அநுரவுக்கு பயங்கரவாத தடைச்சட்டம் எதற்காகத் தேவையாக இருக்கிறது?


கொழும்பிலிருந்து பி.பார்த்தீபன்

இலங்கையில் உள்ள சட்டங்களில் மிகவும் மோசமானது எனக் கருதப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம், சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்கப்படும் என்பது அநுரகுமார திசநாயக்கவின் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. ஆனால், இன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் தனது கைகளில் எடுத்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் இல்லாமல் ஆட்சியைத் தொடரமுடியாது என்ற நிலைக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் வந்துவிட்டதாகவே தெரிகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் அதிகளவுக்குப் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள்தான். அதற்கு அடுத்ததாக ஜே.வி.பி. அமைப்பைச் சொல்லலாம். இரண்டு தடவை ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி.யின் உறுப்பினர்கள் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கும் நீண்ட கால சிறை வாசத்தை அனுபவிக்கவும் இந்தச் சட்டம்தான் காரணம். இந்த ஜே.வி.பி.தான் தற்போது ஆட்சி அமைத்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைமைக்கட்சி. பயங்கரவாதத் தடைச் சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தமைக்கு அதனால் அவர்கள் எதிர்கொண்ட துன்பங்கள்தான் காரணம்.

ஏதிர்க்கட்சியாக இருந்த போது பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் குரலெழுப்பிப் போராடிய ஜே.வி.பி. யின் தலைமை இப்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து இறங்கிவருகின்றதா என்ற கேள்வியை நடைபெறும் சம்பவங்கள் எழுப்புகின்றன.

ஏதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் இந்த விவகாரத்தை பாராளுமன்றத்திலும் கிளப்பினார். ”அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கப்போவதாக தேர்தல் மேடைகளில் கூறியது. ஆனால், இப்போது அந்த சட்டத்தைப் பயன்படுத்தி பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகளைப் பயிற்கும் வகையில் செயற்பட்டுவருகின்றது” என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

செப்ரெம்பர் 21 ஆம் திகதி தோ்தலின் மூலம் ஜனாதிபதியாக அநுரகுமார திசநாயக்க தெரிவான பின்னர், மூன்று சந்தர்ப்பங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கைகளில் எடுத்திருக்கின்றார். அறுகம்பை பகுதியில் இஸ்ரேலிய உல்லாசப் பயணிகளை இலக்குவைத்து தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக வெளிவந்த தகவல்களையடுத்து நிலைமைகளைக் கட்டுப்படுத்தவும், சிலரைக் கைது செய்து விசாரிப்பதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசாங்கத்துக்குத் தேவையாக இருந்தது. இதன்போது கைதான ஆறு பேர் இப்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்தான் விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள்.

அதனைத் தொடர்ந்து நவம்பர் இறுதி வாரம் இடம்பெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாரனின் பிறந்த தினம், மற்றும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளின் போது பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டது. நினைவேந்தல்களுக்கான உரிமை மக்களுக்கு இருக்கின்றது என்றும், அதனை யாரும் தடை செய்ய முடியாது என்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைமை அறிவித்திருந்தது. ஆனால், தடை செய்யப்பட்ட இயக்கத்தை பிரசாரப்படுத்த முடியாது என்றும் அரச தரப்பு கூறியிருந்தது.

“யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு எந்த விதமான தடைகளையும் விதிக்கவில்லை. இதனை எமது அரசாங்கம் ஒரு கொள்கையாக பிரகடனபடுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில் சட்டவிரோதமான முறையில் நினைவேந்தல் முன்னெடுக்கட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பாதுகாப்பு செயலர் சம்பத் துயகொந்த தெரிவித்திருந்தார்.

ஜே.வி.பி.யைப் பொறுததவரையில் அவர்களும் இரு தடவைகள் அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள். அவர்களுடைய போராட்டத்தை ஒடுக்குவதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத்தான் அரசாங்கம் பயன்படுத்தியது. ஜே.வி.பி.யின் தலைவர் ரோஹண விஜயவீர உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் அரச படைகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்ட தமது தலைவர்களையும், உறுப்பினர்களையும் நினைவுகூர்ந்து “கார்த்திகை வீரர்கள்“ தினத்தை ஜே.வி.பி. வருடாந்தம் அனுஷ்டிக்கின்றது.

இவ்வாறு ஆயுதப் போராட்டத்தில் கொல்லப்பட்ட தமது உறுப்பினர்களை நினைவுகூரும் நிலையில், தமிழ் மக்களுக்கு மட்டும் அவ்வாறான நினைவேந்தல்களைத் தடுக்க முனைவது விமர்சனங்களுக்குள்ளாகும் என்பது ஜே.வி.பி. தலைமைக்குத் தெரியும். அதனால், அனுமதியைக் கொடுத்துவிட்டு, அதனைக் கட்டுப்படுத்துவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசு பயன்படுத்தியது.

லண்டனிலிருந்து தாயகம் திரும்பிய புலம்பெயர்ந்த தமிழர் ஒருவரைக் கைது செய்வதற்கும் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தியது. கிளிநொச்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட குடும்பஸ்த்தர் தனது தந்தையின் இறுதிச் சடங்களில் கலந்துகொள்வதற்காக தாயகம் திரும்பிய போதே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். 15 வருடங்களின் பின்னர் அவர் தாயகம் விரும்பியிருந்தார். விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்து அனுப்பினார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டாலும், அவர் மீதான வழக்கு முடிவடையும் வரையில் அவர் லண்டன் திரும்ப முடியாது என்பதுதான் நிலை.

பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகவும் மோசமான ஒரு அடக்குமுறைச் சட்டம் என்பதை மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன. கைது செய்யப்படும் ஒருவரிடமிருந்து சித்திரவதை மூலமாகப் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை அவருக்கு எதிரான சாட்சியாகப்பயன்படுத்த இச்சட்டமூலம் இடமளிக்கிறது. அதனைவிட, பயங்கரவாதம் என்பதற்குத் தெளிவான வரைவிலக்கணம் இல்லாமையால், எந்தவொரு செயலையும் தமது தேவைக்கு ஏற்ப பயங்கரவாதம் எனக் கூறக்கூடிய நிலை பொலிஸாருக்கு இருக்கின்றது.

இது போன்ற காரணங்களால்தான் இதனை நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட உள்நாட்டு அமைப்புக்கள் பலவும் வலியுறுத்திவருகின்றன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட சுமார் 1,500 க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜாவிடம் இது தொடர்பாகக் கேட்டபோது, “2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் இது வரையில் ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் கூட இடம் பெறவில்லை” என்றும், “ஆனால், விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்கின்றார்கள் என்ற பெயரில் பலர் கைது செய்யப்படுகின்றார்கள்” என்றும் சுட்டிக்காட்டினார். விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்கிறார்கள் என்ற பெயரில் போர் முடிவடைந்த பின்னர் பலர் கைதான போதிலும், அதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. அதனால், விசாரணைகள் இல்லாமல் பலர் சிறையில் வாடும் நிலை தொடர்கின்றது.
1979 இல் “தற்காலிகமான” சட்டமாகத்தான் பயங்கரவாதத் தடைச் சட்டம் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தொடர்ந்து நீடிக்கப்பட்டு, தமிழ் மக்களின் போராட்டங்கள், மற்றும் அரசியல் எதிர்ப்புகளை முறியடிக்க பயன்படுத்தப்பட்டது என்பதுதான் உண்மை நிலை. “அரசியல் பழிவாங்கலுக்குத்தான் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது” என்ற ஒரு குற்றச்சாட்டையும் கே.வி.தவராஜா முன்வைத்திருந்தார்.

ஏதிர்க்கட்சியில் இருக்கும் போது என்னத்தைச் சொன்னாலும், ஆளும் கட்சியாக வரும்போது இந்தச் சட்டத்தை நீக்குவதற்கான எண்ணப்பாடு இல்லாமல் போகும். ஏனென்றால், தடுத்து வைப்பதற்கு இலங்கையில் இருக்கின்ற ஒரே சட்டம் இதுதான். ஒரு வருடத்துக்கு எந்தவிதமான விசாரணைகளும் இல்லாமல் எவரையும் தடுத்து வைப்பதற்கு இந்தச் சட்டம் உதவுகின்றது.அதனால்தான் நீக்குவதாகச் சொன்னாலும் அதனை அரசாங்கங்கள் கடந்த காலங்களிலும் செய்யவில்லை.

பயங்கரமான தடை சட்டத்தின் கீழ் இப்போது பலர் சிறையில் உள்ளார்கள். இதில் மூன்று விதமானவர்கள் உள்ளார்கள். முகநூலில் பதிவு செய்தவர்கள். இவர்கள்தான் விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயன்றதாக குற்றஞ்சாட்டப்படுபவர்களில் ஒரு தரப்பினர். இதனைவிட வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பவர்கள். அதாவது, போதிய சாட்சியங்களோ ஆதாரங்களோ இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள். மூன்றாவது தரப்பினர் வழக்கு முடிவடைந்து தண்டனையை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள்.

இவ்வாறானவர்களில் 10 பேர் 15 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கின்றார்கள். அதனைவிட பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பவர்கள் சிலரும் உள்ளனர். பிணையில் வந்திருப்பவர்கள் கூட, வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக அரசாங்கம் ஏற்கனவே சொல்லியிருக்கின்றது. இவ்வாறு சொல்லும் போது இவர்கள் அனைவருமே விடுதலை அசய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுகின்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் சொன்னாலும், அதிலுள்ள சில அம்சங்கள் தமக்கு அவசியம் என்று அவா:கள் கருதுகிறாh:கள். அதனால், அவற்றை உள்ளக்கக்கூடிய மற்றொரு சட்டத்தைக் கொண்டுவருவதில் அரசாங்கம் இப்போது கவனமாக இருக்கின்றது. கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களும் இவ்வாறான ஒரு முயற்சியை முன்னெடுத்திருந்தாh:கள். பெயா: மாறினாலும், அதன் இலக்கு ஒன்றாகவே இருக்கும். அதற்கான முயற்சிகளைத்தான் அநுர அரசும் இப்போது மேற்கொள்வதாகவே தெரிகின்றது.

24 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *