சிந்தனைத் தூண்டல்

கௌசி (யேர்மனி)
“யார் சொன்னார் எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப்பார்||
என்று சொன்ன சோக்ரடீஸ் ஐ நஞ்சு கொடுத்து மரணத்தைத் தண்டனையாகக் கொடுத்த சமுதாயம் இன்று மாறிவிட்டது. ஆனால் நாம் இன்றும் யதார்த்தம் பற்றிச் சிந்திக்காது பண்பாடு, கலாசாரம் என்று 25 வீதம் மூளையைக் கூடப் பயன்படுத்தாது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மனித மூளையை வெல்ல போட்டா போட்டி போட்டு உலகம் முன்னேறிக் கொண்டிருக்கின்றது. எலோன் மாஸ்க் புதிதாக மனித ரொபோட்டக்களை உருவாக்கிச் இரண்டு வாரங்களுக்கு முன் கண்காட்சியில் வெளிப்படுத்தியுள்ளார். மனிதனில்லாமல் இயங்கும் வாகனங்கள் தோன்றிவிட்டன. உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற ரொபோட்டக்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. நாம் இன்னும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டலாமா? வால்காவில் இருந்து கங்கைவரை, சேப்பியன் மனித குலத்தின் வரலாறு வாசித்துப் பார்த்த போது மனித மூளை எப்படி இருந்தது? ஆரம்ப மனிதன் எப்படி வாழ்ந்தான்? இந்தக் கட்டுப்பாடுகள், நம்பிக்கைகளை எப்படி மனித குலத்துக்குள் புகுத்தப்பட்டது என்னும் ஆழ்மன வெளிச்சம் எமக்கு ஏற்படும்.

மனிதர்களைக் கட்டுப்படுத்தல் என்பது எங்கும் சாத்தியமில்லை. அவர்களைப் புரிய வைத்தல் என்பதே உலகத்தை மாற்றச் சிறந்த வழி. ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு புரிதல், அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை, கற்ற விடயங்கள், வாசித்த புத்தகங்கள், சுய தேடல், சுய புத்தி, சிந்தனைத் திறன் போன்றவை இருக்கின்றன. இவற்றின்; வடிவமே மனிதன். நம்பிக்கை என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடலாம். நம்பிக்கையை யாரும் மாற்ற விரும்புவதில்லை. அவரவருக்குச் சரி என்று படுவதை அவர்கள் செய்யலாம். ஆனால், சிந்தனைத் தூண்டல் ஒரு சிந்தனாவாதிக்கு அவசியமாகப்படுகின்றது.

எமது பாதங்கள் எமது உடலைத் தாங்கி நின்று நிமிர்ந்து நிற்க உதவுகின்றன. அத்தனை தசை நார்களும் பாதங்களில் படிந்திருக்கின்றன. மனிதனின் ஆதாரசக்தி பாதங்களில் அமைந்திருக்கின்றது. மனிதனின் இரண்டு பாதங்களும் இரண்டு வைத்தியர்கள். பாதங்களின் ஒவ்வொரு குறிக்கப்பட்ட பகுதிகளுக்கும் அழுத்தம் கொடுக்கும் போது உடலின் அவ்வவ் பகுதிக்குரிய உள் உறுப்புக்கள் தூண்டப்படுகின்றன. உதாரணமாக பெருவிரலுக்கு கொடுக்கின்ற அழுத்தம் மூளை, நுரையீரல் பிரச்சினைகளைத் தடுக்கின்றது. இரண்டாம், மூன்றாம் விரல்கள் கண்களின் பிரச்சினைகளைத் தடுக்கின்றது. இவ்வாறு ஒவ்வொரு பகுதிகளும் உடல் உறுப்புகளைப் பாதுகாக்கின்றன. பாதங்கள் இன்றி மனிதன் நிற்க முடியாது நடக்க முடியாது போகின்றான். இந்தப் பாதங்கள் நோய் நொடியின்றி வாழவும், குளிர் சூட்டிலிருந்து எமது பாதங்களைக் காக்கவும், அசுத்தங்கள் அதை எட்டாமல் பேணவும் பாதுகாப்புக்காக அணிவதே பா….தணி என்பதை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். எம்மைப் பாதுகாக்கின்ற பாதணியை மதிப்பதா? மிதிப்பதா?

கொதிக்கும் வெயிலில் நாம் நடக்க வெப்பத்தைத் தானேற்று சூட்டிலிருந்து எம்மைப் பாதுகாக்கின்றது. பூச்சி புழுக்கள் எம்மைத் தீண்டாது தடுக்கின்றது. சேற்றிலே நாம் நடக்க சேற்றைத் தான் பூசி எமது பாதங்களைத் துப்பரவாக வைத்திருக்கின்றது. நோய்க்கிருமிகள் எம்மை வந்தடையாதிருக்க பாதங்களைப் பாதுகாத்து உடலைப் பேணுகின்றது. இவ்வாறு வெளி அழுக்குகளைத் தானேற்று எமது பாதங்களைச் சுத்தமாகவே வைத்திருக்கும் பாதணியை எமது உடலும் வீட்டின் உள்புறமும் சுத்தமாய் இருக்க வெளியே கழட்டி வத்துவிட்டு வீட்டினுள் நுழைகின்றோம். இவ்வாறு எமக்காகச் சேவை புரிகின்ற பாதணியைக் கேவலமாகக் கருதும் பழக்கம் மனித இனத்திடம் இருக்கின்றது. தமக்குதவுவாரை ஏறெடுத்தும் நோக்காத மனிதர் எம்மோடே பவனி வரும் பாதணியை மாத்திரம் எங்கே கண்டு கொள்ளப் போகின்றார்.

பாதணி பாதுகாப்புக் கவசமே தவிர மரியாதையற்ற பொருள் அல்ல என்பது யாவரும் அறிந்த விடயமே. இருந்தும் கோயிலின் வெளியே கழட்டி வைப்பது சுத்தம் கருதியே என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. ஆலயத்தினுள் பக்தர்கள் நிலத்தில் அமர்ந்திருப்பார்கள். தியானம் செய்வார்கள். அங்கப்பிரதட்சணை செய்வார்கள். இவ்வாறான நடைமுறைகள் நடைபெறும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே பாதணி கோயிலினுள் அணிவதில்லை. கடவுளுக்கு மரியாதை கொடுப்பதற்காகக் கழட்டுவதாகத் தவறான எண்ணமும் நம் மத்தியில் இருக்கின்றது.

அழகழகாக அலங்கரிக்கப்பட்ட மண்டபம். அதனுள் அழகழகான பாதணிகள் அணிந்து மண்டபத்தில் பெண்கள் வலம் வருவார்கள். ஆடைகளுக்குக் கொடுக்கும் அவதானத்தை பாதணிகளுக்கும் கொடுப்பார்கள். இம்மண்டபத்தில் விளக்குகள், ஆரத்தித் தட்டு, பூத்தட்டு ஏந்திவரும் பெண்கள் உட்பட அழகுக் காலணியில் வரிசையாக வருவார்கள். விளக்குகளுடன் கூடவே வரும் காலணியை மேடை வந்தவுடன் கழட்டிவிட்டுப் போகும்படி பணிக்கப்படும். ஆனால் பருவமடைந்த பெண்ணோ பாதணியுடனே ஏறிக் காட்சியளிப்பார். ஆரத்தி எடுக்கும் பெண்கள் காலணியைக் கழட்டிவிட்டே ஆரத்தி எடுக்க வேண்டும். மேடையிலோ எந்தவித கும்பங்களோ வைக்கப்பட்டிருப்பதில்லை. நிலத்திலே மதகுருவோ இருப்பதில்லை. ஆனால், வாசலில் வைக்கப்பட்டிருக்கும் கும்பங்களைப் பாதணியுடனேயே தரிசித்துப் பின் திருநீறு குங்குமம் இட்டு வருவார்கள். விளக்குக்கு மரியாதை என்றால், விளக்குத் தூக்கிவரும் பெண்பிள்ளைகள் அணிந்திருப்பார்கள். விளக்குக்கு மரியாதை என்றால், விளக்குத் தூக்கி வரும் பெண்பிள்ளைகள் பாதணி அணிந்திருத்தல் என்ன நியாயம்.

மேடையை அலங்கரிப்பவர்கள் பாதணி அணிந்த பாதங்களுடனேயே மேடை அலங்காரங்கள் செய்வார்கள், ஆரத்தி எடுப்பவர்கள் பாதணிகளைக்; கழட்டி வருகின்ற போது அலங்காரஞ் செய்தவர்கள் விட்டுச் செல்லும் அசுத்தங்களை பாதங்களில் ஏற்றுக்கொள்ள வேண்டும். பாதணிகள் பாதுகாத்து வந்த பாதங்கள் பழுதடைய இங்கு இடம் அளிக்கப்படுகின்றது. காலுறைதானே அணிகின்றீர்கள் என்றால், அந்தக் காலுறை ஏற்ற அழுக்குகள் மீண்டும் பாதணிக்குள் செல்கின்றன. வீட்டில் பாதணியைக் கழட்டும் போது காலுறையுடன் சேர்ந்தே வீட்டுக்குள் அழுக்குகள் வந்து விடுகின்றன. ஏன் பாதணி கழட்ட வேண்டும்? என்று கேட்டால் அது அப்படித்தான் என்னும் பதிலே விளக்கமாகப்படுகின்றது. காலம் காலமாக நடைபெற்று வரும் நடைமுறை என்னும் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது போகின்றது. இது வடிவேல் பாசையில் சின்னப்பிள்ளைத் தனமாகவே மனத்துக்குப்படுகின்றது. காலம் காலமாக வந்த நடைமுறைகளா இப்போது பூப்புனித நீராட்டுவிழாக்களில் நடைபெறுகின்றன?

இராமன் காட்டுக்குச் சென்றுவிட்டான். பரதன் இராமனுடைய பாதரட்சைகளை எடுத்துக் கொண்டு வந்து அரியணையில் வைத்து இராமன் அரசாளுகின்றான் என்று அரசாட்சி செய்தவன்.

காரியம் ஆற்றுகையில் காரணம் புரிய வேண்டும். காரணம் புரியாது காரியத்தில் ஈடுபடல் மடைமைத்தனமாய்க் கருதப்படுகின்றது. ஆடைஅலங்காரங்கள் அழகல்ல. மனஅறியாமை நீக்கும் அழகே அழகு. தெளிவுமட்ட மனதில் சிந்தனை விரிவுபடும். நான்கு பக்கப் பார்வையில் உலகை அளக்கும் ஆற்றல் புலப்படும்.

43 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *