புத்தாண்டில்புது மனிதன் !

  • சேவியர் (தமிழ்நாடு)
    இந்த புத்தாண்டுக்காகத் தான் காத்திருந்தேன்.. இனிமே பாரு, நான் புது மனுஷன் ! என காலையில் காபி குடிக்கும் முன்னாடியே சுடச்சுட எடுக்கின்ற தீர்மானங்கள் சுவாரஸ்யமானவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தீர்மானங்கள். சிலருக்கு தூங்கத்தைக் குறைச்சு வாழ்க்கைல ஓட ஆரம்பிக்கணும் என்பது தீர்மானமென்றால், சிலருக்கு ஓட்டத்தைக் குறைச்சு தூங்க ஆரம்பிக்கணும் என்பது தீர்மானம். சிலருக்கு அடுத்த லெவலுக்கு ஆபீஸ்ல முன்னேறணும் என்பது தீர்மானமென்றால், சிலருக்கு இனிமேல் கொஞ்சம் வேலையை ஒதுக்கி விட்டு வீட்டைக் கவனிப்போம் என்பது தீர்மானம். எப்படி மனிதனுடைய கைரேகை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமோ, அப்படித் தான் மனிதர்களுடைய புத்தாண்டுத் தீர்மானங்களும் ஒவ்வொரு ரகம்.

சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு சொல்கிறது, எட்டு விழுக்காட்டிற்கும் குறைவான மக்கள் தான் தாங்கள் புத்தாண்டில் எடுத்த தீர்மானத்தை அரைகுறையாகவேனும் டிசம்பர் வரை கொண்டு செல்பவர்கள் என்று ! அதாவது தொன்னூற்று இரண்டு விழுக்காடு தீர்மானங்களும் அந்த ஆண்டின் ஏதோ ஒரு நாளில் உடைபட்டு, அதன்பின் எழும்பாமல் அங்கேயே காலொடிந்து கிடக்கிறது. அதிலும் பாதி பேர் முதல் மாதத்தையே தாண்டுவதில்லை என்பது வேறு விஷயம்.

ஜிம்களில் ஜனவரி மாத முதல் இரண்டு வாரங்கள் உங்களுக்கு இடமே கிடைக்காது. அடுத்தடுத்த மாதங்களில் ஆட்கள் வரும் தடமே தெரியாது. பீச்களில் ஜனவரிமாதம் பேரணி போல மக்கள் ஓடுவார்கள், அதன் பின் ஊரணி போல ஒடுங்கி விடுவார்கள். அதனால் தான் ஜிம்களில் ஒரு வருஷத்துக்கு பத்தாயிரம் ரூபாய் என்றால், ஒரு மாதத்துக்கு ஆறாயிரம் ரூபாய் என்பார்கள். நாலாயிரம் தானே அதிகம் என பத்தாயிரம் கட்டி புக் பண்ணுபவர்கள், அடுத்த வாரமே யோசிப்பார்கள், சே ஆறாயிரமே கட்டியிருக்கலாம் என !

புத்தாண்டுத் தீர்மானங்களும், பாசிபிடித்த குளக்கரைப் படிக்கட்டும் ஒன்று தான். கவனமாய் நடக்கும்வரை பிரச்சினை இல்லை. கொஞ்சம் பிசகினாலும் மண்ட பத்திரம் கேஸ் தான்.

சரி, தீர்மானங்கள் எடுப்பது, அதை தொடர முடியாமல் போவதும் ஒரு பக்கம் என்றால், நாம் எடுக்கின்ற தீர்மானங்கள் எப்படி என்பவை இன்னொரு பக்கம். பொதுவாகவே தீர்மானங்கள் என எதை எடுப்போம் ? உடற்பயிற்சி செய்வேன், புத்தகம் படிப்பேன், ஒழுங்கா தூங்குவேன், நல்லா சாப்பிடுவேன், இந்த தம்மடிக்கிறது தண்ணியடிக்கிறதெல்லாம் விட்டு விடுவேன் இப்படித் தானே.. இந்த ஆண்டு கொஞ்சம் வித்தியாசமான தீர்மானங்களை எடுக்கலாமா ?

  1. தினம் ஒரு நன்றி !

நமது வாழ்க்கையில் நம்மைச் சுற்றி எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள். நம்முடைய அலுவலகத்தில், வீட்டில், நண்பர்கள் வட்டாரத்தில் என பலரும் நம்மோடு இணைந்து வாழ்கிறார்கள். குறைந்த பட்சம் தினம் ஒரு நபருக்கு நாம் நன்றி சொல்ல முயல்வோம். வெறுமனே நன்றி என சொல்லாமல், அவர்கள் செய்த செயல்களைக் குறிப்பிட்டு, அது நமக்கு பயனுள்ளதாக இருந்தது அல்லது மகிழ்ச்சியாக இருந்தது என மனப்பூர்வமாய் குறிப்பிட்டு நன்றி சொல்லுவோம்.

ஒரு நாள் ஒரு நபர் என்று வைத்தால் கூட ஒரு ஆண்டில் நாம் முன்னூற்று அறுபத்தைந்து நபர்களுக்கு நன்றி சொல்லியிருப்போம். அதன் பின் நன்றி சொல்லும் பழக்கம் நம்மை ஒட்டிக்கொள்ளும். உலகம் நன்றியால் நிரம்பும். நன்றி சொல்லும்போது நமது மனதுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி ஒரு புறம், நன்றியைப் பெற்றுக் கொள்பவருக்குக் கிடைக்கும் ஊக்கம் இன்னொரு புறம். நம்புங்கள் ! ஒரே ஆண்டில் உங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் பலரின் வாழ்க்கையில் நீங்கள் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கியிருப்பீர்கள் !

  1. வாரம் ஒரு உதவி !

உதவி தேவைப்படும் மனிதர்களுக்குப் பஞ்சமே இல்லை. ஆனால் உதவிக் கரம் நீட்டும் மக்களுக்குப் பஞ்சம் இருக்கிறது. நமது தூரத்துச் சொந்தக்காரர்கள், நண்பர்களின் குடும்பங்கள், நமது பிள்ளைகளின் நண்பர்களின் குடும்பங்கள் என எத்தனையோ மக்கள் தேவையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். சற்றே கண்ணை டிஜிடல் திரையிலிருந்து வாழ்வின் வீதிக்குத் திரும்பினால் நமது அன்புக்காக ஏங்கும் மக்கள் எக்கச்சக்கமாக இருப்பதைக் காணலாம். வாரம் ஒரு முறை ஒரு உதவி என வைத்துக் கொண்டாலே நமது ஒரு ஆண்டில் அரை நூறு மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி விளக்கை ஏற்றி வைத்திருப்போம்.

பெரிதாக ஒன்றும் செய்ய முடியாவிட்டால், நாம் உணவகம் செல்லும்போது வெளியே நிற்கின்ற ஒரு ஏழையை அழைத்து அவனுக்கும் நம்மோடு உணவருந்த ஒரு வாய்ப்பைக் கொடுக்கலாம். துணி எடுக்க கடைக்குச் செல்லும்போது வெளியே நிற்கும் ஒரு ஏழைக் குடும்பத்தையும் அழைத்து அவர்களுக்குத் தேவையான துணியை எடுத்துக் கொடுக்கலாம். வசதியே இல்லை என்றால் கூட, ஏதோ ஒரு நோயாளியைச் சந்தித்து ஆறுதலாவது சொல்லலாம். வாழ்வின் அர்த்தம், நாம் சேமிப்பதில் இல்லை செலவழிப்பதில் இருக்கிறது என்பதைக் கண்டு கொள்ளலாம்.

  1. மாதம் ஒரு சந்திப்பு !

டிஜிடல் உலகம் நம்மை உண்மையான உறவுகளிடமிருந்து விலக்கி வைத்து விட்டது. வாட்சப்களில் தான் வசிக்கிறோ, குரல்களோடு தான் குடும்பம் நடத்துகிறோம். இந்த நிலையை மாற்றுவதற்கான முயற்சியை நாம் எடுக்க வேண்டும். மாதம் ஒரு குடும்பத்தைச் சென்று பார்த்து, அவர்களோடு நேரம் செலவிட்டு, அவர்களுக்குத் தேவையான சில பொருட்களை வாங்கிக் கொடுத்து உறவைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

நமது பார்வை படாத தூரத்துச் சொந்தங்கள் எத்தனையோ இருக்கலாம். இத்தகைய சந்திப்புகள் அவர்களுக்கு வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பையும், உறவுகளின் மீது ஒரு நம்பிக்கையையும் உருவாக்கும். அவர்களுடைய பல தேவைகள் நமக்கு தெரியவரும். உலகம் உறவுகளால் ஆனது. உறவு சந்திப்புகளால் ஆனது. உறவினர்கள் இல்லையேல், நண்பர்களின் வீடுகளைச் சந்திக்கலாம். நண்பர்களும் இல்லையேல் ஏதேனும் அக்கம் பக்கத்து மனிதர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். சந்திப்புகள் வாழ்வினை நிச்சயம் வளமாக்கும் ! நமது மனதுக்கும் மாறுதலும், ஆறுதலும் கிடைக்கும்.

  1. காலாண்டுக்கு ஒரு கருணை இல்லம் !

இல்லங்களில் அன்பு நீர்த்துப் போகும்போது அனாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும், ஆதவற்றோர் இல்லங்களும் அதிகரிக்கின்றன. செடிகளை எட்டி உதைக்கும் பூக்களாக பெற்றோரை எட்டி உதைக்கும் பிள்ளைகள் சமூகத்தின் தவிர்க்க முடியாத தீய சக்திகளாகிவிட்டனர். சிலரை மாற்றுவது இயலாத காரியமாகும் போது, சிலரைத் தேற்றுவதை நாம் கையிலெடுப்போம். உண்மையிலேயே நமது உதவிகளுக்காகவும், நமது நேரத்துக்காகவும் கையேந்துகின்ற இல்லங்களை காலாண்டுக்கு ஒரு முறை சந்தித்து, சில மணி நேரங்கள் செலவிட்டு வருவது நமது வாழ்க்கையை அர்த்தப்படுத்தும். இது நமது காலாண்டு நேரத்தில் 0.02 விழுக்காடு மணி நேரங்கள் மட்டுமே என்பதை மனதில் கொள்வோம்.

வெறுமனே பணத்தை அனுப்பி ஒரு நேரம் உணவு சாப்பிடுங்கள் என சொல்வதை விட, நேரடியாகச் சென்று அவர்களோடு சில மணி நேரங்கள் அமர்ந்திருப்பது மிகவும் பயனளிக்கும். அவர்கள் தங்களுடைய கதைகளைக் கேட்பதற்கான காதுகளுக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களுடைய மன உளைச்சல்களை, நினைவுகளை, கனவுகளை, ஏக்கங்களை, மகிழ்ச்சியைப் பகிர்வதற்கான தருணங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.

  1. அரையாண்டுக்கு ஒரு முறை ஆலய பயணம் !

வாரம் தோறும் ஆலயம் போகிறேன், சர்ச் போகிறேன், அடிக்கடி மசூதி போகிறேன் என்பதல்ல நான் சொல்ல வருவது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை குடும்பத்தினரோடு சேர்ந்து சற்றுத் தொலைவில் உள்ள ஏதோ ஒரு ஆலயத்துக்குச் சென்று குறைந்தபட்சம் அரை நாளை அங்கும், அங்குள்ள மக்களோடும், அங்குள்ள ஏழைகளோடும் செலவிடுவது. ஆலய முற்றங்கள் நமக்கு பல ஆன்மிக தெளிவுகளையும், மன நிம்மதியையும் தரும். அவை மதம் சார்ந்த தெளிவுகளல்ல, அவை இறை சார்ந்த நிறைவுகள். குடும்பத்தோடான ஆலய தருணங்கள் குடும்பத்தையே கட்டியெழுப்பும்.

புதிய புதிய ஆலயங்களுக்குச் செல்லும்போது அந்த ஆலயம் குறித்த புரிதல், சில வரலாற்று வியப்புகள் எல்லாமே நமக்குக் கிடைக்கும். புதிய இடங்களுக்கு நாம் செல்லும் போது நமது புலன்களும் புதிதாகும். நமக்குள் சுழன்று கொண்டிருக்கும் கொந்தளிப்புகள் சாந்தமாகும்.

  1. ஆண்டுக்கொரு முறை குடும்ப சுற்றுலா !

ஆண்டுக்கு ஒரு முறை கண்டிப்பாக குடும்பத்தினரோடு வெளியூர் சென்று சில நாட்கள் தங்கிவிட்டு வருவது வாழ்க்கையை மிகவும் அழகுள்ளதாய் மாற்றும். நமது குடும்ப உறுப்பினர்களோடு ஏதோ ஒரு புதிய ஊரில், புதிய உணவகங்களில், புதிய இயற்கைச் சூழலில் உலவுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆசீர்வாதம். நமது பெற்றோர் நம்மோடு இருக்கும்போதே, அவர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே இத்தகைய சுற்றுலாக்களை அமைத்துக் கொண்டால், அவர்கள் விடைபெற்றபின் நாம் குற்ற உணர்விலும், துயர உணர்விலும் கலங்க வேண்டியிருக்காது.

சுற்றுலா என்பது பணத்தை செலவு செய்யும் வழி என பலர் நினைக்கிறார்கள். அந்தப் பணத்தைச் சேமித்து வைத்து ஏதாச்சும் நல்ல விஷயங்கள் செய்யலாம் என சிலர் கருதுகிறார்கள். அப்படியல்ல, சுற்றுலாக்கள் நமது சிந்தனைகளின் துருக்களை விலக்கும். நமது உறவுகளின் நெருக்கத்தை ஆழமாக்கும். நமது அன்பின் பகிர்தலை அர்த்தமுள்ளதாக்கும். அடுத்த ஆண்டு சுற்றுலாவுக்காக நம்மை ஏங்க வைக்கும். இங்கே செலவிடப்படும் பணம் உண்மையில் உறவுகளுக்காய் நாம் செய்யும் முதலீடு.

  1. ஆண்டு முழுவதும் மன்னிப்பு !

கடைசியாக ஒன்று ! மன்னிப்பு. மன்னிப்பு இல்லாத வாழ்க்கை அழுக்கடைந்த குட்டையைப் போன்றது. மன்னிப்பை வழங்கிக் கொண்டே இருக்கும் மனமானது ஓடிக்கொண்டே இருக்கும் நதி போன்றது. குட்டை கொசுக்களின் முட்டையைத் தாங்கும், நாற்றத்தை உருவாக்கும், நலத்தை அழிக்கும். நதியானது மீன்களைத் தாங்கும், மலர்களைத் தாங்கும், ஈர வாசனையை உருவாக்கும், உடல்நலனை அளிக்கும்.! மன்னிக்கப் பழங்குங்கள். அதற்கு கால நேரம் இல்லை. தினசரி, வாரம் ஒரு முறை, மாதம் தோறும் என்றெல்லாம் கணக்குப் பார்க்காமல் மன்னிக்க வேண்டும். மன்னிக்கும்போது நாம் நமது காலில் தைக்கும் நெருஞ்சியை எடுத்து எறிகிறோம், மன்னிக்க மறுக்கும் போது அதை இன்னும் ஆழமாய்ச் சொருகுகிறோம்.

இத்தகைய நல்ல தீர்மானங்களை இந்த ஆண்டு எடுப்போம். அடிக்கடி நாம் தவறினாலும் கவலையில்லை, அடுத்த தருணத்திலிருந்து மீண்டும் தொடங்குவோம் தொடர்வோம். விழுந்த இடத்தில் நதி காலொடிந்து கிடப்பதில்லையே ! அருவியின் அடிவாரம் தானே அதன் எழுச்சியின் ஆரம்பம் ! தொடர்ந்து பயணிப்போம். புத்தாண்டில் ஒரு புதிய விடியலை உருவாக்குவோம். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்து !
      
      

18 total views, 12 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *