சிவத்தமிழ்ச் செல்வியின் நூற்றாண்டு விழாச் சிறப்பு மலராக சிவத்தமிழ் மலர்கின்றது.

கலாநிதி ஆறு.திருமுருகன்; அவர்களின் வாழ்த்து!
உலகம் போற்றும் ஆன்மீக அன்னை சிவ தமிழ்ச்செல்வி பண்டிகை கலாநிதி தங்கம்மா அப்பா குட்டி அவர்களின் நூற்றாண்டு விழா எதிர்பவரும் 25.01.2025 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. நூற்றாண்டு விழா குறித்து ஜெர்மன் நாட்டிலிருந்து வெளிவரும் வெற்றி மணி பத்திரிக்கை வெளியீடான சிவத்தமிழ்ச் சஞ்சிகை சிறப்பு மலர் வெளியிடுவதை அறிந்து ஆனந்தம் அடைகிறேன். வெற்றிமணி ஆசிரியர் திரு.மு.க.சு.சிவ்குமாரன் அவர்கள் அம்மையாரின் அன்புக்கும் பாத்திரமானவர். அம்மையாரின் அகவை 80 பூர்த்தி விழாக் குறித்து சிறப்பு மலர்களை வெளியிட்டு அம்மையாரை கௌரவப்படுத்தியவர்
அம்மையார் அவர்கள் நாவலர் பெருமானுக்கு பின் எம் மண் பெற்ற தவப்புதல்வி என்றால் மிகையாகாது. தன் வாழ்வை அர்ப்பணித்து சைவமும் தமிழும் வளர அரும்பாடுபட்டவர். சைவப் பிரசங்க மரபை கட்டிக் காத்தவர். அறப்பணிகளில் அவசியம் அறிந்து தெல்லிபழை துர்க்கை அம்மன் ஆலயத்தை அறச்சாலையாக மாற்றியவர். ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற சுவாமி விவேகானந்தரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்தவர். 1982 ஆம் ஆண்டு துர்காபுரம் மகளிர் இல்லத்தை ஸ்தாபித்து இன்று வரை பல நூறு பெண்பிள்ளைகள் கல்வி கற்க வாய்ப்பு ஏற்படுத்தியவர். அம்மையார் எம்மண்ணில் சாதித்தவை ஏராளம். அவர்களின் அயராத பணியால் பலர் பயன்பெற்றனர்
2009 ஆம் ஆண்டு தனது 83 வது வயதில் அம்பாளின் திருவடியை அடைந்த அம்மையாரின் நூற்றாண்டு விழா உலகின் பலபாகங்களிலும் கொண்டாடப்படவுள்ளது. அம்மையாரை அனைவரும் நன்றியோடு நீள நினைந்து வாழ்த்தி மகிழ்வோம். நூற்றாண்டு விழா சிறக்க பிரார்த்திப்போம்.
கலாநிதி ஆறு.திருமுருகன்,தலைவர்,
ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை
தெய்வத்திருமகள்
வாழ்நாள் தமிழ்ப் பேராசிரியர் அ. சண்முகதாஸ்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
1998 ஐப்பசி மாதம் நாலாம் திகதி நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தேன். அன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்தது. “அம்மா” என நாம் அழைக்கும் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டிக்கு அன்று கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்குவதென யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மூதவையும் பேரவையும் ஒப்புதலளித்திருந்தது. அப்பொழுது யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப்பீடத்தின் தலைவராக நான் பணிசெய்துகொண்டிருந்தேன். அம்மாவினை பட்டமளிப்பு அன்று வேந்தருக்கு அறிமுகப்படுத்தும் பணி கலைப்பீடத் தலைவருடையது என்று முன்னரே சொல்லப் பட்டது. எனக்கோ சொல்லொணா மகிழ்ச்சி. 1998.10.04 அன்று காலை எனக்கு மிகுந்த “புழுகம்”. இருப்பினும் நாங்கள் அம்மாவை வெறும் தங்கம்மா அப்பாக்குட்டி என்று எண்ணுவதில்லை. அவர் அருள்மிகு துர்க்காதேவி அம்பாளை புரப்பவர்; பேணுபவர் என்றே மதித்து வந்தோம். அந்த வகையில் சிறியவனாகிய நான் எப்படி அவரை அறிமுகம் செய்வது என்ற எண்ணமும் உண்டாயது. பல்கலைக்கழக சம்பிரதாயங்களை நாம் எல்லோருமே பேணவேண்டுமென எண்ணி மகிழ்ந்தேன்.
அம்மாவினுடைய வாழ்வில் முதலில் அவருக்கு ஈழத்திலே வழங்கப்பட்ட பட்டம் “சிவத்தமிழ்ச் செல்வி” என்பதேயாகும். 1970ஆம் ஆண்டு ஈழத்துச் சிதம்பரம் என்றழைக்கப்படும் காரைநகர் சிவன் திருக்கோயில் ஆதீனம் “சிவத்தமிழ்ச் செல்வி” என்னும் பட்டத்தினை வழங்கியது.அதனையே அம்மாவும் பிறரும் பயன்படுத்தினர். அதன் பின்னர் பல பட்டங்கள் பெற்ற போதும் ஈழத்திலே அவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் வழங்கிய “கலாநிதி”ப் பட்டம் சிறப்புடையதாகும். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு அருள்மிகு துர்க்காதேவியின் அருள் கிடைத்தது.
‘சிவத்தமிழ்ச் செல்வி’ எனப் பலராலும் பல்லாண்டுகளாக நினைக்கப்பட்ட சொல்லப்பட்ட எங்கள் தங்கம்மா அப்பாக்குட்டிக்கு “தெய்வத் திருமகள்” என்னும் பட்டம் அகில இலங்கை இந்துமாமன்றம் 2005ஆம் ஆண்டு யூலை மாதம் 15-17 திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடத்திய மாமன்றத்தின் பொன்விழாவின்போது வழங்கப்பட்டது.அம்மாவுக்கு இந்த விழாவின்போது முன்னர் வழங்கப்பட்ட பட்டத்தினை விடச் சிறப்பானதொன்றை வழங்கவேண்டுமென மன்றத்தின் பொதுச் செயலாளர் திரு.கந்தையா நீலகண்டன் கூறினார். பல பட்டங்கள் எங்கள் எண்ணங்களிலே தோன்றின. மாநாட்டுக்கு சில நாட்கள் முன்னர் காரிலே அதுபற்றி பேசிக்கொண்டு வந்தோம். அன்னை சிவத்தமிழ்ச் செல்வியை நினைக்கும்போ தெல்லாம் எனக்குச் சேக்கிழாருடைய,
“மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை”
என்னும் பாடல் உடனடியாக நினைவுக்கு வரும். அப்பாடலிலே வரும் ‘தெய்வப்பாவை’ என்னும் தொடர் அம்மாவின் பட்டமாக அமையுமா என எண்ணினேன்.இருப்பினும், ”தெய்வத்திருமகள்”என்னும் பட்டம் பொருத்தமாக இருக்குமென மதியுரை கூறினேன். பின்னர் எல்லோரும் அதனை ஏற்றுக் கொண்டனர். அப்பட்டத்தினை அன்னைக்கு வழங்கி இந்துத மாமன்றம் மகிழ்ந்தது. சைவ உலகின் தாயாக- ல்லோருக்கும் வழிகாட்டியாக திகழ்ந்துவந்த எங்கள் அன்னையை தெய்வத்தின் உருவாகவே கண்டோம்.எனவேதான் யாழ். இந்து மாநாட்டில் அம்மாவை “தெய்வத் திருமகள்” எனப் போற்றிபட்டம் வழங்கிக் கௌரவித்து மாமன்றம் பெருமை தேடிக்கொண்டது.”