சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு விழாசிறப்பிதழாக ‘சிவத்தமிழ்’ நல்லூரில் மலர்ந்தது.

சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு விழா இரண்டாம் நாள் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக, நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் 08.01.2025 இடம் பெற்றது. மங்கல விளக்கேற்றல், தேவாரத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமானகின.
ரிஷி தொண்டுநாத சுவாமிகளது ஆசி உரையைத்தொடர்ந்து, தலைமையுரை செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்கள் நிகழ்த்தினார்.
கடந்து வந்த பாதைகளையும், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் எவ்வாறு எல்லாம் தன்னை செம்மையுறச் செய்தார் என்றும், அம்மா போராட்டம் நிறைந்த காலத்தில் அவற்றை எல்லாம் எவ்வாறு துணிவோடும், கனிவோடும், கடந்து வந்தார் என எடுத்துரைத்தார். அவரது உரைக்குபின் மேலும் மேலும் சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் மேல் உள்ள மதிப்பு மேலும் துலங்கியது.
தன்னை வளர்த்து எடுத்தவர்களை மறந்தும், மறைத்தும், வாழ்கின்ற ஒரு வாழ்வியலுக்குள் , மூழ்காது மூத்தோர் வழிகளை போற்றுகின்ற ஒரு மரபுக்குள் நின்று தலமை உரையாற்றியது சிறப்பாக அமைந்தது.
வாழ்த்துரைகள், முன்னாள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணை வேந்தர் நா.சண்முகலிங்கம், பேராசிரியர் அ. சண்முகதாஸ், முனைவர். அ. மனோன்மணி, மூத்த எழுத்தாளர் திருமதி கோகிலா மகேந்திரன். வெற்றிமணி பத்திரிகை யின் ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் ஆகியோர் அன்னையுடனான, தத்தமது சொந்த அனுபவங்களை மீள்பதிவு செய்து உரை நிகழ்த்தினார்கள்.
சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் எழுதிய ‘கந்தபுராணச் சொற்பொழிவுகள்’. நூலும், வெற்றி மணி வெளியீடான சிவத்தமிழ் சஞ்சிகை சிறப்பிதழும் அங்கு வெளியிடப்பட்டது. பேராசிரியர், சிவலிங்கராஜா அவர்களும், வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு. சிவகுமாரன் அவர்களும் வெளியீட்டு உரைகளை நிகழ்த்தினர்.
பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்கள் அம்மாவின் கந்தபுராணச் சொற்பொழிவுகள் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் அதிகம் இடம்பெற்றதாகவும்,அன்னையின் ஆழமான சொற்பொழிவுகள் நாம் கேட்க கொடுத்துவைத்தவர்கள் என்றார்.
யேர்மனியில் இருந்து வருகைதந்து சிவத்தமிழ்ச் செல்வியின் நூற்றாண்டு சிறப்பிதழாக சிவத்தமிழ் சஞ்சிகையை வெளியிட்டார். அவர்தன் வெளியீடு உரையில், 10,01.2005 தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் முத்துவிழாவில் முத்து விழா சிறப்பு இதழை வெளியிட்டோம். அன்று சிவத்தமிழ் சஞ்சிகை சிறப்பிதழை இலங்கை, யேர்மனி, இங்கிலாந்து, கனடா ஆகிய நான்கு நாடுகளில் வெளியிட்டு மகிழ்ந்தோம்.
இன்று அன்னை இறைபதம் அடைந்து 17 வருடங்களுக்கு பின் அவரது நூற்றாண்டு விழா அரங்கில் சிவத்தமிழ் சிறப்பிதழ் வெளியீடு செய்கிறது.
உயிர்வாழ்தல் என்பது வெறும் மூச்சுவிடுதல் அல்ல. உயிர்ப்போடும் இருத்தல் என்பதாகும். உயிர்ப்போடு இருப்பவர்கள் நம்முன் வாழ்ந்தவர்கள் செய்த நற்காரியங்களை உயிர்ப்புடன் வைத்திருத்தல், அதனை நமது அடுத்த சந்ததிக்கு கடத்தல் என்பன அடங்கும்.
அன்னை தனக்குப்பின் இவற்றைக் கட்டிக்காத்து வளர்க்க ஆறு. திருமுருகன் அவர்களை வளர்த்து எடுத்தது ஒரு அறிவான ஏன்! அது ஒரு அற்புதமான செயலுமாகும். செஞ்சொற்செல்வார் ஆறு. திருமுருகன் அவர்கள் இன்று அன்னையையும் மிஞ்சிவிட்டார் என்பது உண்மையாக இருந்தாலும், ஒரு விடயத்தில் அன்னையை மிஞ்ச முடியுமா என்பதற்கு காலமே பதில் சொல்ல வேண்டும் என்றார்.
அது என்னவென்றால் சிவத்தமிழ்ச் செல்வி எப்படி ஒரு தலைசிறந்த தொண்டனாக ஆறு. திருமுருகன் அவர்களை செதுக்கினாரோ. அதே போல் ஒரு “பன்முக ஆற்றல்’ கொண்ட திருமுருகன் திரு முருகனுக்கும் கிடைப்பார? என்றார்.
மேலும் சிறப்பு மலருக்கு ஆக்கங்களை தந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
முதற் பிரதி பேராசியர் அ.சண்முகதாஸ்,முனைவர். ஆ.மனோன்மணி ஆகியோர் வழங்க திருப்பணித் தொண்டன் திரு. குழந்தை வேல், விவேகானந்தன் பெற்றுக்கொண்டார். சிறப்பு பிரதிகள் பெற்றோர் விபரம் யாழ்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் மனைவியும், பொறியியலாளர் சி.தயாபரன், ஸ்ரீ ரிஷி தொண்ட நாதன், திருமதி வலன்ரீனா இளங்கோவன், முன்னாள் துணை வேந்தர் நா.சண்முகலிங்கம் ஆகியோர்.
மகளிர் இல்ல மாணவிகளதும் , யூனியன் கல்லூரி மாணவிகளதும் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. விழா குறித்த நேரத்தில் தொடங்கி நேர்த்தியாக விழா இடம் பெற்றது. இத்தன்மை அன்னை மீது இன்றும் அளவுகடந்த பாசம் கொண்ட மக்கள் உயிர்ப்போடு வாழும் தன்மையை காட்டுகிறது.