வயோதிபத்தில் தனிமை

  • ஏழு நாட்களை கடத்தவேண்டுமே

– மக்களின் முகத்தைக் காண்பதற்கு!

  • பாக்குப் பாட்டி (யேர்மனி)

தனிமை, தனிமை… தம்பதிகள் இருவரும் தனிமையிலிருந்து காதலிக்கவா முடியும்? அதற்கு வயதும் இல்லை, தெம்பும் இல்லை. “உனக்கு நான்; எனக்கு நீ” – அவ்வளவுதான் நம்ம காதல்.

சாப்பாடு? இருந்தால் தாம்மர் இல்லாட்டி பரவாயில்லை. பானை சாப்பிடுவோம். உன்னால ஏலுமானால் சமை; இல்லாட்டி சமாளிப்போம். எங்கேயாவது போவோமா? ஏலாதப்பா! நாரி நோவுது; கால் உளையுது.

மகனிடம் அல்லது மகளிடம் கேட்டு டாக்டரிடம் போவோமா? இல்லையப்பா! கேட்டனான் அவன் ஆறு மணி மட்டும் வேலையாம்; அடுத்த வாரம் போவோமாம். மகளிடம் கேட்டேன்; தாங்கள் பிள்ளைகளுடன் டிஸ்னிலாண்ட் போறாங்களாம்; அடுத்த வாரம் காட்டுவோமாம்.

தனிமை, தனிமை… ஏனப்பா பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் சனிக்கிழமை வாராங்கல்லோ?
என்னப்பா சமைக்கப்போறாய்? மருமகள்: “சமைக்க வேண்டாம்; ஏதும் வாங்கி சாப்பிடுவோம் அல்லது எங்கும் போய் சாப்பிடுவோம்” என்பாள்.ஆனால் கிழமையில ஒரு நாள், என் கையால சமைக்க வேணும். நல்ல கறி வைச்சு பிரியாணி செய்து கொடுக்கணும். பேரப்பிள்ளைகளுக்கு அவங்க என்ன சாப்பிடுவாங்களோ அதை கேட்டு செய்வோம்.

பிள்ளைகளின் வரவையும், பேரப்பிள்ளைகளின் முகத்தையும் பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அந்த இரண்டு வயதானவர்களின் முகத்தில் தெரியும் ஒளி – வார்த்தைகளால் சொல்ல முடியாது.

பேரப்பிள்ளைகளை பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு, பிள்ளைகள், மருமக்கள் வெளிநாடுகளுக்கே சென்றுவிடுவார்கள். தங்களால் இயலாத போதும், முகம் சுளிக்காமல் கவனிக்கும் வயோதிபர் எத்தனை பேர் இருக்கிறார்கள்.

பயணத்தால் திரும்பிய மக்கள் சில சமயம் குறைபாடும் சொல்லுவதுண்டு. பெற்றோர் வேலைக்கு சென்றதும், குழந்தைகளை பாலர்வகுப்பு, பாடசாலைக்கு கூட்டிச் செல்வதும் – அதே வயோதிப பெற்றோர்களே.

முப்பது வருடங்களுக்கு முன் பிள்ளைகளை கொண்டு திரிந்தோம். இப்போ பேரப்பிள்ளைகளை கொண்டு திரிகிறோம். அது மகிழ்ச்சியா? அல்லது சலிப்பா? ஊகூம் காட்டவே காட்ட மாட்டார்கள் வயோதிப பெற்றோர்கள்.

பிள்ளைகளெல்லாம் விடுமுறை என்ற பெயரில் குடும்பம் குடும்பமாக திரிவார்கள். அது ஒன்றையும் அனுபவித்திருக்காத பெற்றோர், பிள்ளைகளின் குடும்பம் நல்லபடியாக போய்வர வேண்டும் என்று கடவுளிடம் வணங்கி, திரும்பிவருமட்டும் காத்திருப்பார்கள். வாழ்க்கையை உழைப்பதிலேயே முடித்த பெற்றோர், எங்கே வெளிநாட்டு பயணங்கள் செய்திருப்பார்கள்?

இப்படியே காலங்களைக் கடந்து தனித்துவிடப்பட்ட வயோதிபப் பெற்றோர், பயணங்களே செய்ய முடியாமல் தொலைக்காட்சியில்: தொலைதூர நாடுகளையும், அங்குள்ள அற்புதங்களையும் நாள் முழுதும் பார்த்து களிப்பார்கள்.

முகத்தை முகமாகப் பார்த்துக்கொண்டிருப்பதிலேயே இல்லை; சமூக வலைத்தளங்களில் போய் எல்லா நாட்டு செய்திகளையும் பார்த்து, “உலக அறிவில் தங்களை விட்டால் ஆளில்லை” என்ற இறுமாப்புடன் காலத்தைக் கழிப்பார்கள். என்ன செய்வது? ஏழு நாட்களை கடத்தவேண்டுமே மக்களின் முகத்தைக் காண்பதற்கு. சில பெற்றோர் மாதக்கணக்கிலும் காத்திருப்பார்கள்.

முக்கிய விடயம்: விதி வசத்தால், இந்த ஜோடி பறவையில் ஒன்று தவறிவிட்டால், அந்த ஒற்றை பறவையின் நிலை – சோகம்; தாங்க முடியாத ஒன்றாகிவிடும். “என்னை தனியாகவிட்டு போய்விட்டாயே!” என்ற புலம்பல்.

பிள்ளைகள் இரண்டுக்குமேல் இருந்தால், அந்த ஒற்றை பெற்றவர் பந்தாடவும் படுவார்.

எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரைத் தங்களுடன் சேர்த்துவைத்து வாழ முடியாதவர்களாக இருந்தாலும், பெற்றோருக்குச் செய்ய வேண்டிய சகல கடமைகளையும், தேவைகளையும், மகிழ்ச்சியையும் சரிவரச் செய்து கொண்டு இருப்பார்கள்.

அப்படியான பிள்ளைகளுக்குப் புண்ணியம் சேர்ந்தபடியே இருக்கும்.

எவ்வளவுதான் கொட்டிக் கொடுத்தாலும், வயோதிபம் அடைந்தால் தனிமை என்பது தவிர்க்க முடியாதது. தமிழர் கலாச்சாரத்தில் வயோதிபர் இல்லங்களில் பெற்றோரை விடவும் பிள்ளைகளுக்கு உடன்பாடு இல்லை. அது தன்மானப் பிரச்சனை. பெற்றோரும் அதை விரும்பவில்லை. அவர்கள் பிள்ளைகளுக்கு ஒரு இலுக்கைத் தேடித் தர தயாராகவும் இல்லை.

அநேக வயோதிப பெற்றோர்கள் விரும்புவது ஒன்றே ஒன்றுதான்:
வெளிநாடுகளில் இருக்கும் எங்களுக்கு, வெளிநாட்டு மொழியில் உள்ள வயோதிபர் இல்லங்களின்றி, தமிழ் இல்லங்கள் இருந்தால், அங்கே சென்று இருந்து கொண்டு, எல்லா வயோதிபர்களுடனும் அளவளாவி, கைகொட்டி சிரித்து மகிழ்ந்து, ஆடிப்பாடி, இறுதிக் காலம் வரை சந்தோஷமாக வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதே.

புலம் பெயர்ந்து வாழும் பலர், நாட்டில் எவ்வளவோ முன்னேற்றங்கள் செய்கிறார்கள்.புலம்பெயர் நாடுகளிலும் இப்படியான தமிழர் வயோதிப இல்லங்களை அமைத்து வசதிகளை செய்து கொடுத்தால், உழைப்பு, பணமாகவும், வயோதிபர்களின் வாழ்த்து புண்ணியங்களாகவும் பெற்றுக்கொள்ளலாம் தானே?

14 total views, 8 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *