ஊரோடு ஒட்டி உறவாடி மனதிற்கு விருப்பமில்லாத வாழ்க்கையை வாழ வேண்டுமா?
![](https://www.vettimani.com/wp-content/uploads/2025/02/vm196.png)
தீபா.சிறீதரன் (தைவான்)
எந்த ஒரு சமூகக் கட்டமைப்புக்குள்ளும் வாட்டமாக அமர்ந்து கொண்டு அதைப்பற்றி மீண்டும் மீண்டும் குறை கூறுவதிலோ அல்லது அதன் வரைமுறைகளில் குற்றம் காண்பதிலோ எந்த விதமான அர்த்தமும், பயனும் இல்லை. அத்தகைய அமைப்புக்குள்ளிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளச் செயலற்றக் கருத்து வேறுபாடுகள் மட்டுமே வைத்திருப்பது உதவாது. நம் செயலில் நாம் காட்டும் மாற்றங்கள்தான் உதவும். சக மனிதர்களுக்குக் கேடு விளைவிக்காத அறிவின் செயல்பாட்டிற்குஃ பகுத்தறிவிற்குஃ நுண்ணறிவிற்குஃ அல்லது தனிமனித நம்பிக்கைகளுக்கு மாறான எந்தவிதக் கட்டமைப்புக்குள்ளும் நம்மைப் பொருத்திக் கொண்டு வாழ்க்கையைக் கழிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இங்கு இல்லை.
அத்தகைய கட்டமைப்பை மீற முயற்சிக்கும் ஆரம்பத் தருணத்தில், நாம் எப்போதும் எதிர்ப்புகளையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒதுக்கப்படுவோம், விமர்சனத்திற்கும் கேலிகளுக்கும் ஆளாக்கப்படுவோம். தனிமையை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் இந்தச் சவால்கள் வெறும் தடைகள் அல்ல, அவை நம்முடைய உள்உண்மையுடன் பொருந்தி வாழ்வதற்கான தீர்மானத்தைச் சோதிக்கும் வாய்ப்புகள். ஊரோடு ஒட்டி உறவாடி மனதிற்கு விருப்பமில்லாத வாழ்க்கையை வாழ வேண்டுமா அல்லது மனதும் அறிவும் ஒன்று கூடி இயங்குகிற வாழ்க்கை வேண்டுமா என்பதை நாம் தான் தேர்வு செய்ய வேண்டும்.
சுதந்திரம் என்பது வழங்கப்படுவதல்ல் துணிச்சலுடன் செயல்படத் துணிபவர்களால் அது கைப்பற்றப்படுகிறது. அதற்குச் சுயபுத்தி, மன உறுதி, மற்றும் தார்மீக நம்பிக்கைக் கொண்டிருக்க வேண்டும். “எனக்கு வேறு வழியில்லை, இந்தச் சமூகம் இப்படித்தான் செயல்படுகிறது” என்று கூறிக்கொண்டே காலத்தைக் கடத்துவது நம் இயலாமையை மண்மூடிக் கொட்டி அதில் பரிதாபத்தை வளர்க்கும் முயற்சி. இந்த உதவியற்றத் தன்மைத் தேக்கநிலையின் சுழற்சியை நிரந்தரமாக்குகிறது. சமூக ஒதுக்கிவைப்பு அல்லது பரிச்சயத்தின் ஆறுதலில் கிடைக்கும் சுகம் பற்றிய பயம் வளர்ச்சிக்கான நமது உள்ளார்ந்த திறனை அடக்கிவைக்கிறது. இந்தச் சுழற்சியினின்று மீள விழிப்புணர்வும், விமர்சனச் சிந்தனையும் உண்மையாக வாழ்வதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் தேவை.
சௌகரியத்தை விட உண்மையையும், ஏற்றுக்கொள்ளப்படுவதை விடத் தனித்தன்மையும் மதிப்பவர்களுக்கு மட்டுமே சுதந்திரம் சொந்தமானது. வழக்கமானதை நிராகரித்து, அதன் அனைத்து அபாயங்கள், நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் வெகுமதிகளுடன் வாழ்க்கையின் முழுமையைத் தழுவுவது ஒரு தேர்வாகும். இங்கு தலைதூக்கும் கேள்வி, நமது பிரிவினையைச் சமூகம் ஏற்குமா என்பதல்ல, நம் தனித்தன்மையை ஏற்றுக்கொள்ளும் மன உறுதி நமக்கு இருக்கிறதா என்பதே. மனமும் புத்தியும் இணக்கமாகச் செயல்படும்போது, வெளிப்புறத் தீர்ப்பு அதன் பிடியை இழந்து, நாம் நோக்கமும் நிறைவும் கொண்ட வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க ஆரம்பிப்போம்.
34 total views, 6 views today