16 வயதுக்கு மேற்பட்டோர் கல்வியும் பெற்றோர் தலையீடும்~~அப்பாடி தப்பிவிட்டோம்|| என்ற மனப்போக்கில் பல பிள்ளைகள்!

அறிவுக்கண்ணைத் திறந்திடும்
விரிவாய் உலகைக் காட்டிடும்
வித்தியார்த்திகள் ஆகவும்
விஷயார்த்திகள் ஆகவும்
வாழவழிகாட்டும் கல்வி
அணுவைப் பகுப்பாய்ந்த விஞ்ஞானிகளிலிருந்து உளத்தைப் பகுத்தாயும் உளவியலாளர் வரை இளையோர் கல்வித் தேர்வு அவர்கள் கையிலேயே ஒப்படைக்கப்படல் வேண்டும் என்று கூறுகின்றார்கள். கற்றல் ஒருபுறம் கற்பித்தல் ஒருபுறம் இருக்க இடையில் பெற்றோர் பிள்ளைகளின் கல்வியில் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டியது அவசியமில்லை. பிள்ளையைப் பெற்றுவிட்டதற்காக அவர்கள் உணர்வுகள் பெற்றவர்களுடையதாக முடியுமா? பிறக்கும் போதே கட்டுச் சோற்றுடன்(பால்) வந்து பிறந்தவர்கள் அவர்கள். தங்கள் முயற்சியினால், வளர்ச்சிப்படிகள் கண்டவர்கள். ‘‘அவர்கள் வளர்வதற்குப் பெற்றோர்கள் ஒத்தாசையாய் இருந்திருக்கலாம். அவர்களுக்கூடாக வந்தவர்கள் என்பதற்காக அவர்கள் உணர்வாக பெற்றவர்கள் மாறுதல் கூடாது. அவர்கள் அவர்களுக்காகவே பிறந்தவர்கள்|| என இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் கூறியிருக்கின்றார். இவர்கள் தலைமுறை இடைவெளியில் கணனி உலகில் உலகத்தையே காலடியில் வைத்திருப்பவர்கள். அவர்களிடம் பெற்றவர்கள் கற்க வேண்டியது ஏராளம் இருக்கிறது. எனவே பெற்றோர்களே! கற்றுக் கொள்ளுங்கள். கல்வித் தேர்வுக்கு வழிவிடுங்கள்.
பிறந்த குழந்தையை தனியறையில் தூங்கவிடுவது தொட்டு பாலர் பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம் வரையில் தன்னம்பிக்கை போதிக்கும் கலாச்சாரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாடசாலை சீருடை பிள்ளைகளின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று சீருடையையே அறிமுகப்படுத்தாத ஜேர்மனி நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறான சூழ்நிலையிலுள்ள இளவயதினர் ஒவ்வொரு நடவடிக்கையிலும் (உதாரணம்: உணவு, உடை, பொழுதுபோக்கு) தமது ஆக்கிரமிப்பைப் பயன்படுத்தும் பெற்றோர் தாம் விரும்பிய கல்வியைத் தெரிவு செய்வதற்குரிய அடிப்படை கல்விச் சுதந்திரம், மனித உரிமையும் மறுக்கும் போது பெற்றோரிடம் ஒரு எரிச்சலை ஏற்படுத்தி பெற்றோர் பிள்ளை உறவிலே ஒரு பிளவை ஏற்படுத்துகின்றனர். பிள்ளைகளோ பல்கலைக்கழகங்களைத் தெரிவு செய்கின்ற போது ~~அப்பாடி தப்பிவிட்டோம்|| என்று தொலைதூரத்திலுள்ள பல்கலைக்கழகங்களைத் தெரிவுசெய்கின்றனர்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கின்றது. தமது கற்றல் வலு எத்தகையது. எது தம்மால் முடியும் என்னும் உண்மையை அவர்களே அறிந்தவர்கள். ~~கற்கக் கசடறக் கற்க|| அதாவது தெளிவுற ஒரு விடயத்தைக் கற்க வேண்டும். அப்படிக் கற்கவேண்டுமானால், ஒன்றில் முழுமனதுடன் ஈடுபட வேண்டும். விருப்பமான துறையென்றாலேயே முழுமனதுடன் ஈடுபடமுடியும். அதில் பரிபூணர வெற்றியையும் பெற முடியும். அதில் உயரத்தைத் தொட முடியும். எனது மகன் டொக்டர், எஞ்சினியர் என்று கூறுவதில் எமது பெற்றோர்களுக்கு ஒரு பெருமையிருக்கிறது. இது எங்கள் நாட்டிலிருந்து விமானம் ஏறும் போது விட்டுவிட்டு வந்திருக்க வேண்டிய பெருமை. டொக்டர், எஞ்சினியர், கணனி இவற்றை விட்டால், மற்றைய எதைப் படித்தாலும் பயனில்லை என்னும் தவறான அபத்தமான கருத்து எம்மவரிடையே இருக்கின்றது. இவற்றிற்குப் படிக்காவிட்டால், எங்கள் மானம் தான் போகும் என்று டிடயஉம அயடை பண்ணுவதனால் ஆவதென்ன? சொந்த விருப்பம், கற்கின்ற துறை என்று இரட்டைச் சூழலில் கற்க வேண்டிய நிலை இளவயதினருக்கு ஏற்பட்டு அவர்களுக்கு மனஅழுத்தம், ஏற்படுகின்றது. கல்விப்பழு சிலவேளை தற்கொலை செய்ய வேண்டிய நிலைக்கும் ஆளாக்கும்
~~அம்மா எனக்கு இரத்தைக் கண்டால் பிடிக்கவில்லை. நான் ஜேனலிஸ்ட் படிக்கப் போகின்றேன். அது எனக்கு நன்றாகப் பிடித்திருக்கிறது|| என்னும் மகளிடம் ‘சும்மா இருடி நான் பி. ஏ லிட்ரிசர். இப்ப வீட்டில விதம்விதமாச் சமைக்கிறேன். விட்டுப்போட்டு ஒழுங்காப் படி. மானத்தைக் காப்பாற்றும் வழியைப் பார்|| என்று ஓரு அம்மா சொல்கின்றார். தன்னால் முன்னேற முடியவில்லை என்பதற்காக மகளாலும் முடியாது என்று ஒரு தாய் எப்படி நினைக்க முடியும். முன்னேற்றம் என்பது அவரவர் துறைகளைப் பொறுத்தது. கல்வியறிவில்லாத ஒருவர் தொழிலதிபதியாக வரவில்லையா? பல்கலைக்கழகம் செல்லாத எத்தனையோ பேர் வெளிநாடு வந்து பட்டப்படிப்பு கற்கவில்லையா? காலச்சூழல், வயதுக்கோளாறு தள்ளிப்போட்ட கல்வி காலம் தாழ்த்தி வரவில்லையா?
எங்கள் பிள்ளைகளுக்கு அறிவு போதாது. கல்வியைத் தீர்மானிக்;;கும் பக்குவம் அவர்களுக்கு இல்லை. என்னும் அறியாமையில் நமது பெற்றோர் வாழுகின்றார்கள். எம்மை அறியாமலே எமது தோளைத் தாண்டி வளர்வது போல் எம்மை அறியாமலே அவர்களுக்கு அறிவு வளர்ச்சியும் உடல் வளர்ச்சியுடன் ஏற்படுகின்றது. சந்ததி இடைவெளி தரம் கூடிய சமுதாயத்தை உருவாக்குவதை, கற்கால மனிதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது எமக்குப் புரியவில்லையா? இதைவிட ஆசிரியர் மையக்கல்வியில் கல்வி பயின்று வந்த நாம், மாணவர் மையக்கல்வியில் கல்வி பயிலும் எமது இளவயதினருக்கு ஆலோசனை கூறுவது எந்த விதத்தில் பொருந்தும். இளையோருக்குத் தாமே ஒரு துறையைத் தெரிவு செய்யும்படிப் பாடசாலையிலேயே அவர்களுக்குச் சலுகை வழங்கப்படுகின்றது, வழிப்படுத்தப்படுகின்றது. அவர்கள் எந்தத் தொழிலைத் தெரிவு செய்தாலும் அதில் முன்னேறவும், எந்தத் தொழிலாய் இருந்தாலும் மனிதாபிமானத்துடன் மதிப்புக் கொடுக்கவும் இந்த நாட்டில் பண்பு இருக்கின்றது. அத்துடன் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறியதும் அல்லது தமது படிப்பை முடித்ததும் தொழில்வாய்ப்புக் கிடைக்கக் கூடிய துறையைத் தான் இளையோர் நாடுவர். அந்தத் துறை பற்றிய பூரண அறிவைப் பெறுவதற்காக கணனி, நூல்கள் என நுழைந்து அலசி ஆராய்வார்கள். அதற்குரிய வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கின்றது. எனவே நமது சிறுவர்களுக்கு எதுவும் தெரியாது. என்ற எண்ணத்தைப் பெற்றோர் கைவிடவேண்டியது அவசியம். இளையோர் ஆர்வமுள்ள கல்விக்கு ஊக்கம் கொடுப்பவர்கள் தான் சிறப்பான பெற்றோர்கள். இளையோர் தமக்குத் தகுந்த துறையைத் தாமே தெரிவு செய்ய பெற்றோர்கள் ஒத்துழைக்கும் போது பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு மொடல் பெற்றோராவார்கள். பிள்ளைகளும் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள்.