ஐயனே ! என்னுயிரின் ஆசையே !

உயிர் தீண்டும் உறவினை உணர்ந்தவர் உலகத்தின் மொத்த சுகத்தையும் அனுபவித்திருப்பர். அமரசுகம் எதுவென்று அறிந்திருப்பர். அது கிடைத்தற்கு அரியது. உயிர் தீண்டுவதாக எண்ணுவது வேறு. நிஜமாகவே உயிர் தீண்டப்படுவது வேறு. மிக நுட்பமான வித்தியாசம் என்றாலும் விளைவு மிகப் பெரிது.

“தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா- நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா”
“ அவன் கை இட்ட இடத்திலெல்லாம் தண்ணென்று இருந்ததடி புதிதோர் சாந்தி பிறந்ததடி”

ஒன்றின் மீதான அதிகூடிய விருப்பினை ஆசை என்று அழைக்கலாம். என் உயிரின் அதிகூடிய விருப்பாக இருக்கும் என் ஐயன் எனை நீங்கத் துணிந்தால் ??? கடவுளே ! என்னை சூழ்ந்திருக்கும் அத்தனை இன்பங்களும் நீங்கி விட்டது போலல்லவா இருக்கும் ? ஏதுமற்றவளாகி ஏழையாகித் தானே கிடப்பேன்? உயிர்க்கு உயிராகிக் கிடந்தவர் பிரிந்தால் உயிர் தங்குமா? நான் உயிர் வாழ்வதே உங்கள் திருவுளத்தின் கருணையினால் , அந்த காதலினால் தானே ? இவ்வுலகினில் வாழ்வதா ? இல்லை என்னை கொன்றுவிடப் போகுறீரா? ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் என்று கேட்பது பாரதியின் குயில் மட்டும் தானா ??

ஐயனே ! என்னுயிரின் ஆசையே !
ஏழையெனை வையமிசை வைக்கத் திருவுளமோ ?
மற்றெனையே கொன்றுவிட சித்தமோ ?
கூறீர் ஒரு மொழியில்
அன்றில் சிறு பறவை ஆண்பிரிய வாழாது
ஞாயிறு தான் வெம்மை செயில்
நாள் மலர்க்கு வாழ்வுளதோ?

சூரியனின் ஒளி தீண்டினால் தான் மலரும் எனும் பூவிற்கு, அந்தச் சூரிய ஒளி தாங்கமுடியாத வெப்பத்தினை தரும் எனில் , சூரிய ஒளி பட்டால் வாடும் எனும் நிலைவரின் எவ்வாறு உயிர் வாழும் ?? காதல் கொண்ட ஆண் பிரிந்தாலும் வாழத் துணியும் பெண் மனது இருப்பதாக இன்னும் தெரியவில்லை. அப்படியே வாழ்ந்தாலும் அது சுயமிழந்த உயிரிழந்த வெறும் சடமாகவே கிடக்கவும் கூடும்.

“ சதையைத் துண்டு துண்டாக்கினும் உன் எண்ணம் சாயுமோ ? ஜீவன் ஓயுமோ ? “

ஆனாலும் வெவ்விதியை வென்றிடுவார் இவ்வுலகில் உண்டோ ?? ஏதேதோ காரணங்களை காட்டியும் காட்டாமலும் நீர் என்னை விட்டு விலகத் துணிகிறீர். என்னகத்தே நீர் கொண்ட ஸ்தானத்தை அறிவீரா? இப்பூவுலகில் உள்ள பலகோடி, பலகோடி மக்களில் ஒருவராய் உம்மை நான் என்றும் கருதியதில்லை. என் ஐம்புலன்களும் வியந்து மகிழும் விண்ணுலகத்து தெய்வமாய் என்னுள்ளத்தே உங்கள் இருப்பிடத்தை ஸ்தாபித்துளேன். இன்னோர் மானுடனால் நிரப்ப முடியாத பேரிடம். நின் பிரிவால் வெற்றிடமாகும் என்று தெரிந்தும் பிரியத் துணிந்தால், பிரிந்திடும் என் ஆவி.

தேவர் சினந்துவிட்டால் சிற்றுயிர்கள் என்னவாகும் ?
ஆவற் பொருளே அரசேயென் ஆரியரே
சிந்தையில் நீர் என்மேல்
சினம் கொண்டால் மாய்ந்திடுவேன்
வெந்தழலில் வீழ்வேன் விலங்குகளின் வாய்ப்படுவேன்

ஐயனே ! என் தெய்வமே ! நீர் என்மீது குற்றம் சுமத்தினால் அதனை மறுப்பதற்கு கூட உம் மீது நான் கொண்ட அன்பு இடம் தருகுதில்லை. ஆனாலும் என்மேல் எந்தக் குற்றமும் இல்லை. இதனை யார் நம்பிடுவார் ? நான் சொல்லித்தான் நீர் புரிய வேண்டுமா ?

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்று குறிப்பினில் ஒன்றுபடும் சுவையை காட்டித் தந்த உமக்கு இப்போது நான் சொல்லித் தான் புரிய வைக்க வேண்டுமா ? இல்லை இல்லை என் ஐயனே ! நீர் என்னருமை செல்வம்.
என் உயிரின் உயிர். என் தெய்வம். உம்மை குற்றம் சொல்ல ஒருபோதும் என் சிந்தை கூட துணியாது. என் வார்த்தைகளை நம்பாது நீர் புறக்கணிப்பது விதியின் விளையாட்டு மட்டுமே.

நின்மேல் சுமை முழுதும் நேராகப் போட்டுவிட்டேன் வெவ்விதியே !

நிற்க.! இதுவொன்றும் குயிலின் உளறுமொழி போல தோன்றவில்லை. இந்த வையத்தில் வாழ்கின்ற மக்கள் பலரின் உளமொழிபோல் எண்ணத் தோன்றுகிறது. தற்பெருமையும், அகங்காரமும், மற்றவரை குறை காணும் குரூர புத்தியும், குரோதமும், கோபமும் கொண்டு கூப்பாடு போட்டுக்கொண்டு தன்னையும் அழித்துத் தன் மீது அன்பு கொண்டவரையும் அழித்து வாழத் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் கலக மானிடப் பூச்சிகளுக்கு என்றாவது இன்பபுரியின் வாசலையாவது காட்டிச் செல்ல நினைத்திருப்பார் பாரதி.

காதலினால் மானிடருக்கு கவலைபோம், ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே! அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம் என்று கற்றுத் தந்த பாரதி குயில் பாட்டு என்னும் அற்புத காவியத்தை வடிக்கிறார். வேதாந்தமாக விரித்துச் சொல்ல வாசகனையே அழைக்கிறார். பொருளுணர்தலும் , சுவை உணர்தலும் அவரவர் திறன் என்ற திறந்த வெளிக்குள் விட்டுவிட்டு கண்டதெல்லாம் கனவு என்று சொல்லிச் செல்லும் பாரதியின் நுண்மையை வியந்தவளாய் மீண்டும் அவனைச் சிக்கெனைப் பிடித்தேன் சரண்புகுந்தேன் தொலைந்தேன்.

21 total views, 12 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *