வயோதிபத்தில் தனிமைபிள்ளைகள் இரண்டுக்குமேல் இருந்தால், அந்த ஒற்றை பெற்றவர் பந்தாடவும் படுவார்.

- பாக்குப் பாட்டி (யேர்மனி)
குழந்தைப் பருவத்தில் தாயின் மடியில், பிள்ளைப் பருவத்தில் சகோதரங்கள் பாசத்தில், இளம் பருவத்தில் சிநேகிதர் பக்கத்தில், மங்கை பருவத்தில் கணவனின் அல்லது மனைவியின் அரவணைப்பில், வயதுவந்த காலத்தில் பிள்ளைகள் அன்பில், தொடர்ந்து பேரப்பிள்ளைகள் கலகலப்பான மகிழ்ச்சியில். இப்படியே தொடர்ந்து வந்தால் வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்? ஆனால் அப்படி நடப்பதற்கு எந்தவிதச் சாத்தியக்கூறும் இல்லை. எங்கே இல்லை? புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களாகிய எங்களுக்கு!
தாய்நாட்டில் வாழ்ந்த போது… அது ஒரு நிலாக்காலம், கூட்டுக்குடும்பம்! ஒரே வீட்டிலேயே அப்பா, அம்மா, பேரன், பேர்த்தி, ஏன் பூட்டன், பூட்டி கூட ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள். சகோதர உறவுகளும் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்ததும் உண்டு. சாப்பாடு? ஒரே பானையில் பதினைந்து பேருக்குச் சாதம் வடிப்பார்கள். எங்கள் மொழியில் சோறு வடிப்பார்கள்.
அந்தக் காலத்தில் இதனால் தான் ஒரு பொன்மொழியும் உருவாகியிருக்கும் என எண்ணுகிறேன்:
“கூழோ கஞ்சியோ உள்ளதைப் பகிர்ந்து சாப்பிடுவோம்.”
அக்காலத்தில் தனிமை என்பதே யாருடைய வாழ்க்கையிலும் ஏற்பட்டதே கிடையாது. வயோதிபர் இல்லம் இருந்திருக்கலாம், ஆனால் கேள்விப்பட்டதே கிடையாது. எங்கேயோ தூரத்தில் கைத்தடியில் இருப்பதாக அறிந்திருக்கிறேன். இதைக் கட்டாயம் கவனிக்கவும். எங்கேயோ தூரத்தில்!
இப்படியான அற்புதமான அழகான வாழ்க்கையை விட்டு வெளிநாடுகளுக்கு வந்தோம் நாங்கள். வந்தோம் என்பதைவிட விரட்டப்பட்டோம் என்று சொல்லுவதே பொருத்தமாக இருக்கும். புதிதில் வெளிநாடு சொர்க்கமாக இருந்தது. சொர்க்கலோகத்தில் ரொக்கமாகப் பணமும் சேர்ந்தது. உழைப்பு, உழைப்பு, உழைப்பு.
தொடர்ந்து கல்யாணம், வாழ்க்கை, குழந்தை குட்டிகள்.
நாங்கள் சின்ன வயதில் அனுபவிக்காத விளையாட்டுப் பொருட்களை எங்கள் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டும்.
நாங்கள் சாப்பிடாத சாப்பாடு பிள்ளைகள் சாப்பிட வேண்டும். நல்ல நல்ல உடுப்புகள் பிள்ளைகள் போட வேண்டும்.
நல்ல படிப்புகள் படித்து நல்ல வேலைகளில் அமர்ந்து பெரிய சம்பளம் எடுத்து, பிள்ளைகள் எங்களையும் கடைசிக் காலங்களில் வைத்துப் பார்க்க வேண்டும். உலகத்தில் உள்ள அனைத்துப் பாசத்தையும் அன்பையும் கொட்டி வளர்த்திருக்கிறோம் அல்லவா?
இப்படியே எங்களை ஓரம் தள்ளி வைத்துவிட்டு பிள்ளைகளுக்காகவே வாழ்ந்தோம். பிள்ளைகளும் வளர்ந்து கல்யாண வயதை எட்டியிருப்பார்கள். ஓரளவு வயது வந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் போதே பெற்றோர் எல்லோருக்கும் புரிந்து கொண்டு வந்திருக்கும்: “கடைசி காலங்களில் பிள்ளைகள் எங்களை தங்களுடன் வைத்திருக்கமாட்டார்கள்” என்பதும், “நாங்களும் அவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது” என்பதும்.
இதனால் பெற்றோரிடமிருந்து வரும் சில பொன்மொழிகள்:
- எங்களைத் தங்களுடன் வைத்திருக்க வேண்டாம். கடைசி காலங்களில் கண் எட்டும் தூரத்தில் ஒரு சிறு வீட்டில் வைத்தால் போதும்.
- எங்களுக்கு பரவாயில்லை. இவையள் எங்களை பார்க்காவிட்டால் என்ன? எங்களுக்கு பென்சன் வரும்; வீடு கிடைக்கும்; நாங்கள் நல்லபடியாக வாழ்வோம்.
- பிள்ளைகளை குற்றம் சொல்லி என்ன பயன்? பள்ளிக்கூடத்துக்கு போனா வேறு கலாச்சாரம், வீட்டில் வந்தா தமிழ் கலாச்சாரம். அவங்க எதைதான் பின்பற்றுவது? அவங்க என்ன செய்கிறாங்களோ, எங்களுக்கு உடன்பாடுதான்.
- என் பிள்ளை எந்த நாட்டு பிள்ளையை கட்டுறானோ (றாளோ), அவங்க எங்கே எங்களை பார்ப்பது?
- பிள்ளைகள் கட்டின பிறகு ஒன்றாக வாழவே முடியாது. இப்போதைய கால பிள்ளைகள் ஒற்றுமையா வாழமாட்டார்கள்.
- ஐயய்யோ! நாங்க போய் வாழமாட்டோம்ப்பா. அதை தொட்டா குற்றம், இதை தொட்டா குற்றம்.
இப்படிப் பலவிதமான பேச்சுகள் வயோதிபர்களிடையே உண்டாகும். பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்து தனிக்குடித்தனத்துக்குச் சந்தோஷமாக வழி அமைத்து அனுப்பிவிட்டு, தாங்கள் தனிமையை நாடிவிட்டார்கள்.எந்த விடயத்தில் ஒற்றுமை இல்லாவிட்டாலும், பெற்றோர்கள் எல்லோரும் இதில் ஒற்றுபட்டுவிட்டார்கள்:
தனிமை!
இங்குதான் “வயோதிப தனிமை” என்னும் தலைவலி உருவாகிறது. தனிமையிலும் பலவகையான தனிமைகள் உண்டு. ஆனாலும் வயோதிபப் பெற்றோர்கள் தனித்து விடப்பட்டு, தனிமையின் சோகத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் பிள்ளைகள் எந்தவிதத்திலும் பாத்திரவாளிகளும் இல்லை; குற்றவாளிகளும் இல்லை.
இந்தக் கால வாழ்வாதாரம் இதுதான்.
இதைப் புரட்டிப் பார்த்தால் புரியும்:
தன்வினை தன்னைச் சுடும்; கடவுள் திருப்பி அடிக்கிறான்; செய்த வினைகள் நின்று தாக்கிது; கர்மா – இப்படி பலவாறாகச் சொல்லலாம். இருபது, முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்பு அதே பெற்றோரைத் தவிக்கவிட்டு ஏங்கவிட்டு, நாட்டுக் கலவரத்தைச் சாக்காக வைத்து நாங்கள் ஓடி ஒளிந்தோம். அதன் பலாபலனை இன்று நாம் அனுபவிக்க வேண்டாமா? அதுவும் பிள்ளைகள் இரண்டுக்குமேல் இருந்தால், அந்த ஒற்றை பெற்றவர் பந்தாடவும் படுவார்.
பந்து யார்பக்கம் என அறிய வாருங்கள் மாசிமாதம் வெற்றிமணிக்கு.
186 total views, 2 views today