மிருகங்களா குழந்தைகளை பராமரித்தவை?
- நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் (அவுஸ்திரேலியா)
தாய்மையின் உன்னதப் பாசத்தை மிருகங்களிடமும் கணமுடியும். ஆனால் மனித நாகரீக உலகில் குப்பைத்தொட்டியில் குழந்தைகள் கண்டெடுக்கப் படுகின்றன. அனாதை இல்ல வாசலில் குழந்தைகள்! ஏன் இந்தக் குழந்தையைப் பெற்றெடுத்தவள் தாய் இல்லையா? அவளுக்கு பாசம் கிடையாதா? மிருகங்களிலும் மோசமானவளா அந்தத் தாய்? இல்லவே இல்லை. அவளை அந்த நிலைக்கு ஆளாக்கியது இந்த நாகரீக சமுதாயமே. ஒருவள் திருமண பந்தத்திற்கு உட்படாது கருத்தரிப்பதோ குழந்தையைப் பெற்றுக் கொள்வதோ சமுதாயம் ஏற்று கொள்ளாத ஒன்றாக இருந்தமையே இத்தகைய கொடுமைகள் நடக்கக் காரணமானது. அவ்வாறு குழந்தையைப் பெற்று விட்டவள் அவமானப் படுத்தப்படுகிறாள். அதற்கு முகம் கொடுக்க பயந்தே குழந்தையை அறியாப் பருவத்தில் அனாதரவாக விட்டு விடுகிறாள். இந்தக் கொடுமை இன்று நேற்று ஏற்பட்டதல்ல, புராணக் காலத்தில் குந்திதேவியால் கைவிடப்பட்ட கர்ணன் கதை நாம் அறிந்ததே.
காளிதாசனின் நாடகங்களிலே மிகப் பிரபலமானது சாகுந்தலம். சாகுந்தலை என்ற காவிய நாயகியோ குழந்தைப் பருவத்திலே அன்னப் பட்சிகளால் பராமரிக்கப்படுகிறாள். கண்ணுவ முனிவர் அவளைக் கண்டெடுத்து தனது செல்லக் குழந்தையாக வளர்கிறார். அன்னப் பட்சி வட மொழியிலே ‘சாகுந்தலம்’ ஆகும். அன்னப் பட்சிகளால் வளர்க்கப்பட்ட பெண் ஆதலால் ‘சாகுந்தலை’ எனப் பெயரிட்டு வளர்க்கப்பட்டாள். என்ன அன்னப் பட்சி வளர்ப்பது வெறும் கற்பனை எனத் தோன்றுகிறதா? மனிதக் குழந்தைகளை மிருகங்கள் பறவைகள் பராமரித்து வளர்ப்பதா? அழகான கற்பனை என எண்ணுகிறோம். ஆனால் மனித ஜென்மங்களால் அனாதரவாக விடப்பட்ட மனிதக் குழந்தைகளை மிருகங்கள் பராமரித்தமை நிஜ வாழ்வில் நடந்த உண்மையே. அண்மையில் புநழபசயிhiஉ உhயnநெட- இல் இதை விரிவாகக் காட்டினார்கள்.
றஷ்ய நாட்டிலிருந்து பிரிந்த நாடே யுக்ரேன். இங்கு போதை மருந்துக்கு அடிமையாகிறார்கள் பிள்ளையைப் பெற்ற பெற்றோர். வீட்டில் வளர்ப்பு நாயும் இருந்துள்ளது. நட்டாலியா என்ற பெண் குழந்தை பெற்றோர் கவனிப்பு அற்றவளாக நாய்களின் அரவணைப்பிலே, நாயின் ஆதரவில் நாய்களால் வளர்க்கப் படுகிறாள். தனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாக நாய்களுடன் படுத்து அவற்றின் அரவணைப்பிலும் ஆதரவான அவற்றின் சூட்டிலும்தான் வளர்ந்தாள் என அவளே கூறுகிறாள். இந்த நிலையிலே எவ்வாறோ வெளி உலகுக்கு இது தெரியவர அவளை அரச சேவையாளர் நாய்களில் இருந்து பிரித்து எடுத்துச் செல்வதை விடியோ படமாகக் காண்பித்தார்கள். இவ்வாறு பிரித்து எடுத்துப் போனபோது இவளுக்கு தனது கைகளை பாவிக்கத் தெரியவில்லை. நாய்கள் மாதிரியே குனிந்து வாயால் உணவை உண்டாள். இவ்வாறான நிலையில் கண்டெடுக்கப்பட்டவளுக்கு, படிப்படியாக சமுக சேவையாளரால் மனிதப் பழக்க வழக்கங்கள் பயிற்றப்படுகின்றன. அதுவரை அவளுக்குப் பேசத் தெரியாது. படிப்படியாக அவள் மனித சமுதாயத்துடன் ஒன்றி வாழக்கூடியவளாக பயிற்றப்படுகிறாள். இப்போது அவள் பாடசாலையில் படிக்கிறாள். அவளை உற்று நோக்கும்போது மற்றக் குழந்தைகளில் இருந்து மாறுபட்டவளாகவே எமக்குத் தோன்றுகிறாள். 6 வயது வரை மனித சகவாசம் அற்று வாழ்ந்ததால் குழந்தை இயற்கையாக மனிதரிடம் இருந்து, பார்த்து, கேட்டு, அறிய வேண்டியவை, அதன் மூலம் பெறும் இயற்கையான மூளை வளர்ச்சி அத்தனையும் அவள் பெறாதவையே. ஒரு குழந்தையின் மூளை ஐந்து வயதுக்கு முன் மிகத் துரித வளர்ச்சி அடைகிறது. மனித மூளை அதன் பின் அத்தனை வேகமாக வளராது. இவை யாவும் அவளை மீட்டு புதிய வாழ்வுக்கு பயிற்றும்போது தடையாக இருந்ததாக வல்லுநர்கள் அபிப்பிராயம் தெரிவித்தனர். இதற்கு மேலும் ஒரு சிறுவனோ குரங்குகள் ஆதரவில் வளர்ந்துள்ளான்.
தென் ஆப்பிரிக்கக் காட்டிலே பையன் ஒருவன் குரங்குக் கூட்டத்துடன் காணப்படுகிறான். அவனுக்கு அப்பொழுது வயது எட்டு இருக்கலாம். விக்டர் அவனைக் கண்டு வீட்டிற்கு அழைத்து வந்துவிடுகிறார். அதுவரை அவன் பேச்சு மொழி எதுவும் தெரியாது, குரங்குகளில் ஒன்றாகவே வாழ்ந்தவன். விக்டர் மனைவி மேரி அந்த பையனைக் கண்டு திகைக்கிறாள். எந்தவித மனித சுபாவமும் அற்ற அவனை எவ்வாறு வீட்டிலே வைத்திருப்பது? இதை ஏன் இங்கு கொண்டு வந்தாய்? என கணவனிடம் வாதிடுகிறாள். ஆனால் ஒரு மனிதப் பையனை மீண்டும் அனாதரவாக காட்டில் விட மனம் இடம் தரவில்லை. காலப்போக்கில் அவன் மொழியையும் ஓர் அளவு புரிந்து மனிதராக வாழப் பழகிக்கொள்கிறான். தொலைக்காட்சியில் அவனை நாம் பார்க்கும் போது அவன் வயது 16. வளர்ந்த இளைஞன். அவனுக்கு சரியாகப் பேச முடியவில்லை. ஏதோ சிறிது திக்கி கொச்சையாகப் பேச முடிந்தது. அவன் பேச்சை அவன் குடும்பம் புரிந்துகொள்கிறது. ஆனால் கிட்டார் வாத்தியத்தை வாசிக்கக் கற்றுக் கொண்டான். வைத்தியப் பரிசோதனையில் அவன் தலையில் பலமாக அடிபட்டதால் அவன் பேச்சு பாதிக்கப்பட்டுள்ளது என வைத்தியர் ஆய்வில் கண்டறிந்தனர்.
இவன் குரங்குகளே தன்னை வளர்த்ததாக கூறுகிறான். அவன் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அவனை ஆய்வாளர்கள் அழைத்து சென்ற போது, அந்த இடத்தைக் கண்டு அவன் உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்பட்டது. ஆய்வாளர்களின் கணிப்பில் இவன் குரங்குகளால் வளர்க்கப் படவில்லை. ஆனால் குரங்குக் கூட்டம் இவனை தம் கூட்டத்துடன் இணைத்துக் கொண்டன. இந்தச் சிறுவனை அவை விரட்டி அடிக்கவில்லை. குரங்குகள் உண்ட மீத காய் கனியை இவன் உண்டு வாழ்ந்துள்ளான் என கணிக்கின்றனர். மேலும் இவன் மிகச் சிறிய வயதில், மூன்றே வயதிருக்கும் போது மாற்றாம் தாயால் வீட்டை விட்டு விரட்டப்பட்டுள்ளான். காட்டிற்குள் ஓடிய குழந்தை குரங்குக் கூட்டத்துடன் வாழ்ந்ததே உண்மை. குரங்குகளே அவனுக்கு வேண்டிய பாதுகாப்பை வழங்கி உள்ளன.
1920-களில் இந்தியாவில் வாழ்ந்த பிரித்தானிய பாதிரியார், ஓநாய்களால் வளர்க்கப்பட்ட இரட்டைக் குழந்தைகளான பெண் குழந்தைகளை மீட்டு எடுத்துவந்து பவானி, கமலா எனப் பெயரிட்டு வளர்க்கிறார். அவர்களின் படத்தை பிரித்தானியா அனுப்பி உதவி கோரி உள்ளார். பிரித்தானிய ஆய்வாளர்கள் குழந்தைகளை ஓநாய் வளர்க்க முடியாது. பாதிரியாருக்கு இந்தியாவிலே நாதி அற்ற குழந்தைகளை வளர்க்கப் பணம் தேவையாக இருந்திருக்கும், அதற்காக இப்படி ஒரு கதையை சோடித்து படங்களை எடுத்து, மேற்கு நாட்டு பத்திரிகைகளிலே பிரசுரித்தமையால் அவருக்கு குழந்தைகளை வளர்க்கப் பணம் கிடைத்திருக்கும் என விமர்சித்தார்கள். ஆனால் இந்தியாவிலே குழந்தைகள் ஓநாயால் வளர்க்கப்பட்டதாகவும் அதை கிராமவாசிகள் கண்டெடுத்ததாகவும், பத்திரிகையில் செய்தியாக வாசித்துள்ளேன். மேற்கத்திய ஆய்வாளர்களுக்கு அப்பாற்பட்ட விஷயமாக இது இருக்கலாம். ஆனால் இந்தியப் பெருங்கண்டத்தில் இவை நிஜமாகவே நடந்த நிகழ்வுகள் தான். மனிதாபிமானம், மனிதம், இரக்கம் தாய்மை என மனிதரான நாம் பலவாறு பேசுகிறோம். அத்தனைக்கும் அப்பால் தன்மானம், சமூகத்தின் முன், அவமானம் என்பதற்காக, பெற்றக் குழந்தையை அனாதரவாக விடத் துணிகிறது மனித சமூகம். இது எதுவுமே அறியாத மிருகங்களிடம் காணும் அன்பு கூட அற்றவர்தான் மனிதரா? இனிமேலாவது ஒரு பெண் திருமண பந்தத்தில் ஈடுபடாது குழந்தையைப் பெற்றுவிட்டால், மற்றவர் போல குழந்தையும் தாயும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இந்த கொடுமை நடைபெறாது. மேற்கு நாடுகள் இன்று இதை சகஜமாக அங்கீகரிக்கின்றன. ஆனால் எமது சொந்த நாடுகளிலும் இந்த நிலைமை வரவேண்டும்.
18 total views, 12 views today