பேசாப் பொருட்களைப் பேசுகின்ற ‘உலகின் மறுபக்கம்’!

கடந்த வாரம் (30.11.2024) ‘மறுநிர்மாணம் நண்பர்கள்’ ஆதரவுடன், லண்டனில் “The other side of the world” எனும் கலா பிள்ளையின் நூல் சிறப்பாக வெளியிடப்பட்டது. இங்கிலாந்திலுள்ள பல்வேறு சமூக அனுசரணையுடன் நடைபெற்ற இந்த நிகழ்வு, மரபு நூல் வெளியீட்டு விழாவை விட வேறுபாடான ஒரு சமூக விழிப்புணர்வு நிகழ்வாக அமைந்தது.

நூலின் அறிமுக உரையை சமூக ஆர்வலரும், திறனாய்வாளரும், சுகாதாரத்துறையில் பணியாற்றுபவருமான மீனாள் நித்தியானந்தன் வழங்க, முப்பதாண்டுகளுக்கு மேலாக ஜேர்மணி- இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து அச்சில் வெளிவருகின்ற வெற்றிமணி இதழின் பிரதம ஆசிரியர் வெற்றிமணி மு.க.சு. சிவகுமாரன் நூலின் தனிச்சிறப்பையும் அதன் சமூகத் தொடர்பையும் அழுத்தமாக எடுத்துரைத்தார். பேராசான் நித்தியானந்தன், வைத்தியர் பகீரதன் அமிர்தலிங்கம், புற்றுநோய் வைத்தியர் அஞ்சலா பத்மநாதன், நூல்களின் காதலர் பத்மநாப ஐயர், இலக்கியச் செயற்பாட்டாளர் பௌசர், வைத்தியர் பாலா உள்ளிட்ட பல துறைசார் வல்லுனர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வு புதியவன் இராசையா, தோழர் முத்து உள்ளிட்ட மறுநிர்மாணம் நண்பர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வெளிவந்திருக்கும் ‘உலகின் மறுபக்கம்’ நூல், சமுதாயத்தில் பேசப்பட விரும்பாத ஒரு முக்கியமான கருப்பொருளைப் பேசுகின்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மார்பகப் புற்றுநோயின் தாக்கத்தால், அவருக்குக் கடினமான சிகிச்சை அனுபவங்கள் நிகழ்ந்தன. கீமோதெரபி, ரேடியோதெரபி, கட்டியை அகற்றும் அறுவைச் சிகிச்சைகளின் ஊடாக அவருக்கு அமைந்த வாழ்க்கைமுறை மாற்றங்களும், சோதனைகளும், அதை வெற்றிகரமாகக் கையாண்டு எப்படி வெளியே வந்தார் என்கின்ற தனிமை சார்ந்த அனுபவங்களும் அவரது எழுத்துகளின் ஊடாக வெளிப்பட்டுள்ளன.

நூலை எழுதத் தூண்டிய காரணங்களாக முக்கிய சில விடயங்களைக் கலா பிள்ளை வெளிப்படுத்துகிறார்.

  • மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் சேவைகளை இருபாலரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம்.
  • புற்றுநோயைக் தொடக்கத்திலேயே கண்டறிவதின் முக்கியத்துவம்.
  • உடல் ஆரோக்கியம் மற்றும் மன அமைதியை முன்னோக்கி உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு பழக்கம் உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டிய அவசியம்.
  • நோய் சமயத்தில் நேர்மறை சிந்தனை மூலம் மனத்தின் ஆற்றலை உயர்த்த முடியும் என்கின்ற சுயநம்பிக்கை போன்றவை இவற்றில் சிலவாகின்றன.

வெளியீட்டு நிகழ்வின் சிறப்பம்சங்களாக, விழாவின், ரஜிதா சாம் பிரதீபன் நடத்திய கலந்துரையாடலில் நூலாசிரியருடன் நடத்தப்பட்ட நேரடி உரையாடலோடு, முன்மாதிரியாக வாழ்ந்து புற்றுநோயை எதிர்கொண்ட விமலா சந்திரன், டென்மார்க்கிலிருந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டு, தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டமை அமைந்தது. அத்தோடு மெய்வெளி தொலைக்காட்சி சாம் பிரதீபனின் நெறியாள்கையில் மதி – காந்தன் தம்பதிகளின் அரங்காற்றுகை அளிக்கை ஒன்று பார்வையாளர்களைக் கவர்ந்து கொண்டது. சாம் பிரதீபனின் இக்கலந் துரையாடலானது புற்றுநோய் குறித்த மனதோட்டங்களையும், அதைச் சுற்றியுள்ள சிந்தனை சிக்கல்களையும் மாற்ற வேண்டும் என்கின்ற கலா பிள்ளையின் நோக்கை மையப்படுத்தியது சிறப்பாக அமைந்திருந்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வில் கடந்து செல்லும் அனுபவங்களை வெளிப்படுத்துவதன் மூலம், அதனைச் சமூகத்தில் ஒரு களங்கமாகக் கருதும் எண்ணங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே இந்நூலின் ஒரு சாராம்சம்.

இந்நூலின் விற்பனையிலிருந்து கிடைக்கும் நிதியை, கலா பிள்ளைக்கு சிகிச்சை வழங்கிய The Royal Mars den Cancer Charityக்கு அவர் நன்கொடையாக வழங்குவதும் அவரின் சமூக சேவையினை வெளிப்படுத்துகிறது. பொதுமக்கள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க முடியும் என்பதே இந்நிகழ்வின் முழுமையான செய்தியாகும்.

39 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *