இரவில் படுக்கப்போகும்போதுநாளை எழுவோமோ என்ற அவநம்பிக்கை.
வயதைத் தாண்டிய மரண பயம்: நீங்கள் சந்தோஷமாக வாழ கற்றுக் கொள்வது எப்படி?
- பாக்குப் பாட்டி (யேர்மனி)
என்னடா வாழ்கை இது? இளமைக்காலங்களில் நாங்கள் சந்தோஷத்துக்குக் குறைவில்லாமல் வாழ்ந்தோம். அடுத்த கட்டம் ஐம்பது வயதுகளை எட்டும்போது, வாழ்கையில் செய்யவேண்டிய கடமைகளை ஓடி ஓடிச் செய்து நாங்களும் போகவேண்டிய இடமெல்லாம் போய் சுற்றித்திரிந்து உல்லாசமாக வாழ்ந்தோம். அறுபது வயதை எட்டும் போது பிள்ளைகளுக்கு வேண்டிய வாழ்கையை அமைத்துக் கொடுத்துப் பின் பேரப்பிள்ளைகளையும் கண்டுவிட்டோம். அந்த வயதில் ஆனந்தத்துக்கு அளவே இருக்காது. யாரைச் சந்தித்தாலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம், பிள்ளைகளுடனும் பேரப்பிள்ளைகளுடனும் ஆஹா ஓஹோ என்ற வார்த்தைகள். இப்படியே சந்தோஷமாக போகும் என எண்ணித்தான் காலடிகளை எடுத்துவைத்தேன் எழுபதுகளில். அங்கேதான் ஏற்படுகிறது „ஐயையோ, இவ்வளவு சந்தோஷத்தையும் என் குடும்பத்தையும் விட்டு நான் செத்துவிடுவேனோ“ என்ற எண்ணம்.
சாவு என்பது வயோதிபத்துக்கு மட்டுமா வரும் வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்கும் சாவு வந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தக் கதை இங்கே தேவை இல்லை. எங்களுக்குத் தேவை வயோதிப சாவுப்பயம் ஏன் என்பதுதான்.
அறுபத்தைந்து, எழுபது வயதுக்கு மேல் ஏன் அந்த எண்ணம் வருகிறது? வயது போகிறதே செத்து விடுவோமோ என்ற ஒரு பயம். இரவில் படுக்கப்போகும்போது நாளை எழுந்துவிடுவோமோ என்ற அவநம்பிக்கை. பிள்ளைகளுடன் வாழும் இந்த வாழ்க்கை, பேரப்பிள்ளைகளுடனான சந்தோஷம் எல்லாம் இழந்துவிடுவோமோ என்ற பயம். ஒரே வயதையொத்த உறவுகள் நண்பர்களுடன் கதைக்கும்போது அவர்களிடமிருந்தும் அதே கதைகளும் பயந்த பேச்சுகளுமே கிடைக்கும்.
ஒரு முதுமொழி சொல்லுவார்களே “நாளை நான் இறந்துவிடுவேன் என எண்ணிப் பயந்து இன்றைய அழகான வாழ்வின் சந்தோஷத்தை நிம்மதியை இழந்து விடுகிறோம்“ என்று. ஆம், அது நூற்றுக்கு நூறு உண்மைதான். வயது வந்தவர்கள் அப்படிதான் வாழ்வார்கள். இதற்கெல்லாம் பல பல காரணங்கள் உண்டு. நான் பல வயோதிபர்களிடம் கேட்டு அறிந்தபின்பும், என் அனுபவத்தை வைத்தும் இதை எழுதுகிறேன்.
எனக்கு அறுபத்தைந்து வயது இருந்த போது நான் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன். அச்சமயத்தில் எனக்குக் கடவுள் வைச்சான் ஓர் ஆப்பு. நெஞ்சு வலி என்னும் உயர்திரு நோய் ஏற்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டுபோய் அதற்குரிய வைத்தியம் செய்யப்பட்டு வீடும் திரும்பிவிட்டேன்.
அன்று தொடங்கியது என் பயம். வாய்வு தொல்லையால் என் நெஞ்சில் வலி ஏற்பட்டாலோ அல்லது எலும்பு தேய்வனவுகளால் நோ ஏற்பட்டாலோ உடனே என் மனம் பதற்றம் அடையும். நான் நெஞ்சடைப்பு வந்து இறந்துவிடுவேன் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும், அதனால் இரத்த அழுத்தம் கூடும், பயம் ஏற்படும். இதனால் ஒரு சில தடவைகள் அம்புலன்ஸ் அழைத்து வைத்தியசாலைக்குச சென்றும் வந்துள்ளேன். அப்படி வரும் என் வருத்தத்துக்குப் பெயர் இதய அடைப்பு அல்ல பானிக் அட்டாக் என்பதே. இந்தப் பெயர் கொண்ட வருத்தம் வயோதிபர்களுக்கு மட்டுமில்லை இளையோருக்கும் வருவது உண்டு.
இதே சமயம் வயது வந்தவர்களுக்கு மரணபயம் ஏற்படுவதின் இன்னொரு முக்கிய காரணம், எனது வயது எழுபது. என் வயதை ஒத்தவர்கள் திடீரென இறந்துவிட்டால் அதுவும் இரண்டு மூன்று வயது குறைந்தவர்கள் இறந்துவிட்டால் வயோதிபம் தலை தூக்கத் தொடங்கிவிடும் பயம் தானாகவே ஏற்பட்டுவிடும். „யாருக்கும் ஏற்படும் வருத்தங்கள் எங்களுக்கும் வந்துவிடுமோ?“, „நாங்கள் இறந்துவிடுவோமோ?“ என்ற பயம் ஏற்படும். இப்படியாக இன்னும் பல காரணங்களால் வயோதிபத்தில் மரண பயம் ஏற்படுவதுண்டு.
இந்தப் பயத்தை நாங்கள் எங்கள் பயணத்தில் கூடவே கொண்டு செல்ல முடியுமா? மடியில் கணத்தைக் கொண்டு சென்றால் வழி முழுக்க பயம் இருக்கத்தானே செய்யும்? இந்தக் கணத்தை நாங்கள் தூக்கி எறியவேண்டும்! ஆனால் எப்படி? நான் பானிக் நோயில் எட்டுமாதங்கள் மிகவும் சிரமப்பட்டேன். அதற்குக் காரணம் என் உறவுகள் சிநேகிதம் எனக் குறுகிய காலத்தில் ஐந்தாறு பேர் அறுபத்தெட்டு, எழுபது வயதுகளில் இறந்ததுதான். அவர்கள் பிரிவும் அதனால் ஏற்பட்ட பயமும் என்னை மிகவும் சோர்வு அடைய வைத்தது. அந்த நோயிலிருந்து விடுபடப் பல வழிகளில் முயற்சி எடுத்தேன். இப்போது பல சமூக ஊடகங்கள் உள்ளன. என்ன தேவையோ இலகுவாக அறிந்து கொள்ள முடியும். நான் பல வழிகளில் தேடி மூச்சுப் பயிற்சிகள் செய்யத் தொடங்கினேன். தொடர்ந்து மனச் சந்தோஷத்துக்காகச் சில உடற் பயிற்சிகளும் செய்தேன். என் பொழுதை வேறு வழிகளில் திருப்ப ஓவியங்கள் வரைந்தேன். கைவேலைகள் செய்தேன். இவையெல்லாம் எனக்கு எதுவித உபயோகம் இல்லாவிட்டாலும் என் மனதுக்கு உபயோகமாகவும், என் எண்ணங்களைத் திசை திருப்பவும் உதவியது.
வீட்டைவிட்டு தனியே போகாத நான் வெளியே போகத்தொடங்கினேன். அருகில் உள்ள கிராமங்களுக்கெல்லாம் போய்வந்தேன். என் மனம் மாற்றம் அடையத் தொடங்கியது . நெஞ்சு நோ வரும் போதெல்லாம் “நேற்று நோ வரும்போது சாகாத நீ, இன்று நெஞ்சு அடைத்துச் சாகப் போறீயா?“ என்று எனக்கு நானே கேட்பேன். அட சீ, நீ அந்தப் பக்கம் போ என்ற வகையில் என் முகத்தைத் திருப்புவேன். இரவில் தூங்கும்போது வேண்டாத எண்ணங்கள் எல்லாம் அடுத்து அடுத்து படம் போல ஓடும். அதைத் தவிர்க்க ஒன்றிலிருந்து ஆயிரம்வரை எண்ணுவேன் தூக்கம் வந்து உறங்கி விடுவேன். முக்கியமான ஒன்று, காலையில் ஐந்து ஆறு மணிக்கு முன் படுக்கையைவிட்டு எழுந்துவிடுவேன். அதனால் இரவில் தூக்கம் கேள்வி கேட்காமலே வந்துவிடும். சமையல் அறையில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள பதார்த்தங்களை நாளுக்கு ஒவ்வொன்றாக அவித்துக் குடிப்பேன்.
ஆனால் ஒன்றே ஒன்றை எண்ணத் தொடங்கிவிட்டேன், எல்லோருக்கும் பிறக்கும் போதே இறப்பும் எழுதப் பட்ட ஒன்றாகும். அது நடக்கும் நேரம் நடந்தே தீரும். எப்பொழுது வருகிறதோ வரும்போது அது வரட்டும் என்ற எண்ணமும், வயோதிபத்தின் மரணப்பயத்தை முழுமையாக போக்கிவிடும் என்பதும் உண்மையிலும் உண்மையாகும். இது என் கருத்தேயாகும்.சிலர் எண்ணலாம் எங்களுக்கு அப்படியான பயங்கள் வருவதில்லை என. அப்படி இருப்பீர்கள் என்றால் புண்ணியம் செய்தவர்கள் நீங்கள். ஒருசிலர் மனோபலம் கொண்டவர்கள் அவர்களுக்கும் இந்தப் பயம் கிட்டவே நெருங்காது. யாருக்காக எழுதப்பட்டதோ இக்கட்டுரை, அவர்கள் எல்லோரும் கூடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் வாங்கோ.
18 total views, 12 views today