திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணத்தில் அமைந்ததால் யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை.

“வள்ளுவர் பிறந்தமையால் தமிழ் நாட்டுக்கு எவ்வாறு பெருமையோ
அதேபோல திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணத்தில் அமைந்ததால் யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை”

“வள்ளுவர் பிறந்தமையால் தமிழ் நாட்டுக்கு எவ்வாறு பெருமையோ அதேபோல திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணத்தில் அமைந்ததால் யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை” என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மாவிட்டபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) திறந்து வைக்கப்பட்ட சிவபூமி திருக்குறள் வளாகத்தின் மாலை நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக ஆளுநர் கலந்துகொண்டார்.

செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற மாலை நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்டச் செயலர் ம.பிரதீபன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன், மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், தமிழ்த்துறை பீடாதிபதி விசாகரூபன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில், ஏனையோரால் நினைத்துப்பார்க்க முடியாத விடயங்களை ஆறு.திருமுருகன் அவர்கள் சாதித்து வருவதாக புகழாரம் சூட்டினார். தமிழுக்கும், சைவத்துக்கும் அவர் தனது வாழ்வையே அர்ப்பணித்து அரும்பணியாற்றி வருகின்றார் என்று குறிப்பிட்டார். ஏனைய ஆலயங்களுக்கு முன்மாதிரியாக சமூகப்பணிகளை அவர் முன்னெடுத்து வருகின்றார் எனக் குறிப்பிட்ட ஆளுநர் அதை ஏனைய ஆலயங்களும் பின்பற்றவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இன்று பலர் கொடையளிக்க தயாராக இருந்தாலும் நிதி மீதான வெளிப்படைத்தன்மை இன்மையால் தயங்குகின்றனர் எனத் தெரிவித்த ஆளுநர், ஆறு.திருமுருகன் மீது கொண்ட நம்பிக்கையால்தான் பலர் நிதி கொடுக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

திருக்குறள் தமிழர்களுக்கு பெருமை எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், எந்தக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய நூலாக திருக்குறள் அமைந்திருப்பதைக் குறிப்பிட்டார். எந்தமொழி பேசுவோரும், எந்த மதத்தைப் பின்பற்றுவோரும் திருக்குறளை படிக்க முடியும் எனத் தெரிவித்த ஆளுநர், திருவள்ளுவர் தமிழராகப் பிறந்தமை எங்களுக்கும் பெருமை எனச் சுட்டிக்காட்டினார்.

58 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *