காத்திருக்கும் போது நேரம் நின்று விடுகிறதா?


Dr.நிரோஷன் தில்லைநாதன் (யேர்மனி)

நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பெரிய வரிசையில் நிற்கின்றீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு நொடியும் நிமிடங்கள் போன்று தோன்றும் அல்லவா? அப்போது நேரம் ஏன் இவ்வளவு மெதுவாகச் செல்கிறது என்று யோசிக்கத்தோன்றும். இந்த அனுபவம், நாம் அனைவரும் சந்திக்கும் ஒன்றாகும். நேரத்தைப் பற்றிய நமது உணர்வுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் மற்றும் நரம்பணுவியல் சார்ந்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் இன்னும் ஈடுபட்டுள்ளனர்.

காத்திருப்பது நம் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகும். பேருந்து நிறுத்தத்தில் அல்லது மருத்துவரின் காத்திருக்கும் அறையில் கூட நேரம் நிற்கும் போல் தோன்றும். ஆனால் ஏன் காத்திருப்பது இவ்வளவு போராட்டமாக உணரப்படுகின்றது? ஆராய்ச்சிகளின் படி இதற்குப் பல காரணிகள் உள்ளன எனக் கண்டறியப்பட்டுள்ளது. நம் எதிர்பார்ப்பு, சூழ்நிலை, மற்றும் நம் மனநிலை ஆகியவை எவ்வாறு நாம் காத்திருக்கும் நேரத்தை உணர்கிறோம் என்பதைத் தீர்மானிக்குமாம். உதாரணமாக, நாங்கள் அவசரத்தில் இருக்கும்போது அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது காத்திருப்பு நேரம் நீண்டதாகவே தோன்றும்.

காத்திருப்பதிலும் இரு விதமான காத்திருப்பு இருக்கின்றது, ஒன்று “செயலில் ஈடுபட்ட காத்திருப்பு” (ழஉஉரிநைன றயவைiபெ) மற்றது „செயலில் ஈடுபாடற்ற காத்திருப்பு“ (ரழெஉஉரிநைன றயவைiபெ) ஆகும். காத்திருக்கும் அறையில் இதழ்களைப் படிக்கும்போது நேரம் வேகமாகச் செல்லும் போல் தோன்றும், ஆனால் இதுவே எதையும் செய்யாமல் இருந்தால், நிமிடங்கள் முடிவில்லாதவை போல் உணரப்படும். ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது என்னவென்றால் நாம் ஒரு சூழ்நிலையைக் கட்டுப்படுத்துகின்றோம் என்று எண்ணினால் அல்லது நாம் செய்யவிருக்கும் விஷயத்துக்குக் காத்திருப்பது அத்தியாவசியம் என்று தோன்றினால், நமக்குக் காத்திருப்பு நேரம் குறைவாக இருப்பது போல் தோன்றுமாம்.

நமது நேர உணர்வில் உணர்ச்சிகள் முக்கியமான பங்கினை வகிக்கின்றன. நேரம் வேகமாகச் செல்லும் போல் தோன்றும் உணர்வை நேர்மறையான உணர்வுகள் ஏற்படுத்துகின்றன, அதேசமயம் எதிர்மறையான உணர்வுகள் அதனை நீடிக்கின்றன. ஒரு நண்பருடன் சிறந்த உரையாடல் எளிதில் மணிநேரங்களை நிமிடங்களாக உணரச் செய்கிறது, அதேசமயம் விறுவிறுப்பில்லாத ஓர் உரையாடல் நேரம் நீண்டு கொண்டு செல்லும் உணர்வை ஏற்படுத்துகிறது. இதற்கான காரணம் மாறுபட்ட மனநிலைகளில் உற்பத்தியாகும் ஹார்மோன்களிலும் நரம்பு தூண்டுதல்களிலும் இருக்கிறது.

முக்கியமான உணர்ச்சிமிக்க தருணங்களில், நமது மூளை வேறுபட்ட முறையில் செயல்படுகிறது. மிகுந்த உணர்ச்சிகள் – நேர்மறை அல்லது எதிர்மறை – சில நரம்பு பகுதிகளைத் தூண்டுகின்றன, அவை நமது நேர உணர்வை மாற்றுகின்றன. இந்த மூளையில் ஏற்படும் வேதியியல் செயல்பாடு, நேரம் போகும் விதத்தை எவ்வாறு நாம் உணருகிறோம் என்பதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆராய்ச்சிகளின் படி, அட்ரினலின் மற்றும் டோபமின் போன்ற ஹார்மோன்கள் நேரத்தைத் துரிதமாகவோ அல்லது மெதுவாகவோ உணரச்செய்வதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. இதுவே மிகுந்த மன அழுத்தமுடைய அனுபவங்கள் நேரத்தை நீடிக்கும் உணர்வைக் கொடுக்கின்றன, ஏனென்றால் மூளை ஒவ்வொரு விபரத்தையும் ஆழமாக உணர்கிறது.

நமது மூளையில் நேரத்தை உணர எந்தவொரு சென்சார்களும் இல்லை. மாறாக, அது பல்வேறு முறைகளைக் கொண்டு நேரத்தின் பயணத்தைக் கணக்கிடுகிறது. மூளையின் ஆழத்தில் உள்ள ஒரு பகுதியாகிய இன்சுலார் கார்டெக்ஸ், இந்தச் செயல்முறையில் முக்கிய பங்கை வகிக்கிறது. அது உடல் சிக்னல்கள் மற்றும் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுகிறது, இதனால் நம்மால் நேரத்தை உணர முடிகிறது. நமது மூளையில் உள்ள இன்சுலார் கார்டெக்ஸ் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்வதற்கும், அதில் நம்முடைய இடத்தை எப்போதும் உணர்வதற்கும் உதவுகிறது. இது நமது இதயத்துடிப்பு மற்றும் மூச்சுப் பயிற்சி போன்ற உடலின் உள்ளடக்கிய செயல்களையும், வெளியே நம்மால் காணப்படும் மற்றும் கேட்கப்படும் செயல்களையும் இணைக்கிறது. இதில் உள்ள ஆச்சரியம் என்னவென்றால், நாம் மன அழுத்தமான நிலைகளில் இருந்தால், நம்முடைய மூளை எல்லாமே மெதுவாக நடக்கிறது (ளடழற அழவழைn) என்று உணரச் செய்யலாம். உதாரணமாக, சிலர் வாகன விபத்து போன்ற ஆபத்தான தருணங்களில், நிகழ்வுகள் மெதுவாக நடந்துகொண்டு இருப்பதுபோல உணர்கிறார்கள். இது ஓர் உயிர்காக்கும் முறையாகும்: நெருக்கடியான தருணங்களில், நம்மை பாதுகாக்க மூளை அதிகத் தகவல்களை எடுத்துக்கொள்ள முயலுகிறது.

காத்திருப்பது பற்றி மக்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அவர்களின் கலாச்சாரம் தீர்மானிக்கிறது என்பது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. சில இடங்களில், காத்திருப்பது வாழ்க்கையின் ஒரு சாதாரணப் பகுதியாகவே கருதப்படுகிறது, ஆனால் மற்ற இடங்களில், இது எரிச்சலாக அல்லது நேரத்தை வீணாக்குவது போலவே தோன்றுகிறது. உதாரணமாக, வேகமாக இயங்கும் நாடுகளில், காத்திருப்பது பெரும்பாலும் ஒரு பிரச்சனையாகவே கருதப்படுகிறது, ஆனால் பிற கலாச்சாரங்களில் பொறுமையுடன் காத்திருப்பது நல்ல பண்பாகவே பார்க்கப்படுகிறது.
உதாரணமாக, ஜப்பானில் நேரத்தைப் பிடிப்பது மிகவும் முக்கியமானது. ரயில்கள் மற்றும் பேருந்துகள் மிகவும் சரியாக இயக்கப்படுவதால் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை அரிதாகவே வரும். ஆனால் கிராமப்புறங்களில் அல்லது நேரத்தைப் பற்றிய தொந்தரவு இல்லாத கலாச்சாரங்களில், காத்திருப்பது பெரிய சுமையாக உணரப்படுவதில்லை.

தொழில்நுட்பம் நம் நேர உணர்வையும், பொறுமையையும் மிகவும் மாற்றியுள்ளது. இன்றைய உலகில், எதையும் ஒரு கிளிக் மூலம் பெற முடிகிறது, எனவே காத்திருப்பதற்கு நம்மிடம் பழக்கமில்லை. விரைவான இணையம், உடனடி விநியோகங்கள், மற்றும் உடனடி சேவைகள் எதையும் உடனே பெற வேண்டும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளன. இந்த உடனடி கிடைக்கும் வசதிகள் நம்முடைய எதிர்பார்ப்புகளை உயர்த்தியுள்ளன, அதாவது, எப்போதும் எதையும் உடனே பெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால், விசித்திரமாக, இந்த வேகமான வாழ்க்கைமுறை, நம்மை அதிகமான மன அழுத்தத்திற்கும், திருப்தியின்மைக்கும் வழிவகுக்கிறது, ஏனென்றால் எப்போதும் வேகமாகவும் சிறப்பாகவும் வேண்டும் என நம் எதிர்பார்ப்புகள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. சரி, காத்திருப்பதற்குப் பின்னால் இருக்கும் அறிவியலைப் பற்றி அறிந்தது போதும். காத்திருப்பது நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றுதான், ஆனால் காத்திருப்பதை எவ்வாறு எளிதாக்கலாம் என்று பார்ப்போமா?

திசை திருப்பங்களைத் தேடுங்கள்: ஒரு புத்தகம் படிப்பது அல்லது இசை கேட்பது போன்ற எதையாவது சுவாரசியமானவற்றில் ஈடுபடுங்கள். இது நேரத்தை வேகமாகச் செல்லும் போல் உணரச்செய்கிறது, மேலும் உங்கள் மனதை வேறிடத்துக்குக் கொண்டு செல்லும்.
நேர்மறையாக யோசிக்கவும்: காத்திருப்பதை ஒரு சிரமமாகப் பார்க்காமல், தளர்ச்சி அல்லது தியானத்திற்கு ஒரு வாய்ப்பாகப் பாருங்கள். ஒரு சிறிய இடைவெளியை அனுபவிக்கவும், உங்கள் மனநிலையை மாற்றவும் இது உதவும்.
மனதை சுமுகமாக்குதல் பயிற்சி செய்யுங்கள்: மனநிலையைச் சீராக வைத்திருக்க உதவும் தியானம் மற்றும் மன அமைதி பயிற்சிகள் செய்யலாம். நிகழ்காலத்தில் கவனம் செலுத்தும்போது, காத்திருப்பு நேரம் குறைவாக உணரப்படும், மேலும் இனிமையாகவும் தோன்றும்.
செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்: உங்களால் முடிந்தால், உங்கள் சுற்றியுள்ள நிகழ்வுகளில் ஈடுபடுங்கள். உதாரணமாக, வரிசையில் காத்திருக்கும் போது இருக்கக்கூடிய திரைகள் அல்லது செயல்பாடுகள் உங்கள் கவனத்தை ஈர்த்து நேரத்தை வேகமாகச் செல்லச் செய்யும்.

காத்திருப்பது தினசரி வாழ்க்கையின் வெறுப்பூட்டும் இடையூறாக மட்டுமே இல்லாமல், நம் மூளையின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பாகும். மேலும், நம் உணர்ச்சிகள் எவ்வாறு நேரத்தை உணர்வதைப் பாதிக்கின்றன என்பதைக் காட்டுகின்றது. காத்திருப்பதைத் தியானம் செய்யும் அல்லது சிந்தனை செய்யும் ஒரு சந்தர்ப்பமாகக் கருதினால், அது ஒரு நல்ல அனுபவமாக மாறும். காத்திருப்பின் பின்னால் உள்ள காரணங்களை அறிந்து கொண்டு, நாங்கள் அதை எவ்வாறு கையாள்வது என்பதைப் புரிந்து கொண்டு, அதனை நன்றாக அனுபவிக்கக்கூட முயற்சி செய்யலாம். என்ன, முயற்சி செய்வோமா? காத்திருந்து பார்ப்போம்…

—- புதிய கிறிஸ்மஸ் !
சேவியர்.தமிழ்நாடு

கிறிஸ்மஸ் நெருங்கிவிட்டது என்பதை ஊர் உரக்க அறிவித்துக் கொண்டிருக்கிறது. மால்களுக்குப் போனால் கூரையைத் தட்டுமளவுக்கு உயரமான கிறிஸ்மஸ் மரங்கள் மின்சாரத்தைத் தின்று வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருக்கிறன. வீதிகளில் தற்காலிகக் கிறிஸ்மஸ் தாத்தாக்கள் விளம்பரப் பதாகைகளோடு அசைந்தாடுகின்றனர். வீடுகளில் நட்சத்திரங்கள் அந்தஸ்துக்கு ஏற்ப அசைந்தாடுகின்றன. கிறிஸ்மஸ் நெருங்கிவிட்டது ! அது மகிழ்வினை அறிவித்துக் கொண்டிருக்கிறது.

எனில், கிறிஸ்மஸ் வெறும் ஆனந்தத்தின் மேல் கட்டமைக்கப்பட்டதா ? கொஞ்சம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிந்தைய பெத்லேஹேம் வாசலுக்குச் சென்றால் அங்கே பரபரப்பின் உச்சத்தில் புரண்டு கொண்டிருந்த நகரைப் பார்க்கலாம். எல்லோரும் பிஸி பிஸி என ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அங்கே தாய்மை நிலையிலிருந்த அன்னை மரியாளை எங்கே தங்க வைப்பதெனத் தெரியாமல் கணவர் யோசேப்பு கலங்குகிறார். கடைசியில் சத்திரங்கள் நிராகரித்து விட தொழுவத்தில் அடைக்கலமாகின்றனர்.

சத்திரக்காரர்கள் மோசமானவர்கள் அல்ல ! அவர்கள் கொடுமைக்காரர்கள் அல்ல ! ஆனால் பிஸி மனிதர்கள். அவர்களுக்கு வேறெதற்கும் நேரமில்லை. வேலை வேலை என ஓடிக்கொண்டிருந்தார்கள். மக்களின் பிஸி வாழ்க்கை இயேசுவை வெளியே தள்ளி கதவை அடைக்கிறது. அது நமக்கான முதல் எச்சரிக்கை. நமது பிஸி வாழ்க்கை, நமது வாழ்விலிருந்து, இல்லங்களிலிருந்து, இதயங்களிலிருந்து இயேசுவை வெளியேற்றி தொழுவத்துக்கு அனுப்பி வைக்கிறதா ?

அடுத்த ஒரு நிகழ்வில், மழலை இயேசு சிறுவனாய் வீட்டில் இருக்கிறார் அவரைக் கண்டு பணிந்து கொள்கின்றனர் தூரதேச ஞானியர். விலையுயர்ந்த பரிசுகளையும் வழங்குகின்றனர். கிறிஸ்மஸ் பரிசளிப்பின் காலம். ஆனால் எல்லோருக்கும் அந்த மகிழ்ச்சி வாய்க்கிறதா ? தனக்கு எதிராய் ஒரு அரசன் பிறந்திருக்கிறானா என, ஏரோதின் வன்மத்தின் கட்டளை அந்த ஊரில் பூட்ஸ் கால்களை இறக்கியது. இரக்கத்தைக் காலடியில் புதைத்தவர்கள், பாலகர்களைத் தேடி வாள்களோடு அலைந்தார்கள். இரண்டு வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளைகள் எல்லாம் யானை மிதித்த ரோஜா மலராய் அழிந்தன. “இராமாவிலே ஒரு குரல் கேட்கின்றது; ஒரே புலம்பலும் அழுகையுமாய் இருக்கின்றது.” என்ற இறைவாக்கினர் எரேமியாவின் வார்த்தைகள் எத்தனை வலிமிகுந்தவை என்பதை பெத்லஹேம் பதற்றத்துடன் எதிர்கொண்டது.

கிறிஸ்மஸ் ஒரு தெய்வக் குழந்தையின் வருகையையும், பல பெத்லேகேம் குழந்தைகளின் அழுகையும் இணைத்துக் கட்டிய வரலாறு. இன்றும் நமது கொண்டாட்டத்தின் வீதிகளில் எத்தனையோ பேர் இழப்புகளின் வலி சுமந்து அலைகிறார்கள். ஆறுதல் கொடுக்க யாராவது வரமாட்டார்களா எனும் ஏக்கத்தில் தவிக்கிறார்கள். நிராகரிப்பின் வலியும், புறக்கணிப்பின் வலியும் சுமந்து கலங்குகிறார்கள். நமது பார்வை, இயேசுவுக்கு பட்டுத் தொட்டில் கட்டுவதில் மட்டும் இருந்தால் கிறிஸ்மஸ் அர்த்தமிழக்கிறது. அந்த தெருவோர அழுகைக் குரல்களுக்கு ஆறுதல் காட்டுவதில் இருந்தால் கிறிஸ்மஸ் அர்த்தம் பெறுகிறது !

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் காலம் தான். அது எல்லோருக்குமான கொண்டாட்டமாய் இருக்க வேண்டும். கிறிஸ்மஸ் மகிழ்ச்சியின் காலம் தான், அது எல்லோருக்குமான மகிழ்ச்சியாய் மாற வேண்டும். கிறிஸ்மஸ் மீட்பின் தருணம் தான், அது எல்லோருக்குமான மீட்பாய் மலரவேண்டும். அதற்காக நாம் இதயத்தைத் திறந்து இறைவனை வேண்டுவது மட்டுமல்ல, கரங்களைத் திறந்து எளியவர்களையும் தீண்டவேண்டும். தெருக்களில் இனிமேல் சிரிப்பின் பேரொலி எழட்டும். ஏழைகள் இனிமேல் தோழர்கள் ஆகட்டும். அப்போது கிறிஸ்மஸ் அர்த்தப்படும் ! அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்து !

24 total views, 12 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *