ஜெர்மனியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
![](https://www.vettimani.com/wp-content/uploads/2025/02/kanna.jpg)
‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்னும் பாரதியின் வாக்குக்கு இணங்க வள்ளுவர் சிலை ஜெர்மனியில் வந்தமர்ந்திருக்கின்றது.
ஜெர்மனியில் டோட்முண்ட் என்னும் நகரில் சுhநinளைஉhந என்னும் வீதியிலே 07.12.2024 அன்று காலை 11 மணிக்குச் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சிலையை வடிவமைத்தவர் கத்தரீனா பொக் என்னும் ஜெர்மனியப் பெண் ஆவார். இச் சிலை கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாகச் செய்யப்பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. மேற்கு டோட்முண்ட் நகரத்தலைவர் அஸ்ரிறிட் கிறேமர், மாநில நாடாளுமன்ற உறுப்பினர் வோல்கான் பாறன், றல்வ் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரோல்ஷ், மேற்கு டோட்முண்ட் பிரதி நகரத்தலைவர் ஓலாவ் மயர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமிழர்களுடைய பாரம்பரிய இசை பறை மேளம் ஒலிக்க, மக்கள் கரஒலி இசைக்க திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தவர்கள். இது ஒரு பெருமைப்படும் விடையமாகும்.
இச்சிலை அமைப்பதற்கு முற்றுமுழுதாகப் பாடுபட்ட தமிழ் ஆர்வலரும், தொழிலதிபரும், தமிழர் அரங்க உரிமையாளரும், புலம்பெயர் எழுத்தாளர் சங்கத் தலைவருமான வி.சபேசன் அவர்களும், சிலை வடிவமைப்பது சம்பந்தமான உத்தியோக பூர்வமான முன்னெடுப்புக்களுக்கு முற்று முழுதாகப் பாடுபட்ட அவர் மனைவி கலைநிதி சபேசன் அவர்களும் சிலைக்கு மாலை அணிவித்தார்கள்.
அதன் பின் ஜெர்மனியப் பிரமுகர்களுக்கும், சிலையை வடிவமைத்த கத்தரீனா பொக் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்துப் பறை மேள அணிவகுப்புடன் தமிழர் அரங்கத்துக்கு அழைத்துச் அழைத்துச் செல்லப்பட்டனர். தமிழர் அரங்கத்தில் ஜெர்மனியப் பிரமுகர்களும் எழுத்தாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் உரையாற்றினர். தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் க. சுபாஷினி அவர்கள் காணொளி வடிவில் ஜெர்மனி மொழியில் வாழ்த்துரை வழங்கினார். அந்த உரையானது ஜெர்மனியப் பிரமுகர்களுக்கு வள்ளுவரையும், திருக்குறளையும் சிறந்த முறையில் விளங்க வைத்ததுடன் அந்தச் சிலை நிறுவப்பட்ட அவசியத்தையும் தெளிவுறுத்தியது. பேச்சாளர் சி. சிவவினோபன் அவர்களும் காணொளி மூலம் திருவள்ளுவர் பற்றி விளக்கினார். வந்திருந்த ஜெர்மனியப் பிரமுகர்கள் தாம் திருக்குறளைக் கற்கப் போகின்றோம் என்று கூறியது ஒரு சிறப்பம்சமாக இருந்தது.
திருமதி கலைநிதி சபேசன் அவர்களுடைய மாணவிகள் திருக்குறளுக்கு நடனம் ஆடினார்கள். இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சிறுவர்கள் திருக்குறள் மனனம் செய்து ஒப்புவித்தார்கள் ,விருந்தினர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சிலை உருவான கதையை திரு. வி. சபேசன் எடுத்துரைத்தார். சிலை உருவாவதற்குப் பல தமிழார்வலர்கள் நிதி பங்களிப்புச் செய்துள்ளார்கள் எனவும் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். தமிழர்கள் சிலை அமைந்துள்ள இடத்தை வள்ளுவர் சந்தி என அழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். சபேசன் அவர்களுக்கும் அவர் மனைவி கலைநிதி அவர்களுக்கும் ஜெர்மன் அமைப்புக்கள் பொன்னாடை, மாலை அணிவித்து அவர்களைப் புகழ்ந்து தம்முடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.
வள்ளுவர் சிலை அருங்காட்சியகத்தில், பூங்காவில் எல்லாம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பாவில் வீதியில் வள்ளுவர் சிலை ஜெர்மனி டோட்முண்ட் நகரிலேதான் அமைந்துள்ளது. அத்துடன் ஒரு அந்நிய நாட்டுப் பெண்மணி வள்ளுவர் சிலையை வடிவமைத்ததும் இதுதான் முதல் தடவை என்பதும் பெருமைக்குரிய விடயமாக இருக்கின்றது.
இலண்டன், டென்மார்க், ஹொலாண்ட், பாரிஸ் உட்பட ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் இருந்து குளிர் மழையையும் பொருட்படுத்தாமல் அதிகமான மக்கள் வள்ளுவர் சிலையைத் தரிசிக்க வந்திருந்தமை பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ஜெர்மனியில் தமிழர்களின் அடையாளமாக அமைந்திருக்கும் வள்ளுவர் சிலை ஒரு வரலாற்றுத் தடயமாகும்.
- வான்மதி (யேர்மனி)
39 total views, 8 views today