்த் தேசியம் பேசிய தரப்புக்கள் பல கூறுகளாக பிளவுபட்டமை எமது பின்னடைவுக்கு பிரதான காரணம். 2020 இல் மூன்று கூறுகளாக இருந்த இந்தக் கட்சிகள் இம்முறை வீடு, சைக்கிள், சங்கு, மான், மாம்பழம் என ஐந்து கூறுகளாக பிரிந்து போட்டியிட்டதுடன், ஏராளமான சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கியிருந்தன. வாக்குகள் இதனால் பிளவுபடுத்தப்பட்டன” என்று மணிவண்ணன் கூறியிருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரிந்து போட்டியிட்டதனாலேயே அதிக ஆசனங்களை தேசிய மக்கள் சக்தியால் பெறக்கூடியதாக இருந்தது என்பதை தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இன்று ஏற்றுக்கொண்டுள்ளன. வீட்டிற்கு விழுந்த வாக்குகளையும், சங்கிற்கு விழுந்த வாக்குகளையும், மானுக்கு விழுந்த வாக்குகளையும் தவராசா தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வாக்குகளையும் சேர்த்து கூட்டினால் தேசிய மக்கள் சக்திக்கு விழுந்த வாக்குகள் குறைவானவை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டிருந்தால் தேசிய மக்கள் சக்திக்கு யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்திருக்கும். போனஸ் ஆசனம் உட்பட மூன்று அல்லது நான்கு ஆசனங்கள் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கும்.

இணைந்து செயற்பட வேண்டும் என்பதை அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் இன்று ஏற்றுக்கொள்கின்றன. அதற்காக புதிய உபாயம் ஒன்றை வகுத்துச் செயற்படாவிட்டால், மாற்றமடைந்துள்ள இன்றைய அரசியல் சூழ்நிலையில், வடமாகாணத்தையும் இழக்கும் நிலைதான் ஏற்படும்!

83 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *