சலரோகம் ஒரு காதை

Dr.பஞ்சகல்யாணி செல்லத்துரை.(யாழ்ப்பாணம்.)
வைத்தியர் : அம்மா சுகர் கூடவாயிருக்கு காலமை என்ன சாப்பிட்டிட்டு வந்தனிங்கள்?
நோயாளி 01 : பயத்தம்பணியாரம்,சீனி அரியாரம்
வைத்தியர்: உதுகள் உங்களுக்கு நல்லதோ?
சீனி போட்ட உதுகள் எல்லாம் நீங்கள் சாப்பிடக் கூடாதென்று படிச்சுப் படிச்சுச் சொன்னானெல்லோ?
நோயாளி 01: என்ன செய்யிறது? பக்கத்து வீட்டில சாமத்தியவீடு,இதுகளைத் தந்தினம்.காலமையில தேத்தண்ணியோட கடிச்சுச் சாப்பிடச் சொல்லி மகள் தந்தா.
(உதவியாளரைப் பார்த்து) அப்பவும் நான் சொன்னான் இண்டைக்குக் கிளினிக், பிறகு கரைச்சலென்று.
வைத்தியர்: ஐயா நீங்கள் சலரோக மருந்து ஒழுங்காய்ப் போடுறனீங்களோ?
நோயாளி 02: போடுறனான்.
வைத்தியர் : அப்ப சுகர் கூடவாயிருக்கு!!!!
சாப்பாட்டுக் கட்டுப்பாடு இல்லையோ?
நோயாளி 02: சப்பிடாமல் என்னண்டு இருக்கிறது?
நீங்கள் வேணுமெண்டால் குளிசையைக் கூட்டித் தாங்கோ.நான் ஐஸ்கிரீம் குடிச்சிட்டுக் கொஞ்சம் கூடத்தான் போடுறனான்.
வைத்தியர்: அம்மா !காத்தாலை தேத்தண்ணி குடிச்சதோ?
நோயாளி 03: ஓம்மம்மா,நான் வெறுந்தேத்தண்ணியோட சீனி போடக்கூடாதெண்டாப் போல கையில சீனி நக்கிக் குடிப்பன்.இல்லாட்டிப் பனங்கட்டி கடிப்பன்.
வைத்தியர்: உதெல்லாம் பாவிக்கக் கூடாதென்று சொன்னானெல்லே?
நோயாளி 03: உண்ணாணை நான் அதைக் கவனிக்கேல்ல
வைத்தியர் : ஐயா மாச்சாப்பாடு நல்லாச் சாப்பிடுறியளோ?
நோயாளி 04: என்னண்டு தெரியும்? பார்த்த மாதிரிச் சொல்லுறியள்?
வைத்தியர் : உங்கட சுகர் றிப்போட் அப்பிடிச் சொல்லுது. ஏன் கட்டுப்பாடு இல்லை?
நோயாளி 04: நாங்களென்ன கதிரையில இருந்து கதைக்கிற வேலையோ செய்யிறம்? எங்கட வேலைக்குச் சாப்பிடத்தானே வேணும். ஒரு நீத்துப் பெட்டி புட்டை இறக்கினால்தான் உசாராக இருக்கும்.
வைத்தியர் : புட்டை விட்டிட்டுப் பயறு அவிச்சுச் சாப்பிடலாமே!
நோயாளி 04: அது பத்தியப்படாது. வயிறு அடையவேணும்.
வைத்தியர் : அதுக்கு இலைக்கறி , வாழைப்பொத்தி,தாமரைக்கிழங்கு சேருங்கோ.
நோயாளி 04: நாங்கள் புட்டும் மாம்பழம் அல்லாட்டிப் பிலாப்பழம் ஆக்க்குறைஞ்சது வாழைப்பழம் சாப்பிடுவம்.சின்னன்லேருந்து பழகீட்டு.
வைத்தியர்: ஐயா இனி உங்களுக்கு ஊசிதான் போடோணும். உந்தக் கணக்கில போனால் எல்லாம் பழுதாகப் போகுது.
நோயாளி 05: ஊசி எனக்கு வேண்டாம்.உங்களுக்கு வைத்தியம் தெரியாட்டி விடுங்கோ.கொடியாமத்தில் ஐயா ஒராள் பாணி குடுக்குறாராம். போப்போறன். வந்து என்ர கொன்றோலைக் காட்டுவன். மருந்துக் கடைக்கார்ரிட்ட கொமிசன் வாங்கீட்டு ஊசி விக்கப் பாக்கிறா.
அப்பப் பாருங்கோவன்
48 total views, 4 views today