சமூக வலைத்தளமும் நமது வெற்றியும்

- பிரியா.இராமநாதன் (இலங்கை)
புதுவருடம் பிறந்தாயிற்று, ஆளாளுக்கு சபதங்களையும் இலட்சியங்களையும் அள்ளிக்கட்டிக்கொண்டு புதிய வருடத்திற்குள் நுழைந்திருப்போம் . போதாக்குறைக்கு நாம் என்னவெல்லாம் இலட்சியங்களை அடையப்போகிறோம் என்பதனை நோகாமல் சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டிருப்போம். ஆனால்? உண்மையிலேயே வருடம் பிறக்கும்போது ஒன்றை செய்யவேண்டும் என நம்மிடம் இருக்கும் உத்வேகம் , அடுத்தடுத்துவரும் சில மாதங்களிலேயே காணாமல்போகும் வழக்கம் நம்மில் பலரிடமும் உண்டு. ஏன் இப்படி ? இதற்கான முதல் காரணம் எதுவாக இருந்தாலும் முக்கிய காரணம் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை செய்து முடிப்பதற்கு முன்பே சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதுதான் என்றால் அதுதான் உண்மை . ஏனெனில் , ” இந்த வருடத்தில் நான் இதை சாதிக்கப்போகிறேன் ” என நாம் பதிவிடும் பதிவுகளுக்கு வரும் வாழ்த்துக்களும் , லைக்குகளும், கமெண்டுக்களும் குறிப்பிட்ட அந்த எல்லைக்குள்ளேயே நம்மை திருப்தியடைய வைத்துவிடும் என்பதுதான் உளவியல் . சத்தமில்லாமல் சாதித்துவிட்டு வெற்றியை பதிவிடுவதென்பது வேறு , ஒன்றை செய்து முடிப்பதற்கு முன்பே அதனை டமாரம் அடித்து ஊருக்கே சொல்லிவைப்பதுபோல் , சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதென்பது நம்மை வளரவிடாமல் செய்யும் ஒன்று.
உண்மையில் இதுமட்டுமல்ல நம் பிரச்சினை , நாம் போடும் பதிவுகளுக்கும் என்னென்ன வினையாற்றல்கள் வந்திருக்கின்றன என்பதை அடிக்கடி சென்று பார்த்துக்கொண்டிருப்பது,அதற்கு பதிலிட்டுக்கொண்டிருப்பது, மற்றவர்கள் சமூக வலைத்தளங்களில் என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள் என விடுப்பு பார்ப்பது என எல்லாமே நமக்கான நேர விரயம்தான் . இப்படி நேரத்தை சமூக வலைத்தளங்களில் விரயமாக்கிக்கொண்டிருந்தால் நாம் நமக்கான இலட்சியங்களை நிறைவேற்ற நேரமேது ? போதாக்குறைக்கு மற்றவர்களது பதிவுகளை பார்த்து “அடடே அவர்கள் கார் வாங்கியிருக்கிறார்கள்,வீடு வாங்கியிருக்கிறார்கள் , விடுமுறையை கழிப்பதற்கு வெவ்வேறு நாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள், கணவன் மனைவி குழந்தைகள் என எப்படியெல்லாம் அன்போடு பின்னிப்பிணைந்திருக்கிறார்கள், நமக்கு மட்டும் ஏன் இதெல்லாம் அமையவே மாட்டேங்குது ? நாம் ஏன் இப்படி இருந்து தொலைக்கின்றோம்?” என மனஉளைச்சல்களுக்கு வேறு ஆளாவோம்! உண்மையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் சந்தோஷமாக தம்மை காட்டிக்கொள்ளும் அனைவருமே அப்படிதான இருக்கின்றார்களா ?
என்றால் இல்லை என்பதே யதார்த்தம் ! இந்த உலகம் தன்னிடம் இல்லாதவற்றையும் இருப்பதாக காட்டிக்கொள்ள தற்போது பயன்படுத்தும் ஒன்றாகவே சமூகவலைத்தளங்கள் மாறியிருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் . நானறிய கீரியும் பாம்பும் போல அடித்துக்கொள்ளும் பல தம்பதிகள் , அன்றுதான் திருமணம் முடித்து வந்த புதுமானத் தம்பதிகள்போல் புகைப்படங்களை பகிர்வது , தம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டிக்கொண்டு புகைப்படங்களை பகிர்வது , தம்மை ஓர் மிகப்பெரிய திறமைசாலியாக சித்தரித்து பதிவுகளை போடுவது என பலவற்றை நான் அவதானித்ததுண்டு . இவர்களெல்லாம் ” Attention seekers ” என்கிற கேட்டகரிக்குள் அடங்குபவர்கள் ! தங்களின் இயல்பான வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை , புகைப்படம் , குறும்படம் மூலம் பகிர்ந்துக்கொள்ளுதல் என்பது ஏற்றுகொள்ளகூடியதாக இருந்தாலும், அதைவிட அதிகமாக தன் நிலைமைக்கு மீறிய இயல்புவாழ்கைக்கு புறம்பான ஒரு பெருமையான உலகை காண்பிக்கும் வகையிலேயே தகவல்கள் பதியப்படுகின்றது என்கிற நிதர்சனம் புரியாமல் , பலரும் ஐயோ நமக்கு அப்படியான வாழ்வில்லையே என ஆதங்கப்படுகின்றோம்.
மின்னஞ்சல் முகவரி வைத்திருப்பதேயே பெரிதாக கருதும் இன்றையச் சூழலில் தற்போது சமூக வலைதளங்களில் கணக்கு இல்லாதவர்கள் அற்ப்பமாக பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பேஸ்புக், டிவிட்டர், ஆர்குட், டிவிட்டர், யூடியூப் ஆகியவற்றில் கணக்கு இல்லாதவர்களை எள்ளி நகையாடுகின்றனர். இத்தகைய சமூக மாற்றங்கள சமூக வலைதளங்கள் ஏற்படுத்தியுள்ளன.நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தைப் பயன்படுத்தும் நிலைமாறி இணையத்திலேயே நேரத்தைக் கழிக்கின்ற நிலை உருவெடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
சமூகவலைத்தளங்கள் என்பவை இன்றெல்லாம் மிகப்பெரிய நன்மைகளை கொண்டுவந்து சேர்க்கும் மிகப்பெரிய ஊடகங்கள். எத்தனையோ வீட்டிலிருக்கும் பெண்கள் லழரவரடிநஇல் கற்றுக்கொடுக்கப்படும் கைவினைப்பொருட்களை பார்த்தேதாமும் செலவில்லாமல் கற்றுக்கொண்டு அவற்றை பொருளீட்டும் வழிமுறையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள், தொழில் முனைபவர்கள், பேஷன் துறை சம்பந்தப்பட்டவர்கள் தம்மை வளர்த்துக ;கொள்ளவும்,பொருளீட்டவும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள் . கல்வி சம்பந்தப்பட்ட நிறைய விடயங்கள் , வீட்டு பராமரிப்பு முறைகள், விற்பனை முறைகள் என ஏராளமாய் இந்த சமூக வலைத்தளங்கள் நமக்கு இலகுவாக கற்றுக்கொடுக்கும்போது அவற்றை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நாமும் முன்னேறி சமூகத்தையும் முன்னேற்றுவதைவிடுத்து, நாம் வெறும் நுகர்வோர்ககவும்,பார்வையாளர்களாகவுமே சமூகவலைத் தளத்தில் இருப்பதுதான் சாபக்கேடு !
சமூக வலைத்தளங்கள் சர்வதேச அளவில் மிகப்பெரிய அரசியல் மாற்றங்களையும் உருவாக்கும் சக்தி கொண்டதாகத் திகழ்கின்றன. எத்தனையோ இடர்பாடுகளிற்கு சமூக வலைத்தளங்களின் மூலம் சடுதியான உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பினரையும் தொடர்பு கொள்ளும் வெளியாக சமூக வலைதளங்கள் மாறியிருப்பதால், இதை சாதகமாக பயன்படுத்தி பல வெற்றிகளை காண முடியும்.
தனிநபர்கள், சிறு நிறுவனங்கள் மட்டுமல்ல, இப்போது பல கார்ப்பரேட் நிறுவனங்களும், தொழில் முனைவோர்களும் தங்களுக்கான வர்த்தகத்தை சமூக தளங்களுக்கு மாற்றி இருக்கிறார்கள். சமூக வலைதளங்களை பயன்படுத்து பவர்கள் சராசரியாக ஒரு நாளில் இரண்டு மணி நேரமாவது இதற்கு ஒதுக்குகின்றனர் என்பதால் , இதில் வர்த்தகம் செய்யும் வாய்ப்புகளை பார்க்கலாம். வணிக நிறுவனங்கள், சமூக வலைதளங்கள் மூலம் பொருட்களை விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நேரடியாக அறிந்து கொள்ள முயல்கிறது. இதனால் வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்குச் சமூக வலைதளங்களின் பங்கு இன்றியமையாததாகிறது.
ஆக, நாம் எப்போதுமே ஓர் நுகர்வோராக மட்டுமே இருந்து சமூகவலைத்தளத்தை பயன்படுத்திக்கொண்டிராமல் , அதை நமக்கு சாதகமாக நமக்கு பொருளீட்டும் வகையிலோ அல்லது நமக்கான தேடல்களை கற்றுக்கொடுக்கும் கருவியாகவோ பயன்படுத்திக்கொள்வது நமது நேரத்தை பாதுகாத்து நம்மை மென்மேலும் வளர்ச்சி அடையச் செய்யும் என்பதே நிஜம் !
58 total views, 2 views today