ஒரு படைப்பைக் காட்டிலும் அதை உருவாக்கும்போது கிடைக்கும்தருணங்களும், அனுபவங்களும் பன்மடங்கு மதிப்பு வாய்ந்தவை.

0
293741797_3225424224405550_8829306630172158154_n


–தீபா ஸ்ரீPதரன் தைவான்

என் 2024
இந்த ஆண்டின் பெரும்பகுதியை ஆராய்ச்சி வேலைக்காகச் செலவிட்டிருக்கிறேன். வேலை முடிந்து வீடு திரும்பிய பல நாட்களும் physically and cognitively drain ஆகியிருக்கிறேன். ஒரு எக்ஸ்பெரிமன்ட்டைப் பலமுறை செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு parameter மாற்றிச் செய்துபார்த்தேன். Pipetting syndrome( musculoskeletal) என்று சொல்லக்கூடிய வலி. அதற்கான விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன். நல்லவேளை அப்படி எதுவும் ஆகவில்லை. ஆராய்ச்சி மையத்தில் நிறைய நடந்திருக்கிறேன். அதுவும் சோர்வை ஏற்படுத்தியது என்றாலும் பிடித்த வேலை. அதில் ஒரு மகிழ்ச்சி.

சம்பளம், ஒரு குறிப்பிட்டதுறையில் ஆளுமை ஏற்படுவது என்பதைத் தாண்டி வேலை என்பது நம் வாழ்க்கையை ஒரு விதத்தில் வடிவமைக்கும் அமைப்பும் கூட. Crossover wisdom என்று சொல்லுவார்கள். வேலையின் நிமித்தம் வளரும் சில குணாதிசயங்கள் நம் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஆராய்ச்சிப் பணியிலிருந்து வளர்ந்தச் சில குணங்களை என் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையிலும் கடைபிடிக்கிறேன். எந்த ஒரு சூழலையும், விளைவையும், மனிதர்களையும் முழுமையாக மேலோட்டமாகப் பார்ப்பது, பகுத்துக் கூறுபோட்டுப் பார்ப்பது, ஒன்றோடொன்று இணைத்துப் பார்ப்பது என்பதை எடுத்துக்காட்டாகச்; சொல்லலாம்.

சிறு வயதிலிருந்தே மனிதர்களை உறவுகளைப் பிரித்துப் பார்க்கும் தன்மை எனக்கு ஓரளவு உண்டு. அது ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டப் பின் இன்னும் நுணுக்கமாக வளர்ந்திருக்கிறது என்றே நினைக்கிறேன். இதுபோலப் பொறுமை, விடாமுயற்சி, குப்பை என்று ஒதுக்கிய விஷயங்களிலிருந்து கிடைக்கும் புது ஆரம்பத்தை அறியும் தன்மை போன்ற பல குணங்களும் இதில் அடங்கும். அந்த வகையில் இந்த ஆண்டும் நிறையப் பொறுமைப் பழகிக் கொண்டேன்.
வியட்நாம் பயணம். நிச்சயமாக மறக்க முடியாத ஓர் அனுபவம். எனக்குப் பயணமென்பது ஓர் ஊருக்குச் சென்று அங்குள்ள அற்புதமான இடங்களையோ கலை நுட்பங்களையோ மட்டுமே பார்த்துவிட்டு வருவதல்ல. எந்த அளவிற்கு அந்த இடத்திலுள்ளஃ அங்கு வந்திருக்கும் புதிய மக்களுடன் தொடர்புகொண்டு பேசுகிறேனோ அந்த அளவிற்கு அந்தப் பயணம் எனக்குப் பிடித்துப் போகும்.

அங்குள்ள பாரம்பரிய உணவுகளை உண்பதிலும் ஒரு பயணம் சிறப்படையும். இவை இரண்டுமே நாம் சென்ற இடத்தின் ஒரு துண்டை நம்மோடு இணைத்துக் கொண்டு அதைக் கூடவே எடுத்து வருவதற்குச் சமம் என்று சொல்லுவேன். என்றும் நிலைத்திருக்கக் கூடிய உணர்வுகள் அவை. அந்த வகையில் வியட்நாமில் நிறையப் பாரம்பரிய உணவு வகைகளை உண்ணும் வாய்ப்புக் கிடைத்தது. உணவகத்தில் வேலைப் பார்ப்பவர்களிடம் நீண்ட நேரம் உரையாடினேன். அங்கு, ஹலாங் பே கப்பல் சவாரியில் பலதரப்பட்ட மக்களுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. இரண்டு வயதானத் தம்பதிகள். ஒரு தம்பதியினர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள். இரண்டு முறை விவாகரத்து வரை சென்று தங்கள் மணவாழ்க்கையை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கும் கதையைப் பற்றிப் பகிர்ந்து கொண்டனர். ஒருவொருக்கொருவர் அவர்கள் உறவை பற்றி அவர்கள் கொடுத்துக் கொள்ளும் அங்கீகாரமும், தனிப்பட்ட வளர்ச்சியில் அவர்கள் காட்டிக்கொள்ளும் ஈடுபாடும் அபாரமாக இருந்தது.

மற்றொரு தம்பதியினர் டெல்லிக்காரர்கள். அவர்களும் அவர்கள் வாழ்க்கைப் பற்றிய சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர். பிரமிப்பாக இருந்தது. அதைப்பற்றி நான் எழுதலாமா என்று கேட்டபோது வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். ஆகவேஅடுத்தது இரண்டு இளைஞர்கள். பெங்களூரைச் சேர்ந்தவர்கள். பள்ளிக்காலத்தலிருந்தே நண்பர்களாம். இருவரும் புத்தகம், வீடியோ, ஆவணப்படங்களில் மூழ்கி நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருந்தனர். இருவரும் இன்ட்ரோவேர்ட்ஸாம். ஒருமுறை ஆக்ரா சென்றபோது அவர்களுக்கு ஏற்பட்ட ஒரு வாழ்க்கை அனுபவம் அவர்கள் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. எங்களுக்கு நிறையத் தெரியும் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் நிஜ வாழ்க்கை நாங்கள் நினைத்ததைக் காட்டிலும் பரந்துபட்டது. மனிதர்களை நேரில் சந்தித்துப் பெறும் அனுபவப் பாடம் கூர்மையானது.அதை நேரடியாக அறிந்துகொள்வது மிக முக்கியம் என்றார்கள். இப்போதுதான் “என் இனமடா நீ” என்று அவர்களைத் தழுவிக்கொண்டேன். கடந்த மூன்று ஆண்டுகளாக ஓர் ஆண்டிற்குக் குறைந்தது மூன்று அல்லது நான்கு பயணங்களாவது மேற்கொள்ள வேண்டும் என்ற முடிவோடு பயணம் செய்து வருகிறார்கள். அனைவரிடமும் சகஜமாகப் பேசிப் பழகுகிறார்கள். பார்ப்பதற்கு நிறைவாக இருந்தது. இப்படி வியட்நாம் மறக்க முடியாத கதைகளுடன் அமைந்தது சிறப்பு.

34 வருடங்களுக்குப் பிறகு நான் பிறந்த ஊரான தூத்துக்குடிக்குச் சென்றது. நான் பிறந்த மருத்துவமனை, வளர்ந்த வீடு, விளையாடியத் தெரு, படித்த வகுப்பறை என்று காலத்தைப் பின்னோக்கி வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பு. என் வாழ்வின் முதல் பத்து வருட வாழ்க்கை. பசுமரத்தாணி போலப் பதிந்த நினைவுகள்.மீட்டெடுக்கையில் நெகிழ்ச்சியாக இருந்தது.

மனதிற்கு நெருக்கமான ஓர் ஆயில் பெயிண்ட்டிங் வரைந்தது. ஒரு படைப்பைக் காட்டிலும் அதை உருவாக்கும்போது கிடைக்கும் தருணங்களும், அனுபவங்களும் பன்மடங்கு மதிப்பு வாய்ந்தவை. எந்த ஒரு படைப்பாற்றலில் நான் மனது ஒன்றி ஈடுபடும்போதும் என்னுடைய உறக்கம் பாதிக்கப்படும். குறிப்பாய் வரையும்போதும், யூக்கலேலே கற்றுக்கொள்ளும்போதும்.அதைப்பற்றிய உள்ளார்ந்த தேடலும்,கற்பனைகளும் மனதில் நடனமாடிக் கொண்டே யிருக்கும். ஒருவித மன எழுச்சி ஏற்படும். அப்படி உறக்கம் கலைந்த இரவுகளில் நிறைய யோசித்திருக்கிறேன். அது என் எழுத்திற்கு உதவியிருக்கிறது.

நிவியின் graduation ceremony. என் வாழ்க்கையில் இன்று வரை எனக்குக் கிடைக்காமல் போன ஓர் அனுபவம். ஏக்கம். அவளுடையதைப் பார்த்து மனம் நெகிழ்ந்து கொண்டேன். என் மகளுடைய படிப்பிற்கான பொருளாதாரச் செலவு இந்த ஆண்டுக் குறைந்ததால், வெளியே சிலருக்குப் பொருளாதார ரீதியில் உதவி செய்யும் வாய்ப்பு அமைந்தது. மனநிறைவு.
ஃஃஅம்மா நீ எழுதற, வரையற, அறிவியல் ஆராய்ச்சில ஈடுபட்டுருக்க ஆனா உனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் தர்ரது எது?” என்று ஒருமுறை என்னிடம் என் மகள் கேட்டாள். நான் ஒரு வினாடி கூட யோசிக்காமல் அவளிடம் கூறிய பதில் “எனக்கு அம்மாவாக இருப்பது தான் ரொம்ப சந்தோஷம், அது எனக்கு இயல்பாக வருகிறது, முயற்சிசெய்யாமலேயே” என்றேன்ஃஃ என்றும் அதுதான் எனக்கான முழுமையான மனநிறைவு. எனவே இந்த ஆண்டு சிறப்பானதே.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *