யாரோ ஒருவருக்காக உழைத்துக்கொடுக்கும் நாம்!

-பிரியா.இராமநாதன் (இலங்கை)
“திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள்”
என நாமெல்லாம் படித்திருப்போம் ! சங்க காலம் முன்னிருந்து அதன் பின்னாலான பல காலகட்டங்கள்வரையிலும் உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் நமக்கிருந்தது என்று சொன்னாலும் மிகையில்லை . ஆனால் அவையெல்லாம் இன்று பழைய கதைகளாகிப்போனதோ என்னவோ . வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் சிலர் ஒதுங்கி, ஒடுங்கிக்கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் நாம் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன என்பதுதான் யதார்த்தம்.
ஆண்களோ பெண்களோ, பாலின பாகுபாடின்றி இன்றெல்லாம் நமக்கு தொழில் மிக முக்கியமானது. ஏனெனில் அதிகரித்து வரும் இந்த வாழ்க்கைச் செலவை சமாளிக்க, நல்ல வருமான ஆதாரம் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு நல்ல வருமான ஆதாரதினை ஒருவருக்கு கீழ் அல்லது ஒரு நிறுவனத்திற்காக செய்யும் வேலையை மாத்திரம் வைத்துக்கொண்டு பெற்றுவிடமுடியாது. ஒரு நல்ல வேலை கிடைக்காததால் தற்கொலை செய்துகொள்ளும் , அல்லது படித்த படிப்பிற்கு தங்களுக்கு யாரும் நல்ல வேலை கொடுக்கவில்லை என்பதால்தான் தங்களுடைய வாழ்க்கையே தடம் புறண்டுபோனது போன்ற கருத்துக்களை சொன்ன “சுவரில்லா சித்திரங்கள் ” ” வறுமையின் நிறம் சிவப்பு ” போன்ற தமிழ்த் திரைப்படங்களை பார்த்து அந்த கதாநாயகர்களுக்காக மனம் நொந்து கவலைப்பட்ட ஒருத்திதான் நானும்.
ஆனால் இப்போது யோசித்துப்பார்க்கிறேன் … நாம் நன்றாக படித்திருக்கின்றோம் நாம் படித்த படிப்பிற்கு அடுத்தவர்தான் நமக்கு வேலை தரவேண்டும் என்றும், எதோ ஒரு நிறுவனத்தில் இனைந்துகொண்டு, மாதாமாதம் சம்பளம் வாங்கிவிட வேண்டும் என்கிற அந்த காலை எட்டு மணித்தொடக்கம் மாலை ஐந்து முப்பது மணிவரையிலான யாரோ ஒருவருக்காக உழைத்துக்கொடுக்கும் வாழ்க்கைமுறையினைத்தான் நாமெல்லாம் மிக நீண்டகாலமாகவே கொண்டாடிக்கொண்டு வந்திருக்கின்றோம் இல்லையா?
அதிலும் விடுமுறை எடுத்துக்கொண்டால்கூட எங்கே நமக்கு பதிலாக நம்முடைய இடத்தினை வேறு யாருக்கும் கொடுத்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில் ஒரு நாள்கூட அதிகப்படியாக விடுமுறை எடுத்துவிடக்கூடாது என்பதிலும் ,நிறுவன பொறுப்பாளர் நம்மீது திணிக்கும் அதிகப்படியான வேலையினை செய்துகொடுக்காவிட்டால் நம்மை வேலையைவிட்டு தூக்கிவிடுவார்களோ என்கிற வேலை பற்றிய நிச்சயமின்மையால் மாடுபோல எல்லா பணிகளையும் மிகக்குறைந்த சம்பளத்திற்காக இழுத்துப்போட்டு செய்தவர்கள் இன்னும் செய்துகொண்டிருப்பவர்கள் நம்மில் எத்தனைபேர் ? முன்புபோல் அல்லாமல் தற்போதெல்லாம் சிஸ்டம் கொஞ்சம் மாறியிருக்கிறது என்றுகூட சொல்லலாம் . இன்றைய தலைமுறையினர் யாரும் ஒரே நிறுவனத்திற்காக , ஒரே வேலைக்காக மல்லுக்கட்டிக்கொண்டிருப்பதில்லை. அவர்களது வேலை பற்றிய தீர்மானங்கள் மிக ஆரோக்கியமானதாக மாறியிருக்கிறது என்றுகூட சொல்லலாம்.
நாம் இன்னொருவருக்காக தொடர்ச்சியாக நம்முடைய உழைப்பினை ஊதியத்திற்காக வழங்கிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், நம்முடைய சொந்த வணிகத்தை தொடங்கினாலும், அதிலிருந்தும் நல்ல வருமானத்தை ஈட்டலாம். இந்த வணிகம் என்பது இன்றைய பல இளைஞர்களிடையே பரவலாக பேசக்கூடிய விடயமாக இருந்து வருகின்றது. நாம் ஒரு வியாபாரத்தை செய்கின்றோமா அல்லது வேலை தேடப்போகின்றோமா என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். எனினும் நம்முடைய வருமானத்தை வகுத்துக்கொள்ள வேறொருவரின் கீழ் பணியாற்றுவதை விட, நம் சொந்த வியாபாரத்தை நடத்துவதன் நன்மை பன்மடங்கு அதிகமானது . ஏனெனில், அது நமக்கு மட்டுமல்ல நம்முடைய சமூகத்திற்கும் , நாட்டிற்கும், ஏன் இந்த உலகிற்குமே சிறந்தது. உண்மையில் கிடைக்காத வேலைக்காக அதன் பின் ஓடுவதை விட ஒரு தொழிலில் இறங்குவது ஒரு நல்ல மூளை உள்ள ஒருவர் செய்யும் வேலை.
நாம் வேறொருவரின் கீழ் பணிபுரியும் போது, நாம் எவ்வளவுதான் கடினமாக முயற்சி செய்து உழைத்தாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் செய்யும் வேலையைப் நிறுவனம் பாராட்டத் தவறிவிடுவது வழக்கமான விடயமே .இங்கே நம்முடைய கடின உழைப்பின் பலனை பெற்றுக்கொள்ளப்போவது வேறு யாரோ ஒரு நபரே . இதே நாம் நம்முடைய சொந்த வியாபாரத்தை செய்யும்போது அது ஒரு பிரச்சினையாக இருக்காது. நாம் உண்ணாமல் உறங்காமல் கண்விழித்து கடினமாக உழைத்தாலும் எந்த இழப்புமின்றி, செய்த அனைத்திற்கும் பலனை நாமே அனுபவிக்க முடியும். ஒரு இடத்தில் ஒருவருக்கு கீழ் வேலையை செய்து, சம்பாதிப்பதை காட்டிலும் புதிதாக சொந்தத் தொழிலைத் தொடங்கி நம்முடைய நிறுவனம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை பார்ப்பது என்பது அளவிடமுடியாத ஓர் மகிழ்ச்சியினை நமக்கு அள்ளிக்கொடுக்கக்கூடியது . ஒருவருக்கு கீழ் ஓரிடத்தில் வேலையைச் செய்யும்போது வாழ்க்கையின் இலக்குகளை அடைவதென்பது அவ்வளவு இலகுவானதல்ல. ஏனென்றால், ஒரு இலக்கை நோக்கி நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், சம்பளம் என்பது நிறுவனம் விரும்பும் தொகையில்தான் அமையும். ஆனால் நம்முடைய சொந்த வணிகத்தினை செய்யும்போது, ஒரு அழகான வீடு, வாகனம் ஆகிய கனவுகளை அந்த நேரத்தில் மனதில் வைத்து, அந்தக் கனவுகளை நனவாக்க கடுமையாக உழைக்க வாழ்க்கையின் குறிக்கோள்களாக எடுத்து செய்து கொண்டு போக முடியும்.
குறிப்பிட்ட வயதெல்லையில் ஓய்வு பெற்றுக்கொண்டு கையில் எஞ்சியதை வைத்துக்கொண்டு வாழவேண்டும் என்கிற நிலை சொந்த வணிகத்தில் நிச்சயம் இருக்கப்போவதில்லை . ஏனெனில் நாம் நமக்கான ஓர் குட்டி வணிக சாம்ராஜ்யத்தையே உருவாக்கிவைத்திருக்கிறோம் என்கிற திருப்தி மரணத்தறுவாயிலும் நமக்கிருக்கும் . நாம் வேலை பார்க்கும் சக்தியை இழந்த பின்பும் நம்முடைய வணிகம் நமக்கான வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் ஒன்றாகவும் , பின்னாளில் நம்முடைய குடும்ப உறுப்பினர்களுக்கே ஓர் ஆதாரமான பின்னணியாகவும் இருக்கக்கூடும் இல்லையா ?
45 total views, 6 views today